Search This Blog

Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Monday, 30 December 2013

புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்!




சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’ என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.

‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம்.

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரலாம்..!

முகேஷ் அம்பானி - வாழ்க்கை வரலாறு!




முகேஷ் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘முகேஷ் திருபாய் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார். ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானியின்’ மகன் ஆவார்.


‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷின் பங்களிப்பு முக்கியமானது. இவர், ஃபார்சூன் குளோபல் 500 பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘உலகின் பணக்கார விளையாட்டு உரிமையாளராக’ ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ், இவரது பெயரைப் பட்டியலில் வெளியிட்டது. மேலும் இவர், ஆசியாவின் இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகின் 19 வது பணக்கார மனிதராகவும் கணிக்கப்பட்டு, அப்பட்டியலில் இடம்பெற்றார்.



அதுமட்டுமல்லாமல், இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குனர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும், சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸின் இன்னொரு முகமாகவே தன்னை வெளிப்படுத்தி, உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்து, தற்பொழுது, இந்தியத் தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்ரவர்த்தியாக விளங்கும் முகேஷ் அம்பானி அவர்களின், வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஏப்ரல் 19, 1957

பிறப்பிடம்: மும்பை மாநிலம், இந்தியா

பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

முகேஷ் அம்பானி அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “மும்பையில்”, இந்தியாவின் ‘வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றாப்படும் திருபாய் அம்பானிக்கும் (இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்)’, கோகிலாபென் அம்பானிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு அனில் அம்பானி என்ற சகோதரரும், தீப்தி சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் ஜீனாகட் மாவட்டத்திலுள்ள சோர்வாட் ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்பக் கல்வியை மும்பையுள்ள அபே மொரிச்சா பள்ளியில் தொடங்கி இவர், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் துறையில் பி.இ பட்டம் பெற்றார். அதன் பிறகு, இரண்டு ஆண்டு எம்.பி.ஏ படிக்க அமெரிக்கா பயணமான முகேஷ் அவர்கள், கலிஃபோர்னியாவில் உள்ள இஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் ஒரு ஆண்டு மட்டுமே நிறைவடைந்த நிலையில் 1980 -இல் தன்னுடைய படிப்பைக் கைவிட்டு இந்தியா திரும்பினார்.


வணிகத்தில் ஈடுபடக் காரணம்


இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தியில் தனியார் துறைகளை ஊக்குவித்தது. அப்பொழுது இவருடைய தந்தை திருபாய் அம்பானி அவர்கள், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். மேலும், இவருடன் டாட்டா, பிர்லா என இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.


இப்படிப்பட்ட கடுமையான போட்டிக்கு மத்தியில் இவருடைய தந்தை திருபாய் அம்பானிக்கு அந்த உரிமம் வழங்கப்பட்டது. இதனால், தந்தையின் பொறுப்புகள் அதிகமானதால், தன்னுடைய எம்.பி.ஏ படிப்பை ஓராண்டோடு முடித்துக்கொண்டு, தந்தைக்கு உதவியாக ரிலையன்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் பொறுப்புகளை ஏற்றார்.


தொழில் வளர்ச்சியில் மேற்கொண்ட சாதனைகள்


ரிலையன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி எனத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1981 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பெட்ரோலிய சுத்திகரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு ஆராய்ச்சி என மேலும் பல தொழில் அமைப்புகளைத் தொடங்கி தன்னுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்தினார்.


அதுமட்டுமல்லாமல், உலகில் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களைக் கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளைக் கொண்ட ‘இன்ஃபோகாம் நிறுவனத்தை’ (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார். பின்னர், அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்தை ஜாம்நகரில் நிறுவி, அதன் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகப்படுத்தினார். மேலும், இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளின் நிர்வாக இயக்குனராகவும், அதனை வழிநடத்துபவராகவும் செயல்பட்டார்.


ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட இடைஞ்சல்கள், அரசியல் சவால்கள் எனப் பல தடைகளை சமாளித்து தன்னுடைய தந்தைக்கு பக்கபலமாக இருந்த இவர்,  தந்தை திருபாய் அம்பானியின் இறப்பிற்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானிதான் ஆளப்போகிறவர் என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில், அவருடைய சகோதரர் அனில் அம்பானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருடைய குடும்பம் இரண்டாகப் பிரிந்தது. இதனால், அம்பானியின் குடும்பச் சொத்துக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோகெமிக்கஸ் நிறுவனம் முகேஷிடமும், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானியிடமும் பிரித்துக்கொடுக்கப்படது.


தனிப்பட்ட வாழ்க்கை


முகேஷ் அம்பானி அவர்கள், நீதா அம்பானி என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இஷா என்ற மகளும், ஆனந்த் மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் மும்பையில் அண்டிலியா என்று பெயரிடப்பட்ட 27 மாடி கட்டிடம் கொண்ட மிகவும் விலையுயர்ந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மதிப்பு அமெரிக்க டாலரில் 2 பில்லியன்கள் ஆகும்.


விருதுகளும், மரியாதைகளும்


    2010 – ஆசியா பொதுநல ஸ்தாபன அமைப்பின் மூலம் பிரதான விருந்தில் ‘குளோபல் விஷன் விருது’.


    என்.டி.டி.வி (இந்தியா) மூலம் 2010 ஆம் ஆண்டின் ‘சிறந்த வர்த்தக தலைவர் விருது’.

    பைனான்சியல் குரோனிக்கிள் அமைப்பின் மூலம் 2010 ஆம் ஆண்டின் ‘தொழிலதிபர் விருது’.

    2010 – ஐ.எம்.சி அமைப்பின் மூலம் 2009 ஆம் ஆண்டிற்கான ‘ஜுரான் தர பதக்கம்’.

    2010 – பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக பள்ளித்தலைவர் பதக்கம்’.

    அமெரிக்க இந்திய வர்த்தக ஆலோசனை சபை மூலம் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் விருது’.

    குஜராத் அரசிடம் இருந்து 2007 ஆம் ஆண்டிற்கான ‘சித்திரலேகா நபர் விருது’.

 முகேஷ் அம்பானியின் தொழில் வளர்ச்சிக்கு முன்னால், இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானி’ என்னும் மிகப்பெரிய தொழில் பின்னணி இருந்தாலும், தன்னுடைய திறமையான வர்த்தகச் சிந்தனையால், லாபம் தரும் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவின் நவீனத் தொழில்நுட்பத் துறையின் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.


 2007 ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் அதிகரித்ததின் காரணமாக இவர், ‘உலக பணக்கார மனிதர்’ எனவும் அறியப்படுகிறார்.

Sunday, 29 December 2013

மணிகண்டனின் மகர ஜோதி தரிசனம்




எல்லாம் வல்ல சர்வேஸ்வரராக விளங்கும் சிவபிரானுக்கும் மோகினி வடிவம் எடுத்த திருமாலுக்கும் மகனாக அவதரித்தவர் மணிகண்டன்.

கழுத்தில் மணிமாலையுடன் காணப்பட்டதால் மணிகண்டன் என பெயர் பெற்றார். ஹரிக்கும் ஹரனுக்கும் புத்திரராக பிறந்ததால் ஹரிஹரபுத்திரர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் ஐயனுக்கும் அப்பனுக்கும் உதித்ததால் ஐயப்பன் ஆக பெயர் பெற்றார். சபரிமலையில் அமர்ந்து ஞான ஆட்சியுடன் அருளாட்சி புரிந்து மானிடர்களின் பிறவித்துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார். சபரிகீரிசன் சாஸ்தாவாக பதினெட்டு படிகளுடன் கூடிய சபரிமலை திருத்தலத்தில் வீற்றிருந்து வேண்டுவார்க்கு விரும்பிய வரம் அருளி எம்மைக் காத்து வருகிறார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தால் அது குழந்தை, வாரிசு, சந்ததி தழைக்க குடும்பம் உருவாக காரணமாகிறது. ஆனால் ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கிற குழந்தை இப்படி ஒரு தெய்வீகக் குழந்தை வடிவில் தேவர் குலத்தைக் காக்க என மணிகண்டனாக ஹரிஹரனாக அவதாரம் எடுத்தார். மும்மூர்த்திகளான சிவனும் பிரமனும் விஷ்ணுவும் கடும்தவம் இருந்து யார் வரத்தைக் கேட்டாலும் மனமிரங்கி அவர் கேட்ட வரத்தை கொடுத்துவிட்டு திண்டாடுவது அவர்களின் வழக்கமான ஒன்று என்று புராணங்கள் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம்.

ஆக அன்னை ஆதி பராசக்தியால் கொடிய அரக்கன் மகிஷாசுரன் அழிக்கப்பட, அவனது தங்கை மகிஷி கடும் சினம் அடைந்தாள். தேவர்குலத்தை பூண்டோடு அழிக்கவும் பழிவாங்கும் எண்ணத்திலும் சிருஷ்டிக்கடவுளான பிரம்ம தேவரை நோக்கி அடர்ந்த காட்டில் கருங்கற்பாறையில் அமர்ந்து கடும் தவம் இயற்றினாள். பிரம்மதேவர் அவளை நோக்கி என்னவரம் வேண்டும் எனக்கேட்க மகிஷி கூறினாள், அரிக்கும் அரனுக்கும் மகனாக பிறந்து வேறு ஒருவரிடத்து வளர்ந்த ஒருவனை தவிர ஆயுதங்களாலும் சாதாரண மானிடர்களாலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. எனது உரோமங்களில் இருந்து என்னைப்போன்று ஆயிரக்கணக்காணோர் உற்பத்தியாகி எதிரிகளை அழிக்க வேண்டும். எனவும் வேண்டுகிறாள்.

பிரம்மரும் வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்து விட்டார். தேவர்களையும் ரிஷிகளையும் மானிடர்களையும் வருத்த தொடங்கி விட்டாள் அசுரகுலத்து மகிஷி. அவள் படுத்திய துன்பங்களை தாங்க முடியாத தேவர்கள் காத்தற்கடவுளாகிய ஹரியிடம் சென்று முறையிட்டனர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் பகை. அதோடு வரங்கள் பெறுவதும் அதனால் சாபங்கள் அடையப் பெற்று அல்லல் உறுவதும் இயல்பு. அப்படி முன்னொரு காலவேளையில் தேவர்கள் துர்வாச முனிவரின் சாபம் அடையப் பெற்று உடல் பலவீனம் அடைந்து தளர்ச்சி உற்று முதியவர் நிலையினை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது. இதை பயன் படுத்தி மகிஷி துன்புறுத்த தேவர்கள் விஷ்ணுவைச் சரண் அடைந்தனர்.

காத்தற்கடவுளாகிய விஷ்ணு பகவானும் தேவர்கள் மிகுந்த வலிமை பெற திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் உண்டால் சக்தி கிடைக்கும் எனவழியைக் காட்டினார். தேவரும் அசுரரும் திருப்பாற்கடலை கடைந்தனர். அமிர்தம் தோன்றியது. அசுரர்கள் தேவர்களுக்கு அவ்வமுதினை பகிர்ந்தளித்து உண்ண விரும்பாமல் தாமே உண்ண விரும்பி திருவமுதினை பறித்து எடுத்தனர்.

மகாவிஷ்ணு தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வேண்டி மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை தன்பால் மோகம் கொள்ள வைத்து அமுதினை பெற்று தேவர்களுக்கு அளிக்கிறார். தேவர்களும் அமிர்தத்தை உண்டு இழந்த சக்தியை மீண்டும் பெற்றனர். இதை அறிந்த ஈசன் மூவுலகமும் மையல் கொள்ளும் வதனத்தை அந்த மோகினி வடிவத்தை காண ஆவலுற்றார். மோகினி வதனத்தை கண்ணுற்ற ஈசன் அவ்வுருவில் மோகித்து மையல் கொண்டார்.

கன்னி உருக்கொண்ட திருமாலுக்கும் பரமசிவனுக்கும் உதித்த குழந்தையை பம்பா நதிக்கரையில் விட்டுசென்று விட பந்தள நாட்டு மகாராஜா எடுத்து அன்போடு வளர்க்கிறார். குழந்தை இல்லாகுறை போக்கிய அக்குழந்தையை மனிகண்டனாக எல்லாக் கலைகளையும் பயிற்றுவித்து வளர்க்கிறார். காலம் கணிந்து வர தேவேந்திரன் ஹரிகரன் காட்டுக்குள் வந்ததையும் அவர் பூர்வீகத்தையும் அறிந்து மகிஷி அரக்கியை அழித்துவிடுமாறு வேண்டிக் கொள்ள தேவர்கள் புடைசூழ அரக்கியை வதம் செய்து அனைவரையும் காக்கிறார்.

 இளம் பாலகனாக பனிரெண்டு வயதிலேயே அரக்கியை அழித்து தேவர்களை காத்த ஸ்ரீ சாஸ்தாவாகிய ஐயன் தன்னை வளர்த்து ஆளாக்கிய அன்னை தலைவலியை போக்க என்னசெய்வது எனஎண்ணம் கொண்டார். தேவர்களின் அரசன் தேவேந்திரனிடம் அன்னை தனது பிணி தீர்க்க புலிப்பால் கொண்டு வர என்னை காட்டுக்கு அனுப்பினார்கள். நான் என் செய்வேன் எனக்கேட்க தேவேந்திரனும் உடனே பெண் புலியாக உருமாறினார். அதன் மீது ஏறி அமர்ந்து மணிகண்டனும் ஏனைய தேவர்களும் புலிக்கூட்டமாக உருமாறி பந்தளநாடு நோக்கி சென்றனர். புலி மீது பாலகனான மணிகண்டனைப் பார்த்து அஞ்சினர்.

மன்னன் இராஐசேகரன் மகனின் துணிவைப் பாராட்டி ஆரத்தழுவினார். அமைச்சர் மனதில் தீய எண்ணங்களுடன் அரசிக்கு அவளின் இளைய மகனுக்கு மூடிசூட்ட ஆசையை வளர்த்து இல்லாத தலைவலியை ஏற்படுத்தியிருந்தார்.

அதனால் மணிகண்டன் புலியுடன் வந்ததும் தவறுக்கு மன்னித்து மண்றாடினர். பன்னிரெண்டு காலம் என்னை வளர்த்து காத்து வந்தீர்கள். நாடாளும் எண்ணம் எனக்கில்லை எனக்கூறி தம்பி இராஜேந்திரனுக்கு முடிசூட்டி இளவரசன் ஆக்குங்கள் இது எனது விருப்பம் ஆகும். பூவுலகில் அவதாரம் எடுத்த எனது நோக்கம் நிறைவேறிவிட்டது வருகிறேன் என்று புறப்பட்டார்.

மன்னன் முதல் அனைவரும் கலங்கி நின்றனர். அன்பு தந்தையே ஆசி கூறுங்கள் சபரி மலைப் பகுதியில் பம்பை நதிக்கரையில் ஒரு அம்பை எய்கிறேன். அந்தச் சரங்குத்தும் இடத்தில் ஆலயம் எழுப்பி என் திரு உருவை பிரதிஸ்டை செய்யுங்கள். என்னை வழிபடும் அடியார்களுக்கு ஆண்டு தோறும் மகர சங்கிராந்தி அன்று நான் ஒளிவடிவில் பொன்னம்பலமேட்டில் திருக்காட்சியளிப்பேன் என்று மறைந்தருளினார்.

ஆலயம் எழுப்பி பதினெட்டு படிகளும் அமைத்து ஐயப்பனை வழிபடுபவர் வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் பெருகும். பகவான் தத்துவாதீனாக விளங்குவதையே இப் பதினெட்டுபடிகளும் உணர்த்துகின்றன. பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படும் ஐம்புலன்கள் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்தும் தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஐம்பொறிகள் ஓசை ஊறு ரூபம் சுவை நாற்றம் என்ற ஐந்தும், அந்தக்கரணங்களான மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கும். மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றும் ஆன்மாவும் என பதினெட்டு விடயங்களைக் கொண்டுள்ளது.

மேற்குறித்த பதினெட்டு விடயங்களைக் குறித்தே பதினெட்டு படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் ஸ்ரீ சாஸ்தாவாக விளங்கும் ஐயப்ப சுவாமி சபரி பீடத்தின் பதினெட்டு படிகளை கடந்து ஸ்ரீ சுவாமி ஐயப்பனின் பேருண்மைத் தத்துவத்தை பெற்று உய்வதோடு, பொன்னம்பல மேட்டில் தை மகர சங்கராந்தி அன்று தோன்றும் மகர ஜோதி தரிசனம் கண்டு எம் பாவங்களை தீர்க்க ஐயப்பனை வணங்குவோம்.

Saturday, 28 December 2013

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வயது ..?







சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அனேக இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது...' என மழைக் காலங்களில் தினமும் நம் கவனத்தைக் கவரும் சென்னை வா...னிலை ஆய்வு மையத்தின் வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதிகபட்சம் 100 ஆண்டுகள் இருக்கலாம் என்று நினைத்தால் அது தவறு.
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை திருப்பத்தில் சற்றே உள்ளடங்கி இருக்கும் இந்த ஆய்வு மையம் சுமார் 220 ஆண்டுகள் பழமையானது. ஐரோப்பாவிற்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் நவீன வானியல் ஆய்வகம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதற்கான ஆரம்பப் புள்ளியை வைத்தவர் வில்லியம் பெட்ரீ (William Petrie) என்ற கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்.

வில்லியம் பெட்ரீ வான சாஸ்திரத்தில் தனக்கிருந்த அதீத ஆர்வம் காரணமாக, 1787இல் தன் நுங்கம்பாக்கம் வீட்டிலேயே சொந்த செலவில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார். ஓய்வு நேரத்தை அங்கேயே செலவிட்டார். அப்போது அவரிடம் மூன்று அங்குல தொலைநோக்கிகள் இரண்டு, வானியல் கடிகாரங்கள் இரண்டு, நட்சத்திரங்களின் இடங்களை கண்காணிக்க உதவும் கருவி ஒன்று என வெகுசில உபகரணங்களே இருந்தன. இவற்றைக் கொண்டு கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்களுக்கு அவர் வழிகாட்டி உதவினார்.

ஒருமுறை பெட்ரீ நீண்ட விடுமுறையில் இங்கிலாந்து சென்றபோது, தனது உபகரணங்களை உபயோகிக்க அரசுக்கு அனுமதி அளித்தார். பின்னர் அவர் மெட்ராஸ் திரும்பியபோது, அரசே ஒரு வானிலை ஆய்வுக் கூடத்தை நிறுவி அதை நிர்வகிக்கும் பொறுப்பை பெட்ரீயிடம் கொடுத்தது. மெட்ராஸ் அப்சர்வேட்டரி (Madras Observatory) எனப் பெயரிடப்பட்ட அந்த ஆய்வு மையத்தை அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் சார்லஸ் 1792இல் தொடங்கி வைத்தார்.

மைக்கேல் டோப்பிங் ஆர்ச் (Micheal Topping Arch) என்ற வானியல் ஆய்வாளர் இதனை வடிவமைக்க பெரிதும் உதவினார். வானிலை ஆய்வுக்கு தேவையான பல்வேறு உபகரணங்களையும் அவர் தருவித்தார். இதன் நினைவாக இங்கிருக்கும் 15 அடி உயர கிரானைட் தூணில் அவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தூணில்தான் நட்சத்திரங்களை கண்காணிக்கும் தொலைநோக்கிக் கருவி முதன்முதலில் பொருத்தப்பட்டிருந்தது.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் வருபவர்களும் அறிந்துகொள்வதற்காக...' என்ற குறிப்புடன் இந்த தூணில் லத்தீன், தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் இதுபற்றிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தூண் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1796இல் தான் இங்கு முதன்முறையாக வானியல் நிகழ்வுகளை முறையாகப் பதிவு செய்யும் வழக்கம் தொடங்கியது. கோல்டிங்ஹாம் (Goldingham) என்பவர்தான் இவ்வாறு பதிவு செய்த முதல் வானியல் ஆய்வாளர். இவரைத் தொடர்ந்து நிறைய புகழ்பெற்ற ஆய்வாளர்கள் இங்கு பணியாற்றி உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் போக்சன் (Pogson). சுமார் 30 ஆண்டுகள், இவர் மெட்ராஸ் அப்சர்வேட்டரியின் ஆய்வாளராக இருந்தார். இவரது மனைவியும், மகளும் கூட இவருடைய பணியில் உதவியாக இருந்தனர்.

19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தெரிந்த முழு சூரிய கிரகணங்களை கண்காணித்து பதிவு செய்ததில் இந்த ஆய்வு மையம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. 1867இல் இந்த மையத்தை மூடுவது பற்றி லண்டனில் விவாதிக்கப்பட்டது. அப்போது தென் பகுதியில் பிரிட்டாஷார் வேறு சில ஆய்வகங்களைத் தொடங்கி இருந்ததுதான் காரணம். மெட்ராஸ் அபசர்வேட்டரி நிறைய விஷயங்களை சேகரித்து வைத்திருந்ததால், புதிய விஷயங்களை சேகரிப்பதை நிறுத்திவிட்டு, கையில் இருக்கும் விஷயங்களை பதிப்பிப்பதில் கவனம் செலுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில்தான் 20 அங்குல தொலைநோக்கி ஒன்றை தமிழக மலைகளில் ஏதாவது ஒன்றில் பொருத்தி வானியல் நிகழ்வுகளை ஆராயலாம் என போக்சன் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் நீலகிரி மற்றும் பழனி மலைகளில் இடம்பார்க்கும் பணி நடைபெற்றது. இதன் பயனாகத்தான் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி கட்டப்பட்டது. இதன் பிறகு, மெட்ராஸ் அப்சர்வேட்டரியின் பணிகள் அங்கு இடம்மாறின. இதனையடுத்து இந்த மையத்தின் முக்கியத்துவம் மெல்ல குறையத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் 1945இல் சென்னையில் மண்டல வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றிற்கான வானிலை அறிக்கைகளை இந்த மையம் தற்போது வெளியிட்டு வருகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு தனி மனிதனுக்கு உண்டான ஆர்வம், பெருமழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றில் இருந்து இன்று நம்மை தற்காத்துக் கொள்ள உதவுகிறது.

* வில்லியம் பெட்ரீ 1807இல் மூன்று மாத காலம் மெட்ராசின் ஆளுநராக இருந்திருக்கிறார்.

* இந்த ஆய்வு மையத்தில் மணிக்கொரு முறை வானியல் நிகழ்வுகள் பதிவு செய்யப்படும் முறை 1840இல் தொடங்கியது

*தீர்க்க ரேகை போன்ற விஷயங்களில் மெட்ராஸ் அப்சர்வேட்டரி அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Tuesday, 24 December 2013

பழைய கணக்கீட்டு முறைகள்..!


தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது.

நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர்.


 அவர்களின் நீட்டல் அளவு முறை கீழே

8அணு - 1தேர்த்துகள்

8தேர்த்துகள் - 1பஞ்சிழை

8பஞ்சிழை - 1மயிர்

8மயிர் - 1நுண்மணல்

8நுண்மணல் - 1கடுகு

8கடுகு - 1நெல்

8நெல் - 1பெருவிரல்

12பெருவிரல் - 1சாண்

2சாண் - 1முழம்

4முழம் - 1கோல்(அ)பாகம்

500கோல் - 1கூப்பீடு

" இசைத் தூண்கள் " - உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை?





உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !


இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்திமூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது .

அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது .

இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைக்கற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது?

இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. "In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது. சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ?

நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல். இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை. ஆனால், இந்தத் தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை.

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது. அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது. ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள். இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்.

தேடல் தொடரும்...

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசை தூண். ஆனால் இதை போன்ற இசை தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

Saturday, 7 December 2013

புறக்கணிக்கப்பட்ட கவிதை!

'

இன்று மிகச்சிறந்த கவிஞராக கொண்டாடப்படும் ஷெல்லி வாழும் காலத்தில் புறக்கணிக்கப்பட்டவர். தன்னுடைய கவிதையை வெளியிடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டவர். அவர் இறந்து பதினேழு ஆண்டுகள் கழித்துத்தான் அவரது கவிதைகள் அவரது மனைவியால் வெளியிடப்பட்டன.


1810 ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் ஷெல்லி. தனது 17 வயதில் நாத்திகத்தின் அவசியம் (The Neccessity of Atheism) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் அவரது கல்லூரிப்படிப்பு முடிந்தது. தொடர்ந்து இதுபோன்ற புரட்சிக் கருத்துக்களை ஷெல்லி வெளியிட்டார்.


ஷெல்லியின் தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மதப்பற்று மிகுந்தவர். அவர் ஷெல்லியின் கருத்துக்களை மாற்றிக்கொள்ளுமாறு வேண்டினார். ஷெல்லி மறுக்கவே உதவி செய்வதை தந்தை நிறுத்திக் கொண்டார். இதனால் உணவுக்கும் தடுமாறும் நிலை ஏற்பட்டது, இருந்தாலும் தன்னுடைய புரட்சிகர எழுத்தை மட்டுமே ஷெல்லி நிறுத்திக் கொள்ளவே இல்லை.


அவர் இத்தாலியில் தங்கியிருந்தபோது படகொன்றில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று பெரும் புயலடித்து படகு கவிழ்ந்தது. 1822 ம் ஆண்டு 30 வயது கூட நிறைவடையாத ஷெல்லி மரணமடைந்தார். ஆனால் அவரது கவிதைகள் அவர் இறந்த பதினேழு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட போது பெரும் புயலைக் கிளப்பியது. இன்று வரை ஆங்கிலத்தில் மிகச்சிறந்த கவிஞராக போற்றப்படும் ஷெல்லி வாழ்நாளில் ஒருவராலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.

Friday, 6 December 2013

மண்டேலா என்ற மாணிக்கம் - சிறப்புக்கட்டுரை!



நெல்சன் மண்டேலா... ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள  முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் 'நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’  ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர்.

ஆடு மாடு மேய்த்துக்கொண்டே  குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். அவற்றை, ஆடு மாடு மேய்க்க வரும் மற்ற பிள்ளைகளுடன் பயிற்சி செய்வார். அப்போது ஏகப்பட்ட பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார்.

ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் உறவுக்காரரான ஜோன்கின்தபா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தன் இனத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற மண்டேலா, படிப்பில் சுட்டியாக இருந்தார்.

ஜோன்கின்தபா இவருக்கும் இவரின் தம்பிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதை விரும்பாத நெல்சன் மண்டேலா, வீட்டைவிட்டு ஓடிப்போய் சுரங்கத்தில் காவலாளியாகவும் தோட்டக்காரராகவும் வேலைபார்த்தார்.

நெல்சன் மண்டேலா, கல்லூரிக் காலத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ராணுவப் பிரிவை உருவாக்கினார். கல்லூரியில் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி, ஆயுதக் கலகம் விளைவிக்க முயன்றார். அதனால் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார்.

  ஒரு வழியாக சட்டம் பயின்று முடித்தார். அப்போது கறுப்பின மக்களை அடக்கி ஆளும் தேசியக் கட்சி, தேர்தலில் வென்றதால், பல்வேறு போராட்டங்களில் கல்லூரித் தோழர்களுடன் ஈடுபட்டார்.  இலவசமாக சட்ட மையம் ஒன்றை ஆரம்பித்து, ஏழை மற்றும் அப்பாவிக் கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவி செய்தார்.

முதலில் அமைதி வழியில் செயல்பட்ட மண்டேலா, பிறகு ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தார். அதனால், குற்றம்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் வழக்கு நடைபெற்றது. அப்போது பல மாறுவேடங்களில்  சுற்றினார். இங்கிலாந்து மக்களைப் ஃபிரான்ஸில் இருந்து காப்பாற்றிய நாயகன் பிம்பெர்னல் போல மாறுவேடம் பூண்டபோது, மக்கள் கறுப்பு பிம்பெர்னல் என அழைத்தனர்.

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.

இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது,  'மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. 'எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

அரசாங்கத்துடன் நடந்த பல்வேறுகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, அனைத்து மக்களும் இணைந்து ஓட்டு அளிக்கும் முறைக்கு ஒப்புக்கொண்டனர். அப்போது நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதி ஆனார்.  இவருக்கு 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ''நான் கறுப்பின மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதே சமயம் வெள்ளையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் வெறுக்கிறேன். நிறங்களைக் கடந்து மனிதர்களாக அன்பு செய்பவர்களாக என் நாட்டு மக்கள் திகழ வேண்டும்'' என்றார் மண்டேலா.

Thursday, 5 December 2013

சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம்: ஜப்பானின் புதிய முயற்சி!

 

சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங்குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.


எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.

பூமியை பொறுத்தவரை எப்போதும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.

எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உள்ள ‘ஷிமிஷூ கார்ப்பரேசன்’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் ‘சோலார் பேனல்’ தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதற்கு ‘ஜனா ரிங்’ என பெயரிட்டுள்ளனர்.

இதன் மூலம் 13 ஆயிரம் டெராவாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியும். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமான பணி வருகிற 2035–ம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.

தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.

சந்திரனில் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின்கலன்கள் அமைக்கும் பணியில் ‘ரோபோ’க்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலையங்களில் இணைக்கப்படும். பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.

Wednesday, 4 December 2013

ஐக்கிய நடுகள் சபை (ஐ.நா)





ஐ.நா. அமைப்புக்கள் (UN Associated Agencies)


 1.சர்வதேச அணுசக்திக் கழகம்.

Intenational Autamic Engery Agency (IAEA)


 2.ஐ.நா. கல்வி, அறிவியல், கலாசாரக் கழகம்.

United Nations Educational Scientific and Cultural Organisation (UNESCO)


 3.சர்வதேச தொழிலாளர் நிறுவனம்.

International Labour Organsation (ILO)


 4.உணவு மற்றும் விவசாய நிறுவனம்.

Food and Agriculture Organisation (FAO)


 5.உலகச் சுகாதார நிறுவனம்.

World Health Organisation (WHO)


 6.சர்வதேச நிதி நிறுவனம்.

International Monetary Fund (IMF)


 7.சர்வதேச சீரமைப்பு மற்...........


Tuesday, 3 December 2013

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு! தெரிந்து கொள்வோம்!.


1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்


2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி


3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்


4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்


5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்


6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)


7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)


8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்


9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை


10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை


11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)


12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்


13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்


14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)


15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)


16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]


17. இரண்டாவது மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )


18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)


19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)


20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)


21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்


22. கோயில் நகரம் – மதுரை


23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)


24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்


25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

Saturday, 30 November 2013

தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்?


தமிழரின் பெருமை தெரியவேண்டும் என்றால்.தமிழகத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும் 

11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!

பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.

சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.

தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?

புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்!


சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’ என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.

‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம்.

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரலாம்..!

Friday, 29 November 2013

பெரியார் கடவுளுக்கு எதிரியா?

பெரியார் ஒரு நாத்தீகர். கடவுளின் எதிரி. ஆன்மீகவாதிகளுக்கு எதிரி என பெரியாரையும் அவரது போராட்டங்களையும் பற்றியும் வருகிற பரப்புரைகள் நாம் அறிந்தவை. பெரியார் கடவுளுக்கு எதிரியா? இந்த கேள்விக்கு பெரியார் கருத்துக்களை அவரது சுயமரியாதை போராட்டத்தோடு இணைத்து பார்த்தால் மட்டுமே உண்மையை உணரமுடியும். சுயமரியாதை போராட்டமும் பெரியார் மதங்களை பற்றி கொண்டிருந்த பார்வையும் ஒன்றோடொன்று இணைந்தவை.

பெரியார் ஆச்சாரமான ஆத்தீக குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் பராமரிக்கும் கோவில் ஒன்று இருந்தது. இளவயதில் காசியில் 'இந்து சமய' மடங்களுக்கு சென்று சிறிதுகாலம் துறவறம் பூண்டவர். பெரியார் மதம் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாரா? "எனது வாழ்நாளில் என்றைக்காவது சாதி-மதத்தையோ உணமையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கின்றேன்....எப்போதிலிருந்து இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை என்றும் யோசித்து பார்த்திருக்கின்றேன், கண்டுபிடிக்கமுடியவில்லை." அவரே சொல்கிறார் (நவமணி 1939 ஆண்டு மலர்).


1929, பிப்ரவரி 17-18 தேதியில் செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் தான் மதத்தை பின்பற்றக்கூடாதென தீர்மானிக்கப்பட்டது. "(இந்துமதம்)பிறவியினால் உயர்வு, தாழ்வு கற்பிக்கிறது, வருணாசிரம முறையைத் தோற்றுவித்து வளர்க்கிறது" என அந்த மாநாட்டு தீர்மானம் பெரியார் மேற்பார்வையில் நிறைவேற்றப்பட்டது. 'இந்து மதம்' ஆன்மீக தத்துவத்துடன் இயங்குவதோடு தனது பணியை முடித்துக்கொள்ளவில்லை. அதன் இயக்கமும், தாக்கமும் சமூக வாழ்வில் பல கேடுகளை விளைவித்தன. குறிப்பிட்ட சாதியினர் அனைத்து வளங்களையும், வாய்ப்புகளையும் அனுபவிக்க, பெரும்பான்மை மக்கள் அவர்களுக்காக உழைக்க வேண்டிய நிலை. அடிமைப்படுத்தப்பட்ட மக்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பலவித சாத்திரங்கள், மூடப்பழக்கங்கள் உருவாக்கப்பட்டன. அதனால் தான் பெரியார் மதத்தை பொருள்முதல்வாத செல்வாக்கு அடிப்படையில் அணுகினார்.


மனித இனத்தை வகைப்படுத்த ஒருகாலத்தில் சில நெறிகள் அவசியமாயிற்று. அன்றைய காலம் வேறுமாதிரியான சமூக, அரசியல், பொருளாதார சூழலில் மனித சமுதாயம் குழுக்களாக இருந்தது. அன்று இருந்த சமூகத்தில் இன்று இருப்பது போன்ற மக்கள் அமைப்பு முறைகளும், சட்டங்களும் இல்லை. மனித இனத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு மனிதகுழுக்களும் நெறிகளை தனக்கென உருவாக்கியது. உருவாக்கப்பட்ட நெறிமுறைகள் எந்த வகை மக்கள் ஆதிக்கம் அதிகம் இருந்ததோ அவர்களுக்கு ஆதரவாகவே அமைக்கப்பட்டன. அவற்றை அனைவரும் கடைபிடிக்க வைப்பதற்காக இயற்கையை இணைத்து வழிப்பாட்டு முறைகள் தோன்றலாயிற்று. அதனால் தான் பாகன் வழிபாட்டுமுறையில் இயற்கையை, தனது அறிவுக்கு எட்டாதவற்றை, மனிதன் எதை பார்த்து பயப்பட்டானோ அவற்றை என எல்லாவற்றையும் வழிபட்டு வந்தனர்.


கிரேக்கம், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா என எங்கும் இந்த வழிபாடுகள் விதவிதமாக இருந்துள்ளன. அந்த நிலையை கடந்து மனித சமுதாயம் இன்று அமைப்பு முறையிலும், சட்டங்களின் அடிப்படையிலும் வளர்ச்சியடைந்துள்ளது. இன்றைய காலத்திற்கு ஏற்ப மதத்தின் அணுகுமுறையில், தத்துவங்களில், நெறிமுறைகளில், நம்பிக்கைகளில் மாற்றம் அவசியமானது. ஒரு காலத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்பது மனித சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு செல்ல அனுமதிக்காத பழமைவாதமாக தான் இருக்க இயலும். முன்னர் பூமி தட்டையானது என்று கிறிஸ்தவ மத நம்பிக்கையாக இருந்தது. இந்து மதத்திலும் பூமியை பாயாக சுருட்டிய புராணக்கதைகளை பார்க்கிறோம். பூமி தட்டையல்ல, உருண்டை வடிவமானது என நிரூபித்தான் ஒரு அறிவியலாளன். மதவாதிகள் அவனை கடுமையாக எதிர்த்தனர். இவை அனைத்தும் கடந்த காலங்களில் இருந்த நம்பிக்கை. கடைசியில் என்ன ஆயிற்று? பூமி உருண்டை என்பதை அறிவியலும், கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. கத்தோலிக்க மதத்தலைவர் போப் இதற்காக மன்னிப்பும் கேட்டார்.


"காலநிலைக்கும், சமுதாயநிலைக்கும் அறிவு முதிர்ச்சிக்கும் ஏற்றபடி முறைகள் வகுக்கப்படவேண்டியவை தவிர, ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் பொருத்தமென்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லையென்பது தான் பொருள்" என்றார் பெரியார். மதத்தின் பழைய கருத்துக்களை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றி மறுமலர்ச்சி ஏற்படுத்த கலகம் செய்தவர் பெரியார். அறிவியலில் எப்படி ஒரு ஆய்வாளரின் கண்டுபிடிப்பை இன்னொருவரது ஆய்வு முடிவுகள் பொய்யென நிரூபித்தால் ஏற்றுக்கொள்ளுவார்களோ அதே அறிவியல் பார்வையை பெரியார் மதத்திற்கும் வைத்தார். ஒரு காலத்தில் எழுதப்பட்ட, சொல்லப்பட்ட தத்துவங்கள், கதைகள், புராணங்கள், சாத்திரங்கள் நடப்பு காலத்திற்கு பொருந்துமா என மதங்களை பரிசீலனை செய்து மாற்றங்களை உள்வாங்குவது ஒவ்வொரு காலத்திலும் அவசியம். இதை தான் ஆங்கிலத்தில் contexualising என்பார்கள். மதவாதிகளுக்கு மாற்றங்களை உள்வாங்கும் திறந்த மனது, எதிர்கருத்துக்களை ஏற்கும் பக்குவம் ஆகியவை அவசியம்.


 இல்லையென்றால் மதம் உட்பட அனைத்து சமூக நிறுவனங்களும் அடிமைத்தனத்தின் சின்னமாக தான் விளங்கும். ஒரு காலத்தில் குழந்தை திருமணங்கள், விதவைகளுக்கு திருமண மறுப்பு, உடன்கட்டை ஏற்றிக் கொல்லுதல் என இருந்தவை இன்றைய சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளதா? இன்றைய மனித உரிமை அடிப்படையில் இவை அனைத்தும் குற்றங்கள். இப்படியான ஒரு வளர்ச்சி நிலைக்கு நாம் முன்னேற பல போராட்டங்கள் காரணமாக இருந்தன. பெரியாரும் இப்படியான ஒரு போராட்டத்தையே ஏற்படுத்தி எதிர்கருத்தை உருவாக்கினார். போராட்டம் செய்பவர்களை கண்டிப்பது மட்டும் தான் குறிக்கோளாக இருந்தால் போராட்டங்களின் காரணம் இருந்துகொண்டே இருக்கும். 'இந்து மதவாதிகள்' இந்த தவறை தான் செய்கிறார்கள். இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். பிரச்சனைகளின் அடிப்படை காரணிகளை கண்டு அவற்றை மாற்றினால் மதத்தில் மட்டுமல்ல மனங்களிலும் மறுமலர்ச்சி ஏற்படும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.


என்கிற குறளில் இதை தான் வள்ளுவர் ஆழ்ந்த பொருளுடன் கூறுகிறார்.

இதற்கு உதாரணமாக ஹாங்காங்கில் நடந்த ஒரு விடயத்தை இங்கு பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ஹாங்காங்கில் எந்த பகுதியில் சென்றாலும் விளையாட்டு மைதானம், உள் விளையாட்டு அரங்கங்கள், பூங்கா, நூலகம் என பொழுதுபோக்கு இடங்கள் நிறைந்து காணப்படும். மேற்கு உலக நாடுகளில் கூட இந்த வசதி குறைவு. இதற்கு பின்னால் 1970களில் மாணவர்களும், இளைய தலைமுறையும் உருவாக்கிய போராட்ட சூழல் காரணம். அன்றைய அரசு பிரச்சனையின் காரணத்தை ஆய்வு செய்தபோது பொழுதுபோக்கு இல்லாமல் மனஇறுக்கத்துடன் இளைய தலைமுறையினர் இருப்பதை கண்டுபிடித்தது. பிறகென்ன ஊரெல்லாம் பொழுதுபோக்கு வசதியை உருவாக்கியது அரசு. அதன் பின்னர் பிரச்சனையும் ஓய்ந்தது. இன்று ஹாங்காங்கில் வேலையில்லாமை பற்றி அப்படியான ஆய்வுகள் இல்லை என்பது வேறு விடயம். அன்று போராடிய இளைஞர்களை அடித்து நொறுக்கியிருந்தால், இன்றைய ஹாங்காங் வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

"மனிதத்தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பெயரால் ஏற்பட்டுள்ள பழக்கவழக்கங்களே காரணமாயிருப்பதால்,

அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென்றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும் இம்மாநாடு கருதுகிறது." என்கிறது 1931 விருதுநகர் சுயமரியாதை மாநாட்டு தீர்மானம். "நமது நாட்டைப் பொறுத்தமட்டில் 'பிறவிப்படியும் தொழில்படியும்' ஒழிந்த நிலைதான் சமதர்மநிலை என்று சொல்லப்படுவதாகும்." பெரியாரும், சுயமரியாதைக்காரர்களும் மதத்தை எதிர்க்க அடிப்படை காரணம் என்ன என்பது இந்த தீர்மானத்தில் விளங்குகிறது.

இந்தியா முழுவதும் இன்று பரவியுள்ள மதவெறியை பார்க்கும் போது, "இந்திய நாட்டில் தோன்றியுள்ள மத வேற்றுமைகளும், பகைகளும் அழிய வேண்டுமானால், அறிவுள்ள இந்தியர்கள் முதலில் மத உணர்ச்சியைப் புறக்கணிக்க வேண்டுமென்று முடிவு செய்கிறது" என்கிற 1931 விருதுநகர் சுயமரியாதை மாநாட்டு தீர்மானம் எவ்வளவு பொருத்தமானது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. ஆன்மீகம் என்பதும் மதம் என்பதும் வேறுபட்டவை. மதம் என்பது நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பின் பின்னால் அது சொல்லக்கூடிய அனைத்தையும் ஏற்ற சார்ந்திருப்பு. தான் சார்ந்துள்ளது தான் உண்மை, அது தான் வேதம், அது தான் இறைநெறி, அது தான் சொர்க்கத்திற்கு வழி என வியாபார நிறுவங்களைப் போல சண்டையிடும் நிலை மதம் சார்ந்தது.

ஆன்மீகம் என்பது அறநெறியை போதிப்பது என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். அய்யனாரை வழிபட்டாலும், அல்லாவை தொழுதாலும், கிருஸ்ணனை கும்பிட்டாலும், இயேவை வேண்டினாலும், புத்தனை ஏற்றுக்கொண்டாலும், சுயமரியாதை மீது பற்றுகொண்டு மனிதநேயமாக இருந்தாலும் நாம் மனிதர்கள் ஒரு இனம் என்னும் ஆழமான எண்ணமே அறநெறியாக இருக்க இயலும். போட்டி போட்டு ஒருவரை ஒருவர் தாக்குவதும், தடுப்பதும், ஆதிக்கம் செலுத்துவதும் ஆன்மீகத்தில் எந்த வகை? இந்த வெறி மதம் சார்ந்தது தானே தவிர அறநெறியோ ஆன்மீகமோ அல்ல. அறநெறியாளர்களாக இருந்தால் இவ்வகை செயல்களை செய்யமாட்டார்கள். இப்படிப்பட்ட செயல்கள் நடக்கும் காலங்களில் பெரியார் போன்ற போராட்டக்காரர்கள் சமுதாயத்திற்கு அவசியம் தேவை. அவர்கள் உருவாக்குகிற போராட்டங்கள் என்னும் காலக்கண்ணாடியை பார்த்தாவது நாம் திருந்தியிருக்கிறோமா? இது போராட்டக்காரனின் குற்றமல்ல. மதக் கலவரக்காரர்களின் குற்றம்.

இந்து மதத்தின் வர்ணாஸ்ரம சாதி அடிமைத்தனத்தையும், அறிவுக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களையும் எதிர்த்ததே பெரியாருடைய கொள்கை. பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை இந்து மதத்தின் சாதி ஆதிக்க வேதங்கள் நாயை விட கேவலமாக நடத்தியதை உடைக்கவே பெரியாரின் கட்டளைகள் "கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என உச்சமாக அமைந்தது. இந்துமத புராணத்தில் சிக்கி அடிமைப்பட்டு கிடந்தவர்களிடம் தட்டியெழுப்ப விடுத்த அறைக்கூவல் தான் இது. இந்த அறைக்கூவல் பிராமணீய ஆதிக்கத்தில் கற்பிக்கப்பட்ட கடவுளை கட்டுடைப்பதாகவே அமைந்தது. பெரியார் நேரிய, உயரிய சுயமரியாதையுடன் நடத்தும் வழியை ஏற்க தயாராகவே இருந்தார்.

"உருவமற்ற கடவுளை, யாரையும் ஒன்று போல் சிருஷ்டிக்கும் கடவுளை, காசு, பணம், செலவு செய்யாமல் வணங்கக்கூடிய கடவுளை, மூடநம்பிக்கைக்கு இடமில்லாத தன்மையில் யாரும் வணங்கலாம்"

(சுயமரியாதை போராட்டத்தின் உச்சத்தில் பெரியார் 1948ல் சொன்னவை இவை) என்னும் அவரது கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த அடிப்படையில் தான் 1954ல் உலக பௌத்த சங்கத்தலைவரான டாக்டர் மல்லை சேகரா போன்ற அறிஞர்களை அழைத்து பௌத்த சங்கங்களை 'இந்து மதம்' அழித்தது பற்றிய பிரச்சாரங்களை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 'புத்த பெருமாள் விழா' கொண்டாடப்பட்டது. 1954 டிசம்பர் 3ல் மனைவி மணியம்மையாருடன் பர்மாவிற்கு சென்று உலக பௌத்த மாநாட்டில் கலந்துகொண்டார். பௌத்த கொள்கைகளால் பெரியார் கவரப்பட்டிருந்த போதும் பௌத்த சமயத்தில் இணையவில்லை. பௌத்த சமயத்தில் புத்தரையும் பிற தெய்வங்களையும் தெய்வமாக மாற்றி வழிபடும் முறையும், பௌத்த மடங்களில் உருவாகியிருந்த மூடநம்பிக்கைகளும் சடங்குகளும் தான் அதற்கான அடிப்படை காரணம். இந்து சமயத்தை சார்ந்த ஆதிக்க சாதியினரின் தாக்கம் பௌத்த நெறியில் ஊடுருவியதன் விளைவு இந்து மத அடையாளங்கள் பௌத்த நெறியிலும் புகுத்தப்பட்டு மதமாக்கப்பட்டது. புத்தருக்கும், பிள்ளையாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 ஆனால் தாய்லாந்து போன்ற நாடுகளில் பௌத்த விகாரைகளில் பிள்ளையார் வழிபாட்டை காணலாம். இந்த வழிபாட்டு முறைகள் மன்னர் காலங்களிலும் அதன் பின்னருமே புகுத்தப்பட்டவை. அதனால் தான் அண்ணல் அம்பேத்கார் பௌத்தமதத்திற்கு மாறிய வேளை பெரியாரை அழைத்தபோதும் அன்பாக மறுத்து அண்ணலுக்கு தனது ஆதரவை வழங்கினார். இந்த ஆதரவு வர்ணாஸ்ரம சாதி அடிமைத்தனத்தை விட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலை என்ற பார்வையில் அமைந்தது.

பெரியார் இராமாயணத்தை வெறுத்தது, பிள்ளையார் சிலையை உடைத்தவை போன்ற செயல்கள் ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்கும் விதமாக தான் அமைந்தன. அதனால் தான் ஆரிய கடவுள்களையும், அடையாளங்களையும் கடுமையாக எதிர்த்தார். இந்த போராட்டங்கள் சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய நாட்டு பொருட்களை எரித்து சுதேசி இயக்கம் உருவானது போன்று அந்த காலகட்டத்தில் அமைந்த ஒரு போராட்ட முறை. பெரியார் எந்த வழிபாட்டுத்தலங்களிலும் அத்துமீறி குழப்பம் ஏற்படுத்தவில்லை.ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கோவிலில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டதால் தான் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டத்தை பெரியார் தலைமையேற்று நடத்தினார்.

சேரர்கள் வரலாறு - முழு தொகுப்பு



சேரர்கள்


பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.பெரும்பாலும் இன்றைய தமிழகம்த்தின் கொங்குநாடு பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. மெலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டிநாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்


சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

மன்னர்கள்

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

நகரங்கள்



கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.



சில அரசர்களின் ஆட்சியாண்டுகள் ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:

* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்


தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் கி.மு 1200 (?)



சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.

உதியஞ்சேரலாதன் - கி.பி. 45-70


உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - கி.பி. 71-129

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் "இமய வரம்பன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் அடங்கும், குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட காழா அத் தலையார், மாமூலனார், பரணர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.



வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.



முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.


பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - கி.பி. 80-105


பல்யானைச் செல்கெழுகுட்டுவன், சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - கி.பி. 106-130


களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ....சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்.... எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம்

பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.

செயல்கள்

பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், "......இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்....." என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.

சேரன் செங்குட்டுவன் - கி.பி. 129-184


சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.


காலம்


பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள் எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.

வரலாற்றுத் தகவல்கள்

தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

அந்துவஞ்சேரல் இரும்பொறை


அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.


அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.


இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை - கி.பி. 123-148



செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.

இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு "கோ ஆதன்" என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.



ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 148-165

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.



தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.


இளஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 165-180

இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.

இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.



குட்டுவன் கோதை - கி.பி. 184-194

குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.

சேரமான் வஞ்சன்




சேரமான் வஞ்சன், என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச் சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.ன் புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.

மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.

சேரமான் கணைக்கால் இரும்பொறை




சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை



சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். "மாக்கோதை" என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் தனுஷ்கோடி புயல் ஓர் பேரழிவு சின்னம் !!!


1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே. தனுஷ்கோடியைப் புதுப்பிக்க அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது. தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது.

மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், பேய் மழையுடன் புயல் வீசியது. ராமேசுவரத்தில், புயலின் வேகம் கடுமையாக இருந்தது . புயல் காரணமாக, கடலில் அலை பயங்கரமாக இருந்தது. தென்னை மர உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்து கரையில் மோதின திடீர் என்று கடல் பொங்கி, ராமேசுவரம் தீவில் உள்ள தனுஷ்கோடிக்குள் புகுந்தது. தனுஷ்கோடி அடியோடு அழிந்து,
கடலில் மூழ்கி விட்டதால்,

தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் என்ற இடத்தையும் , ராமேசுவரம் தீவையும் இணைப்பது "பாம்பன் பாலம்." இது கடலில் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது, இந்தப்பாலம் இரண்டாகப் பிரிந்து, கப்பலுக்கு வழிவிடும். இந்த பாலம், பலத்த சேதம் அடைந்தது. புயல் வீசுவதற்கு முன், ராமேசுவரத்தில் இருந்து, தனுஷ்கோடிக்கு ஒரு ரெயில் புறப்பட்டுச் சென்றது . தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது , பலத்த மழையுடன் சூறாவளி வீசியது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. எனினும் சற்று நேரத்தில் கடல் பொங்கி, தனுஷ்கோடியை விழுங்கிய போது, ரெயிலும் கடலில் மூழ்கியது. ரெயிலில் 115 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அவ்வளவு பேரும் கடலில் மூழ்கி பலியாகி விட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவர்கள், ராமேசுவரத்துக்கு உல்லாசப் பயணம் வந்திருந்தனர் . கடலில் மூழ்கிய
 ரெயிலில் அவர்கள் பயணம் செய்தனர் என்ற தகவல் பின்னர் தெரியவந்தது . அந்த 40 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள். தனுஷ்கோடியில் இருந்த பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகளும், கட்டிடங்களும் கடலுக்குள் மூழ்கிவிட்டன . தந்தி, டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால், ராமேசுவரம் தீவுக்கும், வெளி உலகத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன . இதனால் சேதத்தின் முழு விவரங்களும் உடனடியாக சென்னைக்குத் தெரியவில்லை .

கடலுக்குள் மூழ்கி பலியாகாமல் உயிர் தப்பியவர்கள் , மணல் திட்டுகளில் தவித்தனர். அவர்களைக் காப்பாற்ற கப்பல்கள், மோட்டார் படகுகள், "ஹெலிகாப்டர்" விமானங்கள் அனுப்பப்பட்டன. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிக்கு முன்பு ரெயில் மூலம்தான் குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது. புயல்_மழை வீசியதைத் தொடர்ந்து அங்கு குடிநீரே இல்லாமல் போய்விட்டது . உயிர் தப்பியவர்கள், குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்தனர். அவர்களுக்காக ஹெலிகாப்டர் விமானத்தில் தண்ணீர் அனுப்பப்பட்டது . விமானத்தில் இருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன . உயிர் பிழைத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மதுரையில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டனர் .

அதன் தொடர்பான கட்டுரையை கீழே படிக்கவும்.

தனுஷ்கோடி - டிசம்பர் 23,1964 தமிழக மக்களால் மறக்க முடியாத தினங்கள் பல. அதில் ஒன்று தனுஷ்கோடியை கடல் தின்ற தினம்.

தமிழக கடலோரப் பகுதிகளை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை புரட்டிப் போட்டு விட்டுப் போனதற்கு முன்பே, தனுஷ்கோடியை அந்த சுனாமி விகாரமாக்கி விட்டுச் சென்ற தினம்தான் டிசம்பர் 23,1964. அழகிய தனுஷ்கோடியை சின்னாபின்னமாக்கி, அலங்கோலப்படுத்தி விட்டுப் போனது.

மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர்.

அன்றெல்லாம் சுனாமி என்றால் என்ன என்றே அக்காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நமது காலத்தில் நம்மைத் தாக்கிய சுனாமியைப் போன்ற ஆழிப் பேரலைதான் அன்றைய தனுஷ்கோடியையும் அலைக்கழித்துள்ளது.

இந்த அலை 20 அடி உயரத்துக்கு ராட்சத அளவில் எழும்பி வந்தது. ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் தனுஷ்கோடி நகரம் இருந்தது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட அழகிய மீனவ நகரம்.

அப்போது அதிகாலை 3 மணி இருக்கும். மீனவ மக்களும், பிறரும் நிம்மதியாக கண்ணயர்ந்திருந்த நேரம் அது. ஆனால் கடல் மட்டும் காட்டுத்தனமாக விழித்துக் கொண்டிருந்தது.

பொங்கி வந்த கடல் வெள்ளமும், திரண்டு வந்த ஆழிப் பேரலைகளும், தனுஷ்கோடிக்குள் புகுந்து, புரட்டிப் போட்டது. நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.நகரிலிருந்த முக்கால்வாசிப் பேர் முகவரி தெரியாமல் கடல் அன்னையின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.

எனவே இலங்கை செல்ல ஏராளமான பயணிகள் அதில் இருந்தனர். தனுஷ்கோடியைத் தாக்கிய புயலுக்கும், ஆழிப் பேரலைக்கும் இந்த ரயிலும் தப்பவில்லை. அப்படியே கடலுக்குள் இழுத்துப் போட்டு விட்டது போட் மெயிலை, கடலில் எழுந்து வந்த ஆழிப் பேரலை.
அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் 2000 பேர் உயிரிழந்தனர்.

அழகிய தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே.

தனுஷ்கோடியைப் புதுப்பிக்க நமது அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது.

தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது - கடந்த காலத்தில் தாங்கள் 'தடம் புரண்ட' கதையை சொல்லியபடி.

ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், ஒரு எட்டு தனுஷ்கோடிக்கும் சென்று வருவது வழக்கம். இப்படி வந்து செல்பவர்களால்தான் இன்னும் தனுஷ்கோடி நமது மன 'டைரி'யிலிருந்து அழியாத காவியமாக உள்ளது.