Search This Blog

Monday, 30 December 2013

முகேஷ் அம்பானி - வாழ்க்கை வரலாறு!




முகேஷ் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘முகேஷ் திருபாய் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார். ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானியின்’ மகன் ஆவார்.


‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷின் பங்களிப்பு முக்கியமானது. இவர், ஃபார்சூன் குளோபல் 500 பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘உலகின் பணக்கார விளையாட்டு உரிமையாளராக’ ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ், இவரது பெயரைப் பட்டியலில் வெளியிட்டது. மேலும் இவர், ஆசியாவின் இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகின் 19 வது பணக்கார மனிதராகவும் கணிக்கப்பட்டு, அப்பட்டியலில் இடம்பெற்றார்.



அதுமட்டுமல்லாமல், இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குனர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும், சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸின் இன்னொரு முகமாகவே தன்னை வெளிப்படுத்தி, உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்து, தற்பொழுது, இந்தியத் தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்ரவர்த்தியாக விளங்கும் முகேஷ் அம்பானி அவர்களின், வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஏப்ரல் 19, 1957

பிறப்பிடம்: மும்பை மாநிலம், இந்தியா

பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

முகேஷ் அம்பானி அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “மும்பையில்”, இந்தியாவின் ‘வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றாப்படும் திருபாய் அம்பானிக்கும் (இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்)’, கோகிலாபென் அம்பானிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு அனில் அம்பானி என்ற சகோதரரும், தீப்தி சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் ஜீனாகட் மாவட்டத்திலுள்ள சோர்வாட் ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்பக் கல்வியை மும்பையுள்ள அபே மொரிச்சா பள்ளியில் தொடங்கி இவர், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் துறையில் பி.இ பட்டம் பெற்றார். அதன் பிறகு, இரண்டு ஆண்டு எம்.பி.ஏ படிக்க அமெரிக்கா பயணமான முகேஷ் அவர்கள், கலிஃபோர்னியாவில் உள்ள இஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் ஒரு ஆண்டு மட்டுமே நிறைவடைந்த நிலையில் 1980 -இல் தன்னுடைய படிப்பைக் கைவிட்டு இந்தியா திரும்பினார்.


வணிகத்தில் ஈடுபடக் காரணம்


இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தியில் தனியார் துறைகளை ஊக்குவித்தது. அப்பொழுது இவருடைய தந்தை திருபாய் அம்பானி அவர்கள், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். மேலும், இவருடன் டாட்டா, பிர்லா என இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.


இப்படிப்பட்ட கடுமையான போட்டிக்கு மத்தியில் இவருடைய தந்தை திருபாய் அம்பானிக்கு அந்த உரிமம் வழங்கப்பட்டது. இதனால், தந்தையின் பொறுப்புகள் அதிகமானதால், தன்னுடைய எம்.பி.ஏ படிப்பை ஓராண்டோடு முடித்துக்கொண்டு, தந்தைக்கு உதவியாக ரிலையன்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் பொறுப்புகளை ஏற்றார்.


தொழில் வளர்ச்சியில் மேற்கொண்ட சாதனைகள்


ரிலையன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி எனத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1981 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பெட்ரோலிய சுத்திகரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு ஆராய்ச்சி என மேலும் பல தொழில் அமைப்புகளைத் தொடங்கி தன்னுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்தினார்.


அதுமட்டுமல்லாமல், உலகில் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களைக் கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளைக் கொண்ட ‘இன்ஃபோகாம் நிறுவனத்தை’ (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார். பின்னர், அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்தை ஜாம்நகரில் நிறுவி, அதன் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகப்படுத்தினார். மேலும், இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளின் நிர்வாக இயக்குனராகவும், அதனை வழிநடத்துபவராகவும் செயல்பட்டார்.


ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட இடைஞ்சல்கள், அரசியல் சவால்கள் எனப் பல தடைகளை சமாளித்து தன்னுடைய தந்தைக்கு பக்கபலமாக இருந்த இவர்,  தந்தை திருபாய் அம்பானியின் இறப்பிற்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானிதான் ஆளப்போகிறவர் என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில், அவருடைய சகோதரர் அனில் அம்பானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருடைய குடும்பம் இரண்டாகப் பிரிந்தது. இதனால், அம்பானியின் குடும்பச் சொத்துக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோகெமிக்கஸ் நிறுவனம் முகேஷிடமும், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானியிடமும் பிரித்துக்கொடுக்கப்படது.


தனிப்பட்ட வாழ்க்கை


முகேஷ் அம்பானி அவர்கள், நீதா அம்பானி என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இஷா என்ற மகளும், ஆனந்த் மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் மும்பையில் அண்டிலியா என்று பெயரிடப்பட்ட 27 மாடி கட்டிடம் கொண்ட மிகவும் விலையுயர்ந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மதிப்பு அமெரிக்க டாலரில் 2 பில்லியன்கள் ஆகும்.


விருதுகளும், மரியாதைகளும்


    2010 – ஆசியா பொதுநல ஸ்தாபன அமைப்பின் மூலம் பிரதான விருந்தில் ‘குளோபல் விஷன் விருது’.


    என்.டி.டி.வி (இந்தியா) மூலம் 2010 ஆம் ஆண்டின் ‘சிறந்த வர்த்தக தலைவர் விருது’.

    பைனான்சியல் குரோனிக்கிள் அமைப்பின் மூலம் 2010 ஆம் ஆண்டின் ‘தொழிலதிபர் விருது’.

    2010 – ஐ.எம்.சி அமைப்பின் மூலம் 2009 ஆம் ஆண்டிற்கான ‘ஜுரான் தர பதக்கம்’.

    2010 – பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக பள்ளித்தலைவர் பதக்கம்’.

    அமெரிக்க இந்திய வர்த்தக ஆலோசனை சபை மூலம் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் விருது’.

    குஜராத் அரசிடம் இருந்து 2007 ஆம் ஆண்டிற்கான ‘சித்திரலேகா நபர் விருது’.

 முகேஷ் அம்பானியின் தொழில் வளர்ச்சிக்கு முன்னால், இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானி’ என்னும் மிகப்பெரிய தொழில் பின்னணி இருந்தாலும், தன்னுடைய திறமையான வர்த்தகச் சிந்தனையால், லாபம் தரும் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவின் நவீனத் தொழில்நுட்பத் துறையின் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.


 2007 ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் அதிகரித்ததின் காரணமாக இவர், ‘உலக பணக்கார மனிதர்’ எனவும் அறியப்படுகிறார்.

No comments:

Post a Comment