Search This Blog

Monday, 16 September 2013

குறைந்த விலையில் கார்பன் ஏ-8 ஆண்ட்ராய்ட் மொபைல்



கார்பன் நிறுவனம், அண்மையில் குறைந்த விலையில் ஏ-8 என்ற பெயரில், ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 



சஹோலிக் (Saholic) வர்த்தக இணைய தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 அங்குல WVGA கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. 


1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் உள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன். 



எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 



 முன்புறமாக வீடியோ அழைப்புகளுக்கு 0.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது.


 இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 3ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கிறது. 


இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. எப்.எம்.ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளுடூத், ஜி.பி.எஸ்., 512 எம். பி. ராம் மெமரி, 4 ஜிபி உள் நினைவகம், 32 ஜிபி வரை இதனை அதிகப்படுத்தும் வசதி ஆகியவை இதன் மற்ற சிறப்பம்சங்கள். 


கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,189.
Click Here

தமிழைத் தாங்கி வந்த புதிய ஐபோன்கள்!





பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. “எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது” என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது. ஆனால், தமிழர்களுக்கு இது உண்மையிலேயே இதுவரை எவரும் தராத போனாகத்தான் உள்ளது. போனிலேயே தமிழ் உள்ளீடு செய்திடும் செயல்பாடு தரப்பட்டுள்ளது. இதில் இயங்கும் ஐ.ஓ.எஸ் 7 என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தமிழ் மொழிச் செயல்பாட்டினையும் உள்ளடக்கியாதாக உள்ளது. இது தமிழுக்குப் பெருமையாகும். இது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.



ஐ போன் 5 எஸ் மற்றும் குறைந்த விலை போனாக ஐபோன் 5சி என இரு மாடல்கள் வெளியாகி உள்ளன. ஐபோன் 5 எஸ், 16, 32 மற்றும் 64 ஜிபி என மூன்று மாடல்களில், தங்கள், வெள்ளி மற்றும் ஸ்பேஸ் கிரே வண்ணங்களில் கிடைக்கும். அமெரிக்காவில், இரண்டாண்டு மொபைல் சேவை நிறுவன ஒப்பந்தத்துடன் இவை 199, 299 மற்றும் 399 டாலர் கட்டணத்தில் கிடைக்கும். நிறுவன ஒப்பந்தம் இல்லாமல், அமெரிக்காவில், 16 ஜிபி போன் 549 டாலர், 32 ஜிபி 649 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. ஐபோன் 5சி, ஒப்பந்தக் கட்டுப்பாடு இல்லாமல், 549 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. பட்ஜெட் விலை போன் என்று கூறியதெல்லாம் சும்மா என மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.


மற்ற நாடுகளில் இந்த போன்களின் விலை, இவை சந்தைக்கு வரும்போது தெரியவரும். செப்டம்பர் 20 முதல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் இவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த போன்களுடன் ஐ.ஓ.எஸ்.7 என்னும் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது. முதன் முதலாக, தன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 18 முதல் இது டவுண்லோட் செய்திடக் கிடைக்கும். ஐபோன் 4, ஐபேட் 2, ஐபேட் மினி, மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றில் இயங்கும்.


2007 ஆம் ஆண்டு, முதல் ஐபோன் வெளியானது. இதில் இயங்கும் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஐ.ஓ.எஸ்.7 என்ற பெயரில், புதிய வடிவத்தில், நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் தற்@பாது வெளிவருகிறது. தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏழாவது ஜெனரேஷன் என்பதால், இதற்கு ஐ.ஓ.எஸ்.7 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் 200 புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. புதிய பயனாளர் இண்டர்பேஸ், அறிவிப்பு மையம், விரைவாக அணுக்கம் பெற கட்டுப்பாடு மையம் என இதில் பல விஷயங்கள் புதியதாக அறிமுகமாகின்றன. மிகப் பளிச் எனத் தெரியும் வண்ணமயமான இண்டர்பேஸ் இதற்கு சரியான மேக் அப் ஆக தோற்றம் அளிக்கிறது. ஐ வொர்க் (iWork productivity suite), ஐ லைப் (iLife), ஐமூவி (iMovie) மற்றும் ஐ போட்டோ (iPhoto) ஆகிய அப்ளிகேஷன்கள், ஐ.ஓ.எஸ்.7 உடன் இணைந்து கிடைக்கின்றன. 



இவை, இந்த போன்களுக்கு நல்ல விற்பனையைத் தரலாம். ஏனென்றால், இந்த அப்ளிகேஷன்கள் மூலம், போட்டோக்களையும், வீடியோக்களையும் எடிட் செய்திட முடியும். ""இவை ஏற்கனவே மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவை ஆதலால், தற்போது இந்த போன்கள் மூலம் பயன்படுத்த மக்கள் ஆர்வப்படலாம். மேலும் வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இவை தரப்படுவதில்லை என்பதால், புதிய ஐபோன்களை, இதற்காகவே மக்கள் விரும்புவார்கள்'' என ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாகி டிம் குக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், ""தனக்கென ஒரு தனித்தன்மையையும், அதனையே தனிச் சிறப்பாகவும் பண்பாகவும் ஆப்பிள் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. அதனை மாற்றும் எந்த முயற்சிக்கும் நான் சாட்சியாகவும் இருக்க மாட்டேன், அனுமதிக்கவும் மாட்டேன்'' என்று கூறினார். இந்த போன்களைக் காண்கையில் இது முற்றிலும் உண்மை என்பது விளங்கும்.

ஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்:


1.ப்ராசசர்: ஏறத்தாழ நூறு கோடி ட்ரான்சிஸ்டர்களுடன் கூடிய 64 பிட் ப்ராசசர் கொண்ட முதல் மொபைல் போனாக ஐபோன் 5 எஸ் வந்துள்ளது.

2. விரல் ரேகை: டச் ஐடி (“Touch ID”) என்று அழைக்கப்படும் இந்த போனில், வெகுகாலமாக எதிர்பார்த்த, விரல் ரேகை அறியும் சென்சார் வசதி தரப்பட்டுள்ளது. பயனாளர்கள், இதனைப் பயன்படுத்தி, போனை இயக்கலாம். இது தேவை இல்லை என்றால், முன்பு போல நான்கு இலக்க பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம். அல்லது பாஸ்வேர்ட் இல்லாமலும் பயன்படுத்தலாம்.

3. பேட்டரி: தொடர்ந்து 10 மணி நேரம் 3ஜி இயக்கம் தரக் கூடிய திறன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் மின்சக்தியைக் கொடுக்கும். தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்; 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்.

4. கேமரா: இதன் ஐ சைட் (iSight) கேமரா 28 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லென்ஸ் இயங்குகிறது. தொடர்ந்து ஒரு விநாடியில் 10 படங்களை எடுக்கும் “burstmode” கிடைக்கிறது. தானாக போகஸ் செய்திடும் வசதி, முகம் அறிந்து இயக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இதன் வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.

5. இயக்கும் சிப்: இதில் இயங்கும் 64 பிட் ஏ7 சிப், இதற்கு முன் இருந்த ப்ராசசர்களைக் காட்டிலும் 56 மடங்கு வேகமாக இயங்கவல்லது. இதனால், ஐபோன் எஸ்5ல் உள்ள சில அப்ளிகேஷன்கள், ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் இயங்கும். இத்துடன் எம்7 (M7) என்ற பெயரில் சிப் ஒன்றையும், ஆப்பிள் இதில் தருகிறது. இது ஒரு “motion coprocessor”. இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.

6. இலவச அப்ளிகேஷன்கள்: இதுவரை கட்டணம் செலுத்திப் பெற்ற Apple’s Pages, Numbers, Keynote, iPhoto, and iMovie apps அப்ளிகேஷன்கள் இதில் இலவசமாகவே இணைத்துத் தரப்படுகின்றன.

7. வடிவமைப்பு: இதன் பரிமாணங்கள்: 123.8 x58.6 x 7.6 மிமீ. எடை 112 கிராம்.

8. திரை: மல்ட்டி டச் வசதியுடன் 4 அங்குல திரை 1136 x 640 பிக்ஸெல் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

9. சிம்: இதில் நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.

10. மொழிகள்: இதில் தமிழ் உட்பட பல உலக மொழிகளைப் பயன்படுத்தலாம். அதே போல பல மொழிகளுக்கான அகராதிகளும் கிடைக்கின்றன.முன் கூட்டியே சொற்களைத் தரும் predictive text மற்றும் தானாகவே சொற்களைத் திருத்தும் (auto correct) வசதிகள் உள்ளன. 


ஐபோன் 5 சி (iPhone 5C) மொபைல் போன் சிறப்புக்கள் பின்வருமாறு:


1. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கிறது.

2. பாலிகார்பனேட் ஷெல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

3. சுற்றியுள்ள ஸ்டீல் ஸ்ட்ரக்சர் ஆன்டென்னாவாகச் செயல்படுகிறது.

4. ஏ6 (A6) சிப் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் காம்பஸ், ஜி.பி.எஸ்., வை-பி ஆகிய வசதிகள் உள்ளன.

5. ஐபோன் 5 எஸ் போல, இதிலும் 4 அங்குல திரை டிஸ்பிளே கிடைக்கிறது. ரெசல்யூசன் 1136 x 640 பிக்ஸெல்கள்.

6. கேமரா 8 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ், ரெடினா டிஸ்பிளே, போட்டோ ஜியோ டேக்கிங் வசதிகள் கிடைக்கின்றன. வீடியோ நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.

7. இதன் பரிமாணம் 124.4 x 59.2 x 8.97 மிமீ. எடை 132 கிராம்.

8. இதில் உள்ளாக அமைந்த லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டு, யு.எஸ்.பி மற்றும் பவர் அடாப்டர் வழியே அதனை சார்ஜ் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. தொடர்ந்து 3ஜி அழைப்புகளை 10 மணி நேரம் பயன்படுத்தலாம். வீடியோ 10 மணி நேரமும், ஆடியோ 40 மணி நேரமும் பயன்படுத்தலாம்.


இந்த போன் மக்கள் மனதில் பட்ஜெட் விலை போனாக இடம் பெறுமா என்பது சந்தேகமே. ஆனால், ஆண்ட்ராய்ட் போனால் சரியும் தன் மொபைல் போன் சந்தைப் பங்கினை, இந்த போன் தூக்கி நிறுத்தும் என ஆப்பிள் நிறுவனம் எண்ணுகிறது.


ஆப்பிள் தந்துள்ள இந்த இரண்டு மாடல்களில், மற்ற நிறுவனங்களின் மொபைல் போன்களில் காணப்படும் சில வசதிகள் இல்லை. அவை:


1. அண்மைக் கள தகவல் தொடர்பு எனக் கூறப்படும் Nearfield communications. வருங்காலத்தில் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதால், ஆப்பிள் ஏன் இதனை விட்டுவிட்டது என்று தெரியவில்லை.


2. வயர்லெஸ் சார்ஜிங் தொழில் நுட்பம். ஆப்பிள் தொடர்ந்து இது குறித்து எந்த எண்ணமும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சாம்சங், எல்.ஜி. மற்றும் நோக்கியா நிறுவனங்கள் இதனைத் தங்களின் சில மாடல்களில் தந்து வருகின்றன. ஒருவேளை, இந்த தொழில் நுட்பம் இன்னும் சீராக வளர்ந்த பிறகு, ஆப்பிள் இதனைத் தன் மாடல் போன்களில் தர திட்டமிட்டிருக்கலாம்.


3. எச்.டி. ஸ்கிரீன்: ஹை டெபனிஷன் திரை தருவதை ஆப்பிள் இந்த மாடல்களிலும் தள்ளிப்போட்டுள்ளது. ஆப்பிள் போன் திரைகளில் காட்டப்படும் டிஸ்பிளே ரெசல்யூசன் இன்னும் பழைய பாணியிலேயே உள்ளது.


4. நம் வசப்படுத்தும் வசதி: இதில் நாமாக மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு மெமரி அதிகப்படுத்த இயலாது. நாமாக புதிய பேட்டரி ஒன்றை இணைக்க முடியாது.


மெமரி கார்ட் மற்றும் உபரி பேட்டரியினை வைத்து மொபைல் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உண்டு என்றால், ஆப்பிள் போன்களை மறந்துவிடுங்கள். இருப்பினும், இதன் நவீன ப்ராசசர், பல வண்ணங்களில் வடிவமைப்பு ஆகியவை இம்முறை குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்களாகக் கிடைத்துள்ளன.

நாரையும் ஓநாயும் (நீதிக்கதைகள்)


ஒரு காட்டில் ஒரு ஓநாய் இருந்தது.அது மிகவும் கெட்ட குணம் கொண்டது.

தினமும் ..பலம் குறைந்த ஏதேனும் விலங்குகளையோ ..பறவைகளையோ கொன்று தன் பசியை தீர்த்துக்கொள்ளும்.

ஒரு நாள் அது இறந்த ஒரு மிருகத்தின் உடலை தின்றபோது ..அறியாமல் ஒரு எலும்புத் துண்டையும் சாப்பிட்டது. அந்த எலும்புத்துண்டு
அதனுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது.

அதனால் ...அவதிப்பட்ட ஓநாயால் எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை..

ஒரு நாரையை அது அணுகி ...அதன் அலகால் எலும்புத்துண்டை அகற்றுமாறும்..அப்படி அகற்றினால் அந்த நாரைக்கு பரிசு தருவதாகவும் கூறியது.

சரியென்று நாரையும் தன் நீளமான அலகை ஓநாயின் தொண்டைக்குள் விட்டு அங்கே சிக்கிக்கொண்டிருந்த எலும்பை வெளியே எடுத்துவிட்டது.

பின் நாரை ..ஓநாயிடம் பரிசு கொடுக்குமாறு கேட்டது....

உடன் ஓநாய்'உனக்குத்தான் ஏற்கனவே வெகுமதி கொடுத்துவிட்டேன்,என்னைப்போன்ற ஓநாயின் வாயில் உன் தலையை விட்டுவிட்டு ...அதை பத்திரமாக வெளியே எடுக்க
அனுமதித்தேனே,,அதுவே உனக்கு சிறந்த பரிசு தான்' என்று கூறிவிட்டது.

நாரை ஏமந்தது...

கொடியவர்களுக்கு உதவி செய்தால் ..பின் அவற்றிடமிருந்து உயிர் தப்புவது பெரிய காரியமாகிவிடும்.

ஆகவே தீயவரைக் கண்டால் ஒதுங்குவதே சிறந்தது.
 

சாக்லெட் சுவைப்போர் கவனத்துக்கு..!








அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக நிறைய கற்பிதங்கள் உள்ளன. சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படும் என்றெல்லாம்கூட மேற்குலகில் நம்பப்படுகிறது. ஆனால், இந்த கற்பிதங்கள் எந்த அளவுக்கு உண்மை?

பால் கலக்காத சாக்லெட்டைவிட பால் கலந்த சாக்லெட்டில் கலோரி அதிகம் என்பது ஒரு கற்பிதம். இது உண்மையல்ல. பால் கலந்தது என்றாலும் சரி, பால் கலக்காதது என்றாலும் சரி, அவற்றில் கிட்டத்தட்ட ஒரே அளவான கலோரிகள்தான் உள்ளன. நூறு கிராம் சாக்லெட்டில் சுமார் 550 கலோரிகள் இருக்கின்றன.

சாக்லெட் சாப்பிட்டால் மைகிரேன் தலைவலி வரும் என்பது மற்றொரு கற்பிதம். சாக்லெட்டில் டைரமைன், ஃபீனைல்எதிலமைன் போன்ற அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவற்றால் மைகிரேன் தலைவலி தூண்டப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், சாக்லெட் சாப்பிடுவதால் மட்டும் ஒருவருக்கு மைகிரேன் வரும் என்று சொல்வதற்கில்லை.

சாக்லெட் சாப்பிடுவதால் சதைபோடும் என்றும் பலரும் நம்புகின்றனர். சாப்பாட்டை வெளுத்துக் கட்டிவிட்டு அதற்கும் மேல் சாக்லெட்டும் உட்கொண்டால் நிச்சயம் உடல் பெருக்கத்தான் செய்யும்.

சாக்லெட்டை அளவாக எடுத்துக்கொள்ளும்போது, அதனால் உடல்நலனுக்கு சில நன்மைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆன்டிஆக்சிடண்ட்ஸ் என்று சொல்லப்படும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேதிப்பொருள் சாக்லெட்டில் உள்ளது.


ஹெட்போன் மூலம் இலவச மின்சாரம்!



செல்பேசிகள் மற்றும் எம்பி3 பிளேயர்களில் கேட்பதற்குப் பயன்படும் ஹெட்போன் மூலம் சூரியசக்தி மின்சாரம் தயாரித்து, அவற்றின் மின் தேவையை நிறைவு செய்யலாம் என்று புதிய ஆராய்ச்சி சொல்கிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம்.


ஹெட்போனின் இரண்டு பக்கங்களின் மேற்பரப்பில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் மின்கலங்கள் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு நீங்கள் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தால், உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி ஆகிக் கொண்டிருக்கும் என்கிறார் இதைக் கண்டுபிடித்த பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஆண்டர்சன்.


ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது.


இந்தச் சிறப்புக் காலணிகளை அணிந்துகொண்டு ஒருவர் இரண்டரை கிலோமீட்டர் முதல் ஐந்து கிலோ மீட்டர் நடந்தால் ஐபோனை சார்ஜ் செய்யமுடியும்.


உலக அளவில் மாற்று மின்சாரத்தின் தேவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், இது போன்ற வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்கான மதிப்பும் கூடி வருகிறது.


பாஸ்வேர்டை பாதுகாக்க ஒர் எளிய வழி!



வங்கி கணக்குத் தொடங்கி சமூக வலைதளம் வரை பெரும்பாலான இணையதளங்கள் இன்று பயனீட்டாளர் பெயரையும் பாஸ்வேர்டையும் கேட்டகாமல் உங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அதனால், எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய எண்களையோ நபர்களின் பெயர்களையோ பாஸ்வேர்டாக உருவாக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.


இப்படியிருக்கையில், உங்கள் பாஸ்வேர்டை தாக்காளர்கள் (ஹேக்கர்) அறிந்துகொள்வதும் மிகவும் எளிது. உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்துக்கொண்டாலே போதும், அவற்றைக்கொண்டு சாஃப்ட்வேர் மூலம் யூகித்தறியும் படலத்தை அரங்கேற்றினால் உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர் கையில்.


நம்முடைய பாஸ்வேர்டும் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அதேசமயம், அது திருட்டும்போகக் கூடாது. என்னதான் செய்வது? இலக்கணப் பிழை செய்யுங்கள் என்கின்றனர், ஆய்வாளர்கள்.


ஆம்! நீங்கள் இலக்கண பிழையோடு உங்கள் பாஸ்வேர்ட் உருவாக்கினால் அவ்வளவு எளிதில் அதனை ஹேக் செய்ய முடியாது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை அமெரிக்காவில் உள்ள கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அஸ்வினி ராவ் தலைமையிலான ஆய்வுக்குழு நிரூபித்துள்ளது.


இந்தக் குழு நடத்திய ஆய்வில், பாஸ்வேர்டை யூகிக்க பயன்படுத்தப்படும் கிராகிங் என்ற முறையில் இலக்கண சுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படக்கூடியவை என தெரியவந்துள்ளது. இடையே எண்கள், பெரிய எழுத்து போன்றவற்றை கொண்டு பாஸ்வேர்டை கடினமாகியிருந்தாலும்கூட, அவற்றில் உள்ள இலக்கண தன்மையைக் கொண்டு கிராகிங் சாப்ட்வேர்கள் வெற்றி பெற்று விடுகின்றன. ஆனால், அதே பாஸ்வேர்டு இலக்கண‌ப் பிழை கொண்டதாக இருந்தால் தாக்காளர்களின் சாப்ட்வேரால், அதிலுள்ள எந்த பொதுத்தன்மையையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. எனவே, உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்கும்.


நீங்கள் உருவாக்கும் இலக்கண பிழையைப்போன்று மற்றொருவரால் உருவாக்க முடியாது என்பதுதான் இந்த உத்தியின் தனிச்சிறப்பு. எனவே, இலக்கணப் பிழை செய்யுங்கள் பாஸ்வேர்டில் மட்டும்.

உண்மையே பேசவேண்டும்.(நீதிக்கதைகள்)



 
கந்தன் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் ..எதற்கெடுத்தாலும் பொய்யைச் சொல்லி...மக்களை ஏமாற்றி வந்தான்.


அதனால் ...அவனது தந்தை,,,அவனிடம் ...வீட்டிலிருந்த ஆடுகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்திருந்தார்.


ஆடுகளை....ஊருக்கு வெளியே இருந்த காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றான் கந்தன்.


ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க..சற்றே தள்ளி அமர்ந்திருந்த கந்தன் 'புலி வருது புலி வருது காப்பாத்துங்க...' எனக் கத்தினான்.


அருகாமையில் பக்கத்து வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த மக்கள் அவனைக் காக்க ஓடி வந்தனர்.ஆனால் வந்ததும்தான் கந்தன் பொய் சொல்லியிருக்கிறான் என்று உணர்ந்தனர்....ஏமாந்த அவர்களைப் பார்த்து கந்தன் சிரித்தான்.


அடுத்த நாளும்..கந்தன் முந்தைய நாள் சொன்னது போல 'புலி வருது புலிவருது..'எனக் கத்த ஓடி வந்த மக்கள் ஏமாந்தனர்....கந்தனும் அவர்களைப் பரிகசிப்பதுபோல சிரித்தான்.


மூன்றாம் நாள் ..ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க ...உண்மையிலே புலி வந்து விட்டது. கந்தன் கத்த ...மக்களோ அவன் தங்களை மீண்டும் ஏமாற்றவே கத்துகிறான் என நினைத்து போகவில்லை.


புலி..சில ஆடுகளை அடித்து கொன்றுவிட்டு அவன் மேலும் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தி விட்டு மறைந்தது.


அப்போது தான் கந்தன் ....தான் முன்னர் பொய் சொன்னதால் ...தான் கூறும் உண்மைகளையும் மக்கள் பொய்யாக எண்ணியதை எண்ணி மனம் வருந்தினான்.


இனி எக்காரணம் கொண்டும் பொய் சொல்லக்கூடாது என்று எண்ணியதுடன் நில்லாது....அடுத்த நாள் முதல் ஒழுங்காகப் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். 

காற்றில் கலந்து வரும் ஆரோக்கியம்!


நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ நல்ல சுத்தமான காற்று அவசியம் தேவை நல்ல பிராணவாயு நிறைந்த காற்றை சுவாசித்தால்தானே, அதை நம் உடல் ஏற்று, ரத்தம் சுத்தமடைந்து, அதிலுள்ள கழிவுகளை கரியமில வாயுவாக மாற்றி, நம் உடலானது நம் நாசிகள் மூலம் வெளியேற்ற முடியும்!ஆனால் மக்கட்தொகை பெருகி, ஜனநெருக்கம் அதிகம் ஆகும் பொழுது அத்தனை மக்களும், உயிர் வாழ் பிராணிகள்,மிருகங்கள் அனைத்தும் சேர்ந்து மூச்சு விடும் பொழுது வெளியேற்றும் கரியமில வாயு, காற்றில் கலந்து அந்த பகுதியில் உள்ள காற்று மாசு படாதா! என்று எண்ணத் தோன்றும்.


இங்குள்ள செடி கொடிகளும், மரங்களின் இலைகளும் சுவாசிக்கின்றன. ஆனால் அவைகள் காற்றில் உள்ள கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு, நல்ல பிராணவாயுவை வெளியிடுகின்றன. இதனால் காற்றில் கரியமில வாயு குறைந்து, பிராண வாயு அதிகரிக்கிறது. இயற்கை, இப்படி ஒரு சமன்பாட்டு நிலைமை ஏற்படுத்துகிறது! இதனை எத்தனை பேர் உணருகிறார்கள்.


sep 16 - air on earth.MINI

 


மொத்தத்தில் உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் காற்றை அசுத்தப்படுத்தக் கூடிய, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் உற்பத்தியாகின்றன. இதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 51/2 லட்சம் பேர் காற்று அசுத்தமாவதால் ஏற்படும் நோய்களால் இறந்துபோகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 3.35 லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயினால் இறக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் காற்று மாசுபடுவதுதான்.


உலகிலுள்ள மனிதர்கள் எந்த நோயால் அதிகமாக இறக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு COPD என்று சொல்லக்கூடிய நாள்பட்ட நுரையீரல் பாதை தடுப்புநோய் (Chronic Obstructive Pulmonary Disease) பதினாறாவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்த நோய் நான்காவது இடத்துக்கு வந்துவிட்டது.


ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரம் கேலன் காற்றை சுவாசிக்கிறான். (ஒரு கேலன் என்பது சுமார் 3.88 லிட்டர் ஆகும்). இதில் சுமார் 142 கேலன் சுத்தமான ஆக்சிஜன் வாயு தான் அவனது உடலுக்கு கிடைக்கிறது. மீதமுள்ளதெல்லாம் சுத்தமற்ற காற்று தான். இந்த நிலை தொடர்ந்தால் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எல்லா மருத்துவமனைகளிலும் நுரையீரல் பாதிப்பு நோயாளிகள் தான் அதிகமாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.


காற்று மாசு இயற்கையாக எரிமலை வெடித்து சிதறுதல் மூலமாகவும் ஏற்படுகிறது. சுமார் 500 எரிமலைகள் உலகில் உயிரோடு இருக்கின்றன. இதில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 எரிமலைகள் வெடித்து சிதறி விஷ வாயுக்களையும், சாம்பலையும் கக்கிக்கொண்டு இருக்கின்றனவாம். இந்த விஷ வாயுக்களும், சாம்பலும் எரிமலை வெடிக்கும்போது வெளியாகி காற்றில் கலக்கின்றது.


பூமியிலிருந்து சுமார் 16 முதல் 32 கிலோ மீட்டர் உயரத்துக்கு எரிமலைகள் வெடித்து சிதறி மேற்கூறிய மாசுப் பொருட்களை வானத்தில் பரப்பி விடுகிறது. இப்படிப்பட்ட எரிமலைகளுக்குப் பக்கத்தில் சுமார் 50 கோடி மக்கள் வாழ்கிறார்களாம். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
சிகரெட் புகைப்பவர்களை விட பக்கத்தில் நின்று கொண்டு அவர்கள் விடும் புகையை சுவாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பாதிப்பு அதிகம் உண்டு. நீங்கள் விடும் சிகரெட் புகை இந்த நாட்டு மக்களுக்கே கெடுதல் செய்கிறது என்பதை சிகரெட் பிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..


நீங்கள் ஒருத்தர் மட்டும் சிகரெட் புகைக்கவில்லையே? உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேர் சிகரெட் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இத்தனை கோடி பேரும் விடும் புகை, காற்றை அசுத்தப்படுத்துமா…படுத்தாதா… என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் கூட இந்த அசுத்தக் காற்றை சுவாசிக்கிறீர்கள் அல்லவா. இது கெடுதிதானே! ஆகவே தயவு செய்து இன்றோடு சிகரெட்டை நிறுத்திவிடுங்கள். இதுவரை புகைத்தது போதும். நாம் வசிக்கும் இடத்தைச் சுற்றி சிகரெட் புகைத்தால் கர்ப்பிணிப் பெண்களின் கருவில் குழந்தை உருவாகுவதையும் தொந்தரவு செய்யும்.



நாம் இறை வழிபாடு செய்ய பயன்படுத்தும் கற்பூரம் எரியும்போது கார்பன் துகள்களையும், கார்பன் படிமங்களையும் அதிகமாக உண்டு பண்ணுகிறது. இவை காற்றில் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனாலேயே இப்பொழுதெல்லாம் கோவில்களில் கற்பூரத்திற்குப் பதிலாக எண்ணை அல்லது நெய்யை தீபம் ஏற்ற பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அதையே நாம் தொடர்ந்து பயன்படுத்தலாமே.


சுத்தமான காற்று கிடைப்பது என்பது மிக மிகக் கஷ்டமாக இருக்கிறது. இந்த நிலையில் சுத்தமான ஆக்சிஜனுக்கு எங்கே போவது என்ற கவலையைப் போக்க `ஆக்சிஜன் பார்லர்` என்ற கடைகளை வெளிநாடுகளில் திறந்திருக்கிறார்கள். இந்தியாவிலும் இருக்கிறது.


சுத்தமான ஆக்சிஜனை சுவாசித்து உடலில் தெம்பை ஏற்றிக்கொள்ள இந்தக்கடைகள் உபயோகப்படுகிறது. இந்தக் கடைகளில் அதிக சதவீதம் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். நம் நாட்டில் இது இன்னும் பிரபலமாக வில்லை. நாம் காற்றை அசுத்தப்படுத்தாமல் இருந்தாலே இந்தக் கடைகளெல்லாம் தேவையில்லை.


அதுசரி… நாம் காற்றை அசுத்தப்படுத்தாமல் இருப்பது எப்படி?


* பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட எந்தப் பொருளும் மண்ணுக்குள் மக்காது. எரித்துத்தான் ஆகவேண்டும். எரித்தால் நச்சுப்புகை வரும். ஆகவே பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை குறையுங்கள்.


* மண்ணில் மக்கிப் போகக்கூடிய எல்லாப் பொருட்களையும் கொளுத்துவதற்குப் பதிலாக புதைத்து விடுங்கள்.


* வீடு, பாத்ரூம் முதலியவற்றை கழுவ அதிக சக்தி வாய்ந்த `கிளினீங்’ பொருட்களை உபயோகிக்காதீர்கள்.


* கியாஸ் மூலம் இயங்கும் மெஷின்களுக்குப் பதிலாக மின்சாரம் மூலம் இயங்கும் மெஷின்களை அதிக அளவில் உபயோகப்படுத்துங்கள்.


* கார் ஓட்டும்போது அடிக்கடி வேகத்தை கூட்டிக் குறைத்து ஓட்டாதீர்கள். மிதமான வேகத்தில் செல்லுங்கள்.


* சிகரெட்டை நிறுத்துங்கள்.


* உங்களது காரில் அதிக புகை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


* நம் தலைமுறைகள், நீண்ட காலத்துக்கு நிலைத்து உயிர்வாழ காற்று மிக மிக முக்கியம். அதற்கு இந்த தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் உதவி புரிய வேண்டும்.அதிலும் காற்றை காசு கொடுத்து வாங்கும் நிலைமையை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (நீதிக்கதை)





ஒரு தந்தைக்கு நாலு பிள்ளைகள் இருந்தனர்.அவர்கள் தங்களுக்குள் அவ்வப்போது சண்டைப் போட்டு வந்தனர்.அதனால் மனம் வருந்திய தந்தை...அவர்களிடையே எந்த வழியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று யோசித்தார்.


பின் ஒரு நாள் அவர் தன் பிள்ளைகளிடம் ஒரு கட்டு சுள்ளி விறகுகளைக் கொண்டு வரச் சொன்னார்.


பின்னர் ஒவ்வொரு பையனிடமும் அந்தக் கட்டைக் கொடுத்து அதை துண்டுகளாக உடைக்கும்படியாகக் கூறினார்.மகன்கள் நால்வரும் தனித்தனியாக தங்கள் பலத்தை உபயோகித்து சுள்ளிக் கட்டை உடைக்க முயன்றனர்.


ஆனால்...அதை அவர்களால் உடைக்க முடியவில்லை...


பின்னர் தந்தை அந்தக் கட்டை அவிழ்த்து.....சுள்ளிக் குச்சிகளைத் தனித்தனியே எடுத்து ஒடிக்கக் கொடுத்தார்.....அவர்கள் சுலபமாக ஒடித்து விட்டனர்.


தந்தை தன் புதல்வர்களைப் பார்த்து 'பார்த்தீர்களா..முதலில் இருந்த சுள்ளிக் கட்டு போல நீங்கள் ஒற்றுமையாக ஒன்றாக வாழ்ந்தால் உங்களை யாரும் அசைக்க முடியாது.அதனால் உங்களுக்கு எப்போழுதும் துன்பம் வராது....ஆனால் ஒற்றுமையில்லாமல் தனித்தனியாக பிரிந்தீர்களானால் இந்த சுள்ளிக் குச்சிகளைப் போல எளிதில் உடைபட்டு அழிந்து விடுவீர்கள்'.என்று புத்திமதி கூறினார்.


அதைக் கேட்ட புதல்வர்கள்...ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து ஒற்றுமையாக இருந்தனர்.


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.