Search This Blog

Friday, 2 January 2015

மசால் தோசை - சமையல்!






தேவையானவை:


தோசை மாவு - 2 கப் (மசால் செய்ய) பெரிய உருளைக்கிழங்கு - 3, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், சோம்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 கப்.


துவையலுக்கு:


தேங்காய் துருவல் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, உப்பு, இஞ்சி - ஒரு சுண்டைக்காய் அளவு, பூண்டு - 2 பல்.

செய்முறை:


 ஆலு வெந்தயக்கீரை தோசைக்கு சொன்ன மாதிரியே, தோசை மாவு தயார்செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையைப் பொடி செய்யவும். அடுத்ததாக, மசாலாவுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிது கட்டியும் தூளுமாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும்.


வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, 1 சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். பின் உப்பு சேர்க்கவும். வெங்காயம் வெந்ததும், உதிர்த்த கிழங்கையும் சேர்த்து கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.


துவையலுக்கு கூறியுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக ஊற்றி எண்ணெயை சுற்றிவர ஊற்றி மூடிவிடவும். தோசை வெந்ததும், அடுப்பை குறைந்த தணலில் வைத்து, ஸ்பூனால் துவையலை எடுத்து தோசை மேல் தடவவும். பின் பொட்டுக்கடலை மாவை தூவி, அதன் மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து மறு பாதி தோசையை மடக்கவும். சூடாக எடுத்து பரிமாறவும். சாப்பிட்ட எல்லோரும் ‘ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.