Search This Blog

Monday, 18 November 2013

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!



படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், காய்ச்சல் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் காய்ச்சல் நீங்கும்.

ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும்.
ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

முட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்!

 

இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.

மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.

இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.

இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

 கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக..!

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!



இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு  உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

ஆண்மைக்கு ரோஜா குல்கந்து


 காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

தாது விருத்தி தரும் பூசணிக்காய்


 பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

இனிமையான உறவுக்கு இலுப்பை பூ


 இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.

குழந்தை வரத்திற்கு ஆலம்பழம்

 சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்

பழமொழியில் ரீமிக்ஸ்!! ரீமிக்ஸ்!!


பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க,
பழைய படத்த ரீமேக் பண்றாங்க,
அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்?

அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம்.
அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம்.
ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல் போச்சு’.

பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
 புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்

 பழசு: இளங்கன்று பயமறியாது
 புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது

 பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
 புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும்

 பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு
 புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு

 பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்
 புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா, பொண்ணு ணிssணீஹ்வே அனுப்பும்

 பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
 புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்

 பழசு: ஆறிலும் சாவு... நூறிலும் சாவு
 புதுசு: ஆறு ரூபாய்க்கும் ரீசார்ஜ், நூறு ரூபாய்க்கும் ரீசார்ஜ்
 பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது
 புதுசு: நெட்வொர்க்காரனை திருத்த முடியாது

 பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு
 புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு

 பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு
 புதுசு: செல்போன் ஒண்ணு... சிம்மு ரெண்டு

 பழசு: கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது
 புதுசு: பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது

 பழசு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
 புதுசு: வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்

 பழசு: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
 புதுசு: வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்

 பழசு: குரைக்கிற நாய் கடிக்காது
 புதுசு: கொரியன் போன் உழைக்காது

 பழசு: யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
 புதுசு: ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்

 பழசு: ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது
 புதுசு: டவர் கிடைக்கும் வரை டைம் காத்திருக்காது

 பழசு: கடை தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே
 புதுசு: அடுத்தவன் போன எடுத்து உன் ஆளுகிட்ட பேசாதே

 பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே
 புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே

 பழசு: கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
 புதுசு: கேமராவுக்கும் ஆசை, குவாலிட்டிக்கும் ஆசை

 பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்
 புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்
 பழசு: பேராசை பெருநஷ்டம்
 புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்

அது என்ன பன்றி, பசு கதை!


ஒருவன் மிகுந்த செல்வம் கொண்ட பெரிய பணக்காரன்.

அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக இருப்பதை அனைவரும் தெரிந்தும், அவனை மக்கள் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள்.

அதனால் மிகவும் மனமுடைந்த அவன், அதற்கான காரணத்தை அறிய ஒரு ஜென் துறவியை பார்க்கச் சென்றான்.

துறவியைப் பார்த்து அனைத்தையும் கூறி, "எதற்கு?" என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம் "உனக்கு பன்றி மற்றும் பசுவைப் பற்றி சொல்ல வேண்டும்" என்றார்.

அதற்கு அவன் "அது என்ன பன்றி, பசு கதை, எனக்கு சொல்லுங்கள்" என்று கூறினான். பின் குரு "ஒரு முறை பன்றி பசுவிடம், நீ மக்களுக்கு பால் மட்டும் தான் தருகிறாய், ஆனால் நான் அவர்களுக்கு என் மாமிசத்தையே தருகிறேன். இருப்பினும் மக்கள் உன்னையே புகழக் காரணம் என்ன? என்று வருதத்தோடு கேட்டது.

அதற்கு பசு நான் உயிருடன் இருந்து அவர்களுக்கு தருகிறேன், நீ இறந்து தருகிறாய், அதனால் எதையும் உன்னால் உணர முடியவில்லை என்று சொன்னது." என்று கதையை கூறினார்.

பிறகு குரு அவனிடம் "நீயும் அந்த பன்றியைப் போல் தான், உயிருடன் இருக்கும் போது மக்களுக்கு தானம் செய்து பார், பின் தெரியும்" என்று கூறி மடத்தின் உள்ளே சென்றார்.

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்!

1) எந்த ஒரு கடும் கோபத்திலும்
 எல்லை மீறி தகாத வார்த்தைகளை
 வாய் தவறி கூட சொல்லமாட்டார்.

2) உங்களின் மோசமானச்
 சமையலையும் சிரித்துக்
 கொண்டே சாப்பிடுவார்.

3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார்.ஒவ்வொர சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.

4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர
 மாட்டார்.உங்கள் குறைகளை நிறைகளாக்க
 முயற்சிப்பார்.

5) உங்கள் மனதை ஆழமாய்
 நேசிப்பதால் ,எத்தனை அழகான பெண்கள்
 முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு
 அழகாய் தெரிவீர்கள்.

6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில் ,
அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய
 முடியாது.வேறு எந்த வேலையிலும்
 கவனம் செல்லாது .

7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும்
 ஒப்பிட்டுப் பேச மாட்டார்.எந்த ஒரு பெண்ணைப்
 பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

8)உங்களை தொலைவில் இருந்துப்
 பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள்
 மௌனங்கள் அனைத்தையும் அழகாய்
 மொழி பெயர்ப்பார்.

9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும்
 பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார்.
எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள்
 நடந்துக் கொள்ள உதவுவார்.

10) உங்களை வேலைக்காரியாய் ,
சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு ,
குழந்தையாய் , தோழியாய் , தாரமாய் ,
தாயாய் பார்ப்பார்.

11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு , உங்கள்
 அழுகை பார்த்து அதிகம் வருந்துவார்.நீங்கள்
 சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்....

கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?


கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?
செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.

ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

சபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க!

1. ஐயப்ப விரதத்தில், மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை.

2. ஐயப்ப பூஜை என்ற பெயரில், ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல!

3. தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும், தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.

4. மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம் ஆகும். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

5. இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறுதலும் ஐயப்ப பக்தி விதிமுறைக்குப் புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருள்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பதுதான் முறை.

6. இருமுடி தாங்குபவர்களுக்கு பூமாலை அணிவித்து, அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டுச் சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.

7. சபரிமலை யாத்திரையின்போது, கன்னி சாமிகள்தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.

8. ஐயப்ப பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தலும் அவசியமானது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில், குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல், அமைதியாக வழிபடுதல்.

9. சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஒரு ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.

10. சபரிமலை யாத்திரையின்போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லா வகையிலும் நல்லது.

11. சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துதல் மிகவும் தவறான செயலாகும். மாறாக, ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.

12. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை, மற்றவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் தாவளத்திலேயே (இடத்திலேயே) கொண்டாடுதல் மிக சிறப்பான செயல்.

13. சன்னிதானத்தில், கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எந்தவித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோருக்கும் நல்லது.

14. கண்ணாடி பாட்டில்களையும் உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்திலும் போட்டு, மற்ற ஐயப்பன்மார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தைச் செய்ய வேண்டாம்.

15. ஐயப்பன் வழிபாட்டை, ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல், அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.

16. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!

பிளாஸ்டிக் பையை ஒழிக்க...



மும்பையில், ஒரு பிரபல டிபார்ட்மென்ட் கடையில், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க, ஒரு நூதன முறையைப் பின்பற்றுவதைக் கண்டேன்.




வாடிக்கையாளர்கள், தங்கள் தேவைக்கேற்ப துணிப் பைகளை, சைஸ் வாரியாக, 50ரூபாய், 100ரூபாய் என, டெபாசிட் செய்து பெற்றுக் கொண்டு, பொருட்களை பெற்றுச் செல்லலாம்.


பின்னர், தாங்கள் எடுத்துச் சென்ற பையை திருப்பி தந்து, டிபாசிட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.


 இங்கு, பிளாஸ்டிக் பை உபயோகம் இல்லை. கடைக்காரர்களும், பையை திருப்பித் தர, வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதில்லை.


வாடிக்கையாளர்களும், மகிழ்ச்சியாக பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.




எல்லாக் கடைகளிலும், இதைப் போலவே பின்பற்றலாமே?


பிளாஸ்டிக் பைகளின் உபயோகம், மிகவும், குறைய வாய்ப்புள்ளது.

விருதுகளை ஏற்க மறுத்த வித்தியாசமானவர்கள்!!

விருதுகளை ஏற்க மறுத்த சிலரைப்பற்றிய சுவையான தொகுப்பு இது :

ழான் பால் சார்த்தர் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை ஏற்க மறுத்தார்.  "எழுத்தாளன் ஓர் அமைப்பு. அவன் விருதுகளை ஏற்கக்கூடாது. மேற்கும், கிழக்கும் பிரிந்து சண்டைப்போட்டு கொண்டு இருக்கிறபொழுது  மேற்கு வழங்குகிற ஒரு விருதை என்னால் ஏற்க முடியவில்லை. எழுத்தாளன் விருதுகளால் தான் ஒரு அமைப்பாக மாறுவதை அனுமதிக்கக்கூடாது. அது அவன்  எழுத்தை பாதிக்கும். எனக்கும் முன்னரே நெரூடாவுக்கு அந்த விருது  வழங்கப்பட்டு இருக்க வேண்டும்" என்றார் அவர்.


வியட்நாமில் அமைதியை கொண்டு வந்ததற்காக ஹென்றி கிஸ்ஸிங்கர் மற்றும் லா  டேக் தோவுக்கு அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட்டது. லா டேக் தோவோ, "எங்கே அமைதி திரும்பி இருக்கிறது? அமெரிக்கா தன்னுடைய வாக்கைக் காப்பாற்றவில்லை!" என்று அப்பரிசை ஏற்க மறுத்தார்.


மார்லன் பிராண்டோவுக்கு 'காட் பாதர்' படத்துக்கு ஆஸ்கர் விருது
 அறிவிக்கப்பட்டபொழுது அதை பெற மறுத்து லிட்டில்ஃபெதர் எனும் பெண்ணை அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் பூர்வகுடிகளான அமெரிக்க இந்தியர்களை திரைப்படங்களில் எதிரிகளாக, தீயவர்களாக காட்டும் போக்கை ஹாலிவுட் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்வதாக அவர் அறிவித்தார். அதே படத்தின் நடிப்புக்கு கோல்டன் க்ளோப் அறிவிக்கப்பட்ட பொழுது அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருதை ஏற்க மறுத்தார்.


சாகித்ய அகாடமி வழங்கிய விருதை ஏற்க மறுத்தார் அருந்ததி ராய்.
 "அமெரிக்காவுக்கு அடிபணிந்து நாட்டை மேலும் ராணுவமயமாக்குதல், தாரளமயமாக்குதல், தொழிலாளிகளை ஒடுக்குதல் ஆகியவற்றால் இவ்விருதை ஏற்க மறுக்கிறேன்!" என்றார்.


அரசு அதிகாரிகள் விருதுகளை ஏற்க கூடாது என்று கே.சுப்ரமணியமும், என் துறை  சார்ந்த விருதுகளை தவிர மற்ற அமைப்புகளின் விருதுகளைப் பெறமாட்டேன் என்று  பத்திரிக்கையாளர் நிகில் சக்ரவர்த்தியும் பத்ம பூஷன் விருதை பெற மறுத்தார்கள். சீக்கிய பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து குஷ்வந்த் சிங்கும் இதே விருதை ஏற்க மறுத்தார். ஆனால், பின்னர்  பத்ம விபூஷன் வழங்கப்பட்டதும் அதை ஏற்றுக்கொண்டார்.


மவுலானா அபுல் கலாம் ஆசாத்துக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பொழுது அதை பெற மறுத்து ,"நானே தேர்வுக்குழுவில் இருக்கிறேன். எனக்கு எப்படி விருது?" என்று கேள்வி எழுப்பினார்.

கருவில் இருக்கும் குழந்தை ஆரோககியமாக வளரணுமா?

 nov 18 - health -baby-in-womb.

பெரும்பாலும் 70 சதவீத பெண்களுக்கு தங்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நீரிழிவு, தைராய்டு போன்ற நோய் இருக்கும் தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடு ஏற்படலாம். மனித உடல 46 குரோம்மோசோம்களால் உருவாக்கப்பட்டது. இதில் பாதி தாயிடமிருந்தும் மீதி தந்தையிடமிருந்தும் வருகின்றன.
மேலும் நமது உடலில் 25 முதல் 35 ஆயிரம் ஜீன்கன் இருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றில் எந்தவொரு மரபணுவில் சிறிய கோளாறு இருந்தாலும் அது சிசுவை பாதிக்கும் வாய்ப்புள்ளது. தாய், தந்தை இருவருக்கும் ஆரோக்கியமான ஜீன்கள் இருந்தாலும் சில சமயம் குழந்தைக்கு நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

இதற்கான காரணம் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள் தான். இது ஜீன்களில் மாறுதல்களை ஏற்படுத்தக்கூடும். அதனால் சில நோய்கள் குழந்தைக்கு குறைபாட்டை ஏற்படுத்தும்.

அவற்றில் சில: சிகில் செல் அனீமியா, நுரையீரல் சிஸ்டிக் பைப்ரோசிஸ், பேமிலியில் டிஸ்டோனியா, மெனிங்கோசீல்(மூளை லேயரில் இருந்து மூளை வெளியே வந்து விடுதல்), தலை சிறியதாக இருத்தல், தலை உருவாகாமல் இருப்பது, முதுகுத்தண்டு பகுதியில் கட்டி ஏற்படுவது. வயிற்றில் குடல்பகுதி வெளியே இருப்பது, இரண்டு தலை உருவாகுதல், ஹீமோபீலியா, தலசீமியா போன்றவை.

35 வயதுக்கு மேல் கருவுறும் பெண்கள், முதல் மூன்று மாதங்களுக்கு ஏதேனும் மருந்து சாப்பிட்டவர்கள், கர்ப்பம் தரிக்கும் முன்பே நீரிழிவு நோய் உள்ளவர்கள், அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டவர்கள் மரபணு சோதனையை அவசியம் செய்ய வேண்டும்.

கர்ப்பகாலத்தில் போது முறையான பரிசோதனைகள் செய்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் முறையான வளர்ச்சியை மட்டுமல்லாமல் குழந்தைக்குள்ள பிறவிக்குறைபாடுகளையும் தெரிந்து கொள்ள முடியும்.

* இதற்கிடையில் முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

* தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.

* கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.

* மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

* அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

'கப்பலோட்டிய தமிழன்'வ.உ.சி நினைவு தினம் - சிறப்பு பகிர்வு!


நவம்பர் 18 'கப்பலோட்டிய தமிழன்'வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம் இன்று.

விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று அழைத்தார்கள் தலைவர்கள்.

இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில் தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார். ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ்.எஸ். லாவோ" கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு.

இவரும் குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது  தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல் ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார். விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர் வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால் அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு மசியவில்லை.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே  சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல்
முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்
நோவதுவுங் காண்கிலையோ?' என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார்.

விடுதலைபெற்று வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு. அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,"இந்நூலின் எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !" என்று குறிப்பிட்டார்.

சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார். மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார். அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை நீங்காமலே வாழ்ந்து  தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர் மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய இதே தினத்தில் உயிர் துறந்தார்.