டெல்லி செங்கோட்டை |
உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்.... டெல்லி செங்கோட்டை டெல்லி நகரின் இன்னொரு கம்பீரம் 'செங்கோட்டை'. இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர் தேசியக்கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் மொகலாய மன்னர் ஷாஜஹான். தனது தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜஹானா பாத்திற்கு (தற்போதைய பழைய டெல்லி) ஷாஜஹான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக் கட்டிமுடிக்க 1638-48 வரை பத்தாண்டு ஆனது. செலவிட்ட தொகை அப்போதைய மதிப்புக்கு ஒருகோடி ரூபாயாம். யமுனை நதிக்கரையில் ஒப்பிலா அழகுடன் எழுந்து நிற்கும் செங்கோட்டை, பாரசீக, ஐரோப்பிய, இந்திய கட்டடக் கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சரியப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை இன்றளவும் போற்றப்படுகிறது. டெல்லிகேட், லாகூர்கேட் என இருபெரும் நுழைவாயில்கள் உள்ளன. கோட்டைக்குள் இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றி அந்தப்புரங்களிலும்கூட கலைநயம் கண்சிமிட்டுகிறது. 'திவான்- இ- ஆம்' எனப்படும் தர்பார் மண்டபம் பொதுமக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே மன்னருக்காக அமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது. 'ஜெனானா' என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மஹால், ரங் மஹால் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்ட நீருற்று புதுமையின் பதிப்பு.அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட மோத்திமஸ்ஜித் எனப்படும் பியர்ல் மஸ்ஜித் (முத்து மசூதி) முழுவதும் சலவைக்கல் மயமே. இவைதவிர அரச குடியிருப்புகள் அமைந்திருந்த 'நஹ்ர்-இ-பேஹிஸ்ட்' என்ற பகுதி அசத்தல் ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி, கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும்கூட கால்வாய்வெட்டி நனவாக்கிய மொகலாய மன்னர்கள். இதை 'சொர்க்கத்தின் நீரோடை' என்றும் அழைத்து வந்தனர். நீரோடையை இன்றும் காணலாம். செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜஹான் என்றாலும் அவருக்குப் பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது கண்டோன்மென்ட்டாக (ராணுவமுகாம் மற்றும் குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது. அப்போது சில கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப்பிறகும் ராணுவக்-கட்டுப்பாட்டில் இருந்துவந்த செங்கோட்டை, 2003ம் ஆண்டில் இந்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்குள்ள மும்தாஜ் மஹாலில் மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வரலாற்றுப் பொக்கிஷங்கள். பெருமைக்குரிய டெல்லி செங்கோட்டை, யுனெஸ்கோவால் 2007ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. |
Search This Blog
Friday, 27 September 2013
டெல்லி செங்கோட்டை- சுற்றுலாத்தலங்கள்!
வேப்பமரமும்...சிறுவனும் (நீதிக்கதை)
வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான்.அதைக் கண்ட மரம் 'தம்பி ஏன் அழறே' என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை
.காலையில் எழுந்ததுமே 'முதலில் பல் தேய்த்துவிட்டு வா' என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா 'காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி' என்று கண்டிக்கிறார்.பின் குளித்து முடித்து 'பசிக்கலை' என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.
பள்ளிக்கு வந்தாலோ 'பாடம் படிக்கலைன்னும்,பாடம் சொல்லிக்கொடுக்கும் போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க"
எல்லாருமே நாள் முழுக்க என்னை திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை" என்றான் அழுது கொண்டே.
வேப்பமரம் "என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா?" என்றது.'ஓ...இலை மட்டுமா உன் இலை,குச்சி எல்லாமே ஒரே கசப்பு.சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன்.
"ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன்.
அது போல் பெற்றோர்,ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது.ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.
நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பபப்டுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.
புதிய தலைமுறை கணனியை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானி !!
உலகிலேயே முதன்முறையாக உலோகமற்ற கரிம நுண் குழாய் (கார்பன்-நானோடியூப்) மூலம் புதிய தலைமுறை கணனியை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில், இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுபாஸிஷ் மித்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினரே இந்த சாதனையை படைத்துள்ளர்.
சிலிக்கானைவிட மேம்பட்ட கார்பன் நானோடியூபுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கணனி, மின்னணுவியல் பயன்பாட்டில் புதிய அத்தியாயமாகும்.
குறைந்த ஆற்றலில், மிக வேகமான செயல்திறனை இந்தக் கணினி பெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மின்னியல் பொறியாளரும், கணிப்பொறி விஞ்ஞானியுமான சுபாஸிஷ் மித்ரா கூறுகையில்,
“புதிய சாகாப்தத்தைச் சேர்ந்த கார்பன் நானோடியூப், சிலிக்கானைவிட சிறப்பானது என பேசப்பட்டு வந்தது.
அந்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில், அந்த கணினியில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் அமைந்துள்ளன’ என்றார்.
கொனார்க் சூரியக்கோவில் - சுற்றுலாத்தலங்கள்!
கொனார்க் சூரியக்கோவில் |
உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்.... கொனார்க் சூரியக்கோவில் "இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள். "இருபத்து நான்கு பெரிய சக்கரங்கள் கொண்ட பிரம்மாண்டத் தேர், முன்கால்களைத் தூக்கியவாறு ஆக்ரோஷமாக அதை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகள்..." எனச் சொல்லிப்பாருங்கள். மிரட்டலாக இருக்கும். அதுவே நிஜமாக இருந்தால்...? இருக்கிறது. கொனார்க் சூரியகோவிலாக!. ஆம். கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவம்தான் சூரியபகவான் கோவில். ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கோவில் இது. சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த கலைப்பொக்கிஷத்துக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி1236- 1264) கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது. இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம். இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன. பாலியல் விளையாட்டுக்களை பளிச்செனக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில் சூரியபகவான் சிருஷ்டிதேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே பாலியல் சிற்பங்கள் உருவாகக்காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன. நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம். இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. விழாக்கள்: கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும் 'மஹாசப்தமி விழா' பிரசித்தம். சூரியபகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத் திருவிழா இது. எப்படிப் போகலாம்? புவனேஸ்வரில் இருந்து 65 கி.மீ தொலைவிலும் பூரியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலைமார்க்கமாக சென்று விடலாம். பூரி, புவனேஸ்வரில் ரயில்நிலையங்கள் உள்ளன. புவனேஸ்வரில் விமான நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திபாகா கடற்கரை உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத்தலமாகும். |
உண்மை எது...பொய் எது...(நீதிக்கதை)
ஒரு சமயம் முகலாய பேரரசராய்த் திகழ்ந்த அக்பருக்கு..உண்மை எது பொய் எது என எப்படிக் கண்டு பிடிப்பது,..அதற்கான தூரம் எவ்வளவு என்ற சந்தேகம் வந்தது.
தன் அரசரவை மந்திரிகளை எல்லாம் கூப்பிட்டு..தனது சந்தேகத்தைச் சொல்லி அதை தீர்த்துவைக்குமாறு கோரினார்.
எந்த அமைச்சருக்கும் அதற்கான விடை தெரியவில்லை.அக்பர் அரசவையில் அமைச்சராக இருந்த பீர்பால் என்பவர் மிகவும் புத்திசாலி...
அவர் அரசரைப் பார்த்து 'மன்னா..உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளி நான்கு விரற்கடை தூரம்' என்றார்...
அக்பர்...'அது எப்படி..தங்களால் நிரூபிக்கமுடியுமா' எனக் கேட்டார்.
உடன் பீர்பால்...தன் இடது கையை எடுத்து இடது கண்ணிலிருந்து இடது காதுக்கு தன் நான்கு விரல்களை வைத்துக் காட்டினார்.பின் 'அரசே...இது தான் உண்மைக்கும் பொய்க்கும் ஆன தூரம்.எந்த ஒரு விஷயத்தையும் காதால் கேட்பது பொய்யாக முடியலாம்.ஆனால் கண்ணால் பார்ப்பது பொய்யாக ஆக வாய்ப்பில்லை.கண்ணால் கண்டதை சற்று தீர விசாரித்தால் அதுவே மெய்யாக முடியும்' என்றார்.
நாமும் எந்த ஒரு விஷயத்தையும் கேட்பது மூலம் அதை நம்பிவிடாது அதை பார்த்து தீர விசாரித்து உண்மையை உணரவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)