இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் திருமண முறை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது நிரந்தரமானது. அது ஆயிரங்காலத்துப் பயிர் என்று கூறப்பட்டு திருமணத்தின் முன் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக ஆராயப் படுகின்றன. திருமணம் பேசுவதற்கு முன் சாதி, சமயம், அந்தஸ்து ஆகியன ஒன்றாகவுள்ளனவா என்பது பார்க்கப்படும்.
ஏனெனில் ஒரே சூழலில் வாழ்ந்தவர்களுக்கு ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போவது எளிது என்று கருதப்படுகிறது. இதனால் இவற்றில் மாறுபாடுள்ளவர்கள் அதாவது சாதி, சமய, அந்தஸ்து வேறுபாடுகள் கொண்டவர்கள் காதல் வசப்படும் போது அது பெரும்பாலும் முற்றாகவே பெற்றோராலும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுகிறது. இந்த மூன்றுடன் குணநலம், குடும்பப் பின்னணி, சாதகப் பொருத்தம், சீதனம் என்பனவற்றின் பொருத்தத்திலேயே திருமணம் தீர்மானிக்கப்படும்.
ஆணுக்கு தொழில், குணம், சுமாரான அழகு என்பன முக்கியமாகக் கவனிக்கப்பட பெண்ணுக்கு வயது, அழகு, குணம், கல்வி, சீதனம் என்பன முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஒரு காலத்தில் ஒரு பெண் திருமணம் செய்வதற்கு A B C D E F என்பன முக்கியமாகத் தேவை என்றும் அப்போது தான் ஆண் G என்று அதாவது good என்று சொல்லி தாலியைக் கட்டுவான் என்றும் வேடிக்கையாகச் சொல்லப்பட்டதுண்டு. அதாவது A-Age, B-Beauty, C-Caste, D-Dowry, E-Education, F-Family status.
இலங்கையில் திருமண உறுதிப்பபாட்டுக்குப் நிரந்தர வருமானம் முக்கியமாகக் கருதப்பட்டதால் ஆரம்பத்தில் அரச பதவி பெற்றவர்களை நாடி பெண்ணைப் பெற்றவர்கள் ஓடினர். கோழி மேய்த்தாலும் கோறணமேந்தில் மேய்ப்பவருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதே ஒரு காலத்தில் நியதியாக இருந்தது. தொழில் அடிப்படைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தொழில் பெறுவது சுலபமாகவும், பெற்ற தொழில் நிரந்தரமானதாகவும் இருந்ததால் திருமணச் சந்தையில் அவர்கள் முன்னிடத்தை வகித்தார்கள்.
அவர்களில் ஒருவரைத் தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பலர் பண அடிப்படையில் போட்டி போட்டார்கள். அதிக பணம் கொடுக்க வல்லவர்கள் ஒரு வைத்திய கலாநிதியையோ அல்லது பொறியியலாளரையோ பெற்றனர். இதனால் படித்து நல்ல தொழில் பெற்ற இளைஞர்களது பெற்றோர் பெண்ணைப் பெற்றவர்களைத் தம் விருப்பபடி ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர்.
மகனைப் படிப்பித்த பணத்தை மட்டுமின்றித் தாம் பெற்ற பெண்களுக்கு வழங்கவுள்ள சீதனப் பணத்தையும் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து சிலர் கறந்து விடுவார்கள். இதனால் யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில், பணமும் தொழில் அடிப்படையில் கல்வி கற்ற ஆண்பிள்ளைகளும் இல்லாதவர்கள் தமது பெண்களுக்குத் திருமணம் செய்யப் பெரிதும் சிரமப்பட்டனர்.
ஆயினும் பின்னர் நாட்டு நிலையால் பலதரப்பட்ட நிலைகளில் உள்ள இளைஞர்களும் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா என்று போகத் தொடங்கியதும் நிலமையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எல்லா நிலைகளிலும் பணம் புழங்கத் தொடங்கியதும் தமது பெண்களுக்குப் பெருமளவு சீதனம் கொடுத்துத் திருமணம் செய்து கொடுக்கப் பலரால் முடிந்தது.
இந்தியாவைப் போலன்றி யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் ஒரு குடும்பச் சொத்தும் வீடும் மகளுக்கு வழங்கப்படுவதே வழக்கம். இதற்கு அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. பெற்றோர் வயது முதிர்வடையும் போது மகளுடன் வாழச் செல்வது வழக்கம். அவர்கள் வழங்கிய வீட்டாலும் சொத்தாலும் எதுவித மனப்பாதிப்புகளுமமின்றி அவர்கள் உரிமையுடன் அங்கு வாழ முடிந்தது. இந்த நல்ல முறை காலப்போக்கில் மாப்பிள்ளை பகுதியினரின் பேராசையால் பெண்ணைப் பெற்றவரிடம் அதிக பணத்தைப் பலவந்தமாகக் கேட்கும் சீதன முறைக்கு வித்திட்டது எனலாம்.
அடுத்ததாக ஜாதகம் பார்த்தல். ஜாதகம் பார்த்தலே திருமணப் பேச்சில் முதலாவது கட்டமாகக் கருதப்படுகிறது. சாத்திரிகள் ஜாதகப் பொருத்தம் சம்பந்தமாகக் கூறுவது வேத வாக்காகக் கொள்ளப்படுகிறது. சாத்திரத்தைத் தொழிலாகக் கொண்ட பலருக்குப் பெரும்பாலும் திருமணப் பொருத்தம் பார்த்தலே பிரதான வருவாய்க்கு வழி வகுப்பதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் பெரும்பான்மையானவை ஜாதகப் பொருத்தம் பார்க்கப்பட்ட பின்னரே நடைபெறுகின்றன.
திருமணம் செய்யப்படவுள்ள ஆணோ பெண்ணைப் பற்றி வெறும் கேள்வியறிவின் மூலம் முற்றாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் ஜாதக ரீதியாக பெறப்படும் சில தகவல்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது. சிலர் எண் பொருத்தமும் பார்ப்பதுண்டு. ஜாதக, எண் பொருத்தங்களில் உண்மை உண்டோ இல்லையோ, அதிகமாக வந்துள்ள சாதகக் குறிப்புகளில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கேற்ப எண்ணிக்கையை வரையறுப்பதற்கும், அதிகம் விருப்பமில்லாத குடும்பங்களில் இருந்து வந்த சம்பந்தங்களை ஒதுக்குவதற்கும் இப் பொருத்தம் பார்த்தல் பலருக்கு உதவியது எனலாம்.
முந்திய காலத்தில் பெண்களுக்குத் தமக்கு வரவுள்ள கணவனைத் திருமணத்தின் முன் பார்ப்பதற்கும் அவனைப் படித்திருக்கிறதா இல்லையா என்று கூறுவதற்கும் சுதந்திரம் வழங்கப்படவில்லை. ஆயினும் பெண்கள் அதிக அளவில் படித்துப் பட்டங்கள் பெற ஆரம்பித்த பின்னர் பெற்றோர் ஓரளவில் அவர்கள் விருப்பத்திற்கும் மதிப்பளிக்க ஆரம்பித்தனர். ஆயினும் சீதன முறையால் பெண்கள் இந்தச் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தங்களிடம் உள்ள பொருளாதார வளத்திற்கேற்ப வரும் சம்பந்தங்களில் ஒன்றைத் தம் பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பெற்றோர் ஆளாகினர்.
பெண்ணின் படிப்புக் கூடக்கூட திருமண விஷயத்தில் அவளது சுதந்திரம் குறையலாயிற்று. படித்த பெண்ணுக்குரிய ஒரு படித்த ஆணைத் தேடுவதற்குப் பெற்றோர் அதிக விலை கொடுக்கவேண்டி இருந்தது. ஏனெனில் படித்துப் பட்டம் பெற்ற ஆணுக்குக் கலியாணச் சந்தையில் பெறுமதி அதிகமாகவிருந்தது. படித்த பெண்களுக்கு ஏற்ற வகையில் அதிக சீதனம் கொடுத்து ஒரு படித்த இளைஞனைத் தேடிப்பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதன் காரணமாகச் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த படித்த பெண்களின் திருமணம் பெற்றோருக்கு அதிக பிரச்சினைக்கு உரியதொன்றாயிற்று.
இவை இப்படி ஒருபுறம் இருக்க இந்த கல்யாண முறைகளில் பல மாறுதல்களை எம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவர தொடங்கிவிட்டனர்.
பெரும்பாலும் புலம்பெயர்ந்த பின் மிகவும் அதிகளவு மாற்றங்களைக் கொண்டது எனலாம். வேற்று இன மக்களின் குறிப்பாக வட இந்திய மக்களின் முறைகளில் நாட்டம் கொண்டு ஒவ்வொருவரும் தமக்கு விரும்பிய படி சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தினர்.
குறிப்பாக மணமகளின் குஜராத் சேலைகட்டும் முறை, மணமகனின் குருதார் உடை என்பனவற்றிலிருந்து அனைத்துமே மாற்றங்கள் பெறத்தொடங்கிவிட்டது.
இதைவிட வேறு ஊர் சம்பந்தம் ஏற்படும் போது, அவர்களும் ஆளாளுக்கு இது எங்கள் முறை, இது எங்கள் பழக்கம் என்று வாதிட, புதிதாய் சில மாற்றங்கள் தோன்றத்தொடங்கியும் விட்டன.
பல்வேறு கிரியைகளைக் கொண்டு நீண்ட நேரமாகச் செய்யப்பட்டு வந்த சடங்கு இன்று குறுகிய நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய வகையில் சுருக்கப்பட்டுள்ளது.
பிள்ளையார் பூசை, காப்புக் கட்டுதல், மணப்பெண்ணை அவளது பெற்றோர் மணமகனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தல், மணமகன் மணமகளுக்குப் புடவை முதலியவற்றைப் பரிசளித்தல், தெய்வம், சபையோர், அக்கினி சாட்சியாகத் தாலி கட்டுதல், அக்கினியை வலம் வருதல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், மாலை மாற்றுதல், பெரியோரிடம் ஆசி பெறுதல் ஆகியன இந்துத் தமிழரது திருமணங்களில் முக்கிய கட்டங்களாகக் கருதப்படுகின்றன. இந்த அடிப்படைக் கிரியைகளை விட வேறும் பல அம்சங்கள் காலத்திற்கும் வசதிக்கும் இடத்திற்கும் ஏற்றவாறு சேர்க்கப் பட்டும், நீக்கப்பட்டும் விட்டது.
இந்து சமயத்தின் படி திருமணம் என்பது ஒரு ஆணையும் பெண்ணையும் உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றுபட வைத்தலாகும். திருமணத்தின் பின் அவர்கள் உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும். கணவனைப் பிரிந்து வாழும் மனைவி நீர் இல்லாத நீரோடையையும் ஆன்மா இல்லாத உடலையும் போன்றவள் என்கிறது இராமாயணம்.
சிலப்பதிகாரத்திலே கோவலன் கண்ணகி திருமணத்திலேயே முதன் முதல் மணமக்கள் தீ வலம் வருதல் குறிப்பிடப்படுகிறது. இந்த வடநாட்டு முறை அந்தக் காலத்திலேயே தமிழ் நாட்டில் அறிமுகமாயிற்று. அக் காலத்திலிருந்து தீயை வலம் வரும் முறை தமிழரது திருமணங்களில் இடம் பெறலாயிற்று. ஆயினும் தீயை வலம் வருவதன் எண்ணிக்கை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இலங்கைத் தமிழ் இந்துக்களின் திருமணங்களில் பொதுவாக மூன்று தடவைகள் வலம் வரும் முறையே காணப்படுகிறது.
இந்து சமய மரபின் படி மணமக்கள் ஏழு தடவைகள் தீயை வலம் வருதல் வேண்டும் என்று கூறப்படுகிறது. முதல் நான்கு தடவைகளும் மணமகள் முன் செல்ல மணமகன் பின் தொடர்வான். அப்போது மணமகள் தனது கணவனிடம் ஏழு வேண்டுகோள்களை விடுப்பாள் என்று கூறப்படுகிறது.
* 1. எந்த நேரத்திலாவது நீங்கள் சமயக் கிரியைகளில் கலந்து கொள்ளவோ அல்லது யாத்திரை செல்லவோ வேண்டியிருப்பின் அதற்கு முன் எனது விருப்பத்தைக் கேட்டு எனது சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
* 2. எந்த நேரத்திலாவது நீங்கள் பிதுர்களை வழிபட விரும்பினால் என்னையும் அதில் இணைந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
* 3. எந்த நேரத்திலாவது எனது பெற்றோர் அவமானம், வறுமை, நோய் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரும் போது நீங்கள் எனது கணவன் என்ற முறையில் அவர்களது துன்பத்தை நீக்க உதவ வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
* 4. எந்த நேரத்திலாவது நீங்கள் எங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதற்கோ அல்லது கோயில் கட்டுவதற்கோ அல்லது சமய சேவை செய்வதற்கோ விரும்பினால் அந்தச் செயற்பாடுகளில் உங்களுடன் இணைந்து கொள்வதற்கு நான் அனுமதிக்கப்பட வேண்டும்.
* 5. எந்த நேரத்திலாவது நீங்கள் மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேலை விஷயமாகவோ வீட்டை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு போக நேரிட்டால் வீட்டில் எமது நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதி மொழியை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். அத்துடன் அவ்வாறு போவதன் முன்னர் எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
* 6. எந்த நேரத்திலாவது நீங்கள் கொடையளிக்க, பொருள்களையோ பணத்தையோ கொடுக்க வாங்க விரும்பினால் அதற்கு முன்னர் எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்,
* 7. எங்களது வயது முதிர முதிர உங்கள் அன்பும் விருப்பமும் வளர்ந்து முதிர வேண்டும் என்று இப்போது நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மணமகளின் இவ்வேழு கோரிக்கைகளுக்கும் மணமகன் சம்மதம் தெரிவித்த பின்னர் அவன் வழிநடத்த மணமகள் தொடர இருவரும் தீயை வலம் வருவார்கள்.
அப்போது மணமகன் மணமகளுக்கு ஐந்து கோரிக்கைகளை முன் வைப்பான்.
* 1. எங்கள் குடும்பத்தின் கௌரவமான பெயருக்கு ஓரு போதும் களங்கம் ஏற்படாத வகையில் நீ வீட்டிலும் சமூகத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.
* 2. நான் வீட்டில் இல்லாத நேரங்களில் எங்கள் வீட்டுக்கு வரும்
விருந்தாளிகள் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்து, எங்கள் தர்மத்தின் படியும், வழிமுறைகளின் படியும், சமுகத்தில் எங்களுக்குள்ள அந்தஸ்த்தின் படியும் நீ அவர்களை உபசரிக்க வேண்டும்.
* 3. எப்போதாவது எங்கள் இருவரிடையேயும் முரண்பாடுகள் தோன்றினால் நீ அவற்றை ஒருபோதும் மனதில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறான வேறுபாடுகள் ஒவ்வொரு வீட்டிலும் வருவது இயல்பாகும். அவ்வாறான வேறுபாடுகள் எழும் நேரத்தில் நீ வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.நீ அவ்வாறு வெளியேறுவது சமுகத்தில் எனக்கு அவமானத்தையும் அவதூறையும் கொண்டு வரும். அவ்வாறான அவமானமும் அவதூறும் வீட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும். அத்துடன் அது எமக்குள் பிரிவினையை ஏற்படுத்தும். கணவன் மனைவி பிரிதல் என்பது எமது தர்மத்தின் விதிமுறைக்கும் எமது முன்னோரின் குடும்ப வரலாற்றுக்கும் ஒவ்வாதது.
* 4. நீ வீட்டு வேலைகளை நேரம் தவறாது அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் தினமும் செய்யவேண்டும். அவ்வாறாயின் அது என்னை அசௌகரிகங்களுக்கு உள்ளாக்காது. நீ எங்கள் வீட்டின் தெய்வமாவாய்.
* 5. இன்று கடவுளின் அருளால் நான் சௌகரிகமான ஒரு வீட்டில் உன்னுடன் வாழலாம் என்று நம்புகிறேன். ஆனால் துன்பங்கள் எமக்கு வருமாயின் விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் நீ என்னுடன் வாழவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். என்னுடைய துன்பம் உன்னுடையதுமாகும். என்னுடைய வசதியின்மை உன்னுடையதுமாகும். என்னுடைய ஏழ்மை உன்னுடையதும் ஆகும். நான் உன்னில் அன்புகொள்ளவும், உன்னை வாஞ்சையுடன் போற்றவும், உனது நன்மைக்காக உழைக்கவும் உறுதி பூண்டுள்ளதைப் போல நீயும் உறுதி பூண வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். எப்போதாவது நோயின் காரணமாக உனது நலன்களுக்காக என்னால் உழைக்க முடியாமற் போனால் அப்போது நீ எனக்கு உதவ வேண்டும்.
மணமகள் இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பின்னர் அவள் மணமகனின் இடதுபுறத்தில் இடமெடுத்து நிற்பாள். இங்கே குறிப்பிடப்பட்ட 12 கோரிக்கைகளும் இல்லறம் இனிதாக நடைபெறுவதற்காக உருவாக்கப்பட்டவை. இவற்றுள் சில இக்காலத்துக்கு பொருத்தமற்றவையாக காணப்பட்ட போதும் பல காலத்தைக் கடந்து எக்காலத்துக்கும் பொருத்தமானவையாகவே காணப்படுகின்றன. கணவன் மனைவி ஆகிய இருவரும் காரியங்கள் அனைத்திலும் மனம் ஒத்து முடிவு செய்ய வேண்டும் என்பதையும் இருவரும் குடும்ப நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் இக் கோரிக்கைகள் காட்டி நிற்கின்றன.
கிறீஸ்தவ திருமணங்களிலும் மணமக்கள் இவ்வாறான வாக்குறுதிகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
இந்நாளிலிருந்து நான் உன்னை எனது மனைவியாக அல்லது கணவனாக ஏற்று, நல்லதிலும் கெட்டதிலும், செல்வத்திலும் வறுமையிலும், நோயிலும் ஆரோக்கியத்திலும், சுகத்திலும் துக்கத்திலும் ஒன்றாக வாழ்ந்து உன்னில் அன்பு பாராட்டி மரணம் எம்மைப் பிரிக்கும் வரை உனது நம்பிக்கைக்கு உரிய வகையில் வாழ்வேன் என்று உறுதி கூறுகிறேன்.
என்று மணமக்கள் திருமணத்தன்று உறுதி கொள்கின்றனர். கஷ்டம் வரும் போது ஒருவரையொருவர் தேற்றுதலும், உயரிய இலக்குகளை அடைய ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துதலும், ஒருவர் அழும் போது மற்றவர் அழுவதும் சிரிக்கும் போது சிரித்தலும் எப்போதும் ஒழிவுமறைவின்றி ஒருவருக்கொருவர் உண்மையாயிருத்தலும் இந்த உறுதி மொழிகளில் பொதிந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால் வாழ்விலும் தாழ்விலும் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே அவற்றின் சாராம்சம். எல்லாத் திருமண வாக்குறுதிகளும் மனமொத்த நீண்ட இல்லற வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் சீர்திருத்தக் கலியாணங்கள் சில இடம்பெற்றன. திமுக செல்வாக்கினால் இம்முறை ஏற்பட்டு இருக்காலாம். இந்துக் கலியாணங்களை நடத்தும் பிராமணக் குருக்களும் அவர் நடத்தும் கிரியைகளுமின்றி பெரியவர் ஒருவர் தாலியை எடுத்துக் கொடுக்க அதை மணமகன் மணமகளது கழுத்தில் அணிவிப்பதும் பின் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வதும் அவர்களை திருமணத்துக்கு வந்தோர் வாழ்த்துவதுமே இத் திருமண முறையின் முக்கிய அம்சங்களாகும்.
திருமண வீடுகளில் வழமையாகக் கேட்கும் வாழ்த்துகளில் ஒன்று பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்பதாகும். அப் பதினாறு பேறுகளும் என்னென்ன என்பது பலருக்கும் தெரியாது. அது பதினாறு பிள்ளைகள் என்று கொள்ளப்பட்டு அதனோடு தொடர்பாக சுவையான கேலியும் சிரிப்பும் திருமண வீடுகளில் எழுவதுண்டு. அது ரசனைக்குரியதாக இருந்த போதும் அந்தப் பதினாறு பேறுகளும் என்ன என்று இன்று தெரிந்து கொள்வோம்.
நம் முன்னோர்கள் இல்லறம் மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு வேண்டிய பதினாறு விஷயங்களை அந்த வாழ்த்தில் பொதிந்து வைத்துள்ளனர். புகழ், கல்வி, உடல் வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லுழ்(a favourable destiny), நுகர்ச்சி(enjoyment), அறிவு,(wisdom) அழகு, பெருமை, இளமை, துணிவு (courage), நோயின்மை (perfect health), நீண்ட வாழ்நாள்.
இந்திய மண்ணில் பிறந்த முக்கிய சமயங்களுள் சமணம் பௌத்தம் ஆகிய இரண்டும் துறவினால் மட்டுமே ஒருவர் இறுதி நிலையை அடைய முடியும் என்று கூற, இந்து சமயம் மனித மனதில் எழும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இல்லற இன்பத்தை முறைப்படி அனுபவித்துப் படிப்படியாக வாழ்க்கை நிலைகளைக் கடந்து இறுதியிலேயே வாழ்வைத் துறத்தல் பற்றிக் குறிப்பிடுகிறது. மனித உணர்வில் காமம் முக்கிய உணர்வு என்பதை ஏற்றுக் கொண்டதால் மட்டுமன்று இல்லறத்தை அது ஏற்றுக் கொண்டது.
சிற்றின்பத்தைக் கட்டுப்பாடான முறையில் அனுபவிப்பதுடன் பல வித தர்மங்களைச் செய்ய இல்லறம் வழிவகுப்பதாலேயே அதனை ஒரு தர்மமாக அது ஏற்றுக்கொண்டது. தெய்வம், இறந்த முன்னோர், பிற மனிதர், விலங்குகள் ஆகியவற்றுக்கு மனிதன் தனது சேவையைச் செய்ய இந்த இல்லறம் வழிவகுக்கிறது. தனது குடும்பத்துடன் சமுகத்திற்குச் செய்ய வேண்டிய சேவையையும் இது உள்ளடக்குகிறது.
திருமணநாளில் மணமகனும் மணமகளும் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்கள் இவற்றையே குறிக்கின்றன. அத்துடன் தங்கள் சந்ததி வளர்வதற்கு குழந்தைகளைப் பெறுவதும், அவர்களுக்கு வழிகாட்டி முறைப்படி தங்கள் குடும்பப் பெறுமதிகளையும் பண்பாட்டினையும் அவர்கள் தொடர்ந்து பேணுவதை உறுதி செய்வதும் இல்லறத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
திருமணத்துடன் ஆரம்பமாகும் இல்லறம் ஒருவருக்கு மனித இனத்தை நேசிப்பதற்கான அடிப்படைப் பயிற்சியை வழங்குகிறது. கணவன் மனைவியிடையே ஏற்படும் அன்பு குழந்தைகளில் விரிவடைந்து சமுகம், மனித இனம் என்று விசாலிக்க இல்லறம் உரிய பயிற்சியை வழங்குகிறது. இதனாலேயே இல்லறம் எல்லா தர்மங்களுக்கும் அடிப்படையாக அமைகிறது. கணவனுக்கும் மனைவிக்குமிடையே கருத்தொருமித்த நீடித்த அன்பு ஏற்பட்டாலேயே இவையனைத்தும் சாத்தியமாகும்.
இதனாலேயே இந்து சமயத்தில் திருமணம் என்பது வாழ்வின் முக்கிய கட்டமாகக் கருதப்பட்டது, இன்றும் கருதப்படுகிறது. அதன் காரணமாகவே அந்த உறவு மிக நீண்ட கால உறவாகக் கருதப்பட்டு வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதற்குப் பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நினைத்தவுடன் வந்து நினைத்தவுடன் பிரிந்து போகக்கூடிய உறவாக அது கருதப்படவில்லை.
அது நிரந்தரமானதாக, அதே சமயம் சுமுகமாக ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்புடன் வாழக்கூடிய ஒன்றாகக் கருதப்பட்டது. திருமணம் என்பது இரு மனங்களை மட்டுமன்றி இரு குடும்பங்களை ஒன்றுபடுத்தக்கூடிய வகையில் அமைவதால் அதன் உறுதிப்பாடு நன்கு நிலை நிறுத்தப்படுகிறது.
திருமணத்தின் அடிப்படைக்கரு அப்படியே இருக்கும் பட்சத்தில் சில சின்னச் சின்ன மாற்றங்கள் ஏற்படுவதை யாரும் பெரிதாக அலட்டிக்கொண்ட மாதிரியும் தெரியவில்லை.