Search This Blog

Monday, 28 October 2013

தன் கையே தனக்கு பாஸ்வேர்டு.

passwd_x220 

பாஸ்வேர்டு தொடர்பான பரிசோதனை முயற்சிகளில் ஒன்றாக அறிமுகமான டைனாஹான்டு முறை புழக்கத்திற்கு வராமலே காணாமல் போய்விட்டது. இருந்தாலும் இந்த பாஸ்வேர்டு முறையை அறிந்து கொள்வது தப்பில்லை.


டைனாஹான்டு பாஸ்வேர்டு முறை வித்தியாசமானது ,சுவாரஸ்யமானது என்பது மட்டும் இதற்கு காரணமல்ல. சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான தேடல் எத்தனை தீவிரமானதாக இருக்கிறது,எந்த எந்த திசைகளில் எல்லாம் நடந்து வருகிறது இவை எல்லாவற்றையும் மீறி இது எத்தனை சவாலானதாக இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடியது என்பதற்காகவே இந்த முறையை தெரிந்து கொள்ளலாம்.


பாஸ்வேர்டு என்ற பெயரில் ஏதோ சொற்கூட்டத்தை சமர்பிக்கும் தேவை இல்லாமல், ஒருவர் தனது கையெழுத்தையே பாஸ்வேர்டாக பயன்படுத்துவது தான் டைனாஹான்டு முறை. இதில் பயனாளிகள் தங்கள் சொந்த கையெழுத்தை கண்டுபிடித்து அடையாளம் காட்டினால் போதுமானது.


இதற்காக முதலில் பயனாளிகள் தங்களது கையெழுத்து மாதிரிகளை சம‌ர்பிக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் இந்த கையெழுத்தை அலசி ஆராய்ந்து அதன் தனித்தன்மைகளை குறித்து கொள்ளும். அதன் பிறகு கம்ப்யூட்டரில் அல்லது ஏதேனும் இணைய கணக்கில் நுழைய முற்படும் போது பலவிதமான எண்கள் காண்பிக்கப்படும்.அதில் நீங்கள் சம்ர்பித்த கையெழுத்து மாதிரியும் இருக்கும். அதை நீங்கள் சரியாக அடையாளம் காட்டினால் மேற்கொண்டு சேவையை பயன்படுத்தலாம்.


உங்களை கையெழுத்தை நீங்கள் மட்டுமே அடையாளம் காணமுடியும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த முறை உருவாக்கப்பட்டது. சொற்களை விட ஒருவர் எழுத்து எண்களின் மாதிரியே மற்றவர்களால் எளிதில் அடையாளம் காணப்பட முடியாது என்பதால் இந்த முறையில் ஒருவர் எழுதி சம்ர்பிக்கும் எண்களே பயன்படுத்தப்படுகிறது.


பயோமெட்ரிக் உள்ளிட்ட மற்ற பாஸ்வேர்டு முறைகளை காட்டிலும் இது எளிமையானது என்பது இதை உருவாக்கிய ஸ்காட்லாந்து ஆய்வாளர் கரேன் ரெனாடு கருத்து. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் புரிதல் குறைபாடு கொண்டவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் அவர். வங்கி கணக்கி போன்றவ‌ற்றை இயக்க இந்த முறையை பயன்படுத்தாவிட்டாலும் சமூக இணையதளங்களில் இதை பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார்.
ஏனோ இந்த முறை ஆய்வு நிலையை தாண்டி முன்னேற்வில்லை.

பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி - சுற்றுலாத்தலங்கள்!

      பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி

பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி
 புத்தம் சரணம் கச்சாமி... என்று பல நாடுகளில் பரவிக்கிடக்கும் புத்தமதத்துக்கு பூர்வீகம் இந்தியாதான். இதற்குச் சான்றாக நாடெங்கிலும் பழங்கால சின்னங்கள், கல்வெட்டுக்கள், ஓவியங்கள் நிறைய உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை சாஞ்சி ஸ்தூபி மற்றும் அதைச்சுற்றியுள்ள கலையம்சம் மிக்க கட்டிடங்கள். மத்தியப்பிரதேச மாநிலம் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி கிராமத்தில் இந்த ஸ்தூபி உள்ளது. கிராமத்தின் பெயராலேயே ஸ்தூபியும் அழைக்கப்பட்டு வருகிறது. போபாலில் இருந்து சுமார் 46கி.மீ தொலைவிலும், பெஸ்நகர் மற்றும் விதிஷா ஆகிய ஊர்களில் இருந்து 10கி.மீ தொலைவிலும் ஒரு மேடான பகுதியில் இது அமைந்துள்ளது.

 ரித்திரத்தின் சாட்சியாக காட்சியளித்துக்கொண்டிருக்கும் சாஞ்சி ஸ்தூபியின் பின்னணியில் பக்தியும் உண்டு. காதலும் உண்டு. புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர், பேரரசர் அசோகர். இவரை விதிஷா நகரத்து வியாபாரிகள் சிலர் அணுகி, புத்த மையம் ஒன்று அமைக்க இடம்தருமாறு கேட்டுள்ளனர். உடனே சம்மதம் தெரிவித்த அசோகர், புத்த மையம் அமைக்கும் பணிகளில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

 ப்போது அந்த வியாபாரிகளில் ஒருவரது மகள்மீது காதல் கொண்ட அசோகர், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, தலைநகர் பாடலிபுத்திரத்துக்கு நாம் கண்டிப்பாக செல்ல வேண்டுமா? இங்கேயே இருந்து இல்லற வாழ்வில் ஈடுபட-முடியாதா.... என காதல்மனைவி கேட்டுவிட, மறுப்புச் சொல்ல முடியவில்லை மன்னருக்கு. சாஞ்சி பகுதியிலேயே தங்கி விட்டார். வீட்டையும், நாட்டையும் இங்கிருந்தே கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். அரச தம்பதிக்கு மகேந்திரா, சங்கமித்ரா என இரண்டு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளும் புத்தமதத்தின்மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்தனர். பின்னாளில் இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளிலும் புத்தமதத்தைப் பரப்பியுள்ளனர்.
 சாஞ்சியில் பல ஸ்தூபிகள், சிறு கோவில்கள் உள்ளன. இவை கி.மு.3 - கி.பி.13ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டவை என கணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரைவட்ட கோள வடிவத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் பிரதான ஸ்தூபிதான், 3ம் நூற்றாண்டில் அசோகரால் கட்டப்பட்டதாம். செங்கல் மற்றும் உள்ளூரில் கிடைக்கும் கற்களால் அழகுற அமைக்கப்பட்டு இன்றளவும் வடிவமைப்பால் அசத்திக்கொண்டிருக்கிறது இந்த ஸ்தூபி.

 தை தியான அரங்கம் என்று கூட கூறலாம். இதன் கட்டிடங்களில், சுவர்களில் புத்தரைப்பற்றி நேரிடையாக குறிப்பிடாமல், அவரைப் பற்றி மறைமுகமாக சில குறிப்புகள் உணர்த்தப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு. தாமரை வடிவம்-புத்தரின் பிறப்பையும், மரம் - புத்தர் ஞானம் அடைந்ததையும், சக்கரம்- புத்தரின் சொற்பொழிவையும், ஸ்தூபி- முக்தியையும் குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. சாஞ்சி ஸ்தூபிக்கு நான்கு முக்கிய வாசல்களும் உள்ளன. இந்த வாசல்களிலும் கலைத்திறன் பளிச்சிடுகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள புத்தமதத்தினரையும் கவர்ந்துள்ள சாஞ்சி ஸ்தூபி 1989ம் ஆண்டில் யுனெஸ்கோ பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றது.
எப்படிப் போகலாம்?
சாலை மார்க்கமாக போபாலில் இருந்து 46 கி.மீ, விதிஷாவில் இருந்து 10 கி.மீ, இந்தூரில் இருந்து 232 கி.மீ தொலைவில் சாஞ்சி உள்ளது. ரயிலில் செல்வதென்றால் போபாலில் இறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்லலாம். போபாலில் விமான நிலையமும் உள்ளது. சாஞ்சி ஸ்தூபியை பார்வையிட கட்டணம் உண்டு. இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் அருங்காட்சியகம் ஒன்றும் இங்கு உள்ளது.

கேடு நினைக்கக்கூடாது (நீதிக்கதை)


ஒரு காட்டில் ...ஆடுகள் கூட்டம் கூட்டமாக போய் மேய்வது வழக்கம்.

அவ்வப்போது ...வழி தவறிப்போகும் ஆடுகளை ஓநாய் ஒன்று கொன்று உணவாக்கிக்கொள்வது வழக்கம்.

ஒரு நாள் அப்படி ஆடுகள் மேய்ந்துக் கொண்டிருந்த போது ...நரி ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டி ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு ஓட்டம் பிடித்தது.

அதைப்பார்த்த ஆடுகள் ...'மீண்டும் திருட்டு  ஓநாய்  வந்து ஆட்டைக் கவ்விக்கொண்டு ஓடுகிறதே!' எனக் கூச்சல் போட்டன.

ஆட்டுக்குட்டியை கவ்விக் கொண்டு ஓடிய நரி ஓநாயைப் பார்த்து 'ஓநாயே உன் மீது  இன்று எந்த தவறும் இல்லாதபோதும் அந்த ஆடுகள் உன் மேல் பழியை சுமத்துகின்றனவே' என்றது.

அதற்கு ஒநாய்.....'ஆடுகள் சொல்வதிலும் உண்மை உள்ளது.நான் பல முறை அவற்றின் மீது பாய்ந்து பல ஆடுகளைக் கவர்ந்து வந்திருக்கிறேன் .... ஆகவே எப்போது அவைகளுக்குக் கொடுமை நடந்தாலும் என் நினைவு வருகிறது' என்றது.

நாமும் யாருக்கும் எந்தக் காலத்திலும் சிறு கெடுதலும் செய்யக்கூடாது.அப்படி செய்தால் நாம் கெடுதல் செய்தவர்க்கு எந்த துன்பம் நேர்ந்தாலும் பழி நம்மை வந்துசேரும்.

கெட்டப் பழக்கங்களை விடவேண்டும்........(நீதிக்கதை)



ரமேஷ்...தன் நண்பர்களை கேலி செய்வது....அவர்களுடன் சண்டையிடுவது..சரியாக படிப்பதில்லை..பொய் சொல்வது என கெட்டப்பழக்கங்கள் அதிகம் கொண்டவனாகத் திகழ்ந்தான்.

அன்று அவனது தந்தை...ரமேஷின் பள்ளி ஆசிரியரைப் பார்த்து....'ரமேஷிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களை போக்குவது எப்படி..' என்றார்.

அதற்கு ஆசிரியர்...'இன்று மாலை அவனை என்னை சந்திக்கச் சொல்லுங்கள்' என்றார்.

மாலை ரமேஷ் ஆசிரியரைப் பார்க்க வந்தான்.

ஆசிரியர் அவனை அழைத்துக்கொண்டு மரங்கள் நிறைந்த தோப்பிற்குள் சென்றார்.

ரமேஷிடம் ஒரு சிறிய செடியைக் காட்டி அதைப் பிடுங்கச்சொன்னார். ரமேஷ் அதை வேருடன் பிடுங்கினான்.
பின்னர் சற்றே வளர்ந்த செடியை பிடுங்கச்சொன்னார்.ரமேஷும் சற்று கஷ்ட்டப்பட்டு அந்த செடியை வேருடன் பிடுங்கினான்.
பின் வளர்ந்த மரத்தை பிடுங்கச் சொன்னார்.ரமேஷ் எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை.

ஆசிரியர் சொன்னார். ';கெட்ட பழக்கங்களும் இப்படித்தான்..ஆரம்பத்திலேயே முயன்றால் திருத்திவிடலாம்.இல்லாவிட்டால் அவை மனதில் நன்கு வேரூன்றி விடும்.
பின்னர் அவற்றிலிருந்து விடுபடமுடியாமல் சமூகத்தில் அவன் கெட்டவன் என்ற பெயரிலேயே வாழ நேரிடும்' என்றார்.

புரிந்து கொண்ட ரமேஷ்...'அன்று முதல் நல்ல பையனாக நடந்து கொள்வதாக ஆசிரியருக்கு வாக்கு அளித்தான்.அதன்படியே நல்லவனாக மாறினான்.

கெட்ட பழக்கம் என்று தெரிந்தாலே அதை முளையிலேயே கிள்ளி விடவேண்டும்.

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-08

                                                            வேத காலம்
                  
 
 

                  ஹிந்து மதத்தின் வரலாறு பற்றி கடந்த பதிவில் பார்த்தோம். ஹிந்து மதம் உருப்பெற்று செழிப்படைந்தது வேதகாலத்தில் தான். வேத காலத்தின் வரலாறு மற்றும் வேதங்கள் பற்றி இனி விரிவாக பார்க்கலாம். வேதகாலம் என்பது மனிதன் முழுமையான நாகரிகம் அடைந்தபிறகு உருவான காலமாகும். அதாவது உலோக காலத்திற்கு பிறகு வந்த காலம். இது கிமு 2000 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம். வேத காலம் வட இந்தியாவையும், வடமேற்கு இந்தியாவையும் மையப்படுத்திச் செழித்து இருந்தது. ஹிந்து மதத்தின் வேராக கருதப்படும் வேதங்கள் இயற்றப்பட்டது இகாலக்கட்டதில் தான்.
 
 
 

                   வேதங்கள் என்பவை இந்து மதத்தின் அடிப்படையாக அறியப்படும் நூல்களில் சிலவாகும் மேலும் காலத்தால் மிகவும் பழமையானது. இன்றும் வேதங்களில் சில நடைமுறையில் இருக்கின்றன. வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழி சொல்லை வேராகக் கொண்டதுவித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). என்பனவாகும்.
 

                வேதங்கள் வேதமொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சம்ஸ்கிருத மொழியின் முன்னோடி. தேவநகரி என்றும் அழைக்கபடுகிறது, வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது .விஜநகர ஆட்சியில் புக்க அரசர் காலத்தில் வாழ்ந்த சாயணாசாரியர்  என்னும் பதினாலாவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதியவேதார்த்த பிரகாஷா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.
 
 
இது சமய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உலகின் மிக பழமையான நூல்களிலும் ஒன்று. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
 
 

வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு:
 
 
  1. சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
  2. பிரமாணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
  3. ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
  4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.

               யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சப்த பிரமாணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். சதபத பிராம்மணம் சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.
 
காலம் காலமாக வாய்வழியாகவே பின்பற்றப்பட்டு வந்த சுலோகங்கள் கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனாச்சார்யர் வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். ரிக் வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக் குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் 
வகைப்படுத்தப்படுவதுண்டு
 
                    வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். இதனை ஞான காண்டம் என்பர். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.
 
ரிக் வேதம்(rig veda):
 
 


                     இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. மேலும் நான்கு வேதங்களில் மிகவும் பழமையானது. இயற்றப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வேத கால சமஸ்கிருதம் அல்லது தேவநகரி மொழியில் எழுதப்பட்ட மந்திரங்களை கொண்டது.
 
                 ரிக்வேதம் முழுவதும் செய்யுட்களாக உள்ளது. சிறப்பான ஏழு சந்தங்களால் அமையப்பட்டது . அவைகள் காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டுப், பிரஹதி, விராட், த்ரிஷ்டுப், ஜகதி ஆகும். இதில் காயத்திரி சந்தஸ் அதிக புழக்கத்தில் உள்ளது.
 
                ரிக்வேதம்வேதகால சமசுகிருதத்தில் 1,028 சுலோகங்களால் இயற்றப்பட்டுள்ளது . இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் (பகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது.
 
 
              
         இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. ஒரு கடவுள் கொள்கை, பல கடவுள் கொள்கை மற்றும் இயற்கையை கடவுளாக கொண்டு பெரும்பாலான சுலோகங்கள் எழுதப்பட்டுள்ளன. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
 
 
           முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும் இமயமலைவாசிகலான கிராதர இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
ரிக் வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள் அக்னி, இந்திரன்சோமன் என்போராவர்.
 
  இவர்களைவிட மித்திரன்வருணன்அஷ்வினிதேவர்கள்விஷ்ணுஉருத்திரன், தேவர்களின் குருவான பிரகஸ்பதிபிரிதிவிசூரியன்வாயு, மழை, அத்ரி, அந்தரிச்சன், துவஷ்டா, சரஸ்வதி, அதிதி, நான்கு திசைகள், நீர், நதிகள், மலைகள் போன்ற கடவுளர்களும், இந்நூலில் போற்றப்படுகிறார்கள்..
வசிட்டர், விசுவாமித்திரர், பரத்துவாசர், வாமதேவர், அகத்தியர், கிரத்சமத், கக்ஷிவான், தீர்க்கதமா, கோதமர், வேதாதிதி, சியாவாஷ்வ, மதுசந்தா, அபாலா (பெண் முனிவர்), அஷ்டக், பிரஸ்கண்வர், ஜமதக்கினி, அயாஸ்வா, அஜிகர்த்தன், கன்ஹஷேப், பராசரர், சக்தி மற்றும் அத்ரி போன்ற முனிவர்களை பற்றிய குறிப்புகளும் உள்ளன.
 
ரிக் வேத்த்தில் திவோதாஸ், சுதாஸ், மனு, புரூரவாநகுசன்யயாதி, மாந்தாதா, புரு, குசிக், திரிச்சு மற்றும் குசிகர் போன்ற அரசர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.
 
ரிக்வேத்தில் குறிப்பிடப்படும் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், அதிதி, இந்திரத் தாய்கள், இந்திராணி, ஊர்வசி, கக்ஷிவான் மகள் கோஷா, ஜுஹூ, தட்சிணா, நிபாவரி, யமீ வைஸ்வதி, ராத்திரி, லோபமுத்ரா [அகத்தியரின் மனைவி], வசுக்கரனின் மனைவி, வாக், விவ்ருஹா, விஷ்பல, விஸ்வவாரா, சசி, சஷ்வதி, சிகண்டினி, காஷ்யபி, சிரத்தா காமயானி, ஸர்மா[ பெண் நாய்], சார்ப்ப ராக்ஞி, சிக்தா, சுதேவி மற்றும் சூர்யா.
 
ரிக்வேத கால மக்கள் சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்து வந்தாலும், பசுக்கள், குதிரைகள், ஆடுகள் ஆகியவைதான் பெருஞ்செல்வமாக கருதினர். அவர்களிலே மாமிச உணவு உண்ணாதவர்கள் எவரும் இல்லை எனலாம். ’புலால் இல்லாமல் மதுயர்க்கமே (உணவே) இருக்கமுடியது. ரிக்வேத கால இறைச்சி உண்ணும் மக்கள் முக்கியமாக பசு, குதிரை, ஆடு மற்றும் செம்மறியாட்டின் இறைச்சியை உண்டனர். பலவிதமான பசு ரசமும் [பசுக்குழம்பும்] அவர்களுடைய முக்கிய உணவாகும். ’சுரபி பக்வம் மாம்ஸ் என்ற சொறொடர் (சமைக்கப்பட்ட மணங்கமழும் இறைச்சி) இதையே தெளிவு படுத்துகிறது. பால், தயிர் மற்றும் நெய்யும் முக்கியமானது என்றாலும் ‘புரோடாஷ் என்பது அவர்களுக்கும், அவர்கள் வணங்கும் தேவர்களுக்கும் விருப்பமான உணவாகும். தென் இந்தியாவின் முதன்மையான உணவான அரிசி பற்றி ரிக் வேத்த்தில் எந்த குறிப்புகளும் காணப்படவில்லை. சவ்வரிசி முதன்மையான உணவு, வறுத்த தாணியத்தை ‘தானா என்றும், தினை மாவை ’கரம்ப என்றும், ரொட்டியை ‘அபூப் என்றும், அழைத்து அதை உண்டனர். மேலும் பழ வகைகளும் உண்டனர்.
 
ஆரிய மக்கள் வாழம் இருப்பிடங்களை ‘கிராமங்கள் என்றும், ராஷ்டிரங்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. கிராமத் தலைவரை ‘கிராமணி என்றும், ராஷ்ட்டிரத் தலைவரை ‘ராஜா என்றும் அழைத்தனர். ’சாம்ராட், ஸ்வராட், ஷாஸ், ஈஷான், பதி, பூபதி, பூதி மற்றும் நிருபதி என்ற சொற்களால் ராஜாவை அழைத்தனர். ராஜாவின் மகன்களை ராஜபுத்திரர்கள் என்றழைத்தனர். அவர்களிடையே சபை, சமிதி, போன்ற சமூக அமைப்புகள் இருந்தன. சமூகத் தலைவர்களை ‘குல்ப் (குலத்தலைவர்) என்றும் ’விரஜாபதி (சமூகத்தலைவர்), ’கணபதி ஆகியவர்கள் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகளில் விசாரித்து நீதி வழங்கினர். ரிக் வேதத்தில் புரோகிதர் (பிரதமர்) பணிகள், வேள்வி செய்வதும், செய்வித்தலும் மற்றும் மத தொடர்பான விடயங்களில் மன்னனுக்கு ஆலோசனை எவ்வாறு கூறுவது போன்று பல குறிப்புகளும் உள்ளன.
 
யசுர் வேதம்:
 
 
             yajus "வேள்வி" + veda "அறிவு" என்பவற்றின் சேர்க்கையே யசுர் வேதம்.
இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
 

யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை 
 
         1. சுக்கில யசுர்வேதம்
 
        2. கிருஷ்ண யசுர்வேதம்
 
 இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.
 
கிருஷ்ண யசுர்வேதம்:
 
                 கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை:
 
  • தைத்திரீய சம்ஹிதை
  • மைத்ராயணி சம்ஹிதை
  • சரக-கதா சம்ஹிதை
  • கபிஸ்தல-கதா சம்ஹிதை
 
என்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன.
சுக்கில யசுர்வேதம்
 
 


                சுக்கில யசுர்வேதம் முனிவர் யோகீசுவர 
 யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும் தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை:
 
  • வஜசனேயி மாதியந்தினியம்
  • வஜசனேயி கான்வம்
 
என்பனவாகும். வட இந்தியாவிலும், குசராத்திலும், நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.
 
 
மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.
சாமவேதம்:
         

           


             sāman "கிரியைகளுக்கான மந்திரங்கள்" + veda "அறிவு" ), என்பது சாம வேதம் ஆகும். இந்து சமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக்வேத்த்திற்கு அடுத்த்தாக இது இரண்டாம் நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்
அதர்வண வேதம்:
 
 


                அதர்வண வேதம் நான்கு வேதங்களுள் ஒன்றாகும் மேலும் இது நான்காவது வேதமாக கருதப்படுகிறது. அதர்வண வேத கூற்று படி பிரம்மதேவர் இவ்வுலகத்தை படைத்தார் பின் அதர்வன் - அங்கிராசா என்ற இரண்டு முனிவர்களை படைத்தார் அவர்களால் இயற்றப்பட்டது அதர்வண வேதம் என்பது கூற்று. அதர்வண வேதத்தில் கடவுள் பற்றிய பல சுலோகங்கள் தந்திரங்கள் மற்றும் பல மருத்துவ குறிப்புகள் உள்ளன.
 
 
                 இவாறாக நான்கு வேதங்களும் வகைபடுதப்பட்டு அவற்றில் சில இன்றளவும் நடைமுறையில் உள்ளன. ஆதி காலத்தில் ஓதப்பட்ட வேடங்களில் இன்று இருப்பவை மிக சொற்பமே. அவற்றில் இருக்கும் தத்துவங்களும், கருத்துக்களும் ஏராளம். எகிப்திய, மெசபடோமியா நாகரிகத்திற்கு ஒப்பானதாக நம் நாகரிகம் இருந்தாலும் வரலாற்றில் அவற்றிற்கு இருக்கும் ஆதாரங்கள் சொற்பமே. 
 
 
                வேதங்களை தொடர்ந்து வேதங்களுக்கு பின் வந்த உபநிடதங்கள் மற்றும் இதிகாசங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் 

அரியலூர் மாவட்டத்தின் வரலாறு!


அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம், இது ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.


இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு சிமெண்ட் ஆலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில்.


 இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு.


திருக்கோயில்கள்

அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர்

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி, அரியலூர்

அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர்

அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி, அரியலூர்

அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், உடையவர் தீயனூர், அரியலூர்

முக்கிய ஆறுகள் : கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு.

முக்கிய நகரங்கள் : அரியலூர், ஜெயங்கொண்டம்.

புகைவண்டி நிலையங்கள் : அரியலூர், ஒத்தக்கோவில், வெல்லூர், செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர், ஈச்சங்காடு.

அரியலூர் மாவட்டத்தின் சிறப்புகள்


சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளம் கொண்ட மாவட்டம்.


மாநிலத்தின் செம்மண் படிவங்கள் முந்திரிப் பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
வேட்டக்குடி கரைவெட்டி ஏரி பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும் சரணாலயம்.


அணைக்கரைப் பாலம்: 150 வருட பழமையான இப்பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது தஞ்சாவூர் - கும்பகோணம் நகரங்களை சென்னை மார்க்கத்தில் இணைக்கிறது.

பரப்பு - 1,949.31

மக்கள் தொகை - 6,95,524 | ஆண்கள் - 3,46763 | பெண்கள் - 3,48761

உயரம் - கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 249 மீட்டர் (820 அடி)

ஆண்டு விழாக்களும் அதன் சிறப்புப் பெயர்களும்!


வ.எண்   -  ஆண்டு -     சிறப்புப்பெயர்

1  -   முதல் ஆண்டு   -  காகித விழா


2  -   இரண்டாம் ஆண்டு -    பருத்தி விழா
 

 3  -   மூன்றாம் ஆண்டு  -   தோல் விழா
 

4  -   நான்காம் ஆண்டு   -  மலர், பழ விழா
 

5   -  ஐந்தாம் ஆண்டு  -   மர விழா
 

6    - ஆறாம் ஆண்டு   -  சர்க்கரை ,கற்கண்டு விழா
 

7  -   ஏழாம்ஆண்டு -    கம்பளி, செம்பு விழா
 

8  -   எட்டாம் ஆண்டு -    வெண்கல விழா
 

9    - ஒன்பதாம் ஆண்டு  -   மண்கலச விழா
 

10    - பத்தாம் ஆண்டு   -  தகரம் ,அலுமினியம் விழா
 

11   -  பதினோறாம் ஆண்டு   -  இரும்பு விழா
 

12   -  பனிரெண்டாம் ஆண்டு  -   லினன் விழா
 

13    - பதிமூன்றாம் ஆண்டு  -   மின்னல் விழா
 

14   -  பதினான்காம் ஆண்டு -    தந்த விழா
 

15   -  பதினைந்தாம் ஆண்டு   -  படிக விழா
 

16  -   இருபதாம் ஆண்டு    - பீங்கான் விழா
 

17    - இருபத்தைந்தாம் ஆண்டு  -   வெள்ளி விழா
 

18    - ஐம்பதாம் ஆண்டு  -   பொன் விழா
 

19     -அறுபதாம் ஆண்டு    - வைர விழா
 

20  -   எழுபத்தைந்தாம் ஆண்டு  -   பவள விழா
 

21 -    நூறாம் ஆண்டு-    நூற்றாண்டு விழா

இது புகைப்பட பாஸ்வேர்டு.

http---www.vaptim.com-picword-index 

கம்ப்யூட்டரில் நுழைய அதாவது லாக் இன் செய்ய பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இது முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது.

 பிக்வேடு சேவை(http://www.vaptim.com/picword/index.htmல் ) . டெஸ்க்டாப்பில் டவுன்லோடு செய்து கொள்ளக்கூடிய இந்த சேவை மூலமாக புகைப்படத்தை கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டாக்கி கொள்ளலாம். விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்து அந்த படத்தின் மீது குறிப்பிட்ட இலக்குகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு படத்தின் மீது இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும் அல்லது புகப்படத்தின் மையத்தில் கிளிக் செய்ய வேண்டும் என தீர்மானித்து கொள்ளலாம்.


அடுத்த முறை கம்ப்யூட்டருக்குள் லாக் இன் செய்யும் போது நாம் தேர்வு செய்த படம் ஸ்கிரின் சேவை போல வரவேற்கும். அதில் நாம் தேர்வு செயத வகையில் கிளிக் செய்தால் உள்ளே நுழைந்து விடலாம். வழக்கமான பாஸ்வேர்டை டைப் செய்யும் முறையை விட இது சுவாரஸ்யமானது. கம்ப்யூட்டருக்குள் லாக் இன் செய்வதற்கான நவீன வழி என்று இதை உருவாக்கிய வேப்டிம் தளம் வர்ணிக்கிறது.


எந்த புகைப்படம் தேவை, அதில் எந்த வகையான இலக்குகளை கிளிக் செய்ய அமைக்க வேண்டும் என்பதை இஷ்டம் போல தீர்மானித்து கொள்ளலாம்.இந்த சேவையை புகைப்பட பாஸ்வேர்டாக பயன்படுத்தலாம்.ஒருவேளை புகைப்பட பாஸ்வேர்டு ம‌றந்து போய்விட்டால் பிரச்ச‌னையில்லை , இந்த சேவையை அன் லாக் செய்வதற்கான ரகசிய எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுமையான லாக் இன் முறை தேவை என்றால் டவுன்லோடு செய்து பயன்ப‌டுத்தி பார்க்கலாம்.


டவுன்லோடு செய்ய: http://www.vaptim.com/picword/index.html



பிக்வேர்டு எனும் பெயரிலேயே மற்றொரு டவுன்லோடு சேவையும் இருக்கிறது.


இந்த சேவை பிலேஷ்கார்டு முறையில் பிற மொழிகளை கற்றுக்கொள்ள உதவுகிறது.http://download.cnet.com/Picword/3000-2279_4-10223742.html

ஆன்ட்ராய்டு போன்களில் மால்வேர் பாதுப்புகளை கண்டறிவது எப்படி?

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இருந்து பலரும் ஐபோன்களுக்கும் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் மாறிக்கொண்டிருக்கின்றனர். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு முழுமையாக முழுக்கு போடும் நிலை இன்னும் வராவிட்டாலும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமே இமெயில் பார்ப்பதும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் போடுவதும்,கூகுலில் தேடுவதும் அதிகரித்திருக்கிறது.


இப்படி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் பக்கம் வந்திருப்பது இணைய பயனாளிகள் மட்டும் அல்ல, சாப்ட்வேர் வில்லன்களும் தான். ஆம்,டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை பாதிக்கும் மால்வேர்கள் இப்போது உங்கள் ஆன்ட்ராய்டு போன்களை குறி வைக்க துவங்கியிருக்கின்றன.


தீய நோக்கம் கொண்ட சாப்ட்வேர்களே மால்வேர் என்று இணைய உலகில் இகழ்ச்சியோடு குறிப்பிடப்படுகின்றன.விஷமத்தனமான வைரஸ்களை கம்ப்யூட்டருக்குள் நுழைப்பது,பாஸ்வேர்டு திருட்டு போன்றவற்றில் ஈடுபடுவது, பயனாளிகளின் இணைய நடவடிக்களைகளை உளவு பார்ப்பது, கிரிடிட் கார்ட் பயன்பாடு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திரட்டுவது என பல்வேறு இணைய குற்றங்களுக்கு மால்வேர்கள் தான் நுழைவு சீட்டாக இருக்கின்றன.


பொதுவாக விண்டோஸ் சார்ந்த கம்ப்யூட்டர்களுக்கு வேட்டு வைத்டு வந்த இந்த வில்லங்கமான சாப்ட்வேர்கள் இப்போது ஸ்மார்ட்போன்களை பதம் பார்த்து வருவது தான் கவலை தரும் விஷயம்.குறிப்பாக ஆன்ராய்டு போன்களை மால்வேர்கள் அதிகம் தாக்குவதாக தெரிய வந்துள்ளது.ஸ்மார்ட் போன் சார்ந்த பயன்பாட்டை மேம்படுத்த கைகொடுக்கும் அப் எனப்படும் செயலிகள் வழியாக மால்வேர்கள் உள்ளே நுழைந்து விடுவதாக கருதப்படுகிறது. 


எனவே நீங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவராக இருந்தால் மால்வேர் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. எல்லாம் சரி, உங்கள் போனில் மால்வேட்ர் குடிகொண்டிருக்கிறதா என எப்படி கண்டு பிடிப்பது? மால்வேர்களின் ஸ்டைலே உங்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக போனுக்குள் நுழைந்து விடுவதாக இருக்கின்றன.எனவே அவை போனில் தங்கள் வேலை காட்டத்துவங்கும் போது தான் அவற்றை கண்டுபிடிக்க முடியும்.


ஸ்மார்ட் போனின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களில் இருந்தே மால்வேர்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனவா என்பதை தெரிந்து கொண்டு விடலாம். உதாரணத்திற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து வழக்கத்துக்கு அதிகமான தகவல்கள் (டேட்டா) பயன்படுத்தப்படுகின்றன என்றால் அது மால்வேரின் வேலையாக இருக்கலாம். பெரும்பாலான மால்வேர்கள் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கவே உருவாக்கப்படுவதால் அவை போனின் பின்னணியில் இருந்து தகவலகளை திரட்டிக்கொண்டே இருக்கும்.எனவே உங்கள் போனில் இருந்து தகவல் பயன்பாடு அதிகரித்தால் மால்வேர் ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது.


அதே போல் உங்கள் ஸ்மார்ட் போனின் செயல்பாடு ஸ்மார்ட்டாக‌ இல்லாமல் போவதும் கூட மால்வேர் வேலையாக இருக்கலாம்.எனவே திடிரென காரணமே இல்லாமல் உங்கள் போன் செயல்பாடு மந்தமானாலோ அல்லது ஒவ்வொரு செயலுக்கும் வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்து கொண்டால் மால்வேர் பிரச்ச்னையாக இருக்கலாம்.
போனின் பேட்டரி அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போவதும் அழைப்புகளை சரியாக பேச முடியாமல் போவதும் கூட மால்வேரின் காரணமாக இருக்கலாம்.


ஆக உங்கள்  போனின் செயல்பாடு பிரச்சனைக்குறியதாக இருந்தால் மால்வேர் பாதிப்பாக இருக்கலாம் என யூகித்து கொள்ளலாம். சரி, மால்வேர் பாதிப்பை கண்டுபிடித்தாகி விட்டது. அடுத்ததாக அவற்றை நிக்குவது எப்படி? இது குறித்து கவலையே வேண்டாம். காரணம் மால்வேர்களை நீக்குவதற்கான செயலிகள் இருக்கின்றன.


 இந்த செயலிகளை கூகுல் ஸ்டோரிலேயே டவுண்லோடு செய்யலாம். 360 மொபைல் செக்யீரிட்டு, அவாஸ்ட் ஆகியவை பிரபலமாக இருக்கின்றன.நார்ட்டன்,காஸ்பர்ஸ்கி போன்ற பிரப‌ல வைரஸ் தடுப்பு சேவை நிறுவங்களும் இத்தகைய செயலிகளை வழங்குகின்றன.
ஆனால் மால்வேர்களை அப்புறப்படுவத்துவதை காட்டிலும் அவற்றை உள்ளே விடாமல் இருப்பது சிறந்த வழி. இதற்கும் மால்வேர்கள் போனுக்குள் எட்டிப்பார்க்க வழியில்லாமல் செய்ய வேண்டும். 

மால்வேர்களுக்கு செயலிகள் தான் வாகனம். கூகுல் பிலே ஸ்டோர் செயலிகளை அலசிப்பார்த்தே அனுமதித்தாலும் வில்லங்கமான செயலிகள் எப்படியோ உள்ளே நுழைந்து விடுகின்றன.எனவே செயலிகளை டவுண்லோடு செய்யும் முன் நீங்கள் விழிப்போடு இருப்பது நல்லது.
புதிய செயலிகளை தேடிப்பார்த்து பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால் எந்த ஒரு செயலியையும் டவுண்லோடு செய்யும் முன் அவை ஆபத்தில்லாதவையா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.இதற்கு எளிய வழி செயலி பற்றி மற்ற பயனாளிகள் தெரிவித்துள்ள விமர்சனங்களை படித்து பாருங்கள். அந்த செயலி பிரச்ச‌னைக்குறியது என்றால் பயனாளிகள் அவை பற்றி குறிப்பிட்டிருக்கலாம். 


அடுத்ததாக செயலியை உருவாக்கிய சாப்ட்வேர் நிபுணர் அல்லது சாப்ட்வேர் நிறுவனத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவரது அல்லது அந்நிறுவனத்தின் பிற செயலிகள் பற்றியும் தகவல் தெரிந்து கொள்ளுங்கள். இந்த தகவல்கள் மூலமே அவை நம்பகமானவையா என தெரிந்து கொள்ளலாம்.


மற்ற இடங்களில் இருந்து செயலிகளை டவுண்லோடு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருங்கள்.சில செயலிகள் சூப்பர் யூசர் அந்தஸ்து வழங்குவதாக ஆசை காட்டும் . இவை கூட சில நேரங்களின் மால்வேருக்கான வழியாகிவிடலாம்.


எல்லாவற்றுக்கும் மேல் கம்ப்யூட்டரில் வைரஸ் ஸ்கேன் செய்வது போல ஸ்மார்ட்ட் போனிலும் அடிக்கடி வைரஸ் ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.

நோக்கியா ஆஷா 500, ஆஷா 502 மற்றும் ஆஷா 503 அறிமுகம்!



அபுதாபியில் நடைபெற்ற விழாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நோக்கியா தனது ஆஷா சீரியஸ் மொபைலில் புதிதாக மூன்று மொபைல்களை வெளியிட்டுள்ளது. ஆஷா 501 ன் வெற்றியை தொடர்ந்து இந்த மொபைல்களுக்கு ஆஷா 500, 502, 503 என நோக்கியா பெயரிட்டுள்ளது.

மூன்று ஆஷா ஃபோன்கள் பிளாக், பிரைட் ரேட், பிரைட் கிரீன், யெல்லோ, சியான் மற்றும் வைட் போன்ற ஐந்து வண்ணங்களில் கிடைக்கின்றன. இந்த மூன்று மொபைல்களும் 2,3 இன்ச் டிஸ்பிளே மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் சந்தையில் கிடைக்கிறது. மேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது. இதில் கிளாரிட்டியும் மற்ற மொபைல்களை விட சற்று அதிகமாகவே உள்ளது.

இதில் 2G, 3G, Wi-Fi என அனைத்துமே இந்த மொபைலில் ஒரு பெரும் தொகுப்பாக கிடைக்கிறது. ஒன் டச் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆப்ஷனும் இதில் உள்ளது அதாவது பேஸ்புக் செல்ல அதற்கென பிரத்யோகமாக இருக்கும் அந்த பட்டணை ஒரு முறை அழுத்தினாலே போதும்.

ஆஷா மொபைல்களில் 64MB க்கு ரேமும் ஆஷா 1.2 வெர்ஷன் ஓ.எஸ்ஸும இதில் உள்ளது இது உங்களது மொபைலை வேகமாக செயல்பட உதவுகிறது. மேலும் 32GB வரை மெமரி கார்டு ஆப்ஷனும் இதில் உள்ளது ஆனால் இதில் இன்பில்டு மெமரி இல்லை. இதன் விலைகள் முறையே ஆஷா 500 ரூ.4,250, ஆஷா 502 ரூ.5,490, மற்றும் ஆஷா 503 ரூ.6,100 விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

நோக்கியா ஆஷா 500 முக்கிய குறிப்புகள்:

2.8-அங்குல QVGA டிஸ்ப்ளே

2 மெகாபிக்சல் பின்புற கேமரா

இரண்டு வகைகளில்-ஒற்றை சிம் மற்றும் எளிதாக இடமாற்று இரட்டை சிம்

MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய சேமிப்பு

நோக்கியா ஆஷா 502 முக்கிய குறிப்புகள்:


3 அங்குல QVGA டிஸ்ப்ளே

எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா

இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்)

MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய சேமிப்பு

நோக்கியா ஆஷா 503 முக்கிய குறிப்புகள்:

வளைந்த கொரில்லா கண்ணாடி 3 அங்குல QVGA டிஸ்ப்ளே

எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல்

இரண்டு வகைகளில்-ஒற்றை சிம் மற்றும் எளிதாக இடமாற்று இரட்டை சிம்

MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய சேமிப்பு.

‘பாதுகாப்பான தீபாவளியே – ஆனந்தமான தீபாவளி.!’

தீபாவளி!


குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்!


தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள்,

புது மகிழ்ச்சி,

பலவகைப் பலகாரங்கள்,

ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான்!.


28 - diwali-alert


ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிலும் கண் மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகம்.


அதனாலே தீபாவளி ஹாப்பி அண்ட் சேஃப் தீபாவளியாக அமைய உங்களுக்கு சில முக்கியமான டிப்ஸ்கள் :


1. முதலில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமே பட்டாசுகளை வாங்கவும். தரமற்ற போலியான பட்டாசுகளை விற்பவர்களிடமிருந்து வாங்கிய பட்டாசுகள் நீங்கள் பற்ற வைத்தவுடன் வெடிக்காமல் உங்கள் பணத்திற்க்கு வேட்டு வைக்ககூடிய வாய்ப்பு அதிகம். அல்லது எதிர்பாராத நேரத்தில் வெடித்து ஆபத்தையும் ஏற்படுத்திவிடும்.

2. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பூவினை கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து அதன்படி பயன்படுத்த வேண்டும். ஏனெனில் , ஒவ்வொரு பட்டாசினையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்தினால் கண் உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப்படலாம்.

3. தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க்குகள், குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள அல்லது அவை தயாரிக்கப்படும் இடங்ளைத் தவிர்த்து குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளிகளில் பட்டாசுகளை பயன்படுத்துவதே நல்லது. ராக்கெட்டுகளை குடியிருப்பு பகுதிகளில் உபயோகிப்பதையும், மாணவர்கள், முதியோர்கள் தங்கியிருக்கும் பகுதிகளை நோக்கி செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும். ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக் கொளுத்துவதும் ஆபத்தானதே.

4. தண்ணீர். இது நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல ஒருவெளை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக்கூடிய முதல் உதவி மருந்தும்கூட. எனவே ஒரு பக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

5. ஒரு நேரத்தில் ஒரே ஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்த வேண்டும். த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்திற்க்கு காரணமாகலாம்.

6. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒரு போதும் அத்னை கையில் எடுப்பதற்க்கோ அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்க்கோ முயற்சி செய்யக்கூடாது.அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.

7. குழந்தைகள் தைரியசாலிகள்தான். ஆனாலும் குழந்தைகள் எந்த பட்டாசினையும் தனியே கொளுத்த அனுமதிக்ககூடாது.

8. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்காமல் போனால், பத்து நிமிடம் வரை பொறுமையாக காத்திருந்து ஒரு பக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசினை நீரினுள் நன்றாக மூழ்கவைத்து செயலிழக்க வைக்க வேண்டும். புஷ்வாணம் எரியவில்லை என்றால் கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. திடீரென்று வெடித்து விபத்தினை ஏற்ப்படுத்த வாய்ப்பு உள்ளது. திரி எரிந்தும் வெடிக்காத வெடிகளை கையில் எடுத்துப் பார்ப்பதோ, மீண்டும் பற்ற வைப்பதோ கூடாது.

9. பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி ஸ்டாக் பண்ணி வைப்பது ஆபத்தானது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில் குழந்தைகள் பயன்படுத்தாத இடத்தில் வேண்டுமானால் பத்திரப்படுத்தி வைக்கலாம்.

10. நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒரு பக்கெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். மேற்சொன்னவாறு செய்யாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

11. பட்டாசுகளை பற்றவைக்கும்போது மற்ற பட்டாசுகளை அவற்றிற்க்குறிய பைகளிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொண்டு, உபயோகிக்கும் பட்டாசினை மட்டுமே பற்றவைக்க் வேண்டும். இது மற்ற பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து விபத்து மற்றும் சேதம் ஏற்ப்படுத்துவதை தவிர்க்கும்.

12. ஒரு பட்டாசினை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல.

13. ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக் கண்ணாடி (Plain Spectacle) அணிந்து கொள்வது நல்லது.

14. மிக அதிகமான ஒளியையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது த்ரில்லிங்காக இருக்கலாம். ஆனால் அவை ஆபத்தானவை மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி விளையாடுவது சட்டப்படி குற்றம் ஆகும்.

15. செய்தித்தாள்கள் மூலமாகவும், கடைக்காரரிடம் விசாரிப்பதன் மூலமாகவும் நீங்கள் வாங்கும் பட்டாசு உங்கள் ஊரில் தடை செய்யப்பட்டாதா? அதனை நீங்கள் பயன்படுத்தலாமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

16. எரிந்து முடிந்த மத்தாப்பூக்கள் மற்றும் பட்டாசுகளை மற்றவர்கள் மீதும் மிருகங்கள் மீதும் எரிந்து விளையாடுவது மனிதத் தன்மையற்ற மற்றும் குரூரமான செயலாகும்.

17. குழந்தைகளும் சிறுவர்களும் எந்த சிறிய வகை பட்டாசுகளைக்கூட தன்னிச்சையாகக் கொளுத்துவதற்க்கு தாராளமாக அனுமதிப்பது தவறு. பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் மேற்ப்பார்வையில் பட்டாசுகளை கொளுத்த அனுமதிப்பதே சிறந்தது.

18. பட்டாசினை கொளுத்தி விளையாடும் இடத்தில் ஒரே நேரத்தில் ஒரே ஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்துவது அறிவுடைமை.

19. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பினைக் கொளுத்துவதற்க்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது.

20. மதுபானம் அருந்திவிட்டு உங்களோடு பட்டாசு கொளுத்தி விளையாட, அல்லது உதவி செய்ய யாராவது வந்தால் அவர்க்ளை தவிர்ப்பது உங்களுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது.

21. வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும்போது வெடிகளை கொளுத்திப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். அதனால் பெரிய விபத்துகளை தவிர்க்கலாம்.

22. தரைச் சக்கரம் போன்றவற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துகளையும் வீட்டின் தரை பாழாவதையும் தவிர்க்கலாம்.

23. நீளமான மத்தாப்புக்களை வைத்துக் கொண்டே வெடிகளை வெடிக்க வேண்டும்.வெடிகளைப் பற்ற வைக்கும்போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.ஏனெனில் விபத்து ஏற்ப்பட்டால் விபத்துடன் வெடிப்பொருட்கள் முகத்தின் தோல் வழியே உள்ளே சென்று முகத்தில் நிரந்தர கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடலாம்.

24. பட்டாசு வெடிக்கும் குழந்தைகளும் அவர்களுக்கு உதவியாகச் செல்படும் பெரியவர்களும் கண்டிப்பாக கால்களில் ஷுக்களோ அல்லது செருப்புகளோ அணிந்து கொண்டே பட்டாசுகளைக்கொளுத்தி விளையாட வேண்டும்.

25. வெடிக்காத வெடிகளைத் தேடி எடுத்து மொத்தமாக போகி கொளுத்துவது மிகவும் ஆபத்தானது..


முதல் உதவிக் குறிப்புகள் :


1. எதிர்பாராதவிதமாக பட்டாசினால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும். தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள திசுக்களுக்கு ஏற்ப்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. பின்னர் ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

2. வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது.சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

3. தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியாவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவிற்க்குக் காயம் ஏற்ப்பட்டுள்ளது என்பதை சரியாகத்ச் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்ப்படும்.

4. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது காற்றில் பறக்கக்கூடிய ஆடைகளை அணிவது கூடாது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாவாடை போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு கொளுத்தும்போது எரியும் விளக்கின் நெருப்பு பாவாடையில் பட்டு விபத்து ஏற்படுவதற்க்கான வாய்ப்பு அதிகம். பட்டாசு கொளுத்தும்போது நைலான், பட்டு போன்ற துணிகளை அணியவே கூடாது.

5. ஒருவேளை உங்கள்மீது தீப்பிடித்தால் ஓடாமல் தரையில் உருண்டு தீயை அணைக்க முற்பட வேண்டும்.

தவிர்க்க வேண்டிய தவறுகள்:

பல நேரங்களில் பட்டாசு மற்றும் தீ விபத்துகளின்போது முதல் உதவி என்ற பெயரில் எதையாவது செய்து கண் உட்பட உடலின் பல உறுப்புகளையும் கெடுத்துக் கொள்வதும், யார் என்ன சொன்னாலும் உடனே அத்தனையையும் செய்துவிடுவதும்,மேலும் இது குறித்து பல ஊகங்களும் உள்ளன. உண்மை நிலையை முறையாகத் தெரிந்து கொள்வதே சிறந்தது.

1. பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ஒரு ராக்கெட் வெடித்து ஒரு குழந்தையின் அல்லது ஒருவரது கண்ணை கண்ணாடித் துகளோ அல்லது இரும்புத் துகளோ தாக்கிவிட்டது. ஆனால் கண்களிலிருந்து ரத்தம் ஏதும் வரவில்லை. வலியும் இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உடனடியாக ஒரு மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்டவரை அழைத்துச்செல்வதே சிற்ந்த காரியம். ஏனெனில் பல நேரங்களில் கண் சார்ந்த விபத்துக்களின் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை.உடனடியாகக் கண் மருத்துவரின் கவனிப்பு வழங்காவிட்டால் முழுமையான பார்வையிழப்பு உட்பட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.

2. கண் விபத்துக்குள்ளான குழந்தை அதிக வலியின் காரணமாக கண்ணை அழுத்திப் பிடித்துக் கொள்ளவோ அல்லது கசக்கவோ விரும்புகிறது. இருப்பினும் நாம் செய்யவேண்டியது என்ன தெரியுமா? குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு உடனடியாக கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.கண்களைக் கசக்குவதனால் இரத்தம் அதிகமாக வெளியேறலாம் அல்லது காயத்தின் வீரியம் அதிகரிக்கலாம்.

3. ஒரு குழந்தையின் கண்களை பாட்டில் ராக்கெட், அல்லது வேறு மத்தப்பு தீவிரமாகத் தாக்கிவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கண்ணைச் சுற்றிப் பாதுகாப்பாக ஒரு பேப்பர் கப் ஒன்றினை முகத்தினில் வைத்து கண்ணை அழுத்தாதவாறு டேப்பினால் ஒட்டி அல்லது பாதுக்காப்புக்கான பேட்ச் அணிவித்து உடனடியாக கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல் வேண்டும்.

4. நெருப்புக்காயத்தினால் காயம் பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்த்துச் செல்வதற்க்கு முன்னால் வலி நிவாரணியாக எந்த மருந்தினையும் கொடுக்கக்கூடாது. ஆஸ்ப்பிரின் அல்லது இபுப்ரோஃபேன் போன்ற மருந்துகளை வலியைத் தாங்கிக் கொள்வதற்க்காகக் கொடுப்பது தவறு. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் ஆஸ்ப்பிரின் கண்டிப்பாகக் கொடுக்ககூடாது. இபுப்ரோஃபேன் இரத்தக்குழாய்களை மென்மையானதாக்கி விடும், எனவே இரத்தம் மிக அதிகமாக வெளியேற வாய்ப்பு உள்ளது. எனவே ஒருகணம் கூட தாமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே நல்லது.

5. தீ அல்லது பட்டாசு விபத்தினல் காயம் பட்ட குழந்தையின் முதல் தேவை என்ன தெரியுமா? முதலில் காயம்பட்ட குழந்தையை சமாதானம் செய்து அமைதிப்படுத்த வேண்டும். சில பெற்றோர்கள் குழந்தைகளை கோபித்து அதிகமாகத் திட்டி மன அளவில் மேலும் பாதிப்பை ஏற்ப்படுத்துவார்கள்.இது தவறு. ஒரு சுத்தமான துணியை தீக்காயம் பட்ட இடத்தில் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விபத்து ஏற்ப்படுவது உடல் நலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பாதித்து விடும்..

ஆம், பாதுகாப்பான தீபாவளியே அனைவரும் விரும்புவது!

பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம்!

அனைவருக்கும் ஒளி மயமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.