சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக்கிறார். நடப்பு சாம்பியனான ஆனந்தும் உலகின் முதல் நிலை வீரருமான கார்ல்சனும் மோதும் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழா வரும் 7 ம் தேதி நடைபெறுகிறது. 9 ம் தேதி முதல் சதுரங்க ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன.
5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் 6 வது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். சொந்த மண்ணில் களம் காண்பதால் ஆனந்த் கூடுதலான எதிர்பார்ப்புக்கும் நெருக்கடிக்கும் அளாகி இருக்கிறார்.
43 வயதான ஆனந்துக்கும் 22 வயதான கார்ல்சனுக்கும் இடையிலான இந்த போட்டி அனுபவத்துக்கும் இளைமை துடிப்புக்குமான மோதலாக கருதப்படுகிறது. செஸ் உலகில் கடந்த பத்தாண்டுகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாகவும் இந்த மோதல் வர்ணிக்கப்படுகிறது.
கிரிக்கெட்டை மதமாகவும் சச்சினை கடவுளாகவும் கொண்டாடும் தேசம் இது. செஸ் விளையாட்டில் இந்தியாவை தலைநிமிற வைத்த ஆனந்தை நாம் உரிய முறையில் கொண்டாடியிருக்கிறோமா ? என்பதை எல்லாம் விட்டு விடுவோம். தனது சொந்த மண்ணில் களமிறங்கும் சாம்பியனை கைத்தட்டி ஊக்குவிக்கும் நேரமிது.
சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு பதிவு:
ஆனந்துக்கு வாழ்த்து!
கார்ல்சன் சவாலை ஆனந்த் சமாளிப்பாரா என்று செஸ் உலகமே உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. ஆனந்தோ அமைதியாக இந்த போட்டிக்கு தயாராகி இருக்கிறார். இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன ? வெல்லுங்கள் என்று வாழ்த்துவது தானே. இதற்காக என்றே பிரத்யேக இணையதளம் ’விஷ்4விஷி’ எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனந்தின் நீண்ட கால ஸ்பான்சரான என்.ஐ.ஐ.டி இந்த தளத்தை அமைத்துள்ளது.உங்கள் ஒவ்வொரு வாழ்த்தும் முக்கியம் என அழைக்கும் இந்த தளம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக ஆதரவு குரல் கொடுங்கள் என்கிறது.
வாழ்த்து செல்வதற்காக என்று உள்ள கட்டத்தில் உங்கள் பெயர், இமெயில் முகவரி, போன் நம்பர் ஆகியவற்றை சமர்பித்து சாம்பியனுக்கான வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். வாழ்த்துக்களை டிவிட்டர்,பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் வழியேவும் பகிர்ந்து கொள்ளலாம்.மிகச்சிறந்த வாழ்த்து செய்தி தேர்வு செய்யப்பட்டு, அதற்கு பரிசாக உலக சாம்பியன்ஷிப் போட்டியை காண்பதற்கான டிக்கெட் காத்திருக்கிறது.
போட்டி நடைபெறும் இடம் , போட்டி அட்டவணை ஆகிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டி முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான வசதியும் இருக்கிறது. ஆனந்தை வாழ்த்துவோம்.
போட்டியை நேரில் காண !
சென்னை ஹயத் ஹோட்டலில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நேரில் காணும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஆர்வம் உள்ளவர்கள் இந்த போட்டியை இணையத்தில் நேரில் காணலாம். அதற்கான வாய்ப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டிகான அதிகார பூர்வ இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.
எனும் முகவரியிலான இந்த தளத்தில் போட்டி தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இரு வீரர்கள் பற்றிய அறிமுகம் மற்றும் அவர்கள் ஆட்ட முறை பற்றிய விவரங்களையும் காணலாம். புகைப்படங்கள் ,டிவிட்டர் குறும்பதிவுகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. போட்டியின் முடிவுகளை ஒவ்வொரு சுற்றுக்கும் தெரிந்து கொள்ளலாம். போட்டி இடம் அட்டவணை, அதிகாரிகள் பற்றிய விவரங்களும் உள்ளன. போட்டிக்கான டிக்கெட்டை முன்பதிவும் செய்யலாம்.
ஆனந்த மொழிகள்.
( பாபி) பிஷர் மற்றும் கார்ல்சன் இருவருக்குமே செஸ் விளையாட்டை மிகவும் எளிமையாக்கும் ஆற்றல் இருப்பதாக நினைக்கிறேன்.
இது செஸ் கடவுள் என்று போற்றப்படும் பாபி பிஷர் மற்றும் தற்போதைய இளம் செஸ் மேதையான கார்லசன் இருவரின் அபார திறமையை அங்கீகரித்து ஆனந்த் தெரிவித்த கருத்து. இது போல் ஆனந்த் பல்வேறு தருணங்களில் தெரிவித்த கருத்துக்கள் மேற்கோள்களாக செஸ்கோட்ஸ் தளத்தில் இடம் பெற்றுள்ளன.
செஸ் என்பது ஒரு மொழி போல ,முன்னணி வீரர்கள் அதில் சரளமாக உள்ளனர். திறமையை வளர்த்தெடுக்கலாம். ஆனால் முதலில் உங்களுக்கு எதில் திறமை அதிகம் என கண்டறிய வேண்டும். இதுவும் ஆனந்த் சொன்ன மொழி தான்.
ஆனந்த் பற்றி மற்ற செஸ் சாம்பியன்களின் மேற்கோள்களும் இந்த தளத்தில் இருக்கிறது.
டிவிட்டர் பேட்டி.
உலகமே எதிர்பார்க்கும் இந்த மோதலுக்காக ஆனந்த் எப்படி தயாராகி இருக்கிறார் என்று அறிந்து கொள்வதில் எல்லோருக்குமே ஆர்வம் இருக்கிறது. அதிவேக செஸ் பாணியில் ஆனந்திடமே இருந்து இதற்கு பதில் வருவதைவிட விறுவிறுப்பானது எது ? போர்ப்ஸ் இதழ் ஆனந்துடன் டிவிட்டர் மூலம் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது.
டிவிட்டரில் ஆனந்த்.
விஸ்வநாதன் ஆனந்தை அவரது ரசிகர்கள் டிவிட்டரில் பின் தொடரலாம். இது ஆனந்தின் டிவிட்டர் முகவரி:
பிரபல் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் வரைந்த தனது ஓவியத்தை தான் ஆனந்த் டிவிட்டர் படமாக வைத்திருக்கிறார். தி கிங் என்கிறது அவரது சுயசரிதை குறிப்பு.
உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக ரசிகர்கள் அனுப்பிய ஒவ்வொரு வாழ்த்துமே விஷேசமானது என சதுரங்க ராஜா ஒரு குறுபதிவு மூலம் நன்றி தெரிவுத்துள்ளார்.
இது ஆனந்தின் பேஸ்புக் பக்கம்.
சதுரங்க போட்டிகள்.
ஆனந்த் ரசிகர்களுக்கு அவரது முக்கியமான செஸ் ஆட்டங்கள் பற்றியும் அதில் மேற்கொள்ளப்பட்ட காய் நகர்வுகள் பற்றியும் தெரிந்து கொள்வதை விட மகிழ்ச்சி அளிக்க கூடியது வேறு என்ன? ஆனந்தின் செஸ் கேம்களை இந்த இணையதளங்களில் பார்க்கலாம்:
தேசமே உங்கள் பின்னால் இருக்கிறது ஆனந்த், வெற்றிக்கு வாழ்த்துக்கள்.