Search This Blog

Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday, 8 January 2014

கசக்கும் வேம்பின் இனிக்கும் நன்மைகள்....!




வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.

வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ‘அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.

வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் ‘கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.

இலை: வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.

வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.

வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.

பூ: வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
காய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.

விதை: புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.

வேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
பட்டை: வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.

பிசின்: உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.

புண்ணாக்கு: வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.

இது போல் வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா?

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.

* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.

* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.

* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.

* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.

Saturday, 4 January 2014

பாரத ரத்னா நெல்சன் மண்டேலா




இனத்தின் விடுதலைக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, சற்றும் தளராமல் தன் இலட்சியத்தில் வெற்றி பெற்ற போராளி, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா. சென்ற நூற்றாண்டின் கடைசி அறவழிப் போராளியான அவரை இந்த நூற்றாண்டில் உலகம் இழந்துவிட்டது.

தென்னாப்பிரிக்கா நாட்டின் கேப் மாகாணத்தில் உம்டாடா பகுதியில் உள்ள மெவிசோ கிராமத்தில் 1918-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் பிறந்தார் நெல்சன் மண்டேலா. அவரது அப்பா, காட்லா. அம்மா, நோஸ்கெனி. பிறந்தபோது அவருக்கு வைக்கப்பட்ட பெயர், ரோபிசலா மண்டேலா. ரோபிசலா என்றால் கலகக்காரர் என்று அர்த்தம். பின்னாளில், அவர் உரிமைகளைப் பெறுவதற்கான கலகத்தில் ஈடுபட்டு உலகத்தின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்தார்.

மண்டேலாவின் முன்னோர்கள் அப்பகுதி மக்களின் நிர்வாகத் தலைவராக இருந்தவர்கள். அதனால், ராஜ குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருந்தனர் மண்டேலா குடும்பத்தினர். ராஜ வம்சத்தினர் கையில் நிலப்பகுதி இருந்தாலும் அவர்களையும் ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்காவையும் வெள்ளைக்காரர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தனர்.

இந்தியாவிலிருந்து வழக்கறிஞராக தென்னாப்பிரிக் காவுக்குச் சென்ற காந்தியடிகள், அங்கு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தபோது, அவர் கருப்பு நிறத்தவர் என்பதால் வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் ஒருவர் காந்தியடிகளை ரயிலிலிருந்து கீழே தள்ளியதையும் இதனையடுத்து நிறவெறிக்கெதிராக காந்தியடிகள் தன்னுடைய சத்யாகிரகப் போராட்டத்தை தென்னாப்பிரிக்காவில் தொடங்கியதையும் அறிவோம். அவருடைய போராட்டத்தினால் தென்னாப்பிரிக்காவில் தொழிலாளர்களாக இருந்த ஆயிரக்கணக்கான இந்திய குடும்பத்தினருக்கு உரிமைகள் கிடைத்தன.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகளைவிட அதிகமான கொடுமைகளை அந்நாட்டின் பூர்வகுடிகளான கறுப்பின மக்கள் அனுபவித்து வந்தனர்.  அவர்களை அடிமைகள்போல வெள்ளைக்காரர்கள் நடத்தி வந்தனர். மண்டேலாதான் அவரது குடும்பத்தில் முதன்முதலாக பள்ளிக்குச் சென்று படித்தவர். பள்ளியில் இருந்த ஆசிரியைதான் அவரது பெயருக்கு முன்பாக நெல்சன் என்பதைச் சேர்த்தார்.  அந்நாளில், தென்னாப்பிரிக்க மாணவர்களின் பள்ளிப் பதிவேட்டில் ஆங்கிலப் பெயர் இருக்கவேண்டும் என்கிற ஆதிக்க உத்தரவை வெள்ளைக்காரர்கள் விதித் திருந்தனர். அதனால்தான் மண்டேலாவின் பெயருக்கு முன்பாக நெல்சன் என்ற பெயர் சேர்க்கப்பட்டது. தங்கள் சொந்த அடையாளத்தைப் பெயரில்கூட காப்பாற்ற முடியாதவர்களாக தன் இன மக்கள் இருப்பதை பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்தார் மண்டேலா.  இரு சகோதரி களுடன் வளர்ந்த மண்டேலா, கிராமப்புறத்தில் கால்நடை களை மேய்ப்பார். சக வயது நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பார். தெம்பு அரண்மனையில் சட்ட-நிர்வாகப் பொறுப்புகளில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் அவருக் கிருந்ததால், பள்ளிப்படிப்புக்குப் பிறகு தன் ஆர்வத்திற்கேற்ற உயர்படிப்புகளை நாடினார்.


பி.ஏ. பட்டம் பெற்றதுடன், தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரமான ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பும் பயின்றார். கல்லூரி வாழ்க்கையின் போது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் வால்டர் சிசுலுவுடன் மண்டேலாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதுபோல, கம்யூனிச இயக்கத்தவர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள், விளாடிமிர் இல்யீச் லெனினின் புரட்சிகர செயல்பாடுகள் அவரைக் கவர்ந்தன. எனினும் தென்னாப்பிரிக்காவில் வர்க்க பேதத்தைவிட நிற-இன பேதமே சிக்கல்களுக்கு காரணமாக இருப்பதாக உணர்ந்த மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவில் இணைந்து உரிமைப் போராட்டங்களில் பங்கேற்றார். கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. பொது இடங்களில் வெள்ளை நிறத்தவர் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் எதிர்த்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் போராடிவந்தது.

இயக்கப்போராட்டத்தில் இணைந்திருந்த எவிலின் என்ற பெண்ணை 1944-இல் மண்டேலா திருமணம் செய்து கொண்டார். போராட்டக்களங்களில் தொடர்ந்து பங்கேற்றார். 1947-இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவின் தலைவரானார். பின்னர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராகவும் இளம் வயதிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார் மண்டேலா. அவருடைய போராட்டங்கள் காந்தியடிகளைப் போல அறவழியில் அமைந்தன. பெருமளவில் மக்கள் திரண்டனர். இதனால் அவர் மீது தேசத்துரோக சதி குற்றச்சாட்டை சுமத்தி 1956-இல் கைது செய்தது தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு. நான்காண்டு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு  அந்த வழக்கை அரசு கைவிட்டது. இதனிடையே, அவருடைய திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டது. பின்னர், வின்னி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.

1960-ஆம் ஆண்டில் வெள்ளையர்களுக்கு சிறப்பு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு முடிவு செய்ததை எதிர்த்த கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தினர். ஷார்ப்வில்லி நகரத்தில் மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 69 பேர் கொல்லப்பட்டனர். இனி, அறவழிப் போராட்டம் பலன் தராது என்ற முடிவுக்கு வந்த மண்டேலா ஆயுதப் போராட்டத்திற்குத் திரும்பினார்.  1961-இல் இனவெறிக்கு எதிரான முதலாவது ஆயுத தாக்குதல் மண்டேலா தலைமையில் நடந்தது.

தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் ராணுவ மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. மண்டேலாவைப் பிடிக்க வெள்ளை அரசு தீவிரமானது. அவர் தலைமறைவானார். அவரைத் தேடுவது என்ற பெயரில் கறுப்பின மக்களைத் துன்புறுத்தியது அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் மூலமாகவும் நெருக்கடிகள் உருவாயின. மண்டேலா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். 1962-ஆம் ஆண்டு அவரது இருப்பிடத்தை, மாறுவேடத்தில் சென்ற காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் உள்பட 10 முக்கிய தலைவர்கள் மீது புரட்சி, சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 1963-இல் தொடங்கி 1964 வரை நடந்த இந்த விசாரணையின் முடிவில் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

ராபன் தீவில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு, பாறைகளை உடைத்தல் போன்ற கடுமையான வேலை களுக்குட்படுத்தப்பட்டார். போராட்டத்தைக் கைவிட்டு, மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்வதாக அரசாங்கம் கூறியது. அதற்கு மண்டேலா மறுத்துவிட்டு சிறைவாசத்தைத் தொடர்ந்தார். 1964-லிருந்து 1982 வரை 18 ஆண்டுகள் அவர் அந்த சிறையில் அடைபட்டிருந்தார். 1982 முதல் போல்ஸ்மோர் சிறையிலும், 1988-லிருந்து விக்டர் வெர்ஸ்டர் சிறையிலும் அடைக்கப் பட்டார். அவர் சிறைப்பட்டிருந்தபோதும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன. காந்திய வழியே தனது மக்களுக்கான  சிறந்த போராட்ட வழி என்பதை மண்டேலா உணர்ந்தார். அதன்படியே போராட்டங்கள் தொடர்ந்தன.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என உலகநாடுகள் அழுத்தமாகக் குரல் கொடுத்தன. தென்னாப்பிரிக்க வெள்ளை அரசுக்கு நெருக்கடி உருவானது. தென்னாப்பிரிக்க அதிபராக அப்போது          டி கிளார்க் இருந்தார். அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கினார். இதனைத் தொடர்ந்து 27 ஆண்டுகால சிறைவாசத்துக்குப்பிறகு 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். தலைப்போராட்டத்தில் இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தலைவர் உலகில் வேறு யாருமில்லை.

1994-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக் காவில் மக்களாட்சி முறையிலான தேர்தல் நடைபெற்றது. அதில் மண்டேலா வெற்றிபெற்று அதிபரானார். முன்னாள் அதிபர் டி கிளார்க்கை துணை அதிபராக பதவியேற்கச் செய்ததுடன், அவரை அதிபர் மாளிகையில் தங்கவும் அனுமதித்தார் மண்டேலா. பகைவருக்கும் அருளும் நெஞ்சம் கொண்ட மண்டேலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசு அவருக்கும் டி கிளார்க்குக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. இந்திய பிரதமராக வி.பி.சிங் இருந்தபோது நம் நாட்டிற்கு வருகை தந்த நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருதும் அளிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க அதிபரான மண்டேலா அந்நாட்டை வளர்ச்சிப்பாதையை நோக்கி நகர்த்துவதற்கு கடும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அப் பணிகளை மேற்கொண்டார். 1999-இல் மீண்டும் தேர்தல் வந்தபோது, இரண்டாம் முறையாக அதிபராக மாட்டேன் என்று சொல்லி கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களுக்கு வழிவிட்டார். இதனிடையே வின்னியுடனான அவருடைய திருமண வாழ்க்கையும் முறிவு ஏற்பட்டு, கிரேசா என்பவரை மணம் செய்துகொண்டார் மண்டேலா.

தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைகளுக்கான அவருடைய செயல்பாடுகள் தொடர்ந்தன. எனினும் மிக நீண்டகால சிறைவாசம், அங்கு அனுபவித்த சித்ரவதைகள், அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகள் இவற்றின் காரணமாக மண்டேலாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர் 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் மரணமடைந்தார்.
மனிதகுலத்தின் விடுதலைக்கானப் போராட்டங்கள் ஓய்வதில்லை. விடுதலைக்காகப் பாடுபட்டவர்களும் வரலாற்றிலிருந்து அழிவதில்லை.

குழந்தைகளை(யும்) குறி வைக்கும் ஹைப்பர் டென்ஷன்!- கொஞ்சம் அலசல்




முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப் படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.அதிலும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது. எனவே, அதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை செய்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?


பொதுவாக பெரியவர்களுக்கு மட்டுமே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள், குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பதை நிரூபிக்கின்றன. எனவே, 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ரத்த அழுத்த சோதனை நடத்த வேண்டியது அவசியமாகிறது.

குழந்தைகள் மத்தியில் எந்தளவிற்கு உயர் ரத்த அழுத்த சிக்கல்கள் உள்ளன?

இப்பிரச்சினை, இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, 3 – 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடம், 3.6% அளவிற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது. அதேசமயம், சீனாவைப் பொறுத்தவரை, 8 முதல் 17 வயது வரையிலான பள்ளி குழந்தைகளிடம் 17.4% அளவிற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது.

குழந்தைகளிடம் ரத்த அழுத்த சோதனை நடத்தவில்லை என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?

உயர் ரத்த அழுத்த பிரச்சினைக் கொண்ட 75% குழந்தைகள், சோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே உள்ளனர். இதன்மூலம், அவர்கள் பெரியவர்கள் ஆனதும், இதயம் மற்றும் ரத்த நாளம் தொடர்பான நோய்களுக்கு உள்ளாகின்றனர். உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள ஒருவர், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு மற்றும் இதய நோய் ஆகியவை தாக்குவதற்கான அதிகபட்ச ஆபத்தில் இருக்கிறார்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, முறையான கவனிப்பிற்கு உட்படுத்தப்படாவிட்டால், மூளை வீக்கம், குழப்பம், கோமா, தீவிர தலைவலி மற்றும் குருட்டுத் தன்மை உள்ளிட்ட மோசமான நிலைகளுக்கு ஆட்படும் ஆபத்து உள்ளது. எனவே, ஆண்டிற்கு ஒரு முறையாகினும், குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை நடத்தப்பட வேண்டும்.

குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை அதிகரிக்க காரணங்கள் என்ன?

இன்றைய சமூகத்தில், குழந்தைகளின் வாழ்க்கை முறையில் பல விரும்பத்தகாத அம்சங்கள் இருப்பதே அதற்கு காரணம். உதாரணமாக, அதிகமாக தொலைக்காட்சிப் பார்த்தல், கணினி முன்பாக அதிகநேரம் செலவழித்தல், வீடியோ கேம் விளையாடுதல், ஜங்க் உணவுகளை உண்ணுதல் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பானங்களைப் பருகுதல் உள்ளிட்ட பல பழக்கவழக்கங்களால், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுகிறது.

அதேசமயம், தேவைக்கும் குறைவான உடலியக்கம், தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்யாமை, உடல் சார்ந்த விளையாட்டுக்களுக்கு வாய்ப்பில்லாமை உள்ளிட்ட அம்சங்கள் ஒரு குழந்தை குண்டாவதற்கு மட்டுமல்ல, அக்குழந்தை உயர் ரத்த அழுத்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கும் காரணமாகின்றன.

குழந்தைகளின் உயர் ரத்த அழுத்த சிக்கலைத் தீர்க்க கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகள், நல்ல சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட ஊக்கப்படுத்தப்பட வேண்டும். மேலும் ஜங்க் உணவு மற்றும் சர்க்கரை அதிகம் கலந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.

காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை தவறவிடாமல், சரியான நேரத்தில உண்ண வேண்டும். அதுபோல், அதிகநேரம் தொலைக்காட்சி முன்பாகவோ அல்லது கணினி முன்பாகவோ அமரக்கூடாது. தேவையான அளவிற்கு விளையாட வேண்டும்.

தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், இரவில் நெடுநேரம் கண்விழிக்காமல், தினமும் தேவையான அளவு தூங்க வேண்டும்.

குழந்தைகளுக்கான நார்மல் ரத்த அழுத்தம் என்பது என்ன?

பெரியவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் நார்மல் ரத்த அழுத்த அளவு 120/80 mm Hg) என்பதாக இருக்கும். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை, நார்மல் ரத்த அழுத்தம் என்பது, வயது, பாலினம் மற்றும் உயரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

எனவே, இதற்கென்று குறிப்பிட்ட அளவீட்டை நிர்ணயிக்க முடியாது. குழந்தையின் ரத்த அழுத்தத்தை அளவிடும் மருத்துவர், அதை reference table -க்கு பொருத்திப் பார்த்து, அது நார்மலா அல்லது அசாதாரணமானதா என்பதை நிர்ணயிக்க வேண்டும்.

இந்த ஒப்பீட்டின்போது, 95% விழுக்காட்டிற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தமாக கணக்கிடப்படும். உதாரணமாக, ஒரு 5 வயது குழந்தையின் உயரம் 95% விழுக்காட்டில் இருந்தால், 104/65 mm Hg என்பதற்கு மேலான மதிப்பு உயர் ரத்த அழுத்தமாக கருதப்படும்.

குழந்தைகளிடம் நிலவும் மாறுப்பட்ட ரத்த அழுத்த நிலைகள் யாவை?

குழந்தைகளிடம் முதல் நிலையிலான அல்லது அவசியமான உயர் ரத்த அழுத்தம் இருக்கும். இதற்கென பின்னணி உடல் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அதேசமயம், சிறுநீரக மற்றும் இதய நோய்களுக்கான அறிகுறியாகவும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருக்கலாம்.

முன்பு, குழந்தைகளிடம் இருக்கும் அனைத்து உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளும் இரண்டாம் நிலையிலானவை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நடைபெற்றுவரும் பல ஆராய்ச்சிகளின் விளைவாக, முதல்நிலை அல்லது அவசியமான உயர் ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகள், இதுவரை பெரியவர்களிடம் மட்டுமே இருந்தவை.

குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள் யாவை?

உடல் பருமன், சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, தூக்கத்தின்போதான சுவாசப் பிரச்சினை உள்ளிட்டவை, குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள். ஒரு குழந்தையிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கிறதென்றால், அதற்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்கான உகந்த கரம்(hand) எது?

வலது கரம், ரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்கான சரியான உறுப்பாகும். இடது கையில் ரத்த அழுத்தத்தை சோதனை செய்தால், இதய நோய் அறிகுறியை கண்டறிவதில் சிக்கல் ஏற்படலாம். ஏனெனில், இடது கை அழுத்தம் குறைவாக இருக்கும்.

White- Coat உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஒரு குழந்தைக்கு, மருத்துவமனை அல்லது மருத்துவரின் கிளீனிக் ஆகிய இடங்களில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, அதேசமயம், வீட்டில் அவரின் ரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால், அந்த நிலைக்குப் பெயர் White- Coat Hypertension.

இந்தநிலை, மாறுபடும் மனநிலை அழுத்தம் காரணமாக ஏற்படுவதாகும். இந்த White- Coat Hypertension என்பது தீங்கு தரும் ஒன்றல்ல. எனவே, ஒரு குழந்தை White- Coat Hypertension சிக்கலைக் கொண்டிருந்தால், அதை நினைத்து பெற்றோர் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், அதனால் எந்த தீங்கும் ஏற்படாது.

உறவுகளின் இணைப்பை விரிவுபடுத்துவோம்.!



இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ பேர் தந்தை, தாய், சகோதரர், சகோதரி உறவைத் துறந்து, நட்பை இழந்து, சமுதாயத்தை மறந்து தனிமையாய் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். இவ்வாறு இருப்பவர்களில் பலர் வாழ்க்கை மீது வெறுப்படைந்து தவறான முடிவுகள் எடுக்கின்றனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மனிதன் மனிதனாக இல்லாமல் இருப்பதே முக்கியக் காரணம்.

தந்தை-பிள்ளை உறவு, சகோதரர்கள் உறவு, குடும்ப உறவு என்று உறவுகள் விரிந்து செல்கின்றன. மரபணுத் தொடர்புடைய இவை அனைத்தும் தற்காலத்தில் நன்றாக இருக்கின்றனவா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்றே

பதில் வரும். இவை தவிர, தொழில்முறை உறவுகளும் உள்ளன. ஆனால், இந்த உறவுகளும் இப்போது பணத்துக்காகவும் பரஸ்பர தேவையின் அடிப்படையிலும் மட்டுமே செயல்பட்டு வருவதே உண்மை.

முன்பெல்லாம் உறவுகளில் ஏதேனும் நல்ல காரியங்கள் நடந்தாலும், துக்க காரியங்கள் நடந்தாலும் வண்டி கட்டிக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் சென்ற காலம் உண்டு. ஆனால், இப்போது ஒருவர் காலமாகிவிட்ட தகவல் கிடைத்தால் “ஆர்ஐபி’ (ரெஸ்ட் இன் பீஸ்) என்று குறுந்தகவல் அனுப்புவதைப் பார்க்கிறோம். பிறந்த நாள் விழா குறித்த தகவல் கிடைத்தால் பலர் தேடிப்பிடித்து “பொம்மை’, “பூங்கொத்து’ படங்களை குறுந்தகவல் செய்தியில் இணைத்து வாழ்த்து அனுப்பிவிட்டு கடமையை முடித்துக் கொள்கின்றனர். இது தொழில்நுட்ப புரட்சியின் விளைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

உறவினர்கள், நண்பர்கள் பேசிக் கொள்வதும் சமீப காலமாக மிகவும் குறைந்து வருகிறது. உறவுகளும், நட்புகளும் இன்பம் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வது அரிதாகி வருகிறது. இதனால், உறவு, நட்பு வலுவிழந்து விடுகிறது. இது நாளடைவில் தொலைந்தும்விடும்.

தனி மரம் தோப்பாக முடியாது. மனிதனுக்கு உறவுகள் மிகவும் அவசியம். உற்றார், உறவினர்கள் இல்லாமல் வாழ்வு இல்லையே. அப்படிப்பட்ட உறவினர்களும், நண்பர்களும் உண்மையானவர்களாக இருந்தால்தானே மனிதனின் வாழ்வு செழுமை பெறும்.

உறவில் வாழும் போது நல்ல முன்மாதிரியாக இருப்பது மிகவும் அவசியம். நல்லதொரு முன்மாதிரியைக் கொண்டிருக்காததால்தானே இன்றைய இளைஞர்கள் விளையாட்டு, சின்னத்திரை, வெள்ளித்திரை நாயகர்கள், நாயகிகளை தங்களது முன்மாதிரியாகக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்குகிறார்கள்.

மேலும், உடன் வாழ்வோர்களின் உறவும் சரிவர இல்லாமல் போவதாலும், நல்ல முன்மாதிரிகள் கிடைக்காமல் இளைஞர்கள் திசை மாறிச் செல்ல நேரிடுகிறது. இதனால், ஒட்டு மொத்த சமுதாயமே ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது.

இன்பத்தை அனுபவிக்க எத்தனை, எத்தனையோ உறவுகள் கூடும். ஆனால், துன்பத்தை பகிர்ந்து கொள்வதற்கு எந்த உறவும் முன்வருவதில்லையே…! அண்ணன், தம்பி உறவுக்கு இலக்கணம் வடித்ததும், துன்பமான நேரத்தில் கை கொடுத்து உதவிய பக்தரை தம்பியாக்கியதும்தான் ராமாயணம் சொல்லும் பாடம். மாமனின் உறவுக்கு கோடிட்ட மகாபாரத்தின் கண்ணன் சொன்ன போதனையான “கீதை’ மனித குலத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தேசம் மீது பாசம் கொண்ட காந்தியை “தேசத் தந்தை’ என்றுதானே அழைக்கிறோம். நேசம் கொண்ட மாமனிதரை “நேரு மாமா’, அறிவுரை வழங்கிய முதாட்டியை “ஒüவை பாட்டி’ என்கிறோம். அன்புக்கு இலக்கணம் கொடுத்த மாதரசியை “அன்னை தெரசா’ என்றுதானே உலகம் அழைக்கிறது. அருளைப் போதித்துவரும் போதகர்களை “அப்பா’, “சகோதரன்’ என்றே சொல்கிறோம். பணிவிடை செய்யும் பெண்ணை “சகோதரி’ என்கிறோம். இவ்வாறுதான் கற்காலத்திலும், அண்மைக் காலங்களிலும் உறவுகள் விரிந்தன. மனித வாழ்வு சிறக்க, நாடு செழுமை பெற உறவுகள் அவசியமாகிறது.

எனவே, உரசல்களை ஒதுக்கிவைத்துவிட்டு, கோபத்தைக் குறைத்து, நாக்கை அடக்கி, பகைமை பாராட்டாமல், இனிதான வாழ்கைக்கு உத்தரவாதம் தருவதாக ஒவ்வொருவரும் சபதமேற்போம். உறவுகளின் இணைப்பை, தொடர்பை விரிவுபடுத்துவோம்.

Tuesday, 31 December 2013

``இன்பமே துன்பம்`` - இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!




   
இன்பமே துன்பம்:-

நாம் நினைப்பது நடக்கவில்லை. விரும்பியது கிடைக்கவில்லை; சொல்லியவைகளை மற்றவர்கள் செய்து முடிக்கவில்லை. அப்போது உண்டாகும் மனநிலை கோபம், ஏமாற்றம்தான். அதன் தொடர்ச்சியாய் துன்பம். விரும்பிய உணவைச் சாப்பிடுகிறோம். இன்பமாக உள்ளது. அளவு முறை தெரியாமல் சாப்பிட்டால் அஜீர்ணம். வயிற்றுவலி, மலச்சிக்கல் எனத் துன்பப்படுகிறோம். தட்ப வெப்ப நிலை மாறுகிறது! உடல் நலம் குறைகிறது; துன்பமடைகிறோம். மற்றவர்களது பேச்சும், செயலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத போது பெறும் மனநிலை துன்பம்.

மிக அரிதான ஒரு பொருளைத் தேடிப்பிடித்து, பெரும் விலை கொடுது வாங்கி உபயோகித்து வருவோம். அதுபோன்ற பொருள் திடீரென விலை குறைந்து விட்டால், அடடா நாம் அதிகம் கொடுத்து ஏமாந்து விட்டோமே அவசரப்பட்டு வாங்கிவிட்டோமே? எனப் பலவாறு எண்ணுவோம். வாங்கியபின் இதுவரை அதை உபயோகித்ததை மறந்துவிடுவோம். வைத்திருந்த பணம் அல்லது பொருள் நம்மிடம் வாங்கியவர்கள் அதைத் திருப்பித் தராவிட்டாலும் வருத்தப்பட்டு துன்பமடைகிறோம். பலவிதமான போட்டிகளில் கலந்து கொள்கிறோம். வெற்றி பெற்றால் இன்பம் அடைகிறோம். இல்லையென்றால் துன்பப்படுகிறோம்.

ஆராய்ந்து பார்த்தால் அளவுமுறை அதிகமானால் பெறும் உணர்வே துன்பம் என்று அறியலாம். அளவுக்குள் இருந்தால் இன்பம் சிறு உதாரணம் மூலம் பார்ப்போம். நியாயமான தேவைகளை நிறைவேற்றுமளவு பொருளாதார வசதியுள்ளது. அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி இன்பம் அடைகிறோம். அளவுக்கு மீறிய சொத்து அல்லது பொருளாதார வசதி உள்ளது என்றால், அவைகளைப் பாதுகாத்தல் ஒருபுறம்; பராமரித்தல் மறுபுறம் என சிரமப்படும் நிலை உண்டாகும். நியாயமான வழிகளில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.

பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்களில் விமானநிலைய விரிவாக்கத்தால் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றனர். வங்கியில் டெபாசிட் செய்தால், வரி செலுத்த வேண்டும் என்பதால், வீடுகளிலேயே பல இடங்களில் வைத்து பாதுகாத்தனர். வருமான வரித்துறையினர் சோதனையிட்டு, கண்டுபிடித்து, வரி வசூலித்து, மீதித் தொகையை எப்படி பாதுகாப்பதென ஆலோசனை கூறிய செய்தி நாளிதழ்களில் வந்தது. பணத்தை வீட்டில் வைத்து பாதுகாத்து துன்பமடைந்தனர். பணமும் இருந்தது. பயமும் இருந்தது. நடந்தது நடந்தது தான். ஒரு செயல் செய்கிறோம். அதனால் ஒரு பலன் கிடைக்கிறது. அது நாம் விரும்பியவாறு இருந்தால் மகிழ்கிறோம். இல்லாவிட்டால் வருத்தப்படுகிறோம். இதை நினைவில் கொண்டால் இனிவரும் காலங்களில் செய்யும் இது போன்ற செயல்களில் உஷாராக இருந்து நமக்கு எந்தவிதமான முடிவு வேண்டுமோ அதற்கேற்ப செயல்படுவோம். முன்னர் செய்த செயலையோ அதனால் பெற்றபலனையோ மாற்ற முடியாது. அதை ஒரு படிப்பினையாக கொள்ளலாம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள், நடந்ததை நினைத்து வருத்தப்பட்டே துன்பம் அடைகிறோம். சுயபச்சாதாபம், கழிவிரக்கம் எனப்பலவாறு இதைக் கூறலாம். இந்த மனநிலை நம் வாழ்க்கையில் தன்னம்பிக்கையைக் குறைப்பதோடு, நம்மையும் பலவீனமாக்கிவிடும். நடந்தவைகள், நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள், நல்லவையாக நடக்கட்டும். எனப் பெரியவர்கள் கூறியதை நினைவில கொள்ள வேண்டும், இல்லாவிட்டால, புலம்பல் மன்னர்களாகி விடுவோம்.

நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால், நிகழ்காலத்திலும் வீட்டில் உள்ளோரிடம் சுமூகமான உறவு இருக்காது; ஏதாவது குறை கண்டு எரிந்து விழுவோம். நல்ல கண்ணாடி என்றால் உருவத்தை உள்ளவாறு பிரதிபலிக்கும். தரமில்லாத கண்ணாடி எனில், கோணல் மாணலாக உருவத்தை பிரதிபலிக்கும். ஆக, நாம் நடந்ததை நினைத்து நீண்ட காலம் வருந்தினால் தரமில்லாத மனிதர்களாகிவிடுவோம்.

தரமுள்ள மனிதன்

இதற்கு ஏதேனும் அளவுகோல் உள்ளதா? ஆடு, மாடு போன்றவைகளைச் சந்தைகளில் வாங்குபவர்கள் ஒரு சில சோதனைகளை செய்து திருப்தியடைந்த பின், அதற்கேற்றவாறு விலை கூறி வாங்குவர். அதுபோல, நம் மனித வாழ்வில் ஒவ்வொருவரையும் எப்படித் தரம் பிடிப்பது? திருவள்ளுவர் கை கொடுக்கிறார்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.


எச்சம் என்பது நமது வாரிசுகளல்ல. நமக்குப் பின், அதாவது நமது மறைவுக்குப் பின் என்றும் கூறலாம். நம்மிடம் கூறுவதற்கு சங்கடப்பட்டு நாம் ஓரிடத்திலிருந்து அகன்றபின் நம்மைப் பற்றிப் புகழ்ந்தோ, பழித்தோ கூறுவது ஒவ்வொருவரைப் பற்றியும் பலரும் பலவிதமாகக் கணித்து வைத்திருப்பர்.

இவர் கஞ்சன், பரோபகாரி, நியாயமான நபர், அடாவடித்தனத்துக்கு பெயர் பெற்றவர். சோம்பேறி, சிடுமூஞ்சி, சுறுசுறுப்பானவர், நேரம் தவறாதவர், சொன்னதைச் செய்பவர். கறார் மனிதர் எனப்பல பெயர்களை ஒருவரே கூடப் பலரிடம் பெறுமளவு நடவடிக்கைகளை இருக்கும். ஆனாலும் நாம் அதிகம் தொடர்பு கொள்ளும் மனிதர்கள் யார்? நம் குடும்ப உறுப்பினர்களும உடன் வேலை பார்ப்பவர்களும்தானே! இவர்களிடம் நம் அணுகுமுறை, பழக்கம எப்படி உள்ளது என்பதுதான் முக்கியம்.

ஒவ்வொரு பொருளுக்கும் தரத்தை சோதனை செய்து ISI முத்திரை இடுகின்றனர். மனிதனின் தரத்துக்கு சோதனை உண்டா? உண்டு. இதோ தரத்துக்கான சில சோதனைகள்.

திட்டமிட்ட செயல்பாடுகள்
அன்பான அணுகுமுறை
மற்றவர்கட்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது
அனுசரித்து விட்டுக் கொடுப்பது
பிறர் மனம் புண்படாமல் பேசுதல்
பிறர் தன்னிடம் எப்படி இருக்க வேண்டும்
என எண்ணுகிறாரோ, அதே போல்
மற்றவர்களிடம இருப்பது

இதுபோல் பல கூறலாம்.

தேவை மாற்றம்
மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால், மிருக உணர்வுகளில் இருந்து மனித நேயத்தை உணரவே பெரியோர்கள் தோன்றி உபதேசிக்க வேண்டியிருந்தது என்பதை அறியலாம். அவர்கள் மனிதருள் மாணிக்கமாய் ஒளி வீசுகின்றனர். தம் சேவையில் என்றும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களது வாழ்க்கைமுறைகளைப் படித்துப் பார்த்தால், அவர்கள் அடைந்த துன்பங்கள், அவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகள் போன்றவைகள் தெரியவரும். இவ்வளவு துன்பங்களுக்கிடையிலும், எப்படி அவர்களால் சாதிக்க முடிந்தது என பிரமிப்போம். உடல் குறைபாடுகளுடன் சாதனை புரிந்த ஹெலன் கெல்லர், வறுமையிலும் சாதனை புரிந்த பெர்னாட்ஷா, தாமஸ் ஆல்வா எடிசன் எனப் பலரைக் கூறலாம். நம் வாழ்நாளில் பலரையும் பார்த்திருப்போம்.

எளிமையாக வாழ்ந்து, பொது சொத்துக்கு ஆசைப்படாமல் நல்லாட்சி செய்த கர்மவீரர் காமராஜர், கடும் உழைப்பால் முன்னேறிய G.D. நாயுடு, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பளித்து அகில உலக அளவில் தங்கள் உறபத்திப் பொருட்களை விநியோகிக்கும் சக்தி மசாலா துரைசாமி சாந்தி போன்ற பலரைக் கூறலாம்.

நமது ஒவ்வொரு எண்ணமும், பேச்சும் செயலும் நம்முள் உறைந்துள்ள இறைநிலையான உள்ளுணர் அறிவால் தரம் பிரித்து நமக்கு அறிவிக்கப்படுகின்றன. அதனை ஏற்று செயல்பட்டால் துன்பமே கிடையாது. ஆனால், குறுகிய நோக்கத்தில், தற்காலிக இன்பத்துக்காக, விரைவில் வசதிகளைப் பெருக்க வேண்டுமென இந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தி செயல்படுகிறோம். அதனால், பலர் உடனே இன்பமும் அடைவர்; ஆனால், அவை நீடித்த இன்பமல்ல. கடுமையான குளிரில் சிறு நெருப்பு கதகதப்பைத் தரும்; நெருப்பு அதிகரித்தால் வெப்பம் தாங்கமுடியாது; ஒரு தொலைவுக்கு அப்புறம் இருப்பதே பாதுகாப்பு. ஆனால், பணம், புகழ், புலன் இன்பம் இவற்றுக்கு நாம் எவ்விதமான தூரத்தையும் நிர்ணயிக்க மறந்து விடுகிறோம்.

தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினும் அஞ்சப்படும்; அதேபோல், பிறருக்கு துன்பம தரும் செயல்களை மறந்துகூட நினைக்கக்கூடாது. அப்படி எண்ணினாலே, எண்ணியவை அந்தத் துன்பமானது பிடித்துக்கொள்ளும் என பொய்யாமொழி மொழிந்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.

சில குறிப்புகள்

பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம்; முழுமையான தகவல் தெரியாமலேயே ஒரு செயலைச் செய்வது; அல்லது பிறருடன் பழகுவது. எனவே, எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும், அச்செயலைச் செய்து முடிப்பதற்குத் தேவையான தகவல்கள், இடையில் சந்தேகம் ஏற்பட்டால் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் போன்றவைகளை அறிந்தபின் செயல்பட்டால் நம் வாழ்க்கை துன்பமில்லாததாக அமையும்.

புதிய நபர்களுடன் பழகும்முன் நம் ஆழ் மனதில் அவர்களுடன் பழகலாமா, வேண்டாமா என ஒரு கேள்வியைப் போட்டு விடை பெற்றபின் பழக்கத்தை நட்பாக மாற்றுவது துன்பம் தராது. தேவையெனில் நம் நலனில் அக்கறையுள்ளவர்களுடன் கலந்து பேசி, கருத்தறிந்து முடிவு செய்யலாம்.

எல்லோரையும், எல்லா நிகழ்வுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை பெறவேண்டும். எந்தப் பொது நிகழ்வும் நமக்காக மட்டுமே நடப்பதில்லை. (உ-ம்) மழை, வீட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் தடை, மின்தடை, பஸ் ஓடாத நிலை, விலைவாசி உயர்வு போன்றவை. ஆனால், நம் வீட்டில் மட்டும் தடையென்றால், உடனே செயல்பட்டு, புகார் செய்து சரிசெய்ய வேண்டும். நம் வீட்டுக் குழாய் பழுதானால் நமக்கு மட்டும் குடிநீர் வரவில்லையென்றால், உடனே சரிசெய்ய வேண்டும். பொதுவாக மற்றவர்களை மாற்ற முடியாது. ஆனால், வாழ்க்கை முழுவதும் நம்முடன் இணைந்து பயணிப்போர்களை நமது மனமாற்றத்தால் நாம் விரும்பியவாறு மாற்றமுடியும். அதற்கு அடிப்படைத் தேவை நமது மாற்றமே. இவ்வாறு செயல்பட்டால் இனி, எஞ்சிய காலத்தில் வாழ்க்கையைத துன்பமில்லாமல் வாழ முடியும். இன்பம் பெற தேவையான வசதிகள், அதன் அளவு முறைகள் இயற்கை வழங்கிய வாய்ப்புகளை இனி காண்போம். வாழ்க வளமுடன்!

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!




1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

தூக்கமும் நீங்களும்...




உலகில் சரிபாதிப் பேர், நிம்மதியான உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இருட்டு- வெளிச்சம், இன்பம்- துன்பம், கஷ்டம்- நஷ்டம், நன்மை- தீமை, சந்தர்ப்பம்- சூழ்நிலை இவற்றோடு சம்பந்தப்பட்டது, தூக்கம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூக்கத்தை வரவழைக்க முடியாது.


அதேமாதிரி நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் வருகிற தூக்கத்தை நிறுத்தவும் முடியாது. தூக்கமின்மை, அதாவது போதிய நேரம் தூங்காததை மருத்துவ மொழியில் ‘இன்சோம்னியா’ என்று சொல்கிறார்கள். தூங்கப்போவதற்கு முன்பு தீவிரமான யோசனை, மூளையைக் கசக்கி சிந்திப்பது என்று சொல்வார்களே,


அந்த மாதிரி எண்ணங்கள் உருவாவது, உடலை அதிகமாக வருத்திக்கொள்வது, உடலுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, தூங்கும் இடம் ஒரு நல்ல சூழ்நிலையில் அமைந்திராமல் இருப்பது, தூங்கும் நேரம் ஒத்துப் போகாமல் இருப்பது, நாள்பட்ட உடல் நோய்கள், தாங்க முடியாத வலி, மன அழுத்தம்,


மன உளைச்சல் இவை அனைத்துமே தூக்கத்தைப் பாதிக்கும். தூக்கத்தை வரவழைக்க பலரும் பலவித முறைகளைக் கையாளுகிறார்கள். சிலர் யோகா செய்கிறார்கள். சிலர் தியானம் பண்ணுகிறார்கள். சிலர் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள்.


சிலர் மது அருந்துகிறார்கள். இப்படி பலவிதமான முறைகளைக் கையாண்டு தூக்கத்தை வரவழைக்கிறார்கள். தூக்கமின்மைக்கும் மதுவுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள்.


தூக்கம் வர வேண்டும் என்பதற்காகவே மதுபானம் அருந்த ஆரம்பித்தவர்கள் நிறைய பேர். ஆரம்பத்தில் மதுபானம் நல்ல தூக்கத்தைத் தருவதைப் போலத் தோன்றினாலும், நாளடைவில் அது தூக்கத்தைக் குலைக்கும். முன்னிரவில் தூக்கத்தை கொடுத்து பின்னிரவில் தூக்கத்தைக் கெடுத்துவிடும் தன்மையுடையது மது பானம்.


மேலும் கண்கள் சுற்றிக்கொண்டே தூங்கும் தூக்கத்தையும் (ஆர்.இ.எம். தூக்கம்) மது குறைத்து விடும். வயதானவர்களுக்கு ஒரு சிறிய சத்தம் கூட தூக்கத்தை கெடுத்துவிடும். அதற்குப் பிறகு தூக்கத்தை வரவழைக்க அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.


மறுபடியும் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகும். மனிதனுடைய பழக்கவழக்கங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் தூக்கத்தைப் பற்றிய பலவிதமான விஷயங்கள் நமக்குத் தெரியவருகின்றன. செயற்கை வெளிச்சங்கள் அதிகமில்லாத பழைய காலத்தில், சூரியன் மறைந்த கொஞ்ச நேரத்திலேயே தூங்கப் போய்விடுவார்கள்.


ஆனால் இரவில் நிறைய தடவை விழிப்பார்கள். மறுபடியும் தூங்குவார்கள். முன்னிரவில் ஆழ்ந்த தூக்கமும், பின்னிரவில் லேசான தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். பின் னிரவில் கண்கள் சுற்றும் (ரேபிட் ஐ மூவ்மெண்ட்) தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். தூங்குகிற நேரத்தில் உடம்பும், மூளையும் வேலை பார்ப்பதில்லை, இரண்டும் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம்.


இது சரியல்ல. நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், விளையாடிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும் நமது மூளை ‘பிசி’யாக வேலை பார்த்துக் கொண்டு தான் இருக்கும். நமக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும் நேரத்தில், மூளையும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்.


ஆனால் ஓரளவுதான் மூளை ஓய்வு எடுத்துக் கொள்கிறது. நாம் தூங்கும்போது மூளை அதுபாட்டுக்குச் செயல்பாட்டில் இருக்கிறது. அன்றைய பொழுதுக்கும், அடுத்தடுத்த நாட்களுக்கும் உங்களை தெம்பாக வைக்க, உங்களை தேக ஆரோக்கியத்தோடு உற்சாகமாக வைக்க, உடலுக்குள் என்னென்ன ரசாயன மாற்றங்கள் பண்ண வேண்டுமோ அதையெல்லாம் பண்ணி, உடம்பை மூளை தயாராக வைத்திருக்கிறது.

Monday, 30 December 2013

கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!



உறவை உருவாக்குவதாக இருக்கட்டும், உறவை கெடுப்பதாக இருக்கட்டும் சின்னச்சின்ன வார்த்தைகள் தான் காரணமாக இருக்கும். ஆக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியது அவசியமாகிறது.


அரட்டை அடிப்பது என்றால் நமக்குள் இயல்பாகவே ஆனந்தம் ஊற்றெடுக்கிறது.


தினமும் புதிய புதிய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பணி செய்யும் இடம், நடந்து செல்லும் வழி, பயணம் என ஒவ்வொரு சூழலிலும் பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அலுவலகங்களிலோ ஆணும், பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது உறவுகள் நீடிக்கவும், உறவுகள் பெருகவும் மென்மையான சின்னச்சின்ன பேச்சுக்கள் அவசியமாகின்றன.


நல்ல முறையில் படித்து, நாகரீகமாக உடை அணிந்து செல்வோர்கூட புதிய மனிதர்களிடம் பேசவும், பழகவும் கூச்சப் படுவது உண்டு. கவுரவக் குறைச்சலாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். பேச்சு கொடுப்பதும், பேசி ஞானத்தை, நட்பை வளர்த்துக் கொள்வதும் நிச்சயமாக ஒரு கலைதான்.


பணிச்சூழலோ, பொது இடமோ கனிவுடன் பேசுபவர்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். இதற்கு முதலில் கூச்சத்தை விட்டொழிக்க வேண்டும். புதிய மனிதர்களை சந்திப்பதாக இருந்தால், நான் இங்கு உங்களை அடிக்கடி பார்க்கிறேனே, என் பெயர்... என்று அறிமுகத்துடன் பேச்சைத் தொடங்கலாம். உங்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன், இன்று என்ன சிறப்பு? என்று ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில் பேசத்தொடங்கும் போது, நீங்கள் எந்தப் பிரிவில் வேலை செய்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், பயண நேரம் எவ்வளவு? என்று பேச்சுக் கொடுக்கலாம்.


குழுவாக இருக்கும்போது கூச்சப்பட்டு எதுவுமே பேசாமல் இருக்கக்கூடாது. சாதாரணமாக இருந்தாலும் ஒரு சில கேள்விகளை கேட்கலாம். அது மற்றவர்கள் உங்களை கவனிக்க வைக்கும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதுபோல உங்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தாலும், `ஒன்றுமில்லை' என்று ஒரு வார்த்தையில் பேச்சை முடித்துக் கொள்ளாதீர்கள்.


புதியவர்களுடன் பழக ஆரம்பிக்கும்போது நம்பிக்கை இல்லா தன்மையுடன், அல்லது வேண்டா வெறுப்பாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சிடுசிடுப்பாகவும், சில விஷயங்களில் பிடிவாதமும் காட்டுவது உங்களைப் பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கி விடக்கூடும். அது பின்னால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். மென்மையாகப் பேசுங்கள். நான் சொல்வது உண்மை என்று நம்ப வைக்கும் முயற்சியில் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டு இருக்காதீர்கள்.


உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ளாமலும், நீண்ட லெக்சரும் கொடுக்காமல் சுருக்கமாக தெளிவாக சொல்லுங்கள். அதாவது ஒருவர் உங்களிடம் `உங்கள் பொழுதுபோக்கு என்ன?' என்று கேட்டால், `நான் புத்தகங்கள் படிப்பேன்' என்று முடித்து விடாதீர்கள். `நான் புத்தகங்களை விரும்பி படிப்பேன். நாவல்கள், கவிதைகள், தலைவர்களின் சுயவரலாறுகளை எனக்கு மிகவும் பிடிக்கும்` என்று சொல்லுங்கள்.


அப்படி இருந்தால் தான் அவர் நீங்கள் தாகூரின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா, பாரதியின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா? என்பதுபோல தொடரவும், அவரும் உங்களைப் போன்ற விருப்பம் உடையவராக இருந்தால் உங்களுக்கிடையே நெருங்கிய நட்பு மலரவும் உறுதுணையாக இருக்கும்.


நிகோலஸ் போத்மேன் என்பவர் தன் நூலில், மக்களில் 90 சதவீதத்தினர் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பதில்லை. ஆனால் அவர்கள் செய்வதையும், எப்போது என்ன செய்வார்கள் என்பதையும் கவனிக்கிறார்கள்' என்கிறார். எனவே ஒருவரது உடல் அசைவுகளும், செய்கைகளும் பேச்சுத் திறமைக்கு மிக முக்கியமானது. நீங்கள் கருத்துச் செறிவுடன் பேசும்போது அங்க அசைவிலும் கவனம் செலுத்துங்கள்.


ஒருவருடன் பேசும்போது அவருக்கு பக்கவாட்டில் நின்றோ அமர்ந்தோ பேசுவதை தவிர்த்து விடுங்கள். நேருக்கு நேராக இருந்து கண்களைப் பார்த்தபடி பேசுங்கள். அப்போதுதான் உங்கள் பேச்சின் பிரதிபலனை உணர முடியும்.


பேச்சினை எப்போது நிறுத்த வேண்டும் என்பதுவும் பேச்சுத்திறமையில் குறிப்பிடத்தக்க விஷயம். வளவளவென்று பேசிக் கொண்டிருந்தால் கேட்பவருக்கு சலிப்பு வந்துவிடும். கேட்டுக் கொண்டிருப்பவர் உங்கள் பேச்சை விரும்புகிறாரா என்பதை சில விஷயங்களை வைத்து கணித்து விடலாம். `ஓ அப்படியா, நன்றாக இருக்கிறது? தொடர்ந்து சொல்லுங்கள்' என்றால் அவர் விருப்பத்துடன் கேட்கிறார் என்று பொருள். சரி..., அப்படியா..., சரி வேற... என்று கூறினால் அவருக்கு உங்கள் பேச்சில் விருப்பமில்லை என்று அர்த்தம்.


அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருப்பதும், கை, மூக்கு, தலையை சொரிந்து கொண்டு இருந்தாலும், நடக்கும்போது கால்களை தரையில் உரசியபடி நடந்து வந்தாலும் உங்கள் பேச்சில் நாட்டமில்லை என்று பொருள்.


எனவே கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!

முகேஷ் அம்பானி - வாழ்க்கை வரலாறு!




முகேஷ் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘முகேஷ் திருபாய் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார். ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானியின்’ மகன் ஆவார்.


‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷின் பங்களிப்பு முக்கியமானது. இவர், ஃபார்சூன் குளோபல் 500 பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘உலகின் பணக்கார விளையாட்டு உரிமையாளராக’ ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ், இவரது பெயரைப் பட்டியலில் வெளியிட்டது. மேலும் இவர், ஆசியாவின் இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகின் 19 வது பணக்கார மனிதராகவும் கணிக்கப்பட்டு, அப்பட்டியலில் இடம்பெற்றார்.



அதுமட்டுமல்லாமல், இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குனர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும், சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸின் இன்னொரு முகமாகவே தன்னை வெளிப்படுத்தி, உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்து, தற்பொழுது, இந்தியத் தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்ரவர்த்தியாக விளங்கும் முகேஷ் அம்பானி அவர்களின், வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஏப்ரல் 19, 1957

பிறப்பிடம்: மும்பை மாநிலம், இந்தியா

பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

முகேஷ் அம்பானி அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “மும்பையில்”, இந்தியாவின் ‘வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றாப்படும் திருபாய் அம்பானிக்கும் (இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்)’, கோகிலாபென் அம்பானிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு அனில் அம்பானி என்ற சகோதரரும், தீப்தி சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் ஜீனாகட் மாவட்டத்திலுள்ள சோர்வாட் ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்பக் கல்வியை மும்பையுள்ள அபே மொரிச்சா பள்ளியில் தொடங்கி இவர், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் துறையில் பி.இ பட்டம் பெற்றார். அதன் பிறகு, இரண்டு ஆண்டு எம்.பி.ஏ படிக்க அமெரிக்கா பயணமான முகேஷ் அவர்கள், கலிஃபோர்னியாவில் உள்ள இஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் ஒரு ஆண்டு மட்டுமே நிறைவடைந்த நிலையில் 1980 -இல் தன்னுடைய படிப்பைக் கைவிட்டு இந்தியா திரும்பினார்.


வணிகத்தில் ஈடுபடக் காரணம்


இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தியில் தனியார் துறைகளை ஊக்குவித்தது. அப்பொழுது இவருடைய தந்தை திருபாய் அம்பானி அவர்கள், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். மேலும், இவருடன் டாட்டா, பிர்லா என இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.


இப்படிப்பட்ட கடுமையான போட்டிக்கு மத்தியில் இவருடைய தந்தை திருபாய் அம்பானிக்கு அந்த உரிமம் வழங்கப்பட்டது. இதனால், தந்தையின் பொறுப்புகள் அதிகமானதால், தன்னுடைய எம்.பி.ஏ படிப்பை ஓராண்டோடு முடித்துக்கொண்டு, தந்தைக்கு உதவியாக ரிலையன்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் பொறுப்புகளை ஏற்றார்.


தொழில் வளர்ச்சியில் மேற்கொண்ட சாதனைகள்


ரிலையன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி எனத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1981 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பெட்ரோலிய சுத்திகரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு ஆராய்ச்சி என மேலும் பல தொழில் அமைப்புகளைத் தொடங்கி தன்னுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்தினார்.


அதுமட்டுமல்லாமல், உலகில் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களைக் கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளைக் கொண்ட ‘இன்ஃபோகாம் நிறுவனத்தை’ (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார். பின்னர், அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்தை ஜாம்நகரில் நிறுவி, அதன் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகப்படுத்தினார். மேலும், இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளின் நிர்வாக இயக்குனராகவும், அதனை வழிநடத்துபவராகவும் செயல்பட்டார்.


ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட இடைஞ்சல்கள், அரசியல் சவால்கள் எனப் பல தடைகளை சமாளித்து தன்னுடைய தந்தைக்கு பக்கபலமாக இருந்த இவர்,  தந்தை திருபாய் அம்பானியின் இறப்பிற்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானிதான் ஆளப்போகிறவர் என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில், அவருடைய சகோதரர் அனில் அம்பானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருடைய குடும்பம் இரண்டாகப் பிரிந்தது. இதனால், அம்பானியின் குடும்பச் சொத்துக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோகெமிக்கஸ் நிறுவனம் முகேஷிடமும், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானியிடமும் பிரித்துக்கொடுக்கப்படது.


தனிப்பட்ட வாழ்க்கை


முகேஷ் அம்பானி அவர்கள், நீதா அம்பானி என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இஷா என்ற மகளும், ஆனந்த் மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் மும்பையில் அண்டிலியா என்று பெயரிடப்பட்ட 27 மாடி கட்டிடம் கொண்ட மிகவும் விலையுயர்ந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மதிப்பு அமெரிக்க டாலரில் 2 பில்லியன்கள் ஆகும்.


விருதுகளும், மரியாதைகளும்


    2010 – ஆசியா பொதுநல ஸ்தாபன அமைப்பின் மூலம் பிரதான விருந்தில் ‘குளோபல் விஷன் விருது’.


    என்.டி.டி.வி (இந்தியா) மூலம் 2010 ஆம் ஆண்டின் ‘சிறந்த வர்த்தக தலைவர் விருது’.

    பைனான்சியல் குரோனிக்கிள் அமைப்பின் மூலம் 2010 ஆம் ஆண்டின் ‘தொழிலதிபர் விருது’.

    2010 – ஐ.எம்.சி அமைப்பின் மூலம் 2009 ஆம் ஆண்டிற்கான ‘ஜுரான் தர பதக்கம்’.

    2010 – பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக பள்ளித்தலைவர் பதக்கம்’.

    அமெரிக்க இந்திய வர்த்தக ஆலோசனை சபை மூலம் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் விருது’.

    குஜராத் அரசிடம் இருந்து 2007 ஆம் ஆண்டிற்கான ‘சித்திரலேகா நபர் விருது’.

 முகேஷ் அம்பானியின் தொழில் வளர்ச்சிக்கு முன்னால், இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானி’ என்னும் மிகப்பெரிய தொழில் பின்னணி இருந்தாலும், தன்னுடைய திறமையான வர்த்தகச் சிந்தனையால், லாபம் தரும் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவின் நவீனத் தொழில்நுட்பத் துறையின் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.


 2007 ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் அதிகரித்ததின் காரணமாக இவர், ‘உலக பணக்கார மனிதர்’ எனவும் அறியப்படுகிறார்.

Sunday, 29 December 2013

பாலூட்டும் புறா..?




தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?


DoveP-feed புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் இந்தப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகம். ஆனால் மாவுச் சத்தும் கால்சியமும் கிடையாது.


தாய்ப்புறா முட்டை இட்டதும் தாய், தந்தை என இரு புறாக்களுமே அடைகாக்கின்றன. குஞ்சுகள் வெளி வருவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பிருந்தே புறாக்களின் தொண்டைப் பையில் பால் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படிச் சுரக்கும் பாலை, புறாக்கள் தொண்டைப் பையிலிருந்து எதிர்க்களிப்பு செய்து தங்கள் வாய்க்குள் கொண்டு வருகின்றன. குஞ்சுகள் தங்கள் சிறிய அலகுகளை தாய் தந்தையின் அலகுக்குள் செலுத்தி இந்தப் பாலை உட்கொள்ளுகின்றன.


குஞ்சுப் புறாக்களுக்கு முதல் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரை இந்தப் பால் மட்டும்தான் உணவு. பால் சுரக்கும் தொண்டைப் பையானது சாதாரண நாட்களில் புறாக்கள் வேகமாக உட்கொள்ளும் தானியத்தைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்க உதவும் உறுப்பாகும். பால் கொடுக்கும் சமயத்தில் புறாக்கள் தானியம் உட்கொண்டால் பாலில் குஞ்சுகளால் ஜீரணிக்க முடியாத தானியம் கலக்க வாய்ப்புண்டு. அதனால் புறாக்கள் தாங்கள் பட்டினியாக இருந்து தங்களின் சிறிய குஞ்சுகளுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பாலூட்டுகின்றன. எப்பேர்ப்பட்ட தியாகம் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஈரப்படுத்தி மென்மைப்படுத்தப்பட்ட தானிய உணவு குஞ்சுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.


அதிபுத்திசாலியான புறா இனம், கண்ணாடியில் தங்கள் பிரதிபலிப்பைத் தெரிந்து கொள்ளும் (pass the mirror test) ஆற்றல் படைத்தவை மனிதர்களைத் தவிர குரங்கு, யானை, டால்ஃபின் போன்ற இன்னும் சில மிகக் குறைந்த உயிரினங்களுக்கே இந்த ஆற்றல் உண்டு. இதுபோல் இந்தப் புவியில் வாழும் தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாவற்றிலும் நமக்குத் தெரியாத பல்வகை அதிசய ஆற்றல்கள் உள்ளன. இவற்றை அறியும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். எல்லா உயிர் இனங்களையும் போற்றிப் பாதுகாக்கும் உணர்வை வளர்க்க வேண்டும். இந்தப் புவியானது, மனிதர்களாகிய நமக்கே சொந்தம் என்ற அகந்தை உணர்வு மழலைச் செல்வங்களிடம் தலைதூக்கமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.

Monday, 23 December 2013

உண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி.!


“கறுப்புப் பெட்டி” என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல்… பரிமாற்றங்களை இந்த கறுப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.

விமானம் எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்தாலும், அல்லது கடலில் விழுந்து மூழ்கினாலும், இந்த கறுப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும். அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. பிறகு அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறியலாம்.

இந்த கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும், அப்போது தான் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும். ஒரு விமானத்தில் மொத்தம் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கும். பெரிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் “பிளைட் டேட்டா ரெகார்டர்”. இது விமானம் பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விபரங்களை பதிவு செய்யும். சிறிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் “வாய்ஸ் ரெகார்டர்”. இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும்.

கறுப்புப் பெட்டியை 1953 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுப்பிடித்தார். 1934 ஆம் ஆண்டு இவரின் தந்தை விமான விபத்தினால் மறைந்தார். ஆனால் விபத்திற்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. இதனால் விமானங்கள் விபத்திற்குள்ளாகும் போது அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்று ஆராய்சியில் ஈடுபட்டு கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தார்.

கறுப்புப் பெட்டியின் உண்மையான நிறம் கருப்பு அல்ல “ஆரஞ்சு நிறம் ஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும்.

கறுப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிகா, டைட்டானியம், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான். விபத்து நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து “பீப்” சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது.

இது 2000 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும், 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது.

நாஸ்ட்ரடாமஸ் - இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்!




21 ஆம் நூற்றாண்டில் உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்! அதிலும் தென்னாட்டிலிருந்தே மிகச்சக்தி வாய்ந்த ஆட்சி அமையும்!


- நாஸ்ட்ரடாமஸ்(Nostradamus)

இவருடைய 500 ஆண்டுகளுக்கு முன் எழுதி வைக்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற தீர்க்க தரிசனம் நிறைவேறுமா?!

இவரைப் பற்றிச் சில தகவல்கள்.

நாஸ்ட்ரடாமஸ் ஒரு புரியாத புதிர் ( Nostradamus )..!


இந்தியர்களில் சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும், சோதிட நிபுணர்களும் வருங்காலத்தைக் கணித்து வைத்ததைப் போலவே மேல்நாட்டினரும் கணித்திருந்தனர்.

அவர்களில் மிகவும் புராதனமானவர் இம்ஹோட்டெப் (Imhotep). இவர் நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் தோன்றியவர். எகிப்தியப் பேரரசன் ஜோஸரின் மதிமந்திரி; பொறியியல் வல்லுனர்; மருத்துவ நிபுணர்; சோதிட ஞானி. இப்படிப்பட்ட பேரறிஞர்தான் அவர். பெரும்பெரும் கற்களைக் கொண்டு பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டும் முறையைக் கண்டுபிடித்தவர். தம்முடைய மருத்துவ ஆற்றலால் பெரும் வியாதிகளை நீக்கியவர். இறப்புக்குப் பின் மீண்டும் உயிர் பெறக்கூடிய ரகசியத்தை அறிந்தவர். இறந்தபின் உடலை பதனப்படுத்திப் பாதுக்காத்துவைக்கும் விதத்தைக் கண்டுபிடித்தவர். பிரமிடுகளும் அவற்றுள் வைக்கப்பட்ட மம்மி(Mummy) எனப்படும் சடலங்களும் இவருடைய ஆற்றலின் விளைவுகளே.

மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் 'மிஷெல் தெநாத்ருதாம்'(Michel de Notredame). ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள். வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதிவைத்தவற்றில் பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டிருக்கின்றன. சில நிகழ்ச்சிகளின் துவக்கம் ஏற்பட்டிருக்கிறது. சில நிகழ்ச்சிகள், சில வாரங்களிலோ சில மாதங்களிலோ உருவாகக்கூடும். தீராத நோய்களைத் தீர்த்தவர்.

யார் இந்த நாஸ்ட்ரடாமஸ்?

நாஸ்ட்ரடாமஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய ஜோதிட முறையை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை முன்னரே கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். அதனால் மக்களுக்கு அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது

 நாஸ்ட்ரடமஸ்நாளடைவில் ரசவாதம், மாந்த்ரீகம், இறந்தவர்களுடன் பேசுதல், உடலை விடுத்து வெளியே சென்று வருதல் போன்ற பல ஆற்றல்கள் கை வரப் பெற்றார். ஆனால் மதவாதிகள் எதிர்த்ததால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்குக் குடியேறினார். ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். நாளடைவில் தனது ஆரூடங்களினால் அவருக்கு புகழும் ஆதரவும் பெருகியது. மக்களிடையே செல்வாக்கு வளர்ந்தது.

சைத்தானின் சீடரா?

அதன்பின்னர் நாஸ்ட்ரடாமஸ் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். ஆனாலும்கூட அவரை சைத்தனின் சீடர் என்று கருதியவர்களும் பலர் இருந்தனர். மருத்துவர் என்ற ஹோதாவைவிட சோதிடர் என்ற முறையிலேயே பொன்னும் பொருளும் புகழும் பெற்றார்.

இன்னும் இவருடைய புத்தகத்தை படித்தால் நிறைய புரியாத புதிர்கள் நிறைய இருக்கும்

 கறுப்பா, வெள்ளையா?

ஒருமுறை ஒரு பெரிய பிரபுவின் வீட்ட்க்கு விருந்துக்குச் சென்றார். அவருடைய அரண்மனையின் பின்புறம் ஓரிடத்தில் இரண்டு பன்றிகள் இருந்தன. ஒன்று கறுப்பு; இன்னொன்று வெள்ளை. அவற்றைக் காட்டி, "இந்த இரண்டு பன்றிகளில் எதை நாம் இன்றிரவு விருந்தில் சாப்பிடப்போகிறோம்?", என்று அந்தப் பிரபு நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

 "கறுப்புப் பன்றியை நாம் சாப்பிடுவோம். வெள்ளைப் பன்றியை ஓநாய் சாப்பிட்டுவிடும்," என்றார் நாஸ்ட்ரடாமஸ்.

 "என்னுடைய அரண்மனை எல்லைக்குள் எங்கிருந்து ஐயா, ஓநாய் வரும்?" என்று எள்ளி நகையாடினார், பிரபு.

அதன் பிறகு நாஸ்ட்ரடாமஸுக்கே தெரியாமல் சமையற்காரரை அழைத்து அந்த வெள்ளைப் பன்றியைக் கொன்று சமைக்கச் சொல்லிவிட்டுப் போனார் அந்தப பிரபு.

அன்றிரவு விருந்தில் பன்றிக்கறி பரிமாறப்பட்டு உண்டுமுடிந்தபின், பிரபு மீண்டும் நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

 "நாம் சற்றுமுன்பு எந்தப் பன்றியைச் சாப்பிட்டோம்?"

 "கறுப்பு" என்று சற்றும் சளைக்காமல் கூறினார் நாஸ்ட்ரடாமஸ்.

உடனே அப்பிரபு, சமையற்காரரை அழைத்து, விருந்தினர் முன்னிலையில் விசாரித்தார்.

 "எந்தப் பன்றியைப் பரிமாறியிருக்கிறாய், என்று இவர்கள் எல்லாரிடமும் சொல்"

 "கறுப்புப்பன்றி"

பிரபு அதிர்ந்து போனார்.

 "வெள்ளைப் பன்றியை அல்லவா சமைக்கச் சொன்னேன்? என் கண் முன்னால்தானே அதைக் கொன்றாய்?"

 "ஆம்! பிரபோ. ஆனால் அடுப்பில் வைத்திருந்த பன்றியை உங்கள் வேட்டை நாய் கெளவி இழுத்துச்சென்று விட்டது. ஆகையால் வேறு வழியின்றி கறுப்புப் பன்றியைக் கொன்று சமைத்துப் பரிமாறினேன்", என்று கூறினார் சமையற்காரர்.

அந்தப் பிரபுவின் வேட்டைநாய் உண்மையிலேயே ஒரு வளர்ப்பு ஓநாய்க்குப் பிறந்தது.

நல்ல புகழின் உச்சியில் இருந்த நாஸ்ட்ரடாமஸ் கி.பி.1566-ஆம் ஆண்டு இறந்தார். அவரைப் புதைத்துவிட்டார்கள்.

மண்டை ஓட்டில் மது ஊற்றினான்!

நாஸ்ட்ரடாமஸான் இறப்புக்குப் பின்னர் அவருடைய மண்டையோட்டில் மதுவை ஊற்றி யார் அருந்துகிறார்களோ அவர்களுக்கு நாஸ்ட்ரடாமஸின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும் என்றும், ஆனால் அவ்வாறு செய்பவர்கள் உடனேயே இறந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது. நாஸ்ட்ரடாமஸ் இறந்து இருநூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1791-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் நள்ளிரவில் நாஸ்ட்ரடாமஸான் புதைகுழியைத் தோண்டி அவருடைய சவப்பெட்டியை மூன்றுபேர் திறந்தார்கள். அவர்கள் பிரெஞ்சுப் போர்வீரர்கள். அன்று அவர்கள் மிதமிஞ்சி குடிதிருந்தார்கள். போதை ஏறியநிலையில் அவர்கள் நாஸ்ட்ரடாமஸின் கல்லறையைத் தேடிச்சென்று திறந்தார்கள்.

அந்த சமயத்தில் பிரெஞ்சுப்புரட்சியின் தொடர்பாகக் கலவரம் நடந்து கொண்டிருந்தது.

சவப்பெட்டிக்குள் நாஸ்ட்ரடாமஸின் எலும்புக்கூடு இருந்தது. அதன் கழுத்தில் 'மே, 1791' என்று பொறிக்கப்பட்டிருந்த பித்தளைப்பட்டயம் ஒன்று விளங்கியது. நாஸ்ட்ரடாமஸை 225 ஆண்டுகளுக்கு முன்னர் அடக்கம் செய்யும்போது அந்தப் பட்டயம் அவருடைய கழுத்தில் மாட்டப்பட்டிருக்கவேண்டும்.

அம்மூவரில் ஒருவன் நாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து அதில் மதுவை ஊற்றிக் குடித்தான். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று அவனுடைய கழுத்தில் பாய்ந்தது. உடனே நாஸ்ட்ரடாமஸான் புதைகுழிக்குள்ளேயே அவன் விழுந்து மாண்டுபோனான்.

சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்த கலவரத்தில் யாரோ யாரையோ நோக்கிச் சுட்ட குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்துவிட்டது!

மற்ற இருவருக்கும் 'மே 1791' என்று பட்டயத்தில் எழுதியிருந்த காரணமும் அப்போதுதான் புலப்பட்டது. இன்ன ஆண்டு இன்ன மாதத்தில் தன்னுடைய புதைகுழியை யாராவது திறப்பார்கள் என்று நாஸ்ட்ரடாமஸுக்கு 225 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெரிந்திருந்திருக்கிறது. ஆகவேதான் தன்னுடைய கழுத்தில் அந்தப் பட்டயத்தைக் கட்டிக்கொண்டு இறந்திருக்கிறார்.

 "புதைகுழியை யார் திறக்கிறார்களோ, அவர்கள் உடனடியாக அதை மூடவில்லையென்றால் பெருங்கெடுதல் நேரிடும்" என்று அவருடைய தீர்க்கதரிசனங்களின் 907-ஆவது பாடலில் கூறியிருந்தார்.

அவருடைய புதைகுழியைத் திறந்தவர்களில் மற்றவர்களும் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது எதிரிகளால் சுடப்பட்டு இறந்தார்கள்.

Thursday, 12 December 2013

சடங்குகள் நியாயமானவை என்று நிரூபிக்க முடியாது - மகாத்மா காந்தியடிகள்!



யக்ஞம் என்பது அழகும் சக்தியும் நிறைந்த ஒரு சொல்லாகும். யக்ஞம் என்பதற்கு நேர் பொருள் வழிபாடு என்பதே. அதாவது தியாகம் என்பதுதான். எவ்விதத் தியாகமும், எவ்விதத் தொண்டும் யக்ஞம்தான். யக்ஞத்தினால் அதாவது யாகத்தினால் மனித வர்க்கமே வாழ்கின்றது.


ஹோமத் தீயில் நெய்யையும் மற்றப் பொருட்களையும் கொட்டுவதைக் காட்டிலும் யக்ஞத்திற்கு ஆழ்ந்த அர்த்தம் உண்டென்று உங்களுக்குக் கூற விரும்புகிறேன். மானிட வர்க்கத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்வதே யக்ஞம் ஆகும். என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆஹீதிகளுக்கு குறிப்பான அர்த்தம் உண்டு. தூய்மைப்படுத்தும் அக்னியில் நமது பலவீனங்களையும், வெறிக்குணங்களையும், குறுகிய புத்தியையும் எரித்து நாம் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். அப்போதுதான் நம் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்ப்பார்.


சாஸ்திரங்களில் விவரங்களாக்கிய எல்லா யக்ஞங்களையும் மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. உயிர்ப்பிக்க வேண்டாம். அப்பெயரில் நடக்கும் சில சடங்குகள் நியாயமானவை என்று நிரூபிக்க முடியாது. இன்று அச்சடங்குகளில் சிலவற்றிற்குக் கூறப்படும் பொருள் வேதகாலத்தில் எப்போதாவது கூறப்பட்டதா என்பது எனக்குச் சந்தேகமாகவே உள்ளது. அவற்றில் சில பகுத்தறிவு அல்லது தர்மம் எனும் சோதனைக்கு முன் நிற்க முடியாது. இடம், காலம் எவையாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் சமயத்தின் கொள்கைகள் என்றென்றும் நிலைத்திருப்பவை. ஆனால் அவற்றை அடிப்படையாகக் கொண்ட வழக்கங்கள், இடம், காலம் இவற்றிற்குகந்தவாறு மாறுகின்றன.

                                                                                                  
                                                                           -மகாத்மா காந்தியடிகள்

Wednesday, 11 December 2013

பழந்தமிழர்களின் விநோத தண்டனைகள்!



சங்க காலத் தமிழகத்திலும் அதற்குப் பின்னரும் விநோதமான தண்டனைகள் வழக்கத்தில் இருந்தன. அரசன், போரில் வெற்றி பெற்றால் தோல்வியுற்ற மன்னர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவது, அவன் மனைவியரின் கூந்தலை அறுத்துக் கயிறு திரிப்பது, தோல்வியடைந்த மன்னரின் திருமுடிகளை அல்லது மகுடங்களை உருக்கிக் காலடியில் பலகையாகப் போடுவது, தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத்தில் கழுதை பூட்டிய ஏரால் உழுவது, யவனர் போன்ற வெளிநாட்டினர் பிடிபட்டால் அவர்கள் தலையை மொட்டையடித்து நெய்யை ஊற்றி அவமதிப்பது, பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்று பொய் சொன்னவனை மரத்தில் கட்டிச் சாம்பல் பூசுவது, மாற்று மன்னர்களின் குழந்தைகளை யானையின் காலால் இடறச் செய்து கொல்வது, ஒற்றர்களுக்கு மரண தண்டனை அளிப்பது, கொலைத் தண்டனை கிடைத்தோருக்குச் செம்மாலைகளை அணிவிப்பது - இப்படி எத்தனையோ விசித்திரமான வழக்கங்களைக் காண முடிகிறது.


1. சிறுமிக்கு மரண தண்டனை


சங்க இலக்கியத்தில் மிகவும் கொடுமையான செய்தி, ஒரு சிறுமிக்கு மரண தண்டனை கொடுத்ததாகும். நன்னன் என்ற கொடுங்கோலன் ஆட்சியில் இது நடந்தது. இதனால் அவனைக் கண்டித்த பரணர் போன்ற புலவர்கள் அவன் பரம்பரையில் வந்த மன்னர்களைக் கூடப் பாட மறுத்து விட்டனர். பெண் கொலை புரிந்த நன்னன் மரபில் வந்த இளம் விச்சிக்கோ என்ற மன்னனைப் பாட மறுத்து விட்டார் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் (புறம் 151).

நன்னன் என்பவன் பூழி நாட்டையாண்ட (கேரளாவின் ஒரு பகுதி) ஒரு சிற்றரசன். நன்னனது தோட்டத்திலுள்ள மரத்திலிருந்து விழுந்த மாங்காய் ஒரு கால்வாயில் மிதந்து வந்தது. அதனை அங்கு நீராடச் சென்ற ஒரு பெண் எடுத்துத் தின்று விட்டாள். உடனே அப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன். இதை எதிர்த்த நல்லோர் அனைவரும் கொதித்து எழுந்தனர். அப்பெண்ணின் நிறைக்கு நிறை (துலாபாரம்) தங்கம் தருவதாகவும், 81 யானைகள் தருவதாகவும் பெண்ணின் தந்தை கெஞ்சிப் பார்த்தார். ஆனால் ஈவு இரக்கமற்ற நன்னன் அப்பெண்ணின் மரண தண்டனையை நிறைவேற்றினான். இதைப் பரணர் குறுந்தொகைப் பாடலில் (292) விரிவாக எடுத்துரைக்கிறார்.


2. எடைக்கு எடை தங்கம்


அரசனுக்குத் தீங்கிழைப்பவர் அவர்களுடைய நிறைக்குத் தங்கத்தால் உருவம் (பாவை) செய்து கொடுப்பது அக்கால மரபு. இதைக் குறுந்தொகையிலும் (பாடல் 292) பெருங்கதையிலும் காணலாம்.

2300 ஆண்டுகளுக்கு முன் வடமொழியில் நாடகம் எழுதிய பாஷை என்ற அறிஞன் 'தூத வாக்ய' என்ற அவனது நாடகத்தில் ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறான். பாண்டவர்க்காகக் கிருஷ்ணன் தூது வருகிறார் என்று அறிவிக்கப்பட்டவுடன், சபைக்குள் கிருஷ்ணன் நுழைகையில் எவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்யக் கூடாதென்றும் அப்படி எழுந்து நிற்போருக்கு 12 தங்கக் காசு அபராதம் என்றும் துரியோதனன் கூறுகிறான். ஆனால் கிருஷ்ணன் சபைக்குள் நுழையும் போது துரோணர், பீஷ்மர், விதுரன் போன்ற பெரியவர்களும் கூட அவர்களை அறியாமலே எழுந்து நிற்கின்றனர். துரியோதனனோ ஆசனத்திலிருந்து கீழே விழுகிறான்!! அரசன் கட்டளையை மீறும் அமைச்சருக்கு 12 பொற்காசு தண்டனை என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
   
3. பெண்கள் முடியில் கயிறு திரித்தல்


சங்க கால மன்னர்கள், அவர்களிடம் தோற்றுப் போன அரசனின் மனவியரை இழுத்து வந்து அவர்களுடய தலைமுடியைச் சிரைத்து அதிலிருந்து கயிறு திரித்து அக் கயிற்றால் பகையரசரின் யானையப் பிடித்து இழுத்து வந்தனர். நன்னன் என்ற கொடுங்கோலரசன் இப்படிச் செய்ததைப் பரணர் என்னும் புலவர் நற்றிணைப் பாடலில் (270) குறிப்பிட்டுக் கண்டித்துள்ளார்.

4. பாவங்களுக்குப் பரிகாரம் (கழுவாய்)

பசு மாட்டின் மடியினை அறுத்தவர்க்கும், பெண்களின் கருவைச் சிதைத்தவர்க்கும், பார்ப்பனர்களுக்குக் கொடுமை செய்தவர்களுக்கும் பரிகாரம் (கழுவாய்) உண்டு. ஆனால் செய்ந்நன்றி கொன்றவர்க்குக் கழுவாயே இல்லை என்று ஆலத்தூர்க் கிழார் (புறம் 34) என்ற புலவர் பாடுகிறார். இதே கருத்தை வால்மீகி ராமாயணத்திலும் பஞ்ச தந்திரக் கதைகளிலும் காண்கிறோம்.

இதிலிருந்து அக்காலத்தில் சில குற்றங்கள் இருந்ததையும் அதற்குப் பரிகாரமாகக் கடுமை குறைந்த தண்டனைகள் அளிக்கப்பட்டதையும் அறிகிறோம்.

புறம் 34-வது பாடலில் மூன்றாவது வரியில் பார்ப்பனர் (அந்தணர்கள்) என்ற சொல்லைச் சில புதிய பதிப்புக்களில் குரவர் (அறிஞர்/ஆசிரியர்) என்று திருத்தியுள்ளனர். இது சரியில்ல என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பசுவையும், பார்ப்பனரையும் அடுத்தடுத்துக் கூறுவது சங்க இலக்கிய மரபு. எட்டுத் தொகையிலும் பத்துப் பாட்டிலும் ஏராளமான இடங்களில் பசு-பார்ப்பனை என்ற சொற்றொடர் வருகிறது. இது வடமொழி இலக்கியங்களில் வரும் 'கோப்ராம்மணஸ்ய' என்ற சொற்றொடரின் மொழி பெயர்ப்பு. கண்ணகி மதுரை நகரைத் தீக்கிரையாக்கிய போது பசு, பெண்டிர், பார்ப்பனர் உள்ள பக்கம் எரியக் கூடாது என்று அக்கினி தேவனுக்குக் கட்டளையிடுகிறாள். ஞானசம்பந்தரும் வாழ்க அந்தணர், வானவர், ஆவினம் என்று பாடுகிறார்.


5. ஊரைத் தீக்கிரையாக்குதல்


பழந்தமிழர்கள் செய்த பெரிய தவறுகளில் ஒன்று பகையரசர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவதாகும். இதனால் வரலாற்றுத் தடயங்கள் ஏதுமின்றி, இன்று நாம் தவிக்கிறோம். சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் இப்படித் தீக்கிரையாக்கப்பட்டுப் பகையரசர்களின் ஊர்கள் பாழாய்ப் போனதையும் அவ்விடங்களில் ஆந்தையும் கூகையும் அலறுவதையும் படித்தறிகிறோம். தனி ஒருத்திக்கு இழைக்கப்பட்ட தீங்கிற்காக மதுரை நகரையே கண்ணகி தீக்கிரையாக்கியதைச் சிலப்பதிகாரம் அறிவிக்கிறது.



6. கழுதை ஏர் பூட்டி உழுவது


அதியமான் அஞ்சியின் மகன் பொருட்டெழினியைப் புகழ்ந்து பாடிய ஒளவையார் (புறம் 39) ''திறை கொடாத மன்னனின் மதில்களை வஞ்சனையின்றி அழித்துக் கழுதை பூட்டி உழுது வரகும் கொள்ளும் விதைக்கும் மன்னன்'' என்று கூறுகிறார். இவ்வாறு எதிரியின் நிலத்தைக் கழுதை கொண்டு உழுவதைக் கி.மு. முதல் நூற்றாண்டில் ஒரிஸ்ஸாவை ஆண்ட காரவேலன் என்ற கலிங்க மன்னனும் அவனுடய கல்வெட்டில் கூறுகிறான். ஆக இது பரவலாக இருந்த வழக்கம் என்று தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் நீர்ப்படக் காதையில் மருதப் பண்ணிலும் கழுதை பூட்டிய ஏரால் உழுது வரகு பயிரிடுவது  குறிப்பிடப்பட்டுள்ளது.


7. தோற்ற மன்னர்களைச் சிறையில் அடைப்பது


சோழன் செங்கணானோடு சேரமான் கணக்கால் இரும்பொறை போர் புரிந்தான். இதில் இரும்பொறை தோற்றான். உடனே இரும்பொறையைச் சிறைப் பிடித்துக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைத்தான். தண்ணீர் தா என்று கேட்ட போது காவலாளி தண்ணீர் கொண்டு வரத் தாமதித்ததால் சேரன் அவமானம் தாளாது உயிர் துறந்தான் (புறம் 74).


8. கண்களைப் பறித்துத் தண்டனை

பயறு விளைந்த ஒரு நிலத்தில் ஒரு பசு மேய்ந்ததற்காகப் பசுவின் சொந்தக்காரர் ஒருவரின் கண்களைப் பறித்தனர் கோசர்கள். ஊர் மன்றத்தில் இந்தக் கடும் தண்டனை பற்றிக் கோசர்கள் முடிவு செய்தனர். கண்களை இழந்த தந்தைக்கு நியாயம் கிடக்கும் வரை நோன்பு இருக்க அவனுடைய மகள் அன்னிமிஞிலி முடிவெடுத்தாள். உண்கலத்தில் உண்ண மாட்டேன் என்றும் புத்தாடைகளை உடுக்க மாட்டேன் என்றும் உறுதி எடுத்தாள். பின்னர் குதிரைப் படைத் தலைவனான திதியன் என்பவனிடம் சென்று கோசர்களைப் பழி வாங்கும் படி முறையிட்டாள். திதியனும் படையெடுத்துச் சென்று கோசர்களைக் கொன்றான். அன்னிமிஞிலி சினம் தணிந்து உடல் பூரித்து நின்றாள். இந்தச் செய்தியை (அகம் 262, 196) பரணர் நமக்கு அழகிய கவிதையில் தெரிவிக்கிறார். இதைப் படிக்கையில் மதுரையை எரித்த கண்ணகியும், துரியோதனின் தொடையைப் பிளந்த போது மகிழ்ந்த திரௌபதியும் நம் மனக்கண் முன் வருகின்றனர்.


9. பல்லைப் பிடுங்கிக் கதவில் புதைத்தது


அகநானூறு 211-வது பாடலில் புலவர் மாமூலனார் நமக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறார்:

யானை பிடிக்க வருமாறு அனைத்துப் படைத் தலைவர்களுக்கும் சோழ மன்னன் உத்தரவிடுகிறான். அரச நெறிகளை அறியாத எழினி என்பவன் மட்டும் வரவில்லை. உடனே மத்தி என்ற படைத் தலைவனைச் சோழன் அனுப்புகிறான். அவன் எழினியை எளிதில் கொன்று விடுகிறான். அத்தோடு நில்லாமல் எழினியின் பல்லை எடுத்து வந்து 'பெண்மணி வாயில்' என்னும் கோட்டை வாயிலில் கதவில் அழுத்தி வைக்கிறான். இதே புலவர் மாமூலனார் பாடல் 197-ல் கண்ணன் எழினி என்று ஒருவரைக் குறிப்பிடுகிறார். அவனுடய மகன் தான் பல்லைப் பறி கொடுத்த எழினியோ அல்லது இருவரும் ஒருவரா என்று தெரியவில்லை.

பல்லையும், கண்ணையும் பறித்த சம்பவங்களைப் பார்க்கையில் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற பாபிலோனிய மன்னன் ஹமுரபியின் நீதியை இவர்கள் பின்பற்றினர் போலும்!

புத்தரின் பல்லையும் முகம்மது நபியின் முடியையும் பாக்தாத் வழிபாட்டுத் தலங்களில் வைத்திருப்பதை நாம் அறிவோம். ஆனால் அவை அவர்களின் மீதுள்ள மதிப்பின்பால் செய்யப்பட்டவை. இங்கே எழினியை அவமதிப்பதற்காக மத்தி அப்படிச் செய்தான்.


10. தலை கொண்டு வந்தால் பரிசு


குமணனுக்கும் அவன் தம்பி இளங்குமணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, குமணனைக் காட்டிற்கு விரட்டினான் இளங்குமணன். அத்தோடு நில்லாமல் அவன் (குமணனின்) தலையைக் கொண்டு வருபவருக்கு பரிசு என்றும் இளங்குமணன் அறிவித்தான். பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் காட்டிற்குச் சென்று, குமணனைப் பாடினார். ஆனால் குமணன் கானகத்தில் வாழ்ந்ததால் அவர் கையில் பரிசு கொடுப்பதற்குப் பொருள் ஏதும் இல்லை. தன் இடுப்பிலிருந்த வாளை உருவிப் புலவர் கையில் கொடுத்தான். இதனால் என் தலையை வெட்டி எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு என் தம்பி பரிசு தருவான் என்று தன் இன்னுயிரையும் தியாகம் செய்ய முன்வந்தான் குமணன். ஆனால் புலவர் சாத்தனாரோ பெரும் அறிவாளி. கையில் வாளை வாங்கிக் கொண்டு ஒரு செவ்வாழை மரத்தை வெட்டி வாழைத் தண்டைத் துணியில் சுற்றிக் கொண்டு இளங்குமணனிடம் வந்தார். அவரைப் பார்த்த இளங்குமணன் அண்ணன் தலையோ எனத் திடுக்கிடவே புலவர் உண்மையைக் கூறி அவர்களை ஒன்று படுத்தினார்.

இதைப் புறநானூறு 165-ம் பாடலில் ஓரளவு அறிய முடிகிறது. ஏனைய கதையை உரை மூலமே அறிகிறோம். ஆனால் பகைவனின் தலைக்குப் பரிசுப் பணம் கொடுக்கும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்தது என்பது இதில் தெளிவாகிறது.


11. யானையின் காலால் இடறிக் கொல்லுதல்
தற்காலத்தில் தூக்குத் தண்டனை, மின்சார நாற்காலி, விஷ ஊசி போன்றவை மூலம் மரண தண்டனை அளிக்கப்படுகிறது. பழந்தமிழகத்தில் கழுவேற்றுதல், யானையின் காலால் தலையை இடறிக் கொல்லுதல், வாளால் வெட்டிக் கொல்லுதல், சுண்ணாம்புக் காளவாயில் போடுதல் முதலிய மரண தண்டனை முறைகள் இருந்தன. பகை மன்னனின் குழந்தைகளையும் கூட இப்படி இரையாக்க முயன்றதைப் புறநானூறு (46) மூலம் அறிகிறோம்.

மலையமான் மகன்களை யானையின் கால்களால் நசுக்கிக் கொல்லுமாறு சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உத்தரவிடுகிறான். அது கண்டு வருந்திய கோவூர்க்கிழார் என்ற புலவர், ''சோழ மன்னனே! ஒரு புறாவின் உடலைக் காப்பதற்காகத் தன்னையே பருந்துக்கு ஈந்த செம்பியன் (சிபிச் சக்கரவர்த்தி) பரம்பரையில் வந்தவன் நீ. இந்தச் சிறுவர்களோ கொல்ல வரும் யானையை, அது தீங்கு செய்யப் போகிறது என்பதைக் கூட உணராமல், அதைக் கண்டு மகிழும் இளம் வயதினர்.

பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் இவர்கள். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். இனி உன் விருப்பம்'' என்று கூறினார். இதைக் கேட்ட சோழ மன்னன் மனம் மாறி மலையமான் புதல்வர்களை விடுதலை செய்தான் என்பது வரலாறு. இவ்வாறு யானையை விட்டு ஆட்களைக் கொல்லுவதைப் பிற்கால வரலாற்றிலும் காண முடிகிறது.

அப்பரைக் கொல்வதற்காக ஏவப்பட்ட யானை, அவரை வணங்கிச் சென்றது.


12. ஒற்றர்களுக்கு மரண தண்டனை


பழந்தமிழகத்தில் ஒற்றர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதைக் கோவூர்க்கிழாரின் (புறம் 47) பாடல் மூலம் அறிய முடிகிறது. சோழ மன்னர்கள் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே சண்டை.

இந்நேரத்தில் நலங்கிள்ளியைப் பார்த்துவிட்டு இளம் தத்தன் என்ற புலவன் உறையூருக்கு வருகிறான். அவனை ஒற்றாட வந்தவன் என்று கருதிக் கொல்லும் படி உத்தரவிடுகிறான் நெடுங்கிள்ளி. உடனே கோவூர்க்கிழார் தலையிடுகிறார்.

''மன்னனே! பறவைகள் பழ மரத்தை நாடி ஓடுவது போலப் பரிசிலரைத் தேடி ஓடுவது புலவர் வாழ்க்கை. தாமும் உண்டு பிறரையும் உண்ணச் செய்வதேயன்றி எவருக்கும் தீங்கு செய்யாதார் இவர்கள்'' என்றார். இதைக் கேட்ட மன்னன், புலவர் இளம் தத்தனை விடுதலை செய்தான்.


13. பொய் சொன்ன கணவனுக்கு முகத்தில் கரி


ஒருவன் ஒரு பெண்ணைக் கள்ளத்தனமாகத் திருமணம் செய்துவிட்டுப் பின்னர் பிரிந்து சென்று விடுகிறான். அப்பெண் ஊர் மக்களிடம் முறையிடவே அவர்கள் உண்மையை விசாரித்துத் தவறிழைத்த ஆடவனை மரக்கிளையில் கட்டித் தொங்க விட்டு முகத்தில் சாம்பலைப் பூசுகின்றனர். இந்தச் செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.

முற்காலத்தில் தவறு செய்தவர்களைக் கழுதை மீது ஏற்றி வைத்து மொட்டையடித்துக் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி ஊர்வலம் விடும் வழக்கமும் இருந்தது.


14. மனு நீதிச் சோழன்

சோழ மன்னர் பரம்பரையில் தோன்றிய 2 மன்னர்களைத் தமிழ் இலக்கியம் அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசுகிறது. ஒருவர் புறாவுக்குத் தன் சதையை வெட்டிக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி. மற்றொருவர் ஒரு பசு மாட்டின் முறையீட்டின் பேரில் மகனையே தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன்.

மனுநீதிச் சோழனின் மகன் ஓட்டிச் சென்ற தேரானது ஒரு கன்றின் மீது ஏறி அதைக் கொன்று விட்டது. கன்றை இழந்த பசு உடனே மன்னனின் கோட்டை வாயிலுக்குச் சென்று அங்கு கட்டி விடப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியினை அடித்தது. பசுவின் துயரத்தை அறிந்த சோழ மன்னன், அமைச்சரை அழைத்து, கன்று இறந்தது போலவே தனது மகனையும் தேர்க்காலில் இட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டான்.

பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்னும் ஹமுராபியின் சட்டமே மனுவின் ஸ்மிருதியிலும் இருந்ததாகத் தமிழர் நம்பி, அந்தச் சோழனுக்கு மனுநீதிச் சோழன் என்று பெயரிட்டனர்.

''அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்'' என்று சிலப்பதிகாரமும் ''மகனை முறை செய்த மன்னவன்'' என்று மணிமேகலையும் மனுநீதிச் சோழனைப் புகழ்ந்து பேசுகின்றன.

இலங்கையின் வரலாற்றை விரிவாகக் கூறும் மகாவம்சம் என்ற நூலும் (21 வது அத்தியாயம்) மனுநீதிச் சோழன் கதையைக் குறிப்பிடுகிறது. ஏலாரா (ஏழாரன்) என்ற சோழ மன்னன் இலங்கையை 44 ஆண்டுகளுக்கு நீதி நெறி தவறாமல் ஆண்டான் என்றும் அப்பொழுது இது நடந்தது என்றும் மகாவம்சம் கூறுகிறது. அவன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்.



15. ஆராய்ச்சி மணி

தமிழ் மன்னர்கள் நீதிநெறி தவறாது ஆட்சி புரிந்தனர். ஆயினும் எங்கேனும் நீதி தவறினால் மன்னரைக் காண நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. கோட்டை வாயிலில் தொங்க விடப்பட்டுள்ள ஆராய்ச்சி மணியை எவரும் வந்து அடிக்கலாம். மன்னன் ஓடோடி வந்து நீதி வழங்குவான்.

கணவனை இழந்த கண்ணகி மதுரை நகரைத் தீக்கிரையாக்கிய பின்னரும், ஆத்திரமும் வருத்தமும் தணியாமல் நின்றாள். மதுரையின் காவல் தெய்வமாகிய மதுராபதி அவள் முன் தோன்றிப் பாண்டிய மன்னனின் செங்கோல் ஆட்சியை எடுத்துரைக்கிறாள்:

''மறை நா ஓசை அல்ல தியாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே''
(சிலப்பதிகாரம் கட்டுரைக் காதை)


பாண்டிய மன்னரின் ஆட்சியில் அந்தணர்கள் ஓதும் வேதத்தைத் தான் அவன் காதுகள் கேட்டுப் பழகியிருக்கின்றன. இது வரை அவன் ஆட்சியில் எவரும் ஆராய்ச்சி மணியை அடித்துக் கேட்டதேயில்லை என்று மதுராபதித் தெய்வம் கூறுகிறது.

நீதிநெறி தவறாத ஏலாரா (ஏழாரன்) என்ற சோழ மன்னனின் ஆட்சியைப் புகழும் மகாவம்சமும் இந்த ஆராய்ச்சி மணி பற்றிக் குறிப்பிடுகிறது (21-வது அத்தியாயம்)
   

16. பொற்கைப் பாண்டியன்



சிலப்பதிகாரம் பொற்கைப் பாண்டியன் என்ற மன்னரின் சுவையான கதை ஒன்றையும் கூறுகிறது (கட்டுரைக் காதை).

கீரந்தை என்ற பார்ப்பனன் ஒருவன் ஒருநாள் வேற்றூர் செல்ல நேரிட்டது. அப்போது பாண்டிய மன்னன் அவ்வீட்டைக் காவல் காத்தான். அப்போது ஒரு நாள் இரவு நேரத்தில் அரவம் கேட்கவே அந்த வீட்டின் கதவைப் பாண்டியன் தட்டினான். "பாண்டியன் காவல் இருப்பதால் ஒன்றும் நிகழா என்று கூறி என்னை விட்டுவிட்டுச் சென்று விட்டாரே என் கணவன்" என்று கீரந்தையின் மனைவி புலம்பினாள். மன்னன் இதைக் கேட்டுத் திகைத்து, எல்லார் வீட்டுக் கதவுகளையும் தட்டி விட்டுச் செல்வோம். அப்போது தான் இப்பெண் அஞ்சாமல் இருப்பாள் என்று கருதிப் பலர் வீடுகளின் கதவுகளையும் தட்டிவிட்டுச் செல்கிறான். மறு நாள் அந்தத் தெருவைச் சேர்ந்த அந்தணர்கள் அனைவரும் அரசனிடம் முறையிடவே அரசன் தானே அத்தவறைச் செய்தவன் என்று கூறித் தனது வாளால் தன் கையை வெட்டிக் கொள்கிறான். பின்னர் அரசவை மருத்துவர்கள் அவனுக்கு பொற்கையைப் பொருத்தியதால் பொற்கைப் பாண்டியன் (GOLDEN HAND) என்று பெயர் பெறுகிறான்.

எந்த உறுப்பைக் கொண்டு ஒருவன் தவறு இழைக்கிறானோ அந்த உறுப்பை வெட்டி நீதி வழங்குவது பழந்தமிழர் கண்ட முறை போலும்.

பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியிலும் (எனக்குத் தகைவன்றால்....) இந்தச் சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

   
17. நரைமுடி தரித்து நீதி வழங்கல்



பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் இன்றும் கூட நீதிபதிகள் நரைமுடி தரித்துத் தான் நீதி வழங்குகின்றனர். இந்த வழக்கத்தைக் கரிகால் சோழன் தான் துவக்கி வைத்தான் போலும்.

சோழ மன்னரின் தலைநகராக விளங்கிய உறையூரில் இருந்த அறங்கூறு அவையம் மிகவும் புகழ் பெற்றது. ஒருநாள் இரு முதியவர்கள் நீதி வேண்டிச் சோழனின் அரசவைக்கு வந்தனர். ஆனால் வழக்கைக் கேட்கவுள்ள கரிகாலனின் இளம் வயதைக் கண்டு இவரால் சரியான தீர்ப்புக் கூற முடியாதென எண்ணித் தயங்கினர். அவர்களுடய ஏமாற்றத்தை உணர்ந்த கரிகால் சோழன் அவர்களை மறுநாள் வரும்படிக் கூறி, அன்று ஒரு முதியவர் அவைநீதி வழங்குவார் என்றும் சொன்னான்.

மறு நாள் அவர்கள் அவைக்கு வந்த பொழுது கரிகாலனே நரைமுடி தரித்து முதியோர் போல வேடம் அணிந்து வந்து தீர்ப்புக் கூறினான். முதியோர் இருவரும் அந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இச் செய்தியைப் பொருநராற்றுப் படை, மணிமேகலை, பழமொழி ஆகிய நூல்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

   
   
18. யவனர் தலையில் எண்ணெய் தடவி அவமதித்தது



பதிற்றுப் பத்து என்னும் நூலில் குமட்டூர் கண்ணனார் பாடிய இரண்டாம் பத்து நமக்கு ஒரு புதிய செய்தியைத் தருகிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற மன்னன், இனிமையற்ற கடுஞ்சொற்களை உடைய யவனர்களைச் சிறைப்படுத்தி, அவர்கள் தலையில் நெய்யினை ஊற்றி, கைகளைப் பின்னால் கட்டி அவமதித்தான். பின்னர் அவர்களிடமிருந்த விலைமிக்க அணிகலன்களையும், உயர்ந்த வைரங்களையும் பெற்று அவர்களை விடுதலை செய்தான்.

மகாகவி பாரதியார் - பிறந்தநாள் -11 டிசம்பர்!




 காக்கைச் சிறகினிலே நந்தலாலா
 நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

 நல்லதோர் வீனை செய்து அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

 நெருங்கின பொருள் கைபட வேண்டும்
 மனதில் உறுதி வேண்டும்

 வட்ட கரிய விழியில் கண்ணம்மா
 வானக் கருனைக் கொள்

 இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு. அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். வைரகவி என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன. ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் தமிழ் இலக்கியம் உலகம் போற்றும் மகாகவி பாரதியார்.

அவருக்கு கவிதை என்ற வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ந்தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரி சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார். அவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் சுப்ரமணியன். சுப்பையா என அவரை செல்லமாக அழைத்தனர்.

சுப்பையாவுக்கு 5 வயதானபோது அவரது தாயார் இறந்து போனார் 2 ஆண்டுகள் கழித்து தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் சிறு வயதிலிருந்தே சுப்பையாவுக்கு மொழி மீது சிறந்த பற்றும் புலமையும் இருந்தது. 7 வயதிலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார் அவருக்கு 11 வயதானபோது அவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதி என்றானது. பாரதி தமிழும் கவிதையுமாக தமிழுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தந்தையோ தனது மகன் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என விரும்பி அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும் கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு சென்று கல்வி பயின்ற பாரதிக்கு படித்துக்கொண்டிருந்தபோதே செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் தந்தை. ஆனால் பின்னாளில் இது போன்ற பால்ய விவாகத்தை வன்மையாக கண்டித்தார் பாரதி. "பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிராமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்" என்று சபித்தார்.

நல்ல நிலையில் இருந்த பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலை நிறுவ விரும்பினார். அந்த ஆலைக்காக வெளிநாட்டிலிருந்து கப்பல்களில் வந்துகொண்டிருந்த இயந்திரங்களும் உதிரிப் பாகங்களும் கடலில் மூழ்கவே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அந்தக் கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப் பட்டு அவர் இறந்து போனார். அப்போது பாரதிக்கு வயது 16 தான் தந்தையின் மறைவிற்குப் பிறகு பாரதியின் குடும்பத்தில் வறுமை வந்து சேர்ந்தது.

பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் இந்தியையும் கற்றார். சமஸ்கிருத மொழியில் முதல் வகுப்பில் தேறினார் ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன் போன்றோரின் கவிதைகளில் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அதன்காரணமாக அவர் பின்னாளில் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரி கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி. அத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று துணிந்து சொன்னார்” பாரதி.

தீண்டாமையை அறவே வெறுத்தவர் பாரதி. அதற்கு தன்னையே முன் உதாரணமாக்கிக்கொண்டார் தீண்டாமை எனும் கொடுமைக்கு ஆளானோரிடம் அன்பு செலுத்தியதோடு அவர்களுக்கு இல்லாதது தனக்கு வேண்டியதில்லை என்று கூறி தான் அணிந்திருந்த பூ நூலை அறுத்தெரிந்தார. நான்கு ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு திரும்பிய பாரதி எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞாராக பணியாற்றினார்.

1903 ஆம் ஆண்டு 21 ஆவது வயதில் அவரது எழுத்துக்கள் முதன்முதலில் அச்சில் வந்தன. அதற்கு அடுத்த ஆண்டு மதுரை சேதுபதிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார். 1905 ஆம் ஆண்டு சுதந்திர வேட்கைக் காரணமாக அரசியலில் பிரவேசிக்கத் தொடங்கினார் பாரதி.

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. சகோதரி நிவேதிதாவை சந்தித்தப் பாரதி அவரையே தந்து ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். 1907 ஆண்டில் இந்தியா என்ற வார ஏட்டையும் பாலபாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். அப்போது பாரதியின் கவனம் இந்திய சுதந்திர போராட்டத்தின் பக்கம் திரும்பியது.

சுதந்திரத்தை வலியுறுத்தும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் பிரசுரித்தார், வ.உ.சிக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை கடுமையாக கண்டித்து கட்டுரைகள் எழுதினார். பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கவனம் பாரதி பக்கம் திரும்பியது. பாரதியை கைது செய்ய முனைந்தனர். அதனையறிந்த பாரதி தன் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஃப்ரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த பாண்டிச்சேரியில் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். அவ்வாறு வாழ்ந்தபோதுதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம், போன்ற புகழ்பெற்ற அமரக் கவிதைக் கவிதைகளை எழுதினார்.

அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டார் பாரதி பாண்டிச்சேரியில் இருந்தவாறே அவர் இந்தியா பத்திரிக்கையின் மூலம் தொடர்ந்து சுதந்திர வேட்கையைத் தூண்டிவிடும் கட்டுரையை எழுதினார். பாரதியின் குரலுக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது.

1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேரிய பாரதி தமிழ்நாட்டு எல்லையில் பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப் பட்டு 34 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். விடுதலையானதும் கடையம் எனும் ஊரில் குடியேறினார் பாரதி. அங்கு வறுமையில் வாடிய அவர் தனது சிரமத்தை விவரித்து எட்டயபுர மன்னருக்கு கடிதம் எழுதினார் ஆனால் பாரதிக்கு எந்த உதவியும் கிடைக்க வில்லை. பாரதியின் மனைவி செல்லம்மாள் வீட்டின் வறுமை தெரியாமல் கணவரைப் பராமரித்தார். அத்தகைய மனைவி வாய்த்ததால்தான் குடும்ப கவலையே இல்லாமல் தமிழ்ப்பணியிலும் பொதுவாழ்விலும் ஈடுபட முடிந்தது.

பாரதியால் வறுமையில் கூட பாரதியிடம் தன்மானமும் செருக்கும் இருந்தது பொதுவாக கொடுக்குற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும் ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் பாரதி ஒருமுறை அவரின் பணக்கார நண்பர் தட்டில் பணமும் பட்டாடையும் வைத்து பாரதியிடம் நீட்டினார் “தட்டை உமது கையிலேயே வைத்திரும்” என்று கம்பீரமாய் சொன்னபடி தமது கைகளால் அவற்றை எடுத்துக்கொண்டாராம் பாரதி.

கவிராஜன் என்பதால் அத்தனை மிடுக்கு என்று கூறுகிறது ஒரு குறிப்பு. மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் வயிறு நிறைய வேண்டும் என விரும்பியவர் பாரதி. அதனால் வீட்டில் செல்லம்மாள் வைத்திருந்த கொஞ்சம் அரிசியையும் காகங்களுக்கு வாரி இறைத்து விட்டு மதியம் உண்ண உணவு இல்லாமல் அவர் பசியோடு இருந்த நாட்களும் உண்டு.

“காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடியவராயிற்றே அவர் ஒருசமயம் நண்பர் ஒருவர் தமக்கு அளித்த பட்டாடையை வழியில் மேலாடையின்றி அவதிப்பட்ட ஓர் ஏழைக்கு போர்த்தி மகிழ்ந்தார் பாரதி. இப்படி தாம் வறுமையில் வாடியபோது கூட மற்றவர்களுக்கு வாரி வழங்கினார் அந்த மகாகவி ஆனால் அவரது வாழ்க்கையில் வறுமையைத் தந்த இயற்கை அவரது ஆயுளிலும் தாராளம் காட்ட மறுத்துவிட்டது.

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதி எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது அதனால் பலத்த காயமுற்று நோய்வாய்ப் பட்டார். சிறிது நாட்களில் வயிற்றுக் கடுப்பு நோயால் அவதியுற்று அதே ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி தனது 39 ஆவது வயதில் காலமானார் பாரதி.

இளம் வயதிலேயே அவர் மாண்டது அவலம் என்றால் அதை விட இன்னும் ஒரு சோகமான நிகழ்வை கவிராஜன் கதை’ என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் கவிஞர் வைரமுத்து. பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகச் சிலரே கலந்துகொண்டனர், அதனைப் குறிப்பிடும்போது:

இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே, மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ அவன உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே!

தமிழ் பாரதிக்கு கிடைத்த வரம் பாரதி தமிழுக்கு கிடைத்த வரம். பாரதி குழந்தைகளுக்காக பாடினார், பெண்களின் முன்னேற்றத்திற்காக் பாடினார், அறியாமை நீங்கவும் ஜாதி வெறியை சாடவும் நாடு விடுதலைப் பெறவும் பாடினார். அந்தத் தீர்க்கத்தரிசியின் பல கனவுகள் பலித்தன அவர் இன்னும் அதிகம் காலம் வாழ்ந்திருந்தால் தமிழ் இன்னும் வளம் பெற்றிருக்கும் தமிழனும் வளம் பெற்றிருப்பான்.

மனித நேயமும் பெண் முன்னேற்றமும் ஜாதி ஒழிப்பும் சமத்துவமும் வறுமை ஒழிப்பும்தான் பாரதியின் வாழ்க்கைக் கனவுகளாயின அந்தக் கனவுகள் மெய்ப்படும் என்ற தன்னம்பிக்கையை அவர் எப்போதுமே இழந்ததில்லை. நமக்கும்கூட அந்த விதி பொருந்தும் நாம் விரும்பும் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையோடு பயணித்தால் நாம் விரும்பும் வானம் நமக்கும் வசப்படும் என்பதுதான் பாரதியின் 39 ஆண்டுகால வாழ்க்கை நமக்கு சொல்லும் முக்கிய பாடம்..!

Monday, 9 December 2013

உங்கள் சந்தோஷம் மற்றவரின் அமைதி!



குடும்பத்தில் தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்.


"ஒரு குடும்பத்தின் மொத்த ஆரோக்கியம் மிகவும் நல்லபடியாய் அமைய, அந்த வீட்டு தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்" என்று லக்னோவில் உள்ள மனநல மருத்துவர் கூறியதாக ஒரு ஆங்கில மாத இதழில் வெளியாகி உள்ளது. இந்த மருத்துவரின் கூற்று எந்த அளவு உண்மை என்பது, ஒவ்வொரு வீட்டின் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும், மற்ற பெண்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.


திருமணத்திற்குத் தயாராகும் பெண்கள், மனதளவில் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நினைத்தே "டென்ஷனாகி" விடுகின்றனர். புகுந்த வீட்டில் கணவனின் மனநிலையை அறிந்து கொள்வது முதல் தொடங்கி, அனைவறிடமும் நன்மதிப்பு பெற வேண்டும் என்ற கவலை; தனது எண்ணங்களுக்கு அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற கவலை; இதில் சிக்கல் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்ற மன உளைச்சல்... இப்படி கவலைப்பட்டே தனது முதல் 10 ஆண்டு மணவாழ்க்கையை பாழடித்து விடும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.


இடையே ஒன்றோ, இரண்டோ குழந்தைகளும் பிறந்து விடுகின்றன. அவற்றை சரியான முறையில், நோய் நொடி இல்லாமல் வளர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, வீட்டில் உள்ள வேலைகளே முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொள்ள, வேலைக்குச் செல்லும் பெண்களின் பாடு, "கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு..." என்று மற்றவர் பரிதாபப்படும் நிலைதான்.


தினமும் ஒரே மாதிரியான பிரச்னைகள்; அவற்றை தனி ஒருத்தியாக தீர்க்க முடியாத சூழ்நிலை. தானாகவே முடிவெடுத்துச் செயல்படுத்த முடியாத நிலையில், வேதனைக்கு ஆளாகி, தன் சுய சிந்தனையை இழந்து, வீட்டிலும், அலுவலகத்திலும் தனது முழுத்திறனை வெளிக்காட்ட முடியாமல் தவியாய் தவிக்கிறாள்.


இப்படிப்பட்டவர்களிடம் நல்ல மனநிலையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் எங்கே எதிர்பார்ப்பது?

ஆனால், அது தான் முக்கியம். வேகமாக ஓடிப் போய்விட்ட 10 ஆண்டு கால இடைவெளியில், அவளையும் அறியாமல், அவளது உடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாய் தொலைத்து விட்டு, மெதுவாய் தன் நிலைக்கு திரும்ப வரும் நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதற்காகவே கவலைப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதிலிருந்தெல்லாம் மீள்வது எப்படி? எப்போதும் சந்தோஷமும், ஆரோக்கியமுமாய் இருப்பது எப்படி? உங்கள் முடிவுகள் மீது மற்றவர் கருத்துக்களைத் திணிக்க இடம் கொடுக்காதீர்கள்.


இந்த அறிவுரையுடன், வேறு சில விஷயங்களை நீங்கள் நனைவில் கொள்ள வேண்டும். பிறந்த வீட்டின் மரியாதையைக் காப்பாற்றுவது, புகுந்த வீட்டின் அன்பைப் பெறுதல், சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுதல், சிறந்த நிர்வாகத் திறனுடன் செயல்படுதல், குழந்தைப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் என்பதுவரை திருமணத்தின் போதே தீர்மானித்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வளரும்போது, மணவாழ்க்கையின் வேறு பரிணாமத்தைப் பார்க்கும் காலம் துவங்கி விடும்.


இந்த கால கட்டத்தில் அதிக பொறுப்புகள் சேரும். அவற்றோடு சேர்ந்து நம் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நாம் ஆரோக்கியத்தைக் கோட்டை விட்டால், மீளவே முடியாத நிலை ஏற்படும்.


ஆரோக்கியமான மனநிலையை வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியது:


* நன்றாக, திருப்தியாகச் சாப்பிடுங்கள். காலை உணவு தொடங்கி, இரவு சாப்பாடு வரை அனைத்தும் திருப்தியாய் அமைவதாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.


* சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியம்.


* மனதுக்கு தெம்பும், தைரியமும் அளிக்கும் நில்ல புத்தகங்களை, இதிகாசங்களை, பிரச்சனையிலிருந்து உங்களை மீட்டும் தன்னம்பிக்கைத் தொடர்கள் கொண்ட புத்தகங்களைப் படியுங்கள்.


* சுய பச்சாதாபத்தைத் தூக்கி எறிந்து விட்டு, உங்களை நம்பி உங்கள் குடும்பத்தினர் உள்ளனர் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.


* உங்கள் உணர்வுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை என்ற வீணான கற்பனைகளுக்கெல்லாம் மூட்டை கட்டிவிடுங்கள். ஏனெனில், உங்கள் முகத்தில் ஓடும் சந்தோஷம் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அமைதியாக வாழ வைக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Sunday, 8 December 2013

கண்டங்களின் பெயர்ச்சி....

எல்லோரும் உலக வரைப்படத்தைப் பார்த்திருப்பர். அதில் கண்டங்களின் வடிவையும் இடங்களையும் பார்த்திருப்பர். என்றாலும்கூட அவர்கள் இன்று காண்பது போலவே உலகம் என்றும் ஒரே அமைப்பில் காணப்பட்டதில்லை.


எழுபது ஆண்டுகளுக்கு முன்னால், அல்பிரட் வெக்கனர் என்னும் பெயரிய நிலநூல் அறிஞர் ஒருவர், இன்று காணப்படும் கண்டங்கள் இப்போது இருப்பதை விட மிக நெருக்கமாக இருந்ததாகக் கூறுகின்றார். அக்கண்டங்கள் இப்போது இருக்கும் இடங்களுக்கு மெல்ல மெல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பெயர்ந்து வந்தன. இங்குக் காணப்படும் வரைப்படங்கள் அவ்வரலாற்றைக் காட்டுகின்றன.


1.முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் நீங்கள் உலக வரைப்படத்தைப் பார்ப்பீர்கள் என்றால் அது ஏறக்குறைய இவ்வாறுதான் காட்சி அளித்திருக்கும். இக்கண்டங்கள் அனைத்தும் ஒரே மாபெரும் கண்டமாக ஒன்றொடன்று முற்றிலும் இணைந்திருந்தன. அதனைப் பெங்கியா என்றழைக்கின்றனர்.






2.பதினெட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரே கண்டமாக இருந்த பெங்கியா என்னும் இம்மாபெரும் கண்டமானது, வடக்குத் தெற்காக இரு பிரிவாகப் பிரிந்தது. வடக்குப் பிரிவு லோரேசியா என்று அழைக்கப்படுகிறது. தெற்குப் பிரிவு கோண்டுவானா என்றழைக்கப்பெறுகிறது.







3.பதிமூன்றரைக்கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய வட அமெரிக்கா ஐரோப்பாவினின்றும் ஆசியாவினின்றும் பெயரத்தொடங்கியது.






4.ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய கண்டங்கள் மேலும் தொலைவாகப் பெயர்ந்தன. அவற்றின் தனித் தோற்றங்களை உங்களால் அடையாளம் காண முடிகின்றதா? இக்காலகட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னமும் தெந்துருவத்துடன்( அண்டார்ட்டிக்கா ) இணைந்திருப்பதைக் கவனியுங்கள்






5.இந்த வரைப்படம் கண்டங்களின் இன்றைய இடங்களைக் காட்டுகின்றது. ஆனால் அவை இன்னமும் தொடர்ந்து பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன எனபதை நினைவில் கொள்ளுங்கள்






வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஓர் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீட்டர் இடைவெளியில் ஒன்றைவிட்டு ஒன்று பெயர்ந்து கொண்டுள்ளன. இன்றிலிருந்து எதிர்வரும் 5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கண்டங்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்து ஓர் உலக வரைப்படத்தை வரைந்து பாருங்களேன். இன்னும் 5 கோடி ஆண்டுகாலத்தில் அவை ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளியைக் கொண்டிருக்கும்.