யக்ஞம் என்பது அழகும் சக்தியும் நிறைந்த ஒரு சொல்லாகும். யக்ஞம் என்பதற்கு நேர் பொருள் வழிபாடு என்பதே. அதாவது தியாகம் என்பதுதான். எவ்விதத் தியாகமும், எவ்விதத் தொண்டும் யக்ஞம்தான். யக்ஞத்தினால் அதாவது யாகத்தினால் மனித வர்க்கமே வாழ்கின்றது.
ஹோமத் தீயில் நெய்யையும் மற்றப் பொருட்களையும் கொட்டுவதைக் காட்டிலும் யக்ஞத்திற்கு ஆழ்ந்த அர்த்தம் உண்டென்று உங்களுக்குக் கூற விரும்புகிறேன். மானிட வர்க்கத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்வதே யக்ஞம் ஆகும். என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆஹீதிகளுக்கு குறிப்பான அர்த்தம் உண்டு. தூய்மைப்படுத்தும் அக்னியில் நமது பலவீனங்களையும், வெறிக்குணங்களையும், குறுகிய புத்தியையும் எரித்து நாம் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். அப்போதுதான் நம் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்ப்பார்.
சாஸ்திரங்களில் விவரங்களாக்கிய எல்லா யக்ஞங்களையும் மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. உயிர்ப்பிக்க வேண்டாம். அப்பெயரில் நடக்கும் சில சடங்குகள் நியாயமானவை என்று நிரூபிக்க முடியாது. இன்று அச்சடங்குகளில் சிலவற்றிற்குக் கூறப்படும் பொருள் வேதகாலத்தில் எப்போதாவது கூறப்பட்டதா என்பது எனக்குச் சந்தேகமாகவே உள்ளது. அவற்றில் சில பகுத்தறிவு அல்லது தர்மம் எனும் சோதனைக்கு முன் நிற்க முடியாது. இடம், காலம் எவையாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் சமயத்தின் கொள்கைகள் என்றென்றும் நிலைத்திருப்பவை. ஆனால் அவற்றை அடிப்படையாகக் கொண்ட வழக்கங்கள், இடம், காலம் இவற்றிற்குகந்தவாறு மாறுகின்றன.
-மகாத்மா காந்தியடிகள்
No comments:
Post a Comment