Search This Blog

Monday, 2 December 2013

வேகமான சிந்தனை - குட்டிக்கதைகள்!


ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.


அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.


புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே


அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.


இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.


குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.


குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...


பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...


- வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கும் '

யார் புத்திசாலி! ! ! !


ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.

அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில்,சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார்.எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.

4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார்.ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது .

எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்.அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார்.அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர்,எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.

உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக்கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார்.
இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமையில் என்று கேட்டார்.

இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார்.

எப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...

பொருட்களை டெலிவரி செய்ய அமேசான் தளத்தின் புதிய தொழில்நுட்பம்!

 


ஒன்லைன் மூலமாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்துவரும்


பிரபலமான  நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ஆனது தற்போது புதிய



யுக்தி ஒன்றினை கையாள  முற்பட்டுள்ளது.


இதன்படி கொள்வனவு செய்யப்படும் பொருட்களை குறித்த
 

வாடிக்கையாளருக்கு டெலிவரி  செய்வதற்காக ஒக்டோ கொப்பர் (Octocopter)


எனும் சாதனத்தினை பயன்படுத்தவுள்ளது.



இச்சாதனமானது 8 விசிறிகளைக் கொண்டுள்ளதுடன்


 60 நிமிடங்களிற்கு தொடர்ச்சியாக பறக்கக்கூடியது.


இதனால் இந்த பறப்பு எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களிலேயே அமேசான்


தனது புதிய  சேவையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 மெகாபிக்சல் கமெராவுடன் அறிமுகமாகும் Samsung Galaxy Note 4

 


முதற்தர மொபைல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் சம்சுங்


 ஆனது Samsung Galaxy Note 4 சாதனத்தினை வடிவமைக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது.


20 மெகாபிக்சல்களை உடைய கமெராவினை உள்ளடக்கியதாக இது வடிவமைக்கப்படுகின்றது.


இதேவேளை முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Note 3


ஆனது 13 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும்,


எதிர்வரும் பெப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள Samsung Galaxy S5


ஆனது 16 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் கொண்டுள்ளன.

கேழ்வரகு தோசை - சமையல்!

 

 தேவையானவை:


 கேழ்வரகு மாவு - 1 கப்,

ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப்,

உப்பு - தேவைக்கேற்ப,

சின்ன வெங்காயம் - 15,

பச்சை மிளகாய் - 2,

சீரகம் - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:


கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்).


 வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும்.


மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும்


. இதற்கு காரச் சட்னி ஏற்ற ஜோடி.

அமைதியான மனம் பெற இதோ சில வழி முறைகள் ...

கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்

பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவயே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம்.


மறக்கவும்... மன்னிக்கவும்...

இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள்.


பாராட்டுக்காக ஏங்காதீர்கள்

உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்டது. அவர்கள் எந்த காரியமும் அன்றி மற்றவர்களை புகழ மாட்டார்கள். இன்று உங்களால் ஏதேனும் ஆக வேண்டுமென்றால் உங்களை போற்றுபவர்கள், நாளை உங்களை கண்டுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் அதிகாரத்தில் இல்லையென்றல் உங்கள் முந்தைய சாதனைகளை மறந்து உங்களிடம் குறை கூறுவார்கள். இதற்காக நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?. நீங்கள் வருத்தப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் பாராட்டு ஈடானதல்ல. உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்யுங்கள். அதற்கான பலன் உங்களைத் தேடி வரும்.


பொறாமைப்படாதீர்கள்

நாம் எல்லோருக்குமே பொறாமை எந்தளவுக்கு மனநிம்மதியை சீரழிக்கும் என்று தெரியும். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் பதவி உயர்வு உங்களுக்கு வராமல் உங்கள் நண்பர்களுக்கு செல்லலாம். பல வருடங்களாக போராடியும் தொழிலில் நீங்கள் அடையாத வெற்றி புதியதாக தொழில் தொடங்கியோருக்கு கிடைக்கலாம். அதற்காக அவர்கள் மேல் பொறாமைப் படலாமா? கூடாது. ஒவ்வொருவருமே வாழ்க்கையில் அவர்க்களுக்கான நிலையை அடைவார்கள். மற்றவரை பொறாமைப் பட்டு வாழ்வில் எதுவும் ஆக போவதில்லை, உங்கள் மன நிம்மதியை இழப்பதை தவிர.


சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுங்கள்

தன்னந்தனியாக நின்று சூழ்நிலையை மாற்ற நினைபீர்களிலானால் நீங்கள் தோற்ப்பதர்க்கான வாய்ப்புகளே அதிகம். அதற்கு பதிலாக நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறவேண்டும். அவ்வாறு மாறுவீர்களானால் சுற்று வட்டாரம் உங்களை ஏற்று, உங்களுடன் ஒன்றி, உங்களுக்கு ஏற்றவாறு மாற தொடங்கும்.

தவிர்க்க முடியாத காயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

இது துரதிஷ்ட்டகரமான நிலைகளை சாதகமாக்கி கொள்ள உதவும் வழியாகும். நமது வாழ்நாளில் நாம் பல்வேறு வகையான சங்கடங்களை, வலிகளை, எரிச்சல்களை, விபத்துக்களை எதிர்க்கொள்ள நேரிடலாம். இவ்வாறான, நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலைகளில், அவற்றுடன் வாழ கற்று கொள்ள வேண்டும். விதியின் திட்டங்களை சில நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதன் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், நம்மால் எந்த சூழலையும் எதிர் கொள்ளக்கூடிய பொறுமையையும், மனவலிமையையும், மன ஊறுதியையும் பெறலாம்.


செய்ய முடிவதையே செய்யுங்கள்

இது எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது. பெரும்பாலான சமயங்களில் நாம் நம்மால் செய்ய முடிவதற்கு அதிகமான பொறுப்புகளை கவுரவத்துக்காக ஏற்று கொள்ள முயலுவோம். முதலில் நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது நம்மால் முடியும், எது நம்மால் முடியாது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான சுமையை ஏற்றுக்கொண்டு பின்பு ஏன் வருத்தப்பட வேண்டும்?. நம்முடைய வெளியுலக நடவடிக்கைக்களை அதிகரித்து கொண்டு நம்மால் உள்ளுக்குள் மன அமைதியை பெற முடியாது. நாம் நமது இயந்திரமயமான வேலை பளுவை குறைத்து கொண்டு, தினமும் சில நேரங்களை பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றில் செலவிட வேண்டும். இது நம்முடைய ஓய்வற்ற எண்ணவோட்டத்தை குறைக்கும்.


தினமும் தியானிங்கள்

தியானம் மனதை சாந்தப்படுத்தி உங்களை தொந்தரவு செய்யும் எண்ணங்களிலிருந்து விடுதலை செய்யும். இதுவே மன அமைதியின் உட்சநிலையை அடைய உதவும். முயற்சி செய்து இதன் பலனை அடையுங்கள். தினமும் அரை மணி நேரம் முழுமையாக தியானம் செய்தால், மீதி இருப்பத்தி மூன்றரை மணி நேரமும் அமைதியை உணரலாம். தியானத்தை நேரத்தை வீணாக்கும் ஒன்றாக நினைக்காமல் அதை தினந்தோறும் செய்து வந்தால், அது அன்றாட வேலைகளில் நமது செயல் திறனை அதிகரித்து வேலைகளை சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய உதவும்.


மனதை இருட்டறையாக்கதீர்கள்

நமது மனம் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் அதில் கெட்ட எண்ணங்கள் புகும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் நல்ல விஷயங்களில் நமது மனதை ஈடுப்படுத்த வேண்டும். நமக்கேற்ற நமது விருப்பத்திற்கேற்ற பொழுதுபோக்கும் காரியங்களில் நேரத்தை செலவிடலாம். நமக்கு பணம் முக்கியமா அல்லது மன அமைதி முக்கியமா என்று முடிவு எடுக்க வேண்டும். சமுக சேவை, இறை சேவை போன்றவை நமக்கு செல்வத்தை கொடுக்காது. ஆனால் மன நிறைவையும் திருப்தியும் கொடுக்கும். உடல்ரீதியான் ஓய்வெடுக்கும் போதும் ஆரோக்கியமான விஷயங்களை படித்தல், கடவுள் நாமத்தை உச்சரித்தல் போன்றவற்றை செய்யலாம்.

காரியத்தை தள்ளிப்போட்டு பின்பு வருந்தாதீர்கள்


இதை செய்யலாமா செய்யக்கூடாதா என்று தேவை இல்லாமல் வீண் விவாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை தவிர்க்கவேண்டும். வாழ்க்கையில் யாராலும் எதிர்காலத்தை சரியாக கணித்து முழுமையான திட்டத்துடன் வாழ முடியாது. நம்மிடம் உள்ள நேரத்திற்கு ஏற்றாற்போல் திட்டமிட வேண்டும். நாம் நமது தப்புகளிலிருந்து பாடம் கற்று கொள்ளலாம். அடுத்தமுறை அது போன்ற காரியங்களில் வெற்றி கொள்ளலாம். இந்த வேலையை நாம் செய்யவில்லை என்றோ இந்த வேலையை நாம் சரியாக செய்யவில்லை என்றோ வருத்தப்பட்டு ஒன்றும் ஆக போவதில்லை. கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டுமே ஒழிய வருத்தப்பட கூடாது.

அழகு என்ற வார்த்தைக்குதான் எத்தனை வார்த்தைகள் தமிழில்!

 


–அழகு   – அணங்கு, அணி, அந்தம், அபிராமம், அமலம், அம்,  அம்மை, அலரி,


- இராமம், இல்லிதம், இலாவண்ணியம், எழில், ஏர், ஐ, ஒண்மை, ஒப்பு,


- கவின், களை, காந்தி, காமர், காரிகை, குழகு, கொம்மை, கோலம்,


- சந்தம், சவி, சாயல், சித்திரம்,சீர், சுந்தரம், செவ்வி, செம்மை, சேடு,


- சொக்கு, சோபம், செளமியம், தகை, தகைமை, தளிமம், தென், தேசிகம்,


- தையல், தோட்டி, தோல், நலம், நல்லி, நன்கு, நோக்கம், நோக்கு,


- பதம், பத்திரம், பந்தம், பந்துரம்,  பாங்கு, பூ, பை, பொற்பு, பொன், மஞ்சு,


- மஞ்சுளம், மணி, மதன், மயம், மனோகரம், மனோக்கியம், மாண்பு,


- மாதர், மாமை மாழை, முருகு, யாணர், யெவளனம், வகுப்பு, வடிவு,


- வண்மை, வளம், வனப்பு, வாகு, வாமம், விடங்கம், அன்றியும்


- பேரழகின் பெயர அலங்காரம், கட்டழகு, காமர், சித்திரம், விசித்திரம்


- ஆரியம்

தமிழின் தனிச்சிறப்பு!

 


பூப் பறித்தல், 


பூக் கிள்ளுதல்,


 பூக் கொய்தல்

என்ற பல சொற்கள் பழக்கத்தில் இருப்பினும்,

ஒவ்வொன்றும் ஒரு தனிப் பொருளைப் பெற்றுள்ளது.


ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப்

பூப்பறித்தல் என்று கூறுவர்.


தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை

எடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர்.



மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும்

கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல்

என்று கூறுவர்.

குளிர்காலங்களில் ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!



நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நலத்திக்கும் நாம் ஊட்டச்சத்து நிரம்பிய உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும். ஒரு நாளிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நாம் உட்கொள்ளும் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால், நமக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் வியாதிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
குளிர்காலத்தின் வருகையானது நமது உடலில் உள்ள வலிமையான நோய்எதிர்ப்பு மண்டலம் எதிர்கொள்ளும் ஏராளமான நோய்களையும் வியாதிகளையும் வரவழைக்கின்றது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இவை இரண்டும் நாம் குளிர்காலங்களில் எதிர்கொள்ளும் இடர்மிகுந்த நோய்களாகும்.

இவை குளிர்மாதங்களில் நிலவி வரும் குளிர்ந்த வானிலையின் காரணமாக தடுபற்று வலிமை மிகுந்ததாக செயல்படும். நமது உடலில் உள்ள நோய்எதிர்ப்பு மண்டலமானது நோய்களை உருவாக்கும் இந்த கூறுகளை எதிர்த்து செயல்படுவதற்கு காரணமாக இருகின்றது.


குளிர்காலங்களில் வரும் ஜலதோஷம், குளிர்கால காய்ச்சல் போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதற்கு நீங்கள் வெட்பமான நிலை, போதுமான நீர் சேர்க்கை மற்றும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும். போதுமான தூக்கத்தோடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான டயட்டை மேற்கொண்டு நோய்எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும். இது நமது உடலில் நுழைந்து நோய்களை உருவாக்கும் கூறுகளிடம் இருந்து நம்மை தற்காக்க தயாராகும். குளிர்காலங்களில் ஏற்படும் காய்ச்சல்களை எதிர்ப்பதற்கு உதவும் நோய்எதிர்ப்பு அதிகரிக்கும் உணவுகள் ஏராளமானவை. உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

வைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் ஜிங்க் போன்ற தாதுபொருட்கள் நிறைந்த உணவு வகைகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவி புரியும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, நூல்கோல், பேரிக்காய், திராட்சை, ஆரஞ்சு, முட்டைக்கோஸ், மணி மிளகு, வெண்ணெய் பழம், ஆப்பிள்கள் மற்றும் வாழைப்பழங்கள் ஆகிய காய்கறிகளும் பழங்களும் நோய்எதிர்ப்பு சக்திக்கு சிறந்ததாகும். உங்கள் நோய்எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த இந்த காய்கறிகளும் பழங்களும் உங்கள் டயட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதோ குளிர்காலத்தில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் சில.

ப்ராக்கோலி

 ப்ராக்கோலியில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற சத்துக்களோடு ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர பாதுகாப்பு பொருட்களும் அதிக அளவில் உள்ளதால் இது குளிர்காலங்களில் வரும் நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.

கேரட்

 கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ நமது கல்லீரலில் உள்ள நச்சுபொருட்களை நீக்கி நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்யும். இவற்றில் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்து செயல்படும் தன்மை நிறைந்துள்ளது.

ஆப்பிள்

 குளிர்காலங்களில் ஆப்பிள்களிடம் இருந்து அதிக ஊட்டச்சத்து பலன்களை பெறலாம். இது அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இது தரும் அதிக நார்ச்சத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் குளிர்காலங்களில் பரவிவரும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களை எதிர்த்து செயல்பட்டு உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

கிவி பழம்

 கிவி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு கிவி பழத்தில் உள்ள சத்து ஒரு நபருக்கு ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் வைட்டமின் சி சத்தை அளிக்கக்கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் சி சத்து குளிர்காலங்களில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.

கிரீன் டீ

 அதிக சுகாதார பலன்களை கொண்ட கிரீன் டீயை போன்ற அமுதம் வேறுஎதுவும் இல்லை. இது உங்கள் உடலில் உள்ள நச்சுபொருட்களை நீக்கி உங்கள் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுவடையசெய்யும். இதில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.

ஜிங்க் உணவுகள்

 ஜிங்க் உட்கொள்ளுதலை அதிகப்படுத்த உங்கள் உணவில் மாமிச வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு அன்றாடம் 8 முதல் 12 மில்லிகிராம் ஜிங்க் தேவைப்படுகின்றது. இதில் பாதி அளவு சிறிதளவு பீப் அல்லது சிக்கன் போன்ற இறைச்சி வகைகளில் உள்ளது.

கடல் சிப்பிகள்

 கடல் சிப்பிகளில் அதிக அளவில் ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. ஒரு சிப்பியில் நமக்கு அன்றாடம் தேவைப்படும் அளவிற்கு ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. நோயை எதிர்க்கும் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவுகின்றது ஜிங்க்.

தேங்காய் எண்ணெய்


 தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ள லாரிக் அமிலம் தொற்றுநோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் எதிர்த்து செயல்பட உதவும். தனித்தன்மை நிறைந்துள்ள இந்த எண்ணெயை நாம் அன்றாடம் உட்கொள்ளுவதற்காக எல்லா உணவு வகைகளிலும் இதனை சேர்க்கலாம்.

பெர்ரி பழங்கள்

 ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, கோஜி பெர்ரி மற்றும் அகாய் பெர்ரி ஆகியவற்றில் நிறைந்துள்ள அதிக ORAC தன்மைகள் நமது உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் இயக்க உறுப்புகளுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும். பெர்ரிக்களில் உள்ள இன்றியமையாத வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து போன்றவை நமது உடலை சுத்தப்படுத்தி நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.

காளான்

 காளான்கள் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உதவி புரியும். காளான்களின் வகையான மைடேக், ரேஷி, கொரியோலஸ், அகரகஸ் மற்றும் ஷீடேக் போன்றவற்றில் மருத்துவ தன்மை நிறைந்துள்ளது. இதில் உள்ள சக்தி வாய்ந்த பீட்டா க்ளுகன்ஸ் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்த உதவுகின்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!

 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை.

நம் உடல் செல்கள் உற்பத்தி செய்வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' .
.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்

 அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்

 கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.

2. நல்ல கொழுப்பைத் தேர்ந்தெடுத்தல்

 நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்றும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது ஆலிவ், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்டில் உள்ள கொழுப்பும் ஆரோக்கியத்தைத் தரும்.

3. டிரான்ஸ் ஃபேட் தவிர்த்தல்


 இது கெட்ட கொழுப்பு. நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது. எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதில் 'டிரான்ஸ் ஃபேட்’ என்று இருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.

4. கொலஸ்ட்ராலின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்


 வயதானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 மி.கி. அளவு கொழுப்பு தேவை. இதய நோயாளிகளுக்கு 200 மி.கி. போதுமானது. முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை போன்ற விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்களில் இருந்து அதிக அளவில் கொழுப்பு கிடைப்பதால், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது நல்லது.

5. நார்ச் சத்து தினமும் தேவை

 உணவில் குறைந்தது ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு நார்ச் சத்து தேவை. முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும். அன்றாடம், போதுமான நார்ச் சத்துள்ள உணவை எடுக்காதவர்கள், இனியாவது உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

6. குறைந்த அளவு அசைவ உணவு


'ரெட் மீட்’ எனப்படும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு அளவு அதிகமாக இருக்கிறது. முடிந்தவரை இறைச்சி உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. இறைச்சிக்குப் பதில் அதிக அளவில் மீன் உணவை சேர்த்துக்கொள்ளலாம். இதய நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் உணவில் முட்டை சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

7. மீன் உணவு

 எண்ணெய்த்தன்மை கொண்ட மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை மீன் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவையும் குறைக்க உதவும்.

8. முழு தானியங்கள்

 தினசரி உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் மினரல் உள்ளது. சிவப்பு அரிசி, முழு தானிய பிரட் மற்றும் ஃபிளாக்சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளை எடுத்துக்கொள்வது, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகமாக இருக்கிறது

9. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்

 உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பி.எம்.ஐ. அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரண்டு கிலோ எடை குறைத்தாலும்கூட, இது உடலில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் பேருதவியாக இருக்கும். சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது. வாரத்துக்கு அரை கிலோ என்ற அளவில் நிதானமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.

10. தொடர் உடற்பயிற்சி

 தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் ஃபிட்-ஆகும். கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கும்.

11. மது மற்றும் சிகரெட் தவிர்த்தல்


 அதிக அளவில் சிகரெட் புகைப்பது நம் உடலில் உள்ள எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதேபோல ஆல்கஹால் அருந்தும்போதும் அதிக அளவில் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனவே, அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

12. மாத்திரை

 ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு 'ஸ்டேடின்’ என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இது கொழுப்பைக் குறைக்க உதவும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ளலாம்.

ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..!

சித்திரை மாத பௌர்ண மிக்கு தனிச் சிறப்பு
 உண்டு. அந்த நன்னாளில் ரமணாசிரமத்தில் நடந்த
 சுவையான நிகழ்ச்சிகளில் ஒன்று.

ஆசிரமத்தில் உணவு உண்ட பின்னர் ஓய்வடுத்த
 சோமசுந்தர சுவாமி என்பவர் நீண்ட அறையில் படுத்துக் கொண்டு
 தன் வயிற்றைத் தடவியபடி ஒளவையாரின் பாடல் ஒன்றைப்
 பாடினாரராம்

”ஒருநாள் உணவை

 ஒழியென்றால் ஒழியாய்


 இரு நாளைக்கு


 ஏலென்றால் ஏலாய்


 ஒரு நாளும்


 என்னோ அறியாய்


 இடும்பை கூர்


 என் வயிறே


 உன்னோடு வாழ்தல் அரிது”


இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமண மகரிஷி, வயிறு
 மனிதனை நோக்கிப் பாடுவதுபோல, அதே பாடலை மாற்றிப் பாடினார்.


”ஒரு நாழிகை வயிறு எற்கு


 ஓய்வு ஈயாய் நாளும்


 ஒரு நாழிகை


 உண்பது ஓயாய்


 ஒரு நாளும்


 என்னோ அறியாய்


 இடும்பை கூர்


 என் உயிரே


 உன்னோடு வாழ்தல் அரிது”


பாடலின் பொருள் இதுதான்:

”ஓ, உயிருக்கு உறைவிடமான மனிதனே! வயிறாகிய
 எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை.
ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை
 நிறுத்துவதில்லை. என் துன்பம் உனக்குப் புரிவ தில்லை.
எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே!
உன்னோடு வாழ்தல் அரிது.”

இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை பற்றிக் கூறும்போது, ”விளையாட்டுக்காக
 எழுதிப் பாடினேன்” என்றார் மகரிஷி. சிந்தித்துப் பார்த்தால் இது
 விளையாட்டாகப் பாடிய பாடலாகவா தோன்றுகிறது?

ரமணரது இந்த பாடல், வயிற்றை நோக்கிப் பாடிய ஒளவையாருக்கு,
வயிறே பதில் சொல்வது போல் அல்லவா தெரிகிறது!

குளிர்காலங்களில் வீட்டில் வெதுவெதுப்பான சூழ்நிலையை உருவாக்க சில வழிகள்!!!

குளிர்காலம் வந்தாலே நமது உடல் நலத்தை பராமரிப்பதோடு நமது வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் பராமரிக்க வேண்டும். ஏன்னெனில், நம்மை போலவே நமது வீடும் குளிர்காலத்தை உணரும் தன்மையை கொண்டது. அதனால், இந்த குளிர்காலங்களில் நமது வீட்டில் உள்ள பொருட்களை தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்.

குளிர்காலங்கள் குளிர்ந்த காற்றை வீசி நாம் வெளியில் செல்லுவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கச் செய்கின்றது. எதை தொட்டாலும் சில்லென்று இருப்பதால் ஒரே இடத்திலேயே இருக்கச் செய்கின்றது. இன்றைய மாடர்ன் வீடுகளில் உள்ள ஹால் மற்றும் படுக்கை அறைகளில் சிறந்த முறையில் அறையை வெப்பமாக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இந்த வெப்பமாக்கும் கருவிகள் இல்லாத நிலையில் நமது வீட்டை வெப்பமாக வைப்பதற்கு வேறு வழிகளை நாடவேண்டி வரும்.

இயற்கையான முறையில் நமது வீட்டை வெப்பமாக வைப்பதற்கான வழிகளை கண்டறிவது கடினமான ஒன்று அல்ல. வெப்பமாக்கும் கருவிகள் உங்களை நிம்மதியாக உறங்க வைத்தாலும் அதன் விளைவாக வரும் அதிக மின்கட்டணங்கள் உங்களை பெரிதும் பாதிக்கும். இதற்கு மாறாக, இந்த குளிர்ந்த நிலைகளை கட்டுக்குள் வைக்கும் விலை மலிவான சில வழிகள் உள்ளன. இவற்றின் மூலமாக குளிர்காலத்தில் உங்கள் வீடு வெப்பமாக இருப்பதற்கு உதவும்.

குளிர்காலங்களில் உங்கள் வீட்டை இயற்கையான முறையில் வெப்பமாக்குவதற்கான வழிகள் பல உள்ளன. இதற்காக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், சில எளிமையான அடிப்படை வழிகளை புரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டின் சுழலை எளிமையான முறையில் வெப்பமாக வைத்து குளிரை கட்டுப்படுத்தலாம். இந்த எளிய வழிகளை உபயோகித்து உங்கள் வீட்டை வெப்பமாக வைத்து குளிரால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

சரியான திரைச்சீலைகளை உபயோகிப்பது


குளிர்காலங்களில் உங்கள் வீட்டை வெப்பமாக வைப்பதற்கு நீங்கள் சரியான திரைச்சீலைகளை பயன்படுத்த வேண்டும். இது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வீட்டு பராமரிப்பு டிப்ஸ். சூரிய வெளிச்சம் உள்ளே வரும் ஜன்னல்களை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மெல்லிய திரைச்சீலைகளை பயன்படுத்தவும். மற்ற ஜன்னல்களுக்கு தடிமனான திரைச்சீலைகளை பயன்படுத்தவும்.

பர்னிச்சர்களை நகர்த்தி வைத்தல்


உங்கள் பர்னிச்சர்களை ஜன்னல் மற்றும் கதவுகளிடம் இருந்து நகர்த்தி வைக்க வேண்டும். இது வெப்பமாக்கும் கருவிகள் இல்லாமல் உங்கள் வீட்டை வெப்பமாக வைக்க உதவும் இயற்கையான முறைகளில் ஒன்றாகும். உங்கள் வீட்டு பர்னிச்சர்களை ஈரமான மூலைகளில் இருந்து நகர்த்தி வைக்க வேண்டும்.

செயற்கை அடுப்புகளை உபயோகிக்கக்கூடாது

செயற்கை அடுப்புகள் சுற்றுசூழலில் உள்ள வெப்பத்தை உள்வாங்கி சிம்னி வழியாக வெளியேற்றிவிடும். அது எரிந்து கொண்டிருக்கும் போது வெப்பமாக இருந்தாலும், அதனை அணைத்த பின்பு உங்கள் அறையில் மீண்டும் குளிர் நிறைந்து இருக்கும்.

ஜன்னல்களை மூடி வைக்கவும்

இந்த வீட்டு பராமரிப்பு வழி மிகவும் எளிமையான ஒன்றாகும். வெப்பமாக இருப்பதற்கு உங்கள் வீட்டில் உள்ள எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் மூடியே வைக்க வேண்டும். அவற்றை காற்றுப்புகாதவாறு அழுத்தி மூட வேண்டும்.

தடைகளை அகற்றுவது


குளிர்காலத்தில் சில நாட்கள் வெயில் வரக்கூடும். நமது வீட்டை இயற்கையான முறையில் வெப்பமாக வைப்பதற்கு நமது வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற இடையூறுகளை நீக்க வேண்டும். இதன் மூலமான உங்கள் வீட்டிற்குள் அதிக சூரிய வெளிச்சம் வந்தடையும்.

கம்பளி மற்றும் தரைவிரிப்பான்


நீங்கள் இயற்கையான முறையில் உங்கள் வீட்டை வெப்பமாக வைத்து கொள்ள நினைத்தால், உங்களுக்கு அதிகமான கம்பளம் மற்றும் தரைவிரிப்பான்களும் தேவைப்படும். இவற்றை நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஹால்,சாப்பிடும் அறை, படுக்கை அறைகளின் தரைகளில் உபயோகப்படுத்தவும்.

உரைகளை பயன்படுத்தவும்

உங்கள் ஹாலை வெப்பமாக்குவதற்கு பர்னிச்சர்களுக்கும் சோபாக்களுக்கும் கம்பளி உரைகளை பயன்படுத்தவும். இதன் மூலமாக ஒவ்வொரு முறை நீங்கள் சோபாவில் உட்காரும் போதும் குளிரை போக்கி வெதுவெதுப்பாக உணருவீர்கள்.

மெழுகுவர்த்திகள் பயன்படுத்தவும்


இயற்கையான முறையில் உங்கள் வீட்டை வெப்பமாக்குவதற்கு மெழுகுவத்திகளை ஏற்றி வைக்க வேண்டும். இது விலை மலிவான வழி மட்டுமல்லாமல் எளிதாக செய்யக்கூடிய ஒன்றாகும். மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பதன் மூலமாக குளிர்காலத்தில் ஏற்படும் மந்தமான சூழ்நிலையில் இருந்து உங்கள் அறையை வெளிச்சமாகவும் வெப்பமாகவும் மாற்றும். 

தக்காளி தோசை - 2 - சமையல்!


தேவையானவை:

 பச்சரிசி - ஒன்றே கால் கப்,

 உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,

தக்காளி - 4,

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 10,

பெருங்காயம் - பாதி சுண்டைக்காய் அளவு,

உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

 பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்).

 தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு,

பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.

அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும். பின்னர் உப்பு சேர்த்து,

அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.

கலர்ஃபுல்லாக கண்ணைப் பறிக்கும் இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்.

ஷூ அளவை அறிய ஒரு செயலி!

 

ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது.

 நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா?


 இதற்கெல்லாம் ஒரு செயலியா ?

 என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ வாங்கவோ முற்படும் நிலையை கற்பனை செய்து பாருங்கள்.

 உள்ளூரிலேயே ஷூக்களின் அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது.

அப்படி இருக்க வெளிநாடுகளில் சொல்லவா வேண்டும்.


 ஒவ்வொரு நாட்டிலும் ஷூக்களுக்கு ஒரு அளவை பின்பற்றலாம் தானே.

 எனில் இணையம் மூலம் வெளிநாட்டு ஷூவை வாங்கும் போது உங்கள் ஷூவின் அளவு அந்நாட்டு கணக்கில் எந்த அளவு வருகிறது என தெரிந்து கொள்வது அவசியம் தானே.

அதை தான் இந்த செயலி செய்கிறது.

 இதில் உங்கள் ஷூ அளவையும் , உங்கள் நாட்டையும் தெரிவித்தால் , அதற்கேற்ப நீங்கள் ஷூ வாங்க உள்ள நாட்டில் அதன் அளவு என்ன என்று கணக்கிட்டு சொல்கிறது.

நீங்கள் வெளிநாட்டு ஷூவை வாங்கா விட்டாலும் கூட , அயல்நாட்டில் இருக்கும் நண்பரோ உறவினரோ உங்களுக்கு ஷூ வாங்கி பரிசளிக்க விரும்பினால் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் அல்லவா?

 இப்போதைக்கு ஐபோனுக்கான வடிவம் மட்டுமே இருக்கிறது.
பாருங்கள் , எப்படி எல்லாம் செயலிகளை உருவாக்குகின்றனர் !

செயலியை டவுண்லோடு செய்ய: 

 http://www.mercurydesign.in/convert-my-shoe-size/

‘கிச்சன் கெபினட்’ பிறந்த விதம்!

அரசாங்கத் தலைவர்களின் அதிகார பூர்வமற்ற ஆலோசகர்கள்
 

வட்டம் ‘கிச்சன் கெபினட்’ என்று அழைக்கப்படுகிறது.




இந்த வார்த்தை 1832 இல் உருவானது. அப்போது அமெரிக்க
 

 ஜனாதிபதியாக ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவர் இருந்தார்.




அவர் தனது நெருங்கிய நண்பர்கள் மூன்று பேருடன் அடிக்கடி
 

அதிகாரப்பூர்வமில்லாத தனிப்பட்ட கூட்டங்களை நடத்துவார்.



அந்த நண்பர்கள் வெள்ளை மாளிகையின் பின் கதவு வழியாக
 

 நுழைந்து சமையலறை வழியாக மாளிகைக்குள் வருவார்கள்.




அதிலிருந்து அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய நட்பு
 

வட்டத்தை ‘கிச்சன் கெபினட்’ என்று பத்திரிகையாளர்கள்
 

குறிப்பிடத் தொடங்கினார்கள்.



பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமற்ற
 

அரசியல் ஆலோசகர்களைக் குறிக்கும் வார்த்தையாக இது மாறியது.

ஒருவரின் செயலுக்குரிய பரிசு எது?

மலைக்கு மேல் இருக்கும் தனது வீட்டுக்கு அடிவாரத்தில் இருந்து இரண்டு பானைகளில் தண்ணீர் சுமந்து செல்வான் அந்தக் குடியானவன். ஒரு பானையில் மட்டும் சில ஓட்டைகள் இருந்தன. இதனால் வழிநெடுக நீர் ஒழுகி, வீட்டை அடைவதற்குமுன் பாதியளவு நீர் குறைந்து விடும். முதலாளிக்கு நன்றாகப் பணியாற்ற முடியவில்லையே என்ற வருத் தத்தில் கண்மூடிக் கிடந்தது அந்தப் பானை.

ஒருநாள் கண்களை திறந்த பானை, வழிநெடுக பச்சைப்பசேலென புற்களும் பூச்செடிகளுமாக வளர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்தது. ‘அட... இந்த அற்புதத்தை உருவாக்கியது யார்?’ என்று பானை கேட்க... ‘வழிநெடுக விதையைத் தூவி வைத்தேன். நீதான் நீரூற்றி தோட்டத்தை உருவாக்கினாய்’ என்றான் குடியானவன்.

கடவுளின் படைப்பில் எதுவும் வீணாகு வதில்லை. எவரையும் வீண் என விலக்க முடியாது.

ஒவ்வொருவரும் ஏதோவொரு மகத்தான காரியத்தைச் செய்யவே படைக்கப்பட்டிருக்கி றோம். அந்தக் காரியம் என்ன? அதைச் செயல்படுத்துவது எவ்விதம், என்று கண்டறிவதில்தான் நமது வெற்றி அடங்கியுள்ளது. அறிவு நூல்கள் வாழ்வின் இலக்கை சுட்டிக்காட்டி... அதை நோக்கி உற்சாகமாக உழைக்க வழிகாட்டுகின்றன.

வீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உண்டு. இவற்றைத் தொழில் என்று சொல்வதை விட, தர்மம் என்றே பண்பாடு போதிக்கிறது. அதாவது, பெற்றோராக இருந்து கடமை ஆற்றுவது தொழில் அல்ல; தர்மம்! நமது கடமையை அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உண்டு என்பதை உணர்வது அவசியம்.

நம்மில் பலரும் உரிமைக் குரல் கொடுக்கின்றனர். ஆனால் கடமையை அலட்சியப்படுத்திவிடுகின்றனர். காலப் போக்கில், உரிமைக்காகப் போராடுவதே கடமையாகி விடுகிறது. நமக்கான உரிமையை எடுத்துரைக்கும் மனித உரிமைக் கழகங்கள் உண்டு. இதேபோல் மனித கடமைக்கழங்கள் ஏதேனும் உண்டா? நமது கடமைக்குள் பிறரது உரிமையும் பிறரின் உரிமைக்குள் நமது கடமையும் மறைந்திருக்கின்றன என்பதை அறிவோமா?

“சே.... என்ன வாழ்க்கை இது” என அன்றாடக் கடமைகள் குறித்த சலிப்பும், திங்கட் கிழமை மீதான வெறுப்பும், ஞாயிற்றுக்கிழமையை நேசிப்பதுமாக வாழ்பவர்தானே அநேகம்?

சில அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்வது அவசியம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த உலகில் செயல்படாமல் இருக்க முடியாது என்பது இயற்கையின் நியதி. அதுமட்டுமா? போதிய மனப்பக்குவம் இன்றி செயலை விட்டுவிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

செயலாற்றுவது என்பது ஒரு கலை. இதுகுறித்து கர்ம யோகமாக கீதையில் உபதேசித்திருக்கிறார் கிருஷ்ணர். செயல் புரிவதன் நுணுக்கத்தை அறிந்தோர். தங்களது செயலை இறைவனுக்கான வழி பாடாகக் கருதுவர். செயல்படுவதன் நுணுக் கத்தை அறிந்தால்தான் நிம்மதியாக வாழ முடியும். அப்படி நிம்மதியாக வாழ செய லாற்றுவது குறித்து வாழ்க்கை நெறியையே வகுத்துத் தந்துள்ளனர் முன்னோர். இதன் முதல்படி செயலை நேசித்தல்!

செயல் என்பது அன்பின் வெளிப்பாடு. நீங்கள் செய்யும் செயலை நேசிக்க முடியவில்லை எனில், செயல் புரிவதை நிறுத்தி விட்டு, கோயில் வாசலில் அமர்ந்து நேசிப்புடன் செயல் புரிபவர் எவரோ அவர்களிடம் பிச்சை எடுத்து உண்பதே சிறந்தது என்பது பாரசீகக் கவிஞர் கலீல் ஜீப்ரானின் கூற்று.

குளிரூட்டப்பட்ட அறையில், காரணமே இல்லாமல் கடுகடுவென இருப்பவர்களும் உண்டு; வியர்த்து வழியும் பேருந்து நடத்துனர் வேலையில் சில்லறைகளுடன் உபரியாக புன்னகையை தருபவர்களும் உண்டு. அதாவது வேலையை நேசிக்கக் கற்பதே முதல் படி!

நான் இருக்க வேண்டிய இடமே வேறு. என் தலையெழுத்து... இங்கே மாட்டிக்கிட்டேன் என்று சிலர் புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். ‘வேலை வாய்ப்பு’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம்தானே? இந்த வேலை இறைவன் நமக்கு அருளிய வாய்ப்பு என்பதை மறந்துவிடக் கூடாது. மிகுந்த நேசிப்புடன் செயலாற்றுபவர் களின் கையால், ஒரு கோப்பைத் தேநீர் வாங்கி பருகினாலும் அது தேவாமிர்தத்துக்கு இணையானது!

அடுத்து இரண்டாவது படி! செயலை நேசித்தால் போதுமா? எப்படிச் செயல் படுவது என்பதைக் கற்றறிதலும் அவசியம். இதைப் போய் இவர்கிட்ட நான் கற்றுக் கொள்ள வேணுமா? எனும் எண்ணமே பெரிய தடைக்கல். கற்றுக் கொள்வதற்கு வயது, பின்புலம், அந்தஸ்து என எதுவும் தடை இல்லை. தணியாத ஆர்வமும் தீராத உற்சாகமும் இருந்தாலே போதும்!

நடுவழியில் பிழைத்து நின்ற காருடன் ஒரு மணி நேரம் போராடியும் உருப்படியாக ஏதும் செய்ய முடியாமல், மெக்கானிக் ஒருவரை அழைத்து வந்தார் அவர். அந்த மெக்கானிக் காரை ஒரு தட்டுத் தட்டியதும் சரியாகிப் போனது வண்டி. “நூறு ரூபா குடுங்க சார்” என்றார் மெக்கனிக். ஒரு தட்டு தட்டினால் நூறு ரூபாயா? இல்லை எங்கே தட்ட வேண் டும் என்று தெரிந்து தட்டியதற்குத்தான் இந்தக் கூலி!

மூன்றாவது படி; நேசித்து கற்றுக்கொண்ட செயல் திறனை, விடாமுயற்சியுடன் நடைமுறைப்படுத்துவது, ‘தூக்கம் சோர்வு, பயம், கோபம், சோம்பல், நேரம் தாழ்த்தி செயல்படுத்துவது எனும் ஆறு பெருங்குறைகளையும் நலத்தை விரும் புபவன் தவிர்க்க வேண்டும்” என்கிறது மகாபாரதம்.

நான்காவதுபடி; செயலில் சிந்தனையையும் குவிக்க வேண்டும். சூரியக்கதிர்கள் குவியும் போதுதான் நெருப்புப் பொறி தோன்றுகிறது. ஒரு முகப்பட்ட மனதுடன் செய்யும் செயல்தான் வெற்றியைத் தரும். இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் மாபெரும் சவால் செயலையும் சிந்தனை யையும் ஒருங்கிணைப்பதுதான்! எத்தனை இடர் வந்திடினும் கவனத்தை செயலில் குவித்தால் வெற்றி நிச்சயம்!

ஐந்தாம்படி; இறுதியானதும் கூட! செயலின் விளைவை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு தோமஸ் அல்வா எடிசனின் உழைப்பால் இன்று உலகமே மின் விளக்குகளால் ஒளிர்கிறது. அதாவது நமது உழைப்பு நாட்டுக்கும் உலகுக்கும் பயன்தரும் வகையில் இருப்பதே சிறப்பு!

ஒருவன் செய்யும் செயலுக்குப் பரிசு அந்தச் செயல்தான்!

உலக மக்களின் புகழ்ச்சி, இகழ்ச்சி எதையும் பொருட்படுத்தாமல் கவனம் முழுவதையும் செயலில் தேக்கி வைத்துக் கொள்ளும் பயிற்சி இளைஞர்களுக்கு அவசியம். சாதனையால் உலகமே தன்னைத் திரும்பிப் பார்த்தாலும், அந்த ஆராய்ச்சியாளர் தனது கவனத்தை ஆராய்ச்சியில்தான் வைத்திருப்பார். அவரது செயல்தான் அவருக்கு ஆனந்தத்தைத் தருகிறது. இவருக்கு விருதுகள் எல்லாம் இலவச இணைப்பு.... அவ்ளோதான்!

கர்மயோகியானவர், இறைவன் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் கருவியாகவே தான் ஆற்றும் செயலைப் பயன்படுத்துகிறார். இதனால் மனக் கொதிப்பும் பதற்றமும் இன்றி எப்போதும் உள்ளத்தில் அன்பு ததும்ப தனது வழிபாட்டை நடத்துகிறார்.

சிலகாலம் முன்பு மருத்துவராக விளங்கிய ராமகிருஷ்ண மடத்தின் சாது ஒருவர், காசியில் ஏழை நோயாளிகளுக்கு சேவையாற்றி வந்தார். ராமகிருஷ்ணருக்கு வழிபாடு நடத்த தயாராகும் வேளையில், அவசர அறுவைச் சிகிச்சைக்காக ஏதேனும் அழைப்பு வந்தால், அறுவைச் சிகிச்சை நடைபெறும் இடத்தையே கோயிலாகவும் செய்யும் சிகிசையையே வழிபாடாகவும் கருதுவாராம்! இறைவன் மீதிருக்கும் அன்பு, சக உயிர்கள் மீதும் பொங்கித் ததும்பிப் பெருகும். எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனோ பாவம் இது!

பலாப்பழ பிசின் கையில் ஒட்டிக் கொண்டால், பலாப்பழத்தை சரியாக நறுக்கவோ சுவைக்கவோ முடியாது. அது போல் ‘நான் செய்தேன் எனும் எண்ணத் தில்... செயலில், அதன் விளைவில் பற்றுக் கொண்டால், செயலில் ஆழ்ந்து ஈடுபட முடியாது. சுயவிருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு பெரியோர் காட்டிய வழியில் செயல்புரிவதே உத்தம மானது!

கர்ம யோகியானவர், செயல் மலரெடுத்து இறைவனை அர்ச்சிக்கிறார். செயலின் முடிவையும் இறைவனின் திருவடியில் மலர்களாகவே சமர்ப்பித்து விடுகிறார். ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே இதுதான் கீதையின் சாரம் என்று கீதையைப் படிக்காதவர்கள் கூட சொல்லி விடுவர். இந்தப் புத்தகத்தை அச்சடித்து வெளியிட்டவர் கூட, அது இத்தனை பிரதிகள் விற்க வேண்டும் எனும் எதிர் பார்ப்புடன்தானே செய்திருப்பார்? பலனை எதிர்பார்க்காதே எனில் பலன் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றாகிவிடும்.

எதிர்பார்த்த பலன், எதிர்பார்த்ததைவிட அதிகம். எதிர்பார்த்ததைவிடக் குறைவு. எதிர்பார்த்ததற்கு நேரெதிர்... இந்த நான்கு விதமான பலன்களில் எது வேண்டுமானாலும் கிடைக்கலாம். இதை, இறைவனின் அருட்பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறான். கர்மயோகி. பிரசாதத்தின் குறை- நிறைகளை ஆராயாமல் அதனை அப்படியே ஏற்பதே முறை. இது போலவே செயலின் பலன்களையும் ஏற்கச் சொல்கிறது சாஸ்திரம். பிரசாதம் என்ற சொல்லுக்கே உள்ளத்தெளிவு என்று பொருள். கர்ம யோகம் செய்வதால் உள்ளம் தூய்மை பெறுகிறது.

மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அனைத்தறன் ஆகுல நீரபிற


என்றார் வள்ளுவர்.

எல்லா அறங்களும் காம யோகத்தில் அடங்கிவிடுகின்றன. கர்ம யோகிக்கு சலி ப்போ, செயலின் விளைவு குறித்த கவலையோ, பயமோ இல்லை. அவர்களது உள்ளத்தில் இன்பமேயன்றி ஒருபோதும் துன்பம் இல்லை.

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க!



ஆறு அணில்கள் நாவல்பழக் கொட்டைகளைப் பொறுக்கி ஒரு பெரிய 


கூடையில் போட்டன. 


அணில்கள் மிகமிக வேகமாக வேலை செய்ததால் கூடையில் போட்ட 


ஒவ்வொரு நிமிட முடிவிலும் அந்தக் கொட்டைகள் இரட்டிப்பாகின. 



பத்தாவது நிமிட முடிவில் அந்தக் கூடை முழுதும் நிரம்பி விட்டது. 



அந்தக் கூடையை அரை அளவு மட்டும் நிரப்பும்போது,


 அந்த அணில்கள் எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்?

மரவள்ளிக் கிழங்கு தோசை - 1 - சமையல்!

 

தேவையானவை:

 புழுங்கலரிசி - 1 கப்,

மரவள்ளிக் கிழங்கு - சிறியதாக 1,

காய்ந்த மிளகாய் - 6,

 சீரகம் - 1 ஸ்பூன்,

பெருங்காயம் - சிறிதளவு,

உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, 3 முறை பால் போக நன்கு கழுவிக் கொள்ளவும். புழுங்கலரிசியை கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

 மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை அரைத்து, அதோடு கிழங்கையும் சேர்த்து அரைக்கவும்.

 பின்னர் ஊறிய அரிசியையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். (ஆட்டுரல் இல்லாதவர்கள் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைக்கலாம்)

ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு,

எண்ணெய்விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். எல்லோரும் சாப்பிட ஏற்ற ஆரோக்கிய தோசை இது.