Search This Blog

Sunday, 29 September 2013

அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்- சுற்றுலாத்தலங்கள்!



      அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்
 
டெல்லி குதுப்மினார். இந்தியாவின் மிகஉயர்ந்த கோபுரம். செம்மண்-பாறைக் கற்களால் உருவான அரிய பொக்கிஷம். இதன் உயரம் 72.5 மீட்டர் (சுமார் 238அடி). உயர்ந்து நிற்கும் குதுப்மினார், சுவாரஸ்ய வரலாற்றையும் உள்ளடக்கியது.

 
டெல்லி மட்டுமின்றி தெற்காசியாவின் முதல் முஸ்லிம் ஆட்சியாளர், முதல் சுல்தான் என்ற பெருமைக்குரியவர் குத்புதீன் ஐபக். அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர். மத்திய ஆசியாவில் துருக்கிய மரபில் பிறந்த குத்புதீன் ஐபக் சிறுவயதிலேயே அடிமையாக விற்கப்பட்டார். இடையே கைமாறி, கடைசியில் முகமத்கோரியால் விலைக்கு வாங்கப்பட்டார். தனது வீரதீர செயல்பாடுகளால் கோரியின் முக்கிய தளபதியாக விளங்கினார். கோரியின் மறைவுக்குப் பிறகு டெல்லி சுல்தான் ஆனார்.டெல்லியில் உருவான முஸ்லிம் நினைவுச்-சின்னங்களுக்கு காரணகர்த்தா இவரே.
 
முதலில் குவ்வாத்-உல்-இஸ்லாம் மசூதியை அமைத்த குத்புதீன் ஐபக், 1199ம் ஆண்டில் குதுப்மினாருக்கு அஸ்திவாரம் போட்டார். மக்களை தொழுகைக்கு அழைப்பதற்கு வசதியாக இந்த கோபுரத்தை எழுப்பத் தொடங்கினார். இதன் முதல் அடுக்கு முற்றுப்பெற்ற நிலையில் குத்புதீன் ஐபக் திடீரென மரணம் அடைந்தார். பிறகு ஆட்சிக்கு வந்த குத்புதீன் ஐபக்கின் மருமகன் சம்சுதீன் அல்துமிஷ், கோபுரத்தில் மேலும் மூன்று அடுக்குகளை அமைத்தார். 1211 முதல் 1236ம் ஆண்டு வரை கட்டடப்பணிகள் நடந்தன.
 
இருப்பினும், கடைசி அடுக்கு 1386ம் ஆண்டில் பெரோஷா துக்ளக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இப்படி மூன்று மன்னர்களால் உயர்த்தப்பட்டதுதான் குதுப்மினார். ஒவ்வொரு அடுக்கிலும் உப்பரிகை அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. குதுப்மினாரின் உச்சிக்கு சென்றடைய 379 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
குதுப்மினார் வளாகத்தில் உள்ள அல்துமிஷ் ஸ்தூபி, அலைய் தர்வாஷா மெயின்கேட், அலைய் மினார் போன்ற கட்டடங்களும் கலைநயம் மிக்கவை. ஏழு மீட்டர் உயரம் கொண்ட இரும்புத்தூண் ஒன்றும் இங்கு உள்ளது. நான்கரை அடி பருமனும் ஏழரை டன் எடையும் கொண்ட இந்த இரும்புத்தூண் இன்றளவும் சிறிதும்கூட துருப்பிடிக்காதது அதிசயமே.
 
குதுப்மினாரையும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்களையும் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ அமைப்பு 1993ம் ஆண்டில் அறிவித்தது. நவம்பர்- டிசம்பரில் இங்கு குதுப் திருவிழா நடத்தப்படுகிறது. டெல்லி மாநில சுற்றுலாத்துறை சார்பில் 3நாட்கள் நடைபெறும்  இந்த  விழா, இசை - நடனம் - நாட்டியம்  என அமர்க்களப்படுகிறது.
 
அடிமை உருவாக்கிய அற்புத கோபுரம் குதுப்மினார்,தன்னைக் காண்போரையும் அடிமையாக்கி விடுகிறது, வனப்பாலும் வசீகரத்தாலும்..!

கடவுள் பக்தி (நீதிக்கதை)!




ஒரு ஊரில் கடவுள் மீது அதிக பக்திக் கொண்ட ஒருவன் இருந்தான்.அவன் பெயர் முருகன்.அவனுக்கு நாதன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான்.

நாதன் நாத்திகவாதி.கடவுள் என்று ஒன்றும் இல்லை என்று சொல்லித் திரிபவன்.

ஒரு நாள் நாதன்,முருகனிடம் ' நீ கடவுளை எனக்குக் காட்டு....நான் ஒப்புக்கொள்கிறேன் ' என்றான்.

என்னுடன் இரு.நான் உனக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்றான் முருகன்.

அதன்படியே நாதன் முருகன் வீட்டிற்கு வந்தான்,பல மணிநேரம் ஆகியும் இறைவன் வரவில்லை.

நாதன், முருகனிடம் ' பசிக்கிறது என்றான்.

நீ சொல்வது பொய்- என்றான் முருகன்.

இல்லை உண்மையிலேயே எனக்கு பசிக்கிறது.

அப்படியானால் எனக்கு பசியைக் காட்டு.

பசியை எப்படி காட்டமுடியும்.

அதன் நிறம்.

பசிக்கு ஏது நிறம்.

அதன் குணம்.

குணம் இல்லை.

உன்னால் உன் பசியைக் காட்டமுடியவில்லை.ஏன்.?

அது வந்து....அது வந்து..

எப்படி பசி என்று ஒன்று இருந்தும் உன்னால் அந்தப் பசியை காட்டமுடியவில்லையோ அது போன்று தான் கடவுள் என்று ஒருவர் இருந்தும் அவர் புற உருவத்தைக் காட்டமுடிவதில்லை.

கடவுள் மீது பக்தி உள்ளவர்கள் மட்டுமே அந்த இறைவன் இருப்பது உணரமுடியும் என்றான் முருகன்.

நாதனுக்கும் கடவுள் நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது.