Search This Blog

Wednesday, 18 September 2013

'ஆலப்புழா' - சுற்றுலாத்தலம்


'ஆலப்புழா'

ஆலப்புழா
 
'லப்புழா' என்றதும் பெரிய பெரிய படகு வீடுகளும் அலைஇல்லாத கடலும்,முகத்துவாரம் என்னும் கடலும் ஆறும் சங்கமிக்கும் நீர்ப்பரப்பும் தமிழ் மற்றும் கேரள  சினிமாக்களின் கனவு பாடல் காட்சிகளும் நினைவுக்கு வரும்  சுற்றிலும் நீலநிறத்தில் தண்ணீரும்.. பச்சை நிறத்தில் மரங்களும் சூழ்ந்த அந்த அற்புத பூமியை  இப்போது அறிவோம் 
 
ஆலப்புழா இத்தாலி நாட்டின் வெனிஸ் நகருக்கு இணையான அமைப்பை உடையது. வெனிஸ்  நகர மக்கள் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு செல்வதென்றால் கூட படு வழியாகத்தான் பயணம் செய்வார்கள். கிட்டத்தட்ட ஆலப்புழாவும் அப்படிப்பட்டதுதான். அனைத்து பொருட்களும் படகு வழியாகத்தான் வீடுகளுக்கு வருகிறது.
இதனால் ஆலப்புழாவை கேரளாவின் வெனிஸ் என்று அழைக்கிறார்கள். ஆலப்புழா அத்துணை ரம்யமான நகரம். காதல் ஜோடிகள் முதல், கல்யாணம் ஆன தம்பதிகள் வரை அனைவரும் விரும்பும் ஓர் இடமாக ஆலப்புழா விளங்குகிறது.

ஊரை சுற்றிலும் ஆறுகள், ஏரிகள், அடர்ந்த பசுமையான மரங்கள் இவை அனைத்தும் இயற்கை அன்னையின் மடியில் நம்மை தவழச் செய்கிறது
இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பாம்பு படகு சவாரி உலக புகழ் பெற்றது. மற்றும் விடுமுறை காயல் வீடுகள், கடற்கரைகள், கடல் உற்பத்திப் பொருட்கள் மற்றும் தேங்காய் நார் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்ற இடமாக உள்ளது.
கடல் வரை பரந்து காணப்படும் இங்குள்ள கப்பல் துறை 137 வருட பழைமை வாய்ந்தது.  இக்கடற்கரை மிகத்தூய்மையாகவும், அழகாகவும் ராமரிக்கப்படுகிறது இக்கடற்கரையின் தெற்குப் பகுதியில் குழந்தைகள் விளையாட தனிப்பூங்கா ஒன்றும்அமைக்கப்பட்டுள்ளது.
 
படகு இல்லம்:
 
லப்புழாவில் இருக்கும்போது நாம் காணும் மிகவும் அருமையான ஒரு அனுபவம் படகு இல்லப் பயணமாகும்.
நாம் ஆலப்புழாவிலுள்ள காயல்களில் பழையகாலத்து கட்டுவள்ளங்களின் மறுபதிப்புகளைக் காணலாம்.
அசலான கட்டுவள்ளம் அல்லது அரிசி தோணிகள் டன் கணக்கான அரிசி மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுவது வழக்கம்.
கட்டுவள்ளம் அல்லது முடிச்சோடு கூடிய படகு என இது அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது முழு படகும் கயிற்றினால் மட்டுமே கட்டப்பட்டு ஒரு படகாக உருவாக்கப்பட்டிருக்கும்.பின்னர் ஒரு ஹோட்டல் போன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறைகள், நவீன கழிப்பறைகள், ஆடம்பர வரவேற்பறைகள், சமையலறை மற்றும் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதற்கு ஏற்ற பால்கனி என அனைத்து வசதிகளையும் கொண்ட படகு இல்லங்கள் இப்போது வந்துவிட்டன
கேரள சுற்றுலா துறையின் மூலமாகவும் பல்வேறு படகு இல்லங்கள் உள்ளன. படகு இல்லங்கள் சாதரணம் முதல் நவீனம் வரை உள்ளது.  பயணிகளின் பொருளாதார வசதிகளை பொறுத்தது. இந்த படகு இல்லங்களில் தங்குவதற்கு ஒரு நாளுக்கு 9000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் 7000 ரூபாய் வரையும் செலவாகலாம். மூன்று வேலை உணவும் உங்களுக்கு அதில் வழங்கப்படும்.
ஒருவர் படகு இல்லத்தில் இருக்கும்போது காயல் வாழ்க்கை நிகழ்வுகளை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் கண்டு மகிழலாம் என்பது இப்பயணத்தின் சிறப்பாகும்
 
இப்போது நாம்  வள்ளத்தில் பயணிப்போம் ;

முதலில் நாம் ஆலப்புழாவிலிருந்து ஒரு படகினை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
கண்களை மூடி அப்படியே அமைதியாக சிறிது நேரம் பயணம் மேற்கொண்டுவிட்டு பின்னர் கேரளாவின் மிகப்பெரிய காயலான வேம்பனார் ஏரியின் அழகில் மனதைப் பறிகொடுத்தபடி மனதை வருடும் காற்றை நுகர்ந்தபடி பிரயாணம் செய்யலாம்.பின்னர் நாம் கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான குமரகோம் நோக்கிச் செல்வோம். வேம்பநாடு காயல்வழியாகச் செல்லும்போது காயல் கிராம வாழ்க்கை மற்றும் காயல் செயல்பாட்டுக் காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு மகிழலாம். இரு ஓரங்களிலும் தென்னந்தோப்புகளும் வயல்வெளிகளும் உள்ள கால்வாய்கள் வழியாக பொழுதுபோக்காக நீர்வழிப் பயணம் செல்லலாம்.
 
குமரகோமை அடைந்ததும் நாம்  இன்னொரு விந்தையான உலகிற்குள் நுழைந்தது போல உணரமுடியும்  . தீவுக்கூட்டம் நிறைந்த இந்த சிறிய காயல் கிராமத்தின் தனக்கென பிரத்தியேக வாழ்க்கை முறையும் மெல்லிய அழகான மனதை வருடும் காட்சிகள் ஒலிகள் மற்றும் நறுமணம் யாவும் நம்மை  அப்படியே கட்டிப்போட்டு விடும்.குமரகோமில் சிறிது தங்கி இளைப்பாறிவிட்டு வைக்கமிற்குச் செல்லலாம்.

வைக்கம்  இது பல மனோரம்மியமான காட்சிகளையும் வாழ்க்கை முறைகளையும் கண்முன் கொண்டு நிறுத்துகிறது . இங்கு  நாம் கேரள மிகமதிப்பான பாரம்பரிய மாதிரி பொருட்களைக் காணலாம். இந்த நகரின் முதன்மை கவர்ச்சி மிக பிரசித்திபெற்ற சிவன் கோவிலாகும்.
இங்குள்ள பச்சை வயல் வெளிகள் நமக்கு  மற்றுமொரு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.
வைக்கத்திலிருந்து கேரளாவின் சுவையான உணவை உண்டு தெம்பாகிய பின்னர் நாம்  சைனைஸ் மீன்பிடி வலைகள் மற்றும் வரலாற்று இடங்கள் நிறைந்த ஃபோர்ட் கொச்சிக்கு  செல்லலாம்.

ஃபோர்ட் கொச்சிக்கு விடைகொடுத்து விட்டு நாம் பால்கட்டி தீவை நோக்கி செல்வோமானால்
அதுதான் நாம் இறுதியாக சென்றடையும் சுற்றுலா தளமாகும். பால்கட்டி  தீவிற்குச் செல்லும் வழியில்நாம் முக்கிய இடமான எர்ணாகுளத்தின் அழகிய காட்சியைக் காணலாம். இதன் தொடுவானம், கப்பல்தளம் ஆகியவை பார்க்கத்தக்கவை ஆகும். பால்கட்டிக்குள் சென்றுவிட்டால் திரும்பிவர மனம் வராது. மெல்லிய தென்றல் காற்று மனதை அள்ளும்.
அழகிய சூரிய வெளிச்சம் ஆகியவை நம்மை பிரியவிடாமல் செய்யும்.அந்த இனிய நினைவுகள் நம்மை எல்லா வருடமும் இங்கு வரத்தூண்டும்

ஆலப்புழாவில் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப படகுகளை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். சிறிய நாட்டுப் படகுகள், ஆடம்பரப் படகுகள், சிறிய விரைவு படகுகள், பெரிய பயணிகள் மோட்டார் படகுகள் என்று எல்லாவிதமான படகுகளும் இங்கு கிடைக்கும். சிறிய படகுகள் கால்வாய்கள் வழியாக பயணம் மேற்கொள்ள உதவும்.
நீங்கள் பிரயாணம் மேற்கொள்ள தயாராகிவிட்டால் ஆலப்புழாவைச் சுற்றியும் உள்ளேயும் பயணம் செய்ய கால்வாய் வழி பயணம் முறைகளுள் ஒன்றைத் தேர்வு செய்வது இனிய அனுபவமாக இருக்கும்.

கிருஷ்ணர் கோவில் :

லப்புழாவில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அற்புதமான கிருஷ்ணர் கோவில் காண்போரை ஆச்சர்யப்படுத்தும்.
இக்கோவிலின் மகாவிஷ்ணுவின் தசாவதார காட்சிகள் வியப்பூட்டும்  விதத்தில் அமைந்துள்ளது. இங்கு பள்ளிபானா என்ற பெயரில்
மாயமந்திர நிகழ்ச்சி   12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது
இங்குள்ள கோவிலில் பிரசாதமாக பால் பாயசம் வழங்கப்படுகிறது.

காயங்குளம்-கிருஷ்ணாபுரம் அரண்மனை:
18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஆலப்புழாவில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரள மன்னர்களின் கட்டட கலைக்கு சிறப்பான உதாரணமாக இது திகழ்கிறது.
இரண்டு அடுக்குகளால் ஆன இந்த அரண்மனையில்  பல்வேறு புராதான பொருட்கள் உள்ளது. அதனை பாதுகாக்கும் விதமாக ஒரு அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியங்கள், வெண்கல சிற்பங்கள், சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளிட்டவை அரண்மனையின் வரலாற்றை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
 
சக்குலத்து பகவதி கோவில் :
மபலப்புழா நீராட்டுபுரத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. பிரம்ஹா, விஷ்ணு, சிவன், ஆகிய முக்கடவுல்களையும் உருவாக்கிய மகா சக்தியாக இந்த பகவதி போற்றப்படுகிறாள்.
இங்கு நடக்கும் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இதல் நாடு முழுவதிலுமிருந்து பெண்கள் பங்கேற்று வழிபடுகின்றனர்.
 
எடத்துவா தேவாலயம் :

லப்புழாவில் இருந்து சும்மார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிறிஸ்துவ தேவாலயம் 1810ல் கட்டப்பட்டது. ஐரோப்பாவின் கட்டடக்கலையை பின்பற்றி இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இங்கு வந்து மனம் ஒன்றி பிரார்த்தனை செய்தால் மனநோய், புத்தி பேதலிப்பு, உள்ளிட்ட நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தியா முழுவதிலுமிருந்து கிறித்துவ அன்பர்கள் வந்துசெல்லும் புனித தளமாக, சக்திவாய்ந்த இடமாக,
தேவனின் கருணை நிரம்பும் இடமாக இந்த தளம் அமைந்துள்ளது.
 
 
நேரு ஸ்னேக் கோப்பை படகுப் போட்டி
வ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 2-ம் சனியன்று இங்கு பிரசித்திபெற்ற படகுப் போட்டி நடைபெறும்.
பல தினுசுப் படகுகள் அலங்கரிக்கப்பட்டு, அதில் 100 துடுப்பாளர்கள் துடுப்பு போடுவார்கள். இந்தப் படுகுச் சவாரிப் போட்டி, நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய வேம்பாநந்த் ஏரியில் நடைபெறும். இதற்கான நுழைவுச் சீட்டுகள் எல்லா கடைகளிலும் விற்கப்படும்.

ஆலப்புழாவில் எங்கு தங்குவது?
 
1. ஹோட்டல் கய்லோரம்
2. மராரி பீச்
3. கேரளா ஹவுஸ் போட்
4. கேரளீயம் ஆயுர்வேதிக் லேக் ரிசார்ட்
ஆகிய ஹோட்டல்களில் தங்கலாம்.

ஆலப்புழா செல்வது எப்படி :
பிற பகுதியில் இருந்து எளிதாக ரயிலில் வந்து விடலாம். சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி சர்வேதேச விமானநிலையம் அமை
ந்துள்ளது. இதனால் விமானம் மார்கமாக வர விரும்பும் பயணிகளுக்கு ஏதுவான வசதிகள் உள்ளது.
சென்னையிலிருந்து தினமும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும். ஆலப்புழா எக்ஸ்பிரஸ் தினமும் இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் .ஆலப்புழாவில் தம்பதிகள் இருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இரண்டுநாட்கள் தங்க சுமார் 15000 வரை ஆகும்.
செலவு குறைக்க விரும்பினால் சாதாரண விடுதிகளை தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஆலப்புழாவிலிருந்து 15 கிலோமீட்டர் வெளியில் தங்கி அங்குள்ள விடுதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆலப்புழாவை சுற்றிபார்க்க 2 நாட்கள் தேவை. ஆலப்புழாவில் உணவுவகைகள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக கரிமீன், மற்றும் சில மீன் வகைகள் நிறைந்த உணவு கிடைக்கும். அது மட்டுமா கேரளாவின் பாரம்பரிய உணவுகள் எங்கும் மணக்கும்.

காகமும் ...அறிவுரையும்.(நீதிக்கதை)



ஒரு மரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.அதே மரப்பொந்தில் ஒரு ஆந்தை இருந்தது.

அது நள்ளிரவில் காக்கை தூங்கி இருக்கும் வேளையில் வந்து அதை விரட்டி அடித்தது.

மறு நாள் வேறொரு மரத்தில் காக்கை கூடு கட்டியது.அதையும் தெரிந்து கொண்ட ஆந்தை அங்கேயும் சென்று இரவில் காக்கையை விரட்டியது.

அடுத்த நாள் காக்கைஅடுத்த ஊரிலிருந்த தன் தாய் காகத்திடம் இதைப் பற்றிக் கூறியது. 'இதிலிருந்து தப்ப வழி என்ன?' என்று கேட்டது.

அப்போது தாய் காகம்..'ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ஆகவே நீ பகலில் சென்று ஆந்தையை விரட்டு' என்றது.

காகம் அதன் படியே செய்ய ...ஆந்தை காகத்தை விட்டு ஓடியது.

காகத்தின் புத்திசாலித்தனமும்...தாயார் சொன்ன அறிவுரையும்...அதையும் அதன் குஞ்சுகளையும் காப்பாற்றியது.
 

சாம்சங் நோட் 3 ஸ்மார்ட் போன் அறிமுகம்!

புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நிறுவனத்தின் புதிய நோட்-3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனத்தின் மொபைல் மற்றும் ஐடி பிரிவுத் தலைவர் விநீத் தனேஜா (இடது), இயக்கநர் மனு சர்மா.



செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கொரியாவின் சாம்சங் நிறுவனம் அதிக செயல்பாடுகளைக் கொண்டுள்ள நோட் 3 எனும் உயர்ரக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 49,900 ஆகும். வெறுமனே போனாக மட்டுமின்றி பல்வேறு பயன்பாடுகளுக்கு இதைப் பயன்படுத்தும் வகையில் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.


 ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில்செயல்படும் இந்த ஸ்மார்ட்போனின் எடை வெறும் 168 கிராம்தான். 5.7 அங்குல திரை, 13 மெகாபிக்சல் கேமரா ஆகியன இதன் சிறப்பம்சம், கருப்பு, வெள்ளை, இளம் சிவப்பு ஆகிய கண்கவர் நிறங்களில் இது வெளிவந்துள்ளது. 3200 எம்ஏஹெச் பேட்டரி 24 மணி நேரம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்கிறது. 


இந்நிறுவனம் முதல் முறையாக கையில் அணியக்கூடிய தண்ணீர் புகாத கேலக்ஸி கியரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 22,900 ஆகும். இந்த இரு தயாரிப்புகளும் செப்டம்பர் 25 ம் தேதி முதல் சந்தையில் இந்தியச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். 


விற்பனையை அதிகரிக்க நோட் 3 ஸ்மார்ட் போனுக்கு எளிய தவணை முறைத் திட்டத்தையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 3ஜியில் செயல்படும் வகையிலானது நோட் 3 ஸ்மார்ட்போன். இந்த செல்போனில் திருடுபோனால் கண்டறியும் வசதியும் உள்ளது.

டாப் 20 சமையல் குறிப்புகள்!


  1. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
  2. முட்டை வேக வைக்கும் போது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.
  3. அரிசியால் செய்த உணவுகளை மைக்ரோவேவ் அவனில் மறுமுறை சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், விரைவில் சூடாகும்.
  4. மீனை சுத்தம் செய்வதற்கு முன் சிறிது நேரம் உப்பு சேர்த்து கிளறி வைத்திருந்தால், மீனிலிருந்து வாடை எதுவும் வராது.
  5. இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவைத்தால், இறால் வாடை மிகவும் குறைவதோடு, சுவையும் கூடுதலாக இருக்கும்.
  6. துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
  7. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சோயா மாவும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.
  8. பச்சை மிளகாய் வாடாமல் இருக்க அதன் காம்பை கிள்ளிவிட்டு டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாள் வரும்.
  9. ஃப்ரிட்ஜ் இல்லாதவங்க கீரைகளை ஈரத்துணியில் லேசாக சுற்றி வைக்கலாம்.பச்சை மிளகாயையும் ப்ரெஷ்-ஆ மாதிரி வைக்கலாம்.
  10. தேங்காய் துண்டுகளை ஒரு பிளஸ்டிக் டப்பாவில் தண்ணீர் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரும்.
  11. காலையில் முருங்கை கீரை சமைக்க வேண்டுமானால், இரவு முருங்கை கீரையை ஆர்க்குடன் ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால், காலையில் எல்லா முருங்கை இலைகளும் தனித்தனியாக உதிர்ந்து இருக்கும். காம்புகளை எடுத்துவிட்டு கீரையை பயன்படுத்தலாம்.
  12. உளுந்து வடைக்கு ஊறவைக்கும் போது 1 கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து வடை சுட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.
  13. பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.
  14. தக்காளி, வெங்காயம் போன்ற சாலட் தயாரிக்கம் போது தயிருக்குப் பதிலாக இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் ஊற்றி பிசைந்து காய்கறிகளை பரிமாறினால் வெகு சுவையாக இருக்கும்.
  15. தேங்காய் சட்னி செய்யும் போது, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.
  16. சாம்பார் பொடி தயார் செய்வதற்கு மிளகாய், கொத்துமல்லி காய வைக்கும்பொழுது, கொஞ்சம் கறிவேப்பிலையும் காம்போடு சேர்த்து காயவைத்து பொடி செய்தால் சாம்பார் மணம் பிரமாதமாக இருக்கும். சாம்பார் செய்யும்போது கறிவேப்பிலை தேடி ஓட வேண்டியதும் இல்லை.
  17. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.
  18. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
  19. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.
  20. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
 

நெஞ்சை அள்ளும் தஞ்சை - சுற்றுலாத்தலம்!


நெஞ்சை அள்ளும் தஞ்சை


வரலாறு:
 
மிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய நகரம் தஞ்சை. இந்த  பகுதியை  ஆண்ட தனஞ்சய முத்தரையரின் பெயரையே கொண்டு இந்நகரம் "தனஞ்சய ஊர்"
என்று அழைக்கப்பட்டு பின்பு அதுவே மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றதாக கூறப்படுகிறது.
     கி.பி. 850-ல் தஞ்சாவூரை ஆண்ட முத்தரையர்களிடமிருந்து விஜயாலயன் கைப்பற்றித் தஞ்சையில்  சோழர் ஆட்சியைத் நிறுவினான். இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் பெற்றது. கி.பி. 1532-ல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. திருச்சியைத் தலைநகராகக்கொண்டு
ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் கி.பி. 1673இல் தஞ்சாவூர் மீது படையெடுத்தார். இப்போரில் விஜயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்ததால் தஞ்சை அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது.
     
        கி.பி 1676-ல் மராட்டிய மன்னனர் சிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோஜி  ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்வெஸ்லி பிரபுவுடன் கி.பி. 1799இல் செய்துகொண்ட
ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிர மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன.
1832-1855 காலத்தில் ஆண்ட இரண்டாம் சிவாஜி மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால், ஆங்கிலேயர்கள் வசம் கி.பி. 1856ல் தஞ்சைக் கோட்டையும் சென்றது. தஞ்சாவூர் 1866ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வருகிறது.


 
தஞ்சை பிரகதீசுவரர் கோயில்:
        
க்கோயில் பெருவுடையார் கோயில் என்றும் தஞ்சை பெரிய கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது . இக்கோயில் உலக பரம்பரியச் சின்னமாகா யுனெஸ்கோவினால்
அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் அமைப்பானது பண்டைய தமிழர்கள் கட்டடக்கலையில் கொண்ட நுட்பமான அறிவை காட்டுகிறது.
     இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே வைத்து கோயில்கள் கட்டப்பட்டுகொண்டிருந்த அக்காலத்திலேயே இக்கோயில் 15 தளங்களைக்  கொண்டு சுமார் 60 மீட்டர் உயரத்தில்  கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செதுக்கப்பட்டது ஆகும். இதன் உயரம் 14 மீ, நீளம்      7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.


சரசுவதிமகால் நூலகம்:


      லகில் உள்ள தொன்மையான நூலகங்களில் ஒன்றாக உள்ளது  தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம். இந்த நூலகம்  சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் நாயக்கர்  மன்னர்கள் மற்றும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களாலும் வளர்ச்சிப்பெற்றது.

    கல்வெட்டுகளில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி முதலில் இந்நூலகம் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம்   என அழைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் பணியாற்றிவர்களை சரசுவதி பண்டாரிகள் என அழைக்கப்பட்டனர்.

       இந்நூலகத்தில்  தமிழ், தெலுங்கு, சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன்,  இலத்தீன், கிரேக்கம் முதலிய  பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன. இந்நூலகத்தில் சுமார் 25,000 சமஸ்கிருத நூல்கள் உள்ளன. அதுமட்டுமின்றி 400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 'நந்திநாகரி' என்னும் எழுத்து வடிவத்தில் உள்ள சுவடிகளும் இங்கு உள்ளன.
     கி.பி. 1703-ல் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 'சீவகசிந்தாமணி' நூல் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட 'சாமுத்திரிகா' என்ற அரியநூல் ஒன்றும் இந்நூலகத்தில் உள்ளது .





தஞ்சை ஓவியங்கள்:
        ந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து தஞ்சாவூரில் குடியேறிய மூச்சிகள்  என்ற ஓவியத் தொழில் புரியும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இத்தஞ்சை ஓவியத்தினை குலதொழிலாக கொண்டனர். தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி மன்னர் கலைகளின் மீது பெரும் பற்றுக் கொண்டவர் என்பதால் இவர்களுக்கு வேண்டுமளவிற்கு வாய்ப்புக்களை வழங்கி ஆதரித்து வந்தார்.
கி.பி. 16 முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய மன்னர்கள், விஜயநகர பேரரசின் நாயக்கர்கள்,  ஆகியோர்  தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர். இதனால் தஞ்சை ஓவியங்கள் அரண்மனைகளின் உட்பகுதிகளை அலங்கரித்தன.
மற்ற ஓவியப் பாணிகளைபோல இல்லாமல் தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியத்துடன் கைவினைக் கலையும் கலந்து ஒரு புதிய வடிவம் கொண்டதாக மலர்ந்தது.


தஞ்சாவூர் அரண்மனை

 
      நாயக்கர்களால் பாதியும் மீதி மராட்டியர்களாலும் கட்டப்பட்டது. கிழக்குப் பிரதான வீதியில் உள்ள இந்த அரண்மனை வரிசைத் தொடராகக் கட்டங்களாக இருக்கும். இதன் நுழைவாயில் நான்கு கட்டுகள் கொண்டு அரசவைக்கு கொண்டுசெல்வதாக இருக்கிறது. அங்கிருந்து வடக்கு, கிழக்கு புறவாயில்களுக்குச் செல்லும் வகையில் சுற்றுச்சுவர்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

   

 மூன்றாவது கட்டின் தெற்குப்புறத்தில் 190 அடி உயரத்தில் எட்டு அடுக்கு கொண்ட கோபுரம் உள்ளது. இதுவே இந்த அரண்மனையின் கண்காணிப்புக் கோபுரமாகவும், ஆயுதக் கிடங்காகவும் கி.பி. 1855 வரை இருந்து வந்துள்ளது.
 


தஞ்சை தலையாட்டி பொம்மை:
        லைகளுக்கு பெயர் பெற்ற தஞ்சையில் கி.பி. 19ஆம் நூற்றாண்டில் சரபோஜி மன்னரின் காலத்தில் உருவானதுதான் தலையாட்டி பொம்மைகள். தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தினை பறைசாற்றும் இப்பொம்மைகள் காவிரி ஆற்றின் களிமண் கொண்டு செய்யப்படுகிறது. இப்பொம்மைகளின் அடிப்பகுதி பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும் மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப் படுகின்றன. இதனால் இப்பொம்மைகள் சாய்த்து தள்ளினாலும் கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. புவி ஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப  செங்குத்தாக இயங்கும் வகையில் இவை அமைகின்றன, முதலில் ராஜா ராணி பொம்மைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. பிறகு நடன மங்கை பொம்மை, தாத்தா, பாட்டி பொம்மை என காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டு வருகின்றன.
தமிழ் பல்கலைக்கழகம்:
           மிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளின் உயர் ஆய்வினை நோக்கமாகக் கொண்டு 1981 செப்டம்பர் 15 ஆம் நாள்  தமிழ் மொழிக்கென்று 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம். இப்பல்கலைக் கழகத்தில் தமிழில் உயர்கல்வி, மற்றும் ஆய்வுகள் இங்கு நடந்து வருகின்றன. பழைய நாணயங்கள், இசைக்கருவிகள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் உள்ளன. இப்பல்கலைகழகதின் முதல் துணைவேந்தர் மொழியியலாளர் திரு. வ.ஐ. சுப்பிரமணியம் ஆவார்.

பாரம்பரியம் சொல்லும் பத்மநாபுரம் அரண்மனை - சுற்றுலாத்தலம்


பாரம்பரியம் சொல்லும் பத்மநாபுரம் அரண்மனை
 
   ன்னியாகுமரி மாவட்டத்தின்  தக்களைக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அரண்மை. 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அரண்மனை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் விளங்கியபோது கட்டப்பட்டது. நுணுக்கமான மர வேலைப்பாடுகளுடன் கூடிய 14 கட்டிடங்கள், 144 ராட்சத அறைகள் கொண்ட இந்த அரண்மனை சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.
 மேலும் இந்த அரண்மணையில் எங்குமே மின் விளக்குகள் கிடையாது. சூரியனின் ஒளியினாலே இந்த அரண்மனைக்கு வெளிச்சம் கிடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.இந்த அரண்மனை தமிழகப் பகுதியில் அமைந்திருந்தாலும் கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்படுகிறது.

வரலாறு :
  கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்ட இந்த அரண்மையை பி.1706-1758 வரை ஆண்ட அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவரால் விரிவுபடுத்தப்பட்டது.1795 வரை பத்மநாபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கியது.1795 இல் தான் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

அரண்மனையின் முகப்பு:
   கேரளக் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் இந்த அரண்மனை, 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. நுட்பமான மரவேலைப்பாடுகளை அரண்மனையின் உட்கட்டமைப்பெங்கிலும் பரவலாகக் காணலாம்.. பிரமாண்டமான அரங்குகளும் தகதகக்கும் அலங்காரங்களும் இந்த அரண்மனையில் இல்லையென்றாலும், அரண்மனைக்கேயுரிய  செழிப்பானது , அரண்மனையின் உட்புற , வெளிப்புற வடிவமைப்பில் காணலாம்.
பூமுகத்து வாசல்:
  ரண்மனையின் முகப்பாகிய பூமுகத்துக்குச் செல்லும் முதன்மை மரவேலைப்பாடுகளுடைய பெரிய இரட்டைக் கதவையும் கருங்கற் தூண்களையும் உடையது. கேரளப்பாரம்பரியத்துக்கே யுரித்தான கலை நயத்துடன் அமைக்கப்பட்ட பூமுகத்தில் உள்ள மரச் செதுக்கல் வேலைப் பாடுகள் பார்ப்போரைப் பிரமிக்க வைக்கும். ஒன்றிலொன்று வேறுபட்ட 90 வகைத்தாமரைப்பூக்கள் செதுக்கப்பட்ட மரக்கூரை மிகவும் பிரசித்தமானது.
இங்கு பொதுமக்களின் பார்வைக்காக, சீனர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிம்மாசனம், முற்றிலும் முழு கருங்கல்லால் செய்யப்பட்ட சாய்மனைக்கதிரை, உள்ளூர் மக்களால் ஒணம் பண்டிகைக்கால வாழ்த்தாக வழங்கப்பட்ட ஒணவில்லு போன்றவை பூமுகத்தில் உள்ளன.
மந்திரசாலை:
   பூமுகத்தின் முதலாவது மாடியில் மந்திரசாலை இருக்கிறது. மந்திரசாலைக்குச் செல்லும் படிக்கட்டு மிகவும் ஒடுக்கமானது, மரத்தால் ஆனது. அதனால் அப்படிக்கட்டில் ஒவ்வொருவராகவே ஏறமுடியும். பளபளக்கும் கரிய தரையுடன் காணப்படும் மந்திரசாலையில் தான், மன்னர் மந்திரிகளுடன் கலந்துரையாடியதாக சொல்லப்படுகிறது. மந்திரசாலையின் சுவரும் கூரையும் மரங்களாலேயே அமைக்கப்பட்டுள்ளன. எந்த வித செயற்கை விளக்குகளுமின்றி, சூரிய ஒளியின் உச்சப்பயனைப் பெறக்கூடிய வகையில் சலாகைகள் மூலமும் மைக்கா கண்ணாடி மூலமும் சுவர்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
மணிமாளிகை:
   ந்திரசாலையைக் கடந்து படிகளால் கீழே இறங்கினால் வருவது மணிமாளிகைக்குச் செல்லலாம். கிராமத்தவர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட மணிக்கூட்டுடனான கோபுரத்தை இந்த மாளிகையில் காணலாம். இந்த மணிக்கூடு ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப் படுகிறது. இம்மணிக் கூட்டின் பின்னனியிலிருக்கும் தத்துவம் வியக்கத்தக்கது. மணிக்கொரு தடவை ஒசையெழுப்பும் இந்த மணிக்கூட்டின் மணியோசையை 3கி.மீ சுற்று வட்டாரத்திற்குள்ளிருக்கும் எல்லோராலும் கேட்க முடியும்.
அன்னதான மண்டபம்:
  ணிமாளிகையைக் கடந்துச் சென்றால் வருவது, அன்னதான மண்டபம். கீழ் மண்டபத்திலே ஏறத்தாழ 2000 பேர் ஒன்றாக அமர்ந்து உணவருந்த கூடியதாக இம்மண்டபம் உள்ளது.
   ஊறுகாயை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட  சீனச்சாடிகளும் இம் மண்டபத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மன்னர்கள் அன்னதானத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை இந்த அன்னதான மண்டபத்தின் பிரமாண்டம் உணர்த்தும்.
தாய்க்கொட்டாரம்:
  ன்னதான மண்டபத்தை அடுத்து வந்தால் வருவது இந்த  மாளிகைத் தொகுதியில் மிகவும் பழைமையான மாளிகையாக இருக்கும் தாய்க்கொட்டாரம். இது வேணாட்டு அரசனாக இருந்த இரவி வர்மா குலசேகர பெருமாளினால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாளிகையில் காணப்படும் ஏகாந்தமண்டபம் சுதேச பாணியிலே செதுக்கப்பட்ட மரத்தூண்களையுடையது. இந்தத் தாய்க் கொட்டாரம், பாரம்பரிய வீட்டமைப்பில் கட்டப்பட்டது. முதலாவது மாடியில் செதுக்கப்பட்ட மரப்பலகைகளால் பிரிக்கப்பட்ட படுக்கையறைகளும் இங்கு காணப்படுகின்றன.

இதற்கு வடக்கு பகுதியில் யாகங்கள் செய்ய ஹோமபுரம் உள்ளது. இதற்கு கிழக்குப் பகுதியில் சரஸ்வதி கோயிலும் உள்ளது. இக்கோயிலில் இருக்கு சரஸ்வதி திருவுருவம் நவராத்திரி சமயத்தில் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
உப்பரிகை:
    ப்பரிகை, மன்னன் மார்த்தாண்ட வர்மனால் கி.பி. 1750 இல் அமைக்கப்பட்டது. ஸ்ரீபத்மநாபனுக்காக இந்த மாளிகை அமைக்கப்பட்டதால் மிகவும் புனிதமானதாகக் கருதப்பட்டது. மூன்று மாடிகளையுடைய இந்த மாளிகையில், கீழ்ப்பகுதி அரச திறை சேரியாகக் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.
முதலாம் மாடியில் மருத்துவக் குணம் கொண்ட மரத்தாலான மருத்துவக் கட்டில் உள்ளது. இரண்டாவது மாடி, மன்னனின் ஓய்வெடுக்கும் பகுதியாகக் காணப்படுகிறது. மூன்றாவது மாடியில் இராமாயணம் மகாபாரதம், பைபிள் ஆகியவற்றில் வரும் சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன.உப்பரிகையின் முதலாம் மாடியிலிருந்து அந்தப் புரத்துக்குச் செல்லமுடியும். தற்போது அந்தப்புரத்திலே இரண்டு பெரிய ஊஞ்சல்களும் ஆளுயரக் கண்ணாடியும் காணப்படுகின்றன.அந்தப்புத்தைத் தாண்டிச் சென்றால் வருவது நீண்ட மண்டபமாகும். மண்டபத்தின் இருமருங்கிலும் சமஸ்தானத்தின் வரலாற்று நிகழ்வுகள் ஓவியங்களாகத் தொங்குகின்றன. அடிப்படையில் அவை யாவுமே மன்னர் மார்த்தாண்டவர்மாவுடன் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.

இந்திர விலாசம்:
   ண்டபத்தின் வழியே சென்றால் வருவது இந்திர விலாசம். மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் விருந்தினர்களுக்காக  அமைக்கப்பட்ட மாளிகை தான் இந்த இந்திரவிலாசமாகும். அரண்மனையின் மற்ற பகுதிகளைப் போல் இல்லாமல் இம் மாளிகை மேல் நாட்டு பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கதவுகளும் சன்னல்களும் பெரியதாகவும்,. கூரை உயரமாகவும் உள்ளது. விருந்தினர் மாளிகையின் சன்னல்கள், அந்தப்புரப்பெண்கள் நீராடும் தடாகத்தை நோக்கியபடி  அமைந்துள்ளது.
நவராத்திரி மண்டபம்:
  ந்திரவிலாசத்தை அடுத்து வருவது நவராத்திரி மண்டபமாகும். இங்குள்ள கருங்கல் மண்டபமும், ரஸ்வதி ஆலயமும்,  மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் கட்டப்பட்டதாகும். மண்டபத்தின் கூரை முழுவதும் கருங்கல்லாம் அமைக்கப்பட்டுள்ளது. அழகொளிரச் செதுக்கப்பட்ட கருங்கற்றூண்கள் கூரையைத் தாங்குகின்றன. நவராத்திரிக் காலங்களில் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த இந்த நவராத்திரி மண்டபம் பயன்படுத்தப்பட்டது. மன்னர் முதலானோர் மண்டபத்தில் இருந்தும், அரண்மனைப் பெண்கள் மண்டபத்தில் தென்கிழக்குப் பகுதியில் மரச்சலாகைகளால் அடைக்கப்பட்ட பகுதியிலிருந்தும் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடலாம். எளிமையான மரவேலைப்பாடுடைய அரண்மனையின் கட்டமைப்புக்கு மாறாக விஜய நகரக்கட்டட பாணியை உடையதாக இந்த மண்டபம் கட்டப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
பாதுகாப்பு அமைப்பு:
   டுக்கமான வாசலும், பாதையும் கொண்ட பத்மநாபபுரம் அரண்மனை ஒருவர்பின் ஒருவராக சொல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. கலகம் ஏற்படும் காலங்களில் கலகக்காரர்களை எளிதாக எதிர்கொள்வதற்காக இப்படி வடிவமைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பிரதான கட்டடத் தொகுதியில் காணப்படும் சுரங்கப்பாதைக்கான வழியும் கூட இதனையே பறைசாற்றுகிறது.
வெளியிலிருந்து அரண்மனை சன்னல்களூடாகப் பார்த்தால், உள்ளே நடப்பது எதுவும் தெரியாது. ஆனால் உள்ளிருந்து பார்த்தால் வெளி வீதியில் நடப்பவற்றை நன்கு அவதானிக்கலாம். அத்தகைய விதமாக சன்னல்கள் யாவும், மரச் சலாகைகளால் அடைக்கப் பட்டிருக்கின்றன.அந்தப்புரப் பெண்கள், வெளியாரின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கும் இந்த கட்டமைப்பு சான்றாக அமைகிறது.

மனதை மயக்கும் மைசூர் - சுற்றுலாத்தலங்கள்!

மனதை மயக்கும் மைசூர்
ர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம் மைசூர். இந்நகரமே பண்டைய கால மைசூர் இராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. இவ்வூரை சங்க காலத்தில் மையூர் என்றும் எருமையூர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் இந்நகரை ஆண்டவன் மையூர் கிழான் என்பவன் ஆவான். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை சிறுவன் என்று எண்ணி  சேர, சோழ மன்னர்களுடன் சேர்ந்து போரிட்டு தோற்ற வேளிர் அரசர்களில் இவனும் ஒருவன் ஆவான். பின்னர் 1399இல் இந்நகர் ஒரு பேரரசாக அமைக்கப்பட்டதோடு விஜயநகர பேரரசின் வீழ்ச்சி வரை அதன் கீழ் சிற்றரசாக இருந்தது. தற்போதும் இந்நகரை சுற்றி அமைந்துள்ள மைசூர் அரண்மனை, பிருந்தாவன் தோட்டம், மைசூர் அருங்காட்சியகம், மைசூர் ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம் போன்றவைகள் இந்நகரின் பெருமையை பறைசாற்றிவருகின்றன.


மைசூர் அரண்மனை:
வியக்க வைக்கும் பிரமாண்டத்துடன் வராலாற்று பின்னணியை கொண்டது மைசூர் அரண்மணை. திராவிடம், இந்தோ-சராசனிக், ஓரியண்டல், ரோமன் போன்ற அனைத்து கட்டிடக்கலை அம்சங்களுடன் அமைக்கப்ப்ட்டுள்ள அரண்மனைதான் மைசூர் அரண்மனை. மூன்று அடுக்குகளுடன், சாம்பல் நிற சலவைக்கற்களால் உருவாக்கப்பட்டு மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் மேற்கு பகுதியில் தங்கத்தாலான அலங்காரகலசங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 
கோம்பே தொட்டி என்று சொல்லப்படும் வாசல் வழியாக மட்டுமே இந்த அரண்மனையினுள் செல்ல முடியும். இங்கு 19,20ஆம் நூற்றாண்டை சேர்ந்த பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் முன்புறம் வைக்கப்பட்டுள்ள 7 பீரங்கிகள் தசரா பண்டிகை துவங்கும் போது முடியும் போது இந்த பீரங்கிகள் முழக்கப்பட்டு அவ்விழாவினை கௌரவபடுத்தப்படுகிறது. 

மேலும் இந்த அரண்மனையில் மரத்தால் செய்யப்பட்ட யானை சிலை 81 கிலோ தங்கத்தால் அலங்கரிப்பட்டுள்ளதோடு அரண்மனை சுவர்களில் சித்தலிங்க சுவாமி, ராஜா ரவி வர்மா மற்றும் கே. வெங்கடப்பா போன்ற சிறந்த ஓவியர்களின் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனையின் உள்ளே  வெவ்வேறு கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்ட 14 கோயில்கள் உள்ளன.

பிருந்தாவன் கார்டன்:

 மைசூரிலிருந்து 20கி.மீ தூரத்தில் அமைந்த்துள்ள பிரம்மாண்டமான தோட்டம் பிருந்தாவன் கார்டன் ஆகும், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே, காஷ்மீரிலுள்ள புகழ் பெற்ற ஷாலிமார் கார்டனை பின்பற்றி இந்த பிருந்தாவன் கார்டன் 60 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பசுமையான புல்வெளிகள், மலர் படுக்கைகள், நீர் தடாகங்கள், நீர் ஊற்றுகள் என பல எழிழ் நிறைந்த அம்சங்களோடு வடக்கு பகுதியில் இசைக்கேற்ப நடனமாடும் நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பூங்காவின் மையத்தில் சிறு குளத்தில் காவேரி தெய்வத்தின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

ரீஜனல் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி:

1995 ஆம் ஆண்டு சாமுண்டி மலையடிவாரத்திலுள்ள கரன் ஜி ஏரிக்கரையில் அமைக்கட்டதுதான் இந்த ரீஜினல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகம்.இங்கு இயற்கை சுற்றுச் சூழல், விலங்குகள் மற்றும் தாவரங்களிடையே உள்ள சமச்சீர் உறவு போன்ற இயற்கை சார்ந்த அறிவியல் உண்மைகளை இங்கு தெரிந்து கொள்வதோடு உயிரியல் பரிணாம வளர்ச்சி, உயிரியல் பன்முகத்தன்மை, இயற்கை பாதுகாப்பு ஆகியவற்றையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

சாமுண்டி மலை:

மைசூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1065 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள மலைதான் சாமுண்டி மலையாகும். இம்மலையில் ஸ்ரீ சாமூண்டிஸ்வரி கோயில் அமைந்துள்ளது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இப்பழமையான கோயில் 1827 ஆம் ஆண்டு மைசூர் மன்னர்களால் புதுபிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இக்கோயிலின் முக்கியமான சிறப்பம்சம் ஒரே ஒரு கருப்பு சலவைக்கல்லில் 5 மீட்டர் உயரத்தில் செதுக்கப்பட்டுள்ள நந்தி சிலையாகும். மேலும் இக்கோயிலின் எதிரில் அசுர குல மன்னனான மகிஷாசுரனின் பிரம்மாண்ட சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 


ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் பூங்கா:


1892 ஆம் ஆண்டு மஹாராஜா சாமராஜ உடையாரால் 250 ஏக்கர் பரப்பளவில்  அமைக்கப்பட்ட இந்த உயிரியல் பூங்கா இந்தியாவிலேயே புகழ் பெற்ற உயிரியல் பூங்காவாகும்.இப்பூங்கா முதலில் அரண்மனை விலங்குக்கூடம் என்றழைக்கப்பட்டது.  அழிந்து வரும் விலங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இங்கு திட்டமிட்ட இனப்பெருக்க முறைகள், பராமரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதனால் இங்கு யானைகள், மனிதக்குரங்குகள், காட்டெருமை சிறுத்தை, புலி, பார்பெரி மலை ஆடு, வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, ஈமு, நீர் யானை, கங்காரு,போன்றவை பராமருக்க்கப்பட்டு  இனவிருத்தியும் செய்யப்படுகின்றன.

மேலும் அரியவகை விலங்குகளான எலி மான், நான்கு கொம்பு காட்டு மான், கேரக்கேல் எனும் அதிசய காட்டு பூனை, சிவட் எனும் உடும்பு , நீலகிரி லாங்குர் எனப்படும் கருங்குரங்கு , சிங்காரா எனும் அரிய வகை கலைமான், பின்டுராங் என்று அழைக்கப்படும் அதிசய பூனைக்கரடி, சிறுத்தை போன்றவைகளும் பராமரிக்கப்படுகின்றன.

ஜகன்மோகன் அரண்மனை:

மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861 ஆம் ஆண்டு கட்டப்பட்டதுதான் இந்த ஜகன்மோகன் அரண்மனை. இந்த அரண்மனையின் தர்பார் ஹால் என்றழைக்கப்படும் விதானத்தில் தான் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் தன் பிறந்தநாளை விழாவை சிறப்பாக கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரண்மனையின் பெரிய மரக்கதவில் தசாவதார காட்சிகள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசர்களின் ஓவிங்களும், அவர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

ஜயலட்சுமி விலாஸ் மேன்ஷன்:


1905 ஆம் ஆண்டு மஹாராஜா சாமராஜ உடையாரின் மகள் இளவரசி ஜயலட்சுமிக்காக நான்காம் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் மரம், இரும்பு, செங்கல், சுண்ணாம்பு குழம்புகளை கொண்டு 300 ஜன்னல்கள், 127 அறைகள், 287 அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகளுடன் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது இந்த அரண்மனையாகும்.




செயிண்ட் பிலோமினா சர்ச்:

ரோப்பிய கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டது செயிண்ட் பிலோமினா சர்ச். செயிண்ட் ஜோசப் சர்ச் என்றும் அழைக்கப்படுகிறது. சிலுவையை ஒத்த வடிவத்தில் இத்தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தேவாலயத்தில் சிலுவையின் நெடுக்கில் செல்லும் தூணைக் குறிக்கும் பகுதி பக்தர்கள் கூடும் சபையாகவும் குறுக்காக செல்லும் சிலுவைப்பகுதியை குறிக்கும் பகுதியின் இரு பக்கத்தில் ஒன்றில் பலிபீடமும் மற்றொன்றில் ஸ்தோத்திர இசைக் கூடமும் வருமாறு இந்த தேவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த தேவாலயத்தில் பலிபீட த்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள நிலவறைத்தளத்தில் 3ம் நூற்றாண்டை சேர்ந்த தெய்வீக பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஜன்னல் கண்ணாடிகளில் கிறிஸ்துவி பிறப்பு, கடைசி விருந்து, சிலுவைத் தண்டனை, உயிர்த்தெழுதல் போன்ற காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.