பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி புத்தம் சரணம் கச்சாமி... என்று பல நாடுகளில் பரவிக்கிடக்கும் புத்தமதத்துக்கு பூர்வீகம் இந்தியாதான். இதற்குச் சான்றாக நாடெங்கிலும் பழங்கால சின்னங்கள், கல்வெட்டுக்கள், ஓவியங்கள் நிறைய உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை சாஞ்சி ஸ்தூபி மற்றும் அதைச்சுற்றியுள்ள கலையம்சம் மிக்க கட்டிடங்கள். மத்தியப்பிரதேச மாநிலம் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி கிராமத்தில் இந்த ஸ்தூபி உள்ளது. கிராமத்தின் பெயராலேயே ஸ்தூபியும் அழைக்கப்பட்டு வருகிறது. போபாலில் இருந்து சுமார் 46கி.மீ தொலைவிலும், பெஸ்நகர் மற்றும் விதிஷா ஆகிய ஊர்களில் இருந்து 10கி.மீ தொலைவிலும் ஒரு மேடான பகுதியில் இது அமைந்துள்ளது. சரித்திரத்தின் சாட்சியாக காட்சியளித்துக்கொண்டிருக்கும் சாஞ்சி ஸ்தூபியின் பின்னணியில் பக்தியும் உண்டு. காதலும் உண்டு. புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர், பேரரசர் அசோகர். இவரை விதிஷா நகரத்து வியாபாரிகள் சிலர் அணுகி, புத்த மையம் ஒன்று அமைக்க இடம்தருமாறு கேட்டுள்ளனர். உடனே சம்மதம் தெரிவித்த அசோகர், புத்த மையம் அமைக்கும் பணிகளில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். அப்போது அந்த வியாபாரிகளில் ஒருவரது மகள்மீது காதல் கொண்ட அசோகர், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, தலைநகர் பாடலிபுத்திரத்துக்கு நாம் கண்டிப்பாக செல்ல வேண்டுமா? இங்கேயே இருந்து இல்லற வாழ்வில் ஈடுபட-முடியாதா.... என காதல்மனைவி கேட்டுவிட, மறுப்புச் சொல்ல முடியவில்லை மன்னருக்கு. சாஞ்சி பகுதியிலேயே தங்கி விட்டார். வீட்டையும், நாட்டையும் இங்கிருந்தே கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். அரச தம்பதிக்கு மகேந்திரா, சங்கமித்ரா என இரண்டு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளும் புத்தமதத்தின்மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்தனர். பின்னாளில் இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளிலும் புத்தமதத்தைப் பரப்பியுள்ளனர். சாஞ்சியில் பல ஸ்தூபிகள், சிறு கோவில்கள் உள்ளன. இவை கி.மு.3 - கி.பி.13ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டவை என கணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரைவட்ட கோள வடிவத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் பிரதான ஸ்தூபிதான், 3ம் நூற்றாண்டில் அசோகரால் கட்டப்பட்டதாம். செங்கல் மற்றும் உள்ளூரில் கிடைக்கும் கற்களால் அழகுற அமைக்கப்பட்டு இன்றளவும் வடிவமைப்பால் அசத்திக்கொண்டிருக்கிறது இந்த ஸ்தூபி. இதை தியான அரங்கம் என்று கூட கூறலாம். இதன் கட்டிடங்களில், சுவர்களில் புத்தரைப்பற்றி நேரிடையாக குறிப்பிடாமல், அவரைப் பற்றி மறைமுகமாக சில குறிப்புகள் உணர்த்தப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு. தாமரை வடிவம்-புத்தரின் பிறப்பையும், மரம் - புத்தர் ஞானம் அடைந்ததையும், சக்கரம்- புத்தரின் சொற்பொழிவையும், ஸ்தூபி- முக்தியையும் குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. சாஞ்சி ஸ்தூபிக்கு நான்கு முக்கிய வாசல்களும் உள்ளன. இந்த வாசல்களிலும் கலைத்திறன் பளிச்சிடுகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள புத்தமதத்தினரையும் கவர்ந்துள்ள சாஞ்சி ஸ்தூபி 1989ம் ஆண்டில் யுனெஸ்கோ பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றது. எப்படிப் போகலாம்? சாலை மார்க்கமாக போபாலில் இருந்து 46 கி.மீ, விதிஷாவில் இருந்து 10 கி.மீ, இந்தூரில் இருந்து 232 கி.மீ தொலைவில் சாஞ்சி உள்ளது. ரயிலில் செல்வதென்றால் போபாலில் இறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்லலாம். போபாலில் விமான நிலையமும் உள்ளது. சாஞ்சி ஸ்தூபியை பார்வையிட கட்டணம் உண்டு. இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் அருங்காட்சியகம் ஒன்றும் இங்கு உள்ளது. |
No comments:
Post a Comment