Search This Blog

Wednesday, 27 November 2013

தொண்டைச் சளிக்கு ஓமம்!


ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் சுமார் 2 - 2 1/2 மணி நேரத்திற்கு மூக்கிலிருந்து நீராக வடிகிறது. தொண்டையில் கபம் கட்டிக் கொள்கிறது. சீரணமும் தாமதமாகிறது. தும்மலுடன் கபம் வெளியேறுகிறது. இது எதனால்? இது மாற என்ன சாப்பிடலாம்?

சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், கிராம்பு, ஏலக்காய் விதை இந்த ஐந்தையும், ஒரு தளிர் வெற்றிலையின் நடுநரம்பும், கீழ்ப்பகுதியையும் நீக்கிவிட்டு, அதில் சுருட்டி, ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் வாயில் அடக்கி நன்றாக மென்று சாப்பிடவும்.

சாப்பாட்டுக்குப் பிறகு, கபம் உற்பத்தியாவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைத்ததன்மை போன்ற குணங்கள் நிறைந்த கபம் எனும் தோஷமானது, உணவிற்குப் பிறகு உங்களுக்குக் கூடுவதால், மூக்கிலிருந்து நீராகவும், தொண்டைக் கபம், தும்மல் போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. மேற்குறிப்பிட்ட ஐந்தும், வெற்றிலையுடன் சேர, இந்தக் குணங்களுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு, கபத்தைக் குறைக்கின்றன.

மேலும் இவை அனைத்தும் பசியைத் தூண்டிவிடுவதால் உங்களுடைய செரிமானத்தின் தாமதம் விரைவில் குணமாகிவிடும். இவை மூலம் உட்கொண்ட உணவு செரித்துவிடுவதால் அகம் மலர்கிறது. செரிப்பைத் துண்டுவதாலேயே சீரகத்திற்கு, சீர்அகம் என்று பெயர். சாப்பாட்டுக்குப் பிறகு சீரகம் சாப்பிட்டால் வெகுட்டல், உமட்டல், வயிற்று உப்புசம், உளைச்சல், வயிற்று கனம் முதலிய ஜீரண உபாதைகள் நீங்கும்.

உண்ட களைப்பு நீங்க, வாயில் நீரூற்று நிற்க 5, 6 சோம்பு விதைகளை மென்று சாப்பிடுவது வழக்கம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நுரைத்த கபத்துடன் காணும் இருமல் முதலியவற்றில் இது நன்கு உதவும். வாசனையுடன் கூடிய கார்ப்பும் இனிப்பும் உள்ள விதை.

ஓமம் கபத்தைப் பிரித்து நாட்பட்ட இருமல், மூச்சிரைப்பு, கபம் வெளிவருவதற்காகக் கடுமையாக இருமுவது, இருமி இருமிக் கடைசியில் மிகக் கஷ்டப்பட்டுச் சிறிது கபம் வெளியாவது போன்ற கஷ்டங்களை நீக்கிவிடும். ருசியின்மை, பசி மந்தம், ஜீரண சக்திக் குறைவு, வயிற்று உப்புசம், வயிறு இறுகி கட்டிக் கொள்ளுதல், வயிற்று வலி, கிருமியால் வேதனை போன்றவற்றிற்கு ஓமமும் உப்பும் சேர்த்த சூரணத்தைச் சாப்பிடும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் கிராமங்களில் பழக்கத்திலுள்ளது.

பாவபிராகர் எனும் முனிவர் கிராம்பைப் பற்றி வெகுவாகப் புகழ்கிறார். காரமும் சிறிது கசப்பும் நிறைந்த அது, எளிதில் செரிப்பது. கண்களுக்கு நல்லது, குளிர்ச்சியானதாக இருந்தாலும் ருசி, பசியைத் தூண்டிவிட்டு கப பித்த ரத்த உபாதைகளை அகற்றக் கூடியது; மூச்சிரைப்பு, இருமல், விக்கல், க்ஷயரோகங்களை நீக்கக் கூடியது என்று தெரிவிக்கிறார். தன்வந்தரி நிகண்டுவில் இதயத்திற்கு நல்லதும், பித்தத்தைக் குறைப்பதும், விஷத்தை முறிக்கக்கூடியதும், விந்துவை வளர்ப்பதும், மங்களகரமானதும், தலையைச் சார்ந்த உபாதைகளை நீக்கக் கூடியது என்றும் கிராம்புவைப் பற்றி மேலும் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஏலக்காய் ருசி, பசி, ஜீரணச் சக்தி தரும். உடற்சூட்டைப் பாதுகாக்கும். வாயில் நீர் ஊறுதல், நாவறட்சி, வியர்வையுடன் கூடிய தலைவலி, வயிற்றில் கொதிப்பு, மலத்தடை, காற்றுத்தடை, வாந்தி, உமட்டல், சிறுநீர்ச் சுருக்கு, உஷ்ணபேதி, நெஞ்சில் கபக்கட்டு உள்ள போது ஏலத்தின் விதையைச் சுவைக்கலாம்.

வெற்றிலை, உணவிற்குப் பின் வாயின் சுத்தத்திற்கும் ஜீரணத்திற்கும் உதவும், உமிழ்நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும். காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி முன்னும் பின்னும் துடைத்துச் சுத்தமாக்கிப் பின் உபயோகிப்பர்.

அதனால் இவற்றை உபயோகித்து நீங்கள் விரைவில் கபத்தின் உபாதையிலிருந்தும், மந்தமான பசியிலிருந்தும் விடுபடலாம்.

No comments:

Post a Comment