Search This Blog

Monday, 16 September 2013

காற்றில் கலந்து வரும் ஆரோக்கியம்!


நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ நல்ல சுத்தமான காற்று அவசியம் தேவை நல்ல பிராணவாயு நிறைந்த காற்றை சுவாசித்தால்தானே, அதை நம் உடல் ஏற்று, ரத்தம் சுத்தமடைந்து, அதிலுள்ள கழிவுகளை கரியமில வாயுவாக மாற்றி, நம் உடலானது நம் நாசிகள் மூலம் வெளியேற்ற முடியும்!ஆனால் மக்கட்தொகை பெருகி, ஜனநெருக்கம் அதிகம் ஆகும் பொழுது அத்தனை மக்களும், உயிர் வாழ் பிராணிகள்,மிருகங்கள் அனைத்தும் சேர்ந்து மூச்சு விடும் பொழுது வெளியேற்றும் கரியமில வாயு, காற்றில் கலந்து அந்த பகுதியில் உள்ள காற்று மாசு படாதா! என்று எண்ணத் தோன்றும்.


இங்குள்ள செடி கொடிகளும், மரங்களின் இலைகளும் சுவாசிக்கின்றன. ஆனால் அவைகள் காற்றில் உள்ள கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு, நல்ல பிராணவாயுவை வெளியிடுகின்றன. இதனால் காற்றில் கரியமில வாயு குறைந்து, பிராண வாயு அதிகரிக்கிறது. இயற்கை, இப்படி ஒரு சமன்பாட்டு நிலைமை ஏற்படுத்துகிறது! இதனை எத்தனை பேர் உணருகிறார்கள்.


sep 16 - air on earth.MINI

 


மொத்தத்தில் உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் காற்றை அசுத்தப்படுத்தக் கூடிய, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் உற்பத்தியாகின்றன. இதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 51/2 லட்சம் பேர் காற்று அசுத்தமாவதால் ஏற்படும் நோய்களால் இறந்துபோகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 3.35 லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயினால் இறக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் காற்று மாசுபடுவதுதான்.


உலகிலுள்ள மனிதர்கள் எந்த நோயால் அதிகமாக இறக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு COPD என்று சொல்லக்கூடிய நாள்பட்ட நுரையீரல் பாதை தடுப்புநோய் (Chronic Obstructive Pulmonary Disease) பதினாறாவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்த நோய் நான்காவது இடத்துக்கு வந்துவிட்டது.


ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரம் கேலன் காற்றை சுவாசிக்கிறான். (ஒரு கேலன் என்பது சுமார் 3.88 லிட்டர் ஆகும்). இதில் சுமார் 142 கேலன் சுத்தமான ஆக்சிஜன் வாயு தான் அவனது உடலுக்கு கிடைக்கிறது. மீதமுள்ளதெல்லாம் சுத்தமற்ற காற்று தான். இந்த நிலை தொடர்ந்தால் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எல்லா மருத்துவமனைகளிலும் நுரையீரல் பாதிப்பு நோயாளிகள் தான் அதிகமாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.


காற்று மாசு இயற்கையாக எரிமலை வெடித்து சிதறுதல் மூலமாகவும் ஏற்படுகிறது. சுமார் 500 எரிமலைகள் உலகில் உயிரோடு இருக்கின்றன. இதில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 எரிமலைகள் வெடித்து சிதறி விஷ வாயுக்களையும், சாம்பலையும் கக்கிக்கொண்டு இருக்கின்றனவாம். இந்த விஷ வாயுக்களும், சாம்பலும் எரிமலை வெடிக்கும்போது வெளியாகி காற்றில் கலக்கின்றது.


பூமியிலிருந்து சுமார் 16 முதல் 32 கிலோ மீட்டர் உயரத்துக்கு எரிமலைகள் வெடித்து சிதறி மேற்கூறிய மாசுப் பொருட்களை வானத்தில் பரப்பி விடுகிறது. இப்படிப்பட்ட எரிமலைகளுக்குப் பக்கத்தில் சுமார் 50 கோடி மக்கள் வாழ்கிறார்களாம். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
சிகரெட் புகைப்பவர்களை விட பக்கத்தில் நின்று கொண்டு அவர்கள் விடும் புகையை சுவாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பாதிப்பு அதிகம் உண்டு. நீங்கள் விடும் சிகரெட் புகை இந்த நாட்டு மக்களுக்கே கெடுதல் செய்கிறது என்பதை சிகரெட் பிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..


நீங்கள் ஒருத்தர் மட்டும் சிகரெட் புகைக்கவில்லையே? உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேர் சிகரெட் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இத்தனை கோடி பேரும் விடும் புகை, காற்றை அசுத்தப்படுத்துமா…படுத்தாதா… என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் கூட இந்த அசுத்தக் காற்றை சுவாசிக்கிறீர்கள் அல்லவா. இது கெடுதிதானே! ஆகவே தயவு செய்து இன்றோடு சிகரெட்டை நிறுத்திவிடுங்கள். இதுவரை புகைத்தது போதும். நாம் வசிக்கும் இடத்தைச் சுற்றி சிகரெட் புகைத்தால் கர்ப்பிணிப் பெண்களின் கருவில் குழந்தை உருவாகுவதையும் தொந்தரவு செய்யும்.



நாம் இறை வழிபாடு செய்ய பயன்படுத்தும் கற்பூரம் எரியும்போது கார்பன் துகள்களையும், கார்பன் படிமங்களையும் அதிகமாக உண்டு பண்ணுகிறது. இவை காற்றில் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனாலேயே இப்பொழுதெல்லாம் கோவில்களில் கற்பூரத்திற்குப் பதிலாக எண்ணை அல்லது நெய்யை தீபம் ஏற்ற பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அதையே நாம் தொடர்ந்து பயன்படுத்தலாமே.


சுத்தமான காற்று கிடைப்பது என்பது மிக மிகக் கஷ்டமாக இருக்கிறது. இந்த நிலையில் சுத்தமான ஆக்சிஜனுக்கு எங்கே போவது என்ற கவலையைப் போக்க `ஆக்சிஜன் பார்லர்` என்ற கடைகளை வெளிநாடுகளில் திறந்திருக்கிறார்கள். இந்தியாவிலும் இருக்கிறது.


சுத்தமான ஆக்சிஜனை சுவாசித்து உடலில் தெம்பை ஏற்றிக்கொள்ள இந்தக்கடைகள் உபயோகப்படுகிறது. இந்தக் கடைகளில் அதிக சதவீதம் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். நம் நாட்டில் இது இன்னும் பிரபலமாக வில்லை. நாம் காற்றை அசுத்தப்படுத்தாமல் இருந்தாலே இந்தக் கடைகளெல்லாம் தேவையில்லை.


அதுசரி… நாம் காற்றை அசுத்தப்படுத்தாமல் இருப்பது எப்படி?


* பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட எந்தப் பொருளும் மண்ணுக்குள் மக்காது. எரித்துத்தான் ஆகவேண்டும். எரித்தால் நச்சுப்புகை வரும். ஆகவே பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை குறையுங்கள்.


* மண்ணில் மக்கிப் போகக்கூடிய எல்லாப் பொருட்களையும் கொளுத்துவதற்குப் பதிலாக புதைத்து விடுங்கள்.


* வீடு, பாத்ரூம் முதலியவற்றை கழுவ அதிக சக்தி வாய்ந்த `கிளினீங்’ பொருட்களை உபயோகிக்காதீர்கள்.


* கியாஸ் மூலம் இயங்கும் மெஷின்களுக்குப் பதிலாக மின்சாரம் மூலம் இயங்கும் மெஷின்களை அதிக அளவில் உபயோகப்படுத்துங்கள்.


* கார் ஓட்டும்போது அடிக்கடி வேகத்தை கூட்டிக் குறைத்து ஓட்டாதீர்கள். மிதமான வேகத்தில் செல்லுங்கள்.


* சிகரெட்டை நிறுத்துங்கள்.


* உங்களது காரில் அதிக புகை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


* நம் தலைமுறைகள், நீண்ட காலத்துக்கு நிலைத்து உயிர்வாழ காற்று மிக மிக முக்கியம். அதற்கு இந்த தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் உதவி புரிய வேண்டும்.அதிலும் காற்றை காசு கொடுத்து வாங்கும் நிலைமையை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment