Search This Blog

Friday, 29 November 2013

பெரியார் கடவுளுக்கு எதிரியா?

பெரியார் ஒரு நாத்தீகர். கடவுளின் எதிரி. ஆன்மீகவாதிகளுக்கு எதிரி என பெரியாரையும் அவரது போராட்டங்களையும் பற்றியும் வருகிற பரப்புரைகள் நாம் அறிந்தவை. பெரியார் கடவுளுக்கு எதிரியா? இந்த கேள்விக்கு பெரியார் கருத்துக்களை அவரது சுயமரியாதை போராட்டத்தோடு இணைத்து பார்த்தால் மட்டுமே உண்மையை உணரமுடியும். சுயமரியாதை போராட்டமும் பெரியார் மதங்களை பற்றி கொண்டிருந்த பார்வையும் ஒன்றோடொன்று இணைந்தவை.

பெரியார் ஆச்சாரமான ஆத்தீக குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் பராமரிக்கும் கோவில் ஒன்று இருந்தது. இளவயதில் காசியில் 'இந்து சமய' மடங்களுக்கு சென்று சிறிதுகாலம் துறவறம் பூண்டவர். பெரியார் மதம் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாரா? "எனது வாழ்நாளில் என்றைக்காவது சாதி-மதத்தையோ உணமையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கின்றேன்....எப்போதிலிருந்து இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை என்றும் யோசித்து பார்த்திருக்கின்றேன், கண்டுபிடிக்கமுடியவில்லை." அவரே சொல்கிறார் (நவமணி 1939 ஆண்டு மலர்).


1929, பிப்ரவரி 17-18 தேதியில் செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் தான் மதத்தை பின்பற்றக்கூடாதென தீர்மானிக்கப்பட்டது. "(இந்துமதம்)பிறவியினால் உயர்வு, தாழ்வு கற்பிக்கிறது, வருணாசிரம முறையைத் தோற்றுவித்து வளர்க்கிறது" என அந்த மாநாட்டு தீர்மானம் பெரியார் மேற்பார்வையில் நிறைவேற்றப்பட்டது. 'இந்து மதம்' ஆன்மீக தத்துவத்துடன் இயங்குவதோடு தனது பணியை முடித்துக்கொள்ளவில்லை. அதன் இயக்கமும், தாக்கமும் சமூக வாழ்வில் பல கேடுகளை விளைவித்தன. குறிப்பிட்ட சாதியினர் அனைத்து வளங்களையும், வாய்ப்புகளையும் அனுபவிக்க, பெரும்பான்மை மக்கள் அவர்களுக்காக உழைக்க வேண்டிய நிலை. அடிமைப்படுத்தப்பட்ட மக்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பலவித சாத்திரங்கள், மூடப்பழக்கங்கள் உருவாக்கப்பட்டன. அதனால் தான் பெரியார் மதத்தை பொருள்முதல்வாத செல்வாக்கு அடிப்படையில் அணுகினார்.


மனித இனத்தை வகைப்படுத்த ஒருகாலத்தில் சில நெறிகள் அவசியமாயிற்று. அன்றைய காலம் வேறுமாதிரியான சமூக, அரசியல், பொருளாதார சூழலில் மனித சமுதாயம் குழுக்களாக இருந்தது. அன்று இருந்த சமூகத்தில் இன்று இருப்பது போன்ற மக்கள் அமைப்பு முறைகளும், சட்டங்களும் இல்லை. மனித இனத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு மனிதகுழுக்களும் நெறிகளை தனக்கென உருவாக்கியது. உருவாக்கப்பட்ட நெறிமுறைகள் எந்த வகை மக்கள் ஆதிக்கம் அதிகம் இருந்ததோ அவர்களுக்கு ஆதரவாகவே அமைக்கப்பட்டன. அவற்றை அனைவரும் கடைபிடிக்க வைப்பதற்காக இயற்கையை இணைத்து வழிப்பாட்டு முறைகள் தோன்றலாயிற்று. அதனால் தான் பாகன் வழிபாட்டுமுறையில் இயற்கையை, தனது அறிவுக்கு எட்டாதவற்றை, மனிதன் எதை பார்த்து பயப்பட்டானோ அவற்றை என எல்லாவற்றையும் வழிபட்டு வந்தனர்.


கிரேக்கம், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா என எங்கும் இந்த வழிபாடுகள் விதவிதமாக இருந்துள்ளன. அந்த நிலையை கடந்து மனித சமுதாயம் இன்று அமைப்பு முறையிலும், சட்டங்களின் அடிப்படையிலும் வளர்ச்சியடைந்துள்ளது. இன்றைய காலத்திற்கு ஏற்ப மதத்தின் அணுகுமுறையில், தத்துவங்களில், நெறிமுறைகளில், நம்பிக்கைகளில் மாற்றம் அவசியமானது. ஒரு காலத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்பது மனித சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு செல்ல அனுமதிக்காத பழமைவாதமாக தான் இருக்க இயலும். முன்னர் பூமி தட்டையானது என்று கிறிஸ்தவ மத நம்பிக்கையாக இருந்தது. இந்து மதத்திலும் பூமியை பாயாக சுருட்டிய புராணக்கதைகளை பார்க்கிறோம். பூமி தட்டையல்ல, உருண்டை வடிவமானது என நிரூபித்தான் ஒரு அறிவியலாளன். மதவாதிகள் அவனை கடுமையாக எதிர்த்தனர். இவை அனைத்தும் கடந்த காலங்களில் இருந்த நம்பிக்கை. கடைசியில் என்ன ஆயிற்று? பூமி உருண்டை என்பதை அறிவியலும், கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. கத்தோலிக்க மதத்தலைவர் போப் இதற்காக மன்னிப்பும் கேட்டார்.


"காலநிலைக்கும், சமுதாயநிலைக்கும் அறிவு முதிர்ச்சிக்கும் ஏற்றபடி முறைகள் வகுக்கப்படவேண்டியவை தவிர, ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் பொருத்தமென்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லையென்பது தான் பொருள்" என்றார் பெரியார். மதத்தின் பழைய கருத்துக்களை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றி மறுமலர்ச்சி ஏற்படுத்த கலகம் செய்தவர் பெரியார். அறிவியலில் எப்படி ஒரு ஆய்வாளரின் கண்டுபிடிப்பை இன்னொருவரது ஆய்வு முடிவுகள் பொய்யென நிரூபித்தால் ஏற்றுக்கொள்ளுவார்களோ அதே அறிவியல் பார்வையை பெரியார் மதத்திற்கும் வைத்தார். ஒரு காலத்தில் எழுதப்பட்ட, சொல்லப்பட்ட தத்துவங்கள், கதைகள், புராணங்கள், சாத்திரங்கள் நடப்பு காலத்திற்கு பொருந்துமா என மதங்களை பரிசீலனை செய்து மாற்றங்களை உள்வாங்குவது ஒவ்வொரு காலத்திலும் அவசியம். இதை தான் ஆங்கிலத்தில் contexualising என்பார்கள். மதவாதிகளுக்கு மாற்றங்களை உள்வாங்கும் திறந்த மனது, எதிர்கருத்துக்களை ஏற்கும் பக்குவம் ஆகியவை அவசியம்.


 இல்லையென்றால் மதம் உட்பட அனைத்து சமூக நிறுவனங்களும் அடிமைத்தனத்தின் சின்னமாக தான் விளங்கும். ஒரு காலத்தில் குழந்தை திருமணங்கள், விதவைகளுக்கு திருமண மறுப்பு, உடன்கட்டை ஏற்றிக் கொல்லுதல் என இருந்தவை இன்றைய சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளதா? இன்றைய மனித உரிமை அடிப்படையில் இவை அனைத்தும் குற்றங்கள். இப்படியான ஒரு வளர்ச்சி நிலைக்கு நாம் முன்னேற பல போராட்டங்கள் காரணமாக இருந்தன. பெரியாரும் இப்படியான ஒரு போராட்டத்தையே ஏற்படுத்தி எதிர்கருத்தை உருவாக்கினார். போராட்டம் செய்பவர்களை கண்டிப்பது மட்டும் தான் குறிக்கோளாக இருந்தால் போராட்டங்களின் காரணம் இருந்துகொண்டே இருக்கும். 'இந்து மதவாதிகள்' இந்த தவறை தான் செய்கிறார்கள். இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். பிரச்சனைகளின் அடிப்படை காரணிகளை கண்டு அவற்றை மாற்றினால் மதத்தில் மட்டுமல்ல மனங்களிலும் மறுமலர்ச்சி ஏற்படும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.


என்கிற குறளில் இதை தான் வள்ளுவர் ஆழ்ந்த பொருளுடன் கூறுகிறார்.

இதற்கு உதாரணமாக ஹாங்காங்கில் நடந்த ஒரு விடயத்தை இங்கு பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ஹாங்காங்கில் எந்த பகுதியில் சென்றாலும் விளையாட்டு மைதானம், உள் விளையாட்டு அரங்கங்கள், பூங்கா, நூலகம் என பொழுதுபோக்கு இடங்கள் நிறைந்து காணப்படும். மேற்கு உலக நாடுகளில் கூட இந்த வசதி குறைவு. இதற்கு பின்னால் 1970களில் மாணவர்களும், இளைய தலைமுறையும் உருவாக்கிய போராட்ட சூழல் காரணம். அன்றைய அரசு பிரச்சனையின் காரணத்தை ஆய்வு செய்தபோது பொழுதுபோக்கு இல்லாமல் மனஇறுக்கத்துடன் இளைய தலைமுறையினர் இருப்பதை கண்டுபிடித்தது. பிறகென்ன ஊரெல்லாம் பொழுதுபோக்கு வசதியை உருவாக்கியது அரசு. அதன் பின்னர் பிரச்சனையும் ஓய்ந்தது. இன்று ஹாங்காங்கில் வேலையில்லாமை பற்றி அப்படியான ஆய்வுகள் இல்லை என்பது வேறு விடயம். அன்று போராடிய இளைஞர்களை அடித்து நொறுக்கியிருந்தால், இன்றைய ஹாங்காங் வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

"மனிதத்தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பெயரால் ஏற்பட்டுள்ள பழக்கவழக்கங்களே காரணமாயிருப்பதால்,

அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென்றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும் இம்மாநாடு கருதுகிறது." என்கிறது 1931 விருதுநகர் சுயமரியாதை மாநாட்டு தீர்மானம். "நமது நாட்டைப் பொறுத்தமட்டில் 'பிறவிப்படியும் தொழில்படியும்' ஒழிந்த நிலைதான் சமதர்மநிலை என்று சொல்லப்படுவதாகும்." பெரியாரும், சுயமரியாதைக்காரர்களும் மதத்தை எதிர்க்க அடிப்படை காரணம் என்ன என்பது இந்த தீர்மானத்தில் விளங்குகிறது.

இந்தியா முழுவதும் இன்று பரவியுள்ள மதவெறியை பார்க்கும் போது, "இந்திய நாட்டில் தோன்றியுள்ள மத வேற்றுமைகளும், பகைகளும் அழிய வேண்டுமானால், அறிவுள்ள இந்தியர்கள் முதலில் மத உணர்ச்சியைப் புறக்கணிக்க வேண்டுமென்று முடிவு செய்கிறது" என்கிற 1931 விருதுநகர் சுயமரியாதை மாநாட்டு தீர்மானம் எவ்வளவு பொருத்தமானது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. ஆன்மீகம் என்பதும் மதம் என்பதும் வேறுபட்டவை. மதம் என்பது நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பின் பின்னால் அது சொல்லக்கூடிய அனைத்தையும் ஏற்ற சார்ந்திருப்பு. தான் சார்ந்துள்ளது தான் உண்மை, அது தான் வேதம், அது தான் இறைநெறி, அது தான் சொர்க்கத்திற்கு வழி என வியாபார நிறுவங்களைப் போல சண்டையிடும் நிலை மதம் சார்ந்தது.

ஆன்மீகம் என்பது அறநெறியை போதிப்பது என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். அய்யனாரை வழிபட்டாலும், அல்லாவை தொழுதாலும், கிருஸ்ணனை கும்பிட்டாலும், இயேவை வேண்டினாலும், புத்தனை ஏற்றுக்கொண்டாலும், சுயமரியாதை மீது பற்றுகொண்டு மனிதநேயமாக இருந்தாலும் நாம் மனிதர்கள் ஒரு இனம் என்னும் ஆழமான எண்ணமே அறநெறியாக இருக்க இயலும். போட்டி போட்டு ஒருவரை ஒருவர் தாக்குவதும், தடுப்பதும், ஆதிக்கம் செலுத்துவதும் ஆன்மீகத்தில் எந்த வகை? இந்த வெறி மதம் சார்ந்தது தானே தவிர அறநெறியோ ஆன்மீகமோ அல்ல. அறநெறியாளர்களாக இருந்தால் இவ்வகை செயல்களை செய்யமாட்டார்கள். இப்படிப்பட்ட செயல்கள் நடக்கும் காலங்களில் பெரியார் போன்ற போராட்டக்காரர்கள் சமுதாயத்திற்கு அவசியம் தேவை. அவர்கள் உருவாக்குகிற போராட்டங்கள் என்னும் காலக்கண்ணாடியை பார்த்தாவது நாம் திருந்தியிருக்கிறோமா? இது போராட்டக்காரனின் குற்றமல்ல. மதக் கலவரக்காரர்களின் குற்றம்.

இந்து மதத்தின் வர்ணாஸ்ரம சாதி அடிமைத்தனத்தையும், அறிவுக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களையும் எதிர்த்ததே பெரியாருடைய கொள்கை. பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை இந்து மதத்தின் சாதி ஆதிக்க வேதங்கள் நாயை விட கேவலமாக நடத்தியதை உடைக்கவே பெரியாரின் கட்டளைகள் "கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என உச்சமாக அமைந்தது. இந்துமத புராணத்தில் சிக்கி அடிமைப்பட்டு கிடந்தவர்களிடம் தட்டியெழுப்ப விடுத்த அறைக்கூவல் தான் இது. இந்த அறைக்கூவல் பிராமணீய ஆதிக்கத்தில் கற்பிக்கப்பட்ட கடவுளை கட்டுடைப்பதாகவே அமைந்தது. பெரியார் நேரிய, உயரிய சுயமரியாதையுடன் நடத்தும் வழியை ஏற்க தயாராகவே இருந்தார்.

"உருவமற்ற கடவுளை, யாரையும் ஒன்று போல் சிருஷ்டிக்கும் கடவுளை, காசு, பணம், செலவு செய்யாமல் வணங்கக்கூடிய கடவுளை, மூடநம்பிக்கைக்கு இடமில்லாத தன்மையில் யாரும் வணங்கலாம்"

(சுயமரியாதை போராட்டத்தின் உச்சத்தில் பெரியார் 1948ல் சொன்னவை இவை) என்னும் அவரது கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த அடிப்படையில் தான் 1954ல் உலக பௌத்த சங்கத்தலைவரான டாக்டர் மல்லை சேகரா போன்ற அறிஞர்களை அழைத்து பௌத்த சங்கங்களை 'இந்து மதம்' அழித்தது பற்றிய பிரச்சாரங்களை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 'புத்த பெருமாள் விழா' கொண்டாடப்பட்டது. 1954 டிசம்பர் 3ல் மனைவி மணியம்மையாருடன் பர்மாவிற்கு சென்று உலக பௌத்த மாநாட்டில் கலந்துகொண்டார். பௌத்த கொள்கைகளால் பெரியார் கவரப்பட்டிருந்த போதும் பௌத்த சமயத்தில் இணையவில்லை. பௌத்த சமயத்தில் புத்தரையும் பிற தெய்வங்களையும் தெய்வமாக மாற்றி வழிபடும் முறையும், பௌத்த மடங்களில் உருவாகியிருந்த மூடநம்பிக்கைகளும் சடங்குகளும் தான் அதற்கான அடிப்படை காரணம். இந்து சமயத்தை சார்ந்த ஆதிக்க சாதியினரின் தாக்கம் பௌத்த நெறியில் ஊடுருவியதன் விளைவு இந்து மத அடையாளங்கள் பௌத்த நெறியிலும் புகுத்தப்பட்டு மதமாக்கப்பட்டது. புத்தருக்கும், பிள்ளையாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 ஆனால் தாய்லாந்து போன்ற நாடுகளில் பௌத்த விகாரைகளில் பிள்ளையார் வழிபாட்டை காணலாம். இந்த வழிபாட்டு முறைகள் மன்னர் காலங்களிலும் அதன் பின்னருமே புகுத்தப்பட்டவை. அதனால் தான் அண்ணல் அம்பேத்கார் பௌத்தமதத்திற்கு மாறிய வேளை பெரியாரை அழைத்தபோதும் அன்பாக மறுத்து அண்ணலுக்கு தனது ஆதரவை வழங்கினார். இந்த ஆதரவு வர்ணாஸ்ரம சாதி அடிமைத்தனத்தை விட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலை என்ற பார்வையில் அமைந்தது.

பெரியார் இராமாயணத்தை வெறுத்தது, பிள்ளையார் சிலையை உடைத்தவை போன்ற செயல்கள் ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்கும் விதமாக தான் அமைந்தன. அதனால் தான் ஆரிய கடவுள்களையும், அடையாளங்களையும் கடுமையாக எதிர்த்தார். இந்த போராட்டங்கள் சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய நாட்டு பொருட்களை எரித்து சுதேசி இயக்கம் உருவானது போன்று அந்த காலகட்டத்தில் அமைந்த ஒரு போராட்ட முறை. பெரியார் எந்த வழிபாட்டுத்தலங்களிலும் அத்துமீறி குழப்பம் ஏற்படுத்தவில்லை.ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கோவிலில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டதால் தான் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டத்தை பெரியார் தலைமையேற்று நடத்தினார்.

No comments:

Post a Comment