Search This Blog

Monday, 25 November 2013

பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி?

பிறந்தநாள் அப்படீனு காதுல விழுந்தாலே அது சீமைல
இருந்து வந்த வழக்கம். மேற்கத்திய நாடுகள்ள அவங்க
கொண்டாட நாம அதை பழக்கத்துல எடுத்துக்கிட்டோம்
அப்படீனு எல்லாம் நினைப்போம். எங்க பாட்டி
சொன்னாங்க, 'அது அப்படி இல்லடா பேராண்டினு'.
கிழவி ரொம்ப விவரமாவே சொல்லுச்சு. சரி, விசயத்த
மேல பாப்போம்.

அதாவது வந்துங்க, இந்த தீய சக்திகள் காத்து கருப்பு,
இதுக்கெல்லாம் குழந்தை பிறப்பு, குழந்தைக பிறந்த நாள்
இப்படி ஒரு சில விசயங்கள சுத்தமா பிடிக்காதாம். அந்த
மாதிரி நேரங்கள்ல சம்பந்தபட்டவங்கள எப்படியாவது
தொந்தரவு பண்ணனும், தீத்து கட்டனும்னு வெறியா
அலையுமாம். நீங்களும் பாத்து இருப்பீங்க, கேள்விப்பட்டு
இருப்பீங்க,"வெடிஞ்சா பொறந்த நாள், இப்படி ஆயிப்
போச்சு,பிறந்த நாள் அன்னைக்கு இப்படி கைய
ஒடச்சிட்டு வந்து நிக்கறானே, பிறந்த நாள் கொண்டாடிட்டு
வண்டியில அவங்க அம்முச்சி(பாட்டி)ய பாக்க போனாங்க,
இப்படி ஆயிருச்சு"னு சர்வ சாதாரணமா ஊர்ல சனங்க
புலம்பறத கேட்டு இருப்பீங்க.

அதனால அந்த காலத்துல எல்லாம், குழந்தை பிறப்புன்னா
பதினஞ்சு நாளைக்கு முன்னாடியே சொந்த பந்தம்,
ஊர்க்காரங்கன்னு ஒரு பெரிய கூட்டமே வீட்டுக்கு
வந்துருவாங்களாம். ஏழு வயசுக்கு உட்பட்ட குழந்தைக
பிறந்த நாள் வருதுன்னு சொன்னா,மூணு நாள் முன்னமே
நெறய பட்சணம், பலகாரம்,சிறுதீன்,விளயாட்டு
சாமான்னு நெறய கொண்டு வந்து வீட்டிலயே
உக்காந்துக்குவாங்களாம்.

கூட்டம் கூடினா கூத்து கும்மியடி கும்மாளம்,
கொண்டாட்டந்தானே! இந்த கூத்து கும்மாளம், குலுவை,
பாட்டு சத்தம் இதுகளக் கண்டா தீய சக்திகளுக்கு
பயம் வந்து, கிட்டயே வராதாம். பிறந்த நாள் அன்னைக்கு
குழந்தய குளிக்க வச்சி, புதுத்துணியெல்லாம் போட்டதுக்கு
அப்புறம் இறைவணக்கம் சொல்லி, பாட்டு பசனை எல்லாம்
பாடி, சாமி கும்புடுவாங்க. அதுக்கப்புறம் எல்லாரும்
வாழ்ததுவாங்க, நலங்கு வெச்சி ஆசி வழங்குவாங்க. திருநீறு
பூசி நலங்கு வெப்பாங்க. பூத்தூவி நலங்கு வெப்பாங்க.இப்படி
பல விதமா குழந்த நல்லா இருக்கணும்னு வேண்டிக்குவாங்க.
அப்புறம் பரிசுத் தொட்டில்ல விழுந்த, பரிசுகள வெச்சி
விளயாட்டு காமிச்சி குழந்தய உற்சாகமா வெச்சு இருப்பாங்க.
எந்த ஆத்மா மகிழ்வா மன சஞ்சலம் இல்லாம இருக்கோ,
அந்த ஆத்மாவ கெட்ட சக்திகள் ஒண்ணும் பண்ணாதுங்றதும்
ஒரு ஐதீகம்.

ஆக, இப்படி நம்ம ஊர்ல பழங்காலத்துல தோணின ஒரு
சம்பிரதாயந்தான் இந்த பிறந்த நாள் விழா. இதுல இருந்து
நாம தெரிஞ்சுக்கறது என்னன்னா,யாருக்கு பிறந்த நாள்
விழான்னு தெரிஞ்சாலும் மனசார வாழ்த்துங்க.
கூப்பிடறாங்களோ இல்லயோ நீங்க மனசார வாழ்த்துங்க.
வாழ்த்துறதுல உங்களுக்கும் மகிழ்ச்சி, அவங்களுக்கும்
மகிழ்ச்சி இல்லீங்களா?

(பிறந்த நாள் அன்னைக்கு தண்ணி ஏத்தி கும்மாளம் போட்ட
இளசுகளப் பாத்த கெழவி இன்னொரு கெழவிகிட்ட சொல்லுது,
"என்னடி ரங்கநாயகி, இவனுக எங்கயோ இருக்குற காத்து கருப்ப,
வீட்டுக்கு விருந்து வெச்சு அழைக்கிற மாதிரி இல்லே இருக்கு
இவனுக கூத்து..")

No comments:

Post a Comment