Search This Blog

Sunday, 27 October 2013

கோயம்புத்தூர் மாவட்டத்தின் வரலாறு!


கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது.

கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராஷ்டிரகுட்டர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள் மற்றும் விஜயநகர பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றி பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.

கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது.

1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.

1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராக செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

No comments:

Post a Comment