சதுர்த்தி திதி கணேசருக்கு மிகவும் உகந்த நன்னாள். சுக்ல பட்ச (வளர்பிறை) சதுர்த்தியை வரசதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை சதுர்த்தியை) சங்கடஹர சதுர்த்தி என்றும், சங்கஷ்டஹர சதுர்த்தி என்றும் கூறுவர். நடுப்பகல் வரையுள்ள சுக்ல சதுர்த்தியும், இரவில் சந்திரோதயம் வரை நீடிக்கின்ற கிருஷ்ண சதுர்த்தியும் விரதத்திற்கேற்றவை. சங்கட ஹர சதுர்த்தியில் பகலில் உபவாசம் இருப்பர். இரவு சந்திரனை கண்டதும் அர்க்கியம் தந்து, பூஜையை முடித்து பின் உண்பர்.
ஆதிசேஷன் நாரதரது உபதேசப்படி சங்கட ஹர சதுர்த்தி விரதமிருந்தார். விநாயகரது திருவருளால் சிவபெருமாள் முடியில் இருக்கும் பேறு பெற்றார். அவனியைத் தாங்கவும், விநாயகருக்கு உதரபந்தனமாக இருக்கவும் திருமாலின் படுக்கையாகவும் ஆகும் வரம் பெற்றார்.
சங்கர ஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்தே ராவணன் இலங்காதிபத்யம் பெற்றான். பாண்டவர்கள், துரியோதனாதியரை வென்றனர். முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் (செவ்வாய்) அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கட ஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
சங்கர ஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப் பெறுவார்கள். செல்வம், செல்வாக்கு ஆகிய அனைத்து இன்பங்களையும் அடைவார்கள். ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியிலிருந்து 12 மாதங்கள் பிரதி மாதமும் அனுஷ்டித்து, விநாயகர் சதுர்த்திக்கு முந்திய தேற்பிறை சதுர்த்தியான மஹா சங்கட ஹர சதுர்த்தியன்று முடிக்கும் மரபும் உண்டு.
இந்த விரத்தை தொடங்கும் நாளில் சூரியன் உதிக்க 5 நாழிகைக்கு (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். இரண்டரை நாழிகை என்பது 60 நிமிடங்கள். அதவாது ஒரு மணி. எனவே 5 நாழிகைகள் என்பது 120 நிமிடங்கள் அல்லது 2 மணி) முன்னரே உறக்கத்திலிருந்து எழுந்து, விதிப்படி சங்கற்பம் செய்து கொண்டு, புனித நதியில் நீராடி, சிவச்சசின்னங்களை அணிந்து கொண்டு, விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும்.
அவருடைய ஓரெழுத்து, ஆறெழுத்து மந்திரங்களில் ஏதாகிலும் ஒன்றை, அதுவும் தெரியாதவர்கள் விநாயகரது பெயர்களையாவது இடைவிடாது அன்று நாள் முழுகூதும் ஜெபித்தல் வேண்டும். உபவாசம் இருப்பதும் நலம். இரவு சந்திரோதயம் ஆனவுடன் சந்திர பகவானை பார்த்துவிட்டுச் சாப்பிட வேண்டும். அன்று விநாயக புராணத்தைப் பாராயணம் செய்வது நல்லது.
இவ் விரதத்தை ஓராண்டு, அதாவது விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கட ஹர சதுர்த்தியிலிருந்து மஹா சங்கடஹர சதுர்த்தி வரை, உறுதியுடன் அனுஷ்டிப்பவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர். இத்தகைய சக்தி வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை வருடம் முழுவதும் அனுஷ்டிக்க முடியாதவர்கள், மஹா சங்கட ஹர சதுர்த்தி தினத்திலாவது அனுஷ்டித்தால் ஒரு வருடம் விரதம் கடைபிடிக்க பலனை விநாயகரின் அருளால் பெறுவார்கள் என்பது உறுதி.
No comments:
Post a Comment