ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!
ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை!
வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!
என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.
நாமம் பல தத்துவம் ஒன்று!
வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.
இவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.
விநாயக சதுர்த்தி வரலாறு!
பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
சந்திரனின் சாபம்!
பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை (கொழுக்கட்டை) கையில் எடுத்துக் கொண்டு, உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி, சந்திரலோகம் சென்றார். அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்துப் பரிகசித்தான். அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, ‘ஏ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய். இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது. அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படுவதாகுக' என்று சபித்தார். சந்திரனும் ஒலி மழுங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.
சாபம் நீங்கிய விதம்!
சந்திரன் அழிந்ததைக் கண்டுவருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாதென்றும், கணபதியையே சரணடைவது தான் ஒரே வழியென்றும் கூறினார். எந்த முறையில் வழிபட்டால் சந்திரனின் சாபம் நீங்கும் என்று தேவர்கள் கேட்க ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் (பௌர்ணமிக்குப் பின் வருவது) விரதம் ஏற்று, பலவகையான பழங்கள், அப்பம், மோதகம் இவைகளுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்து, அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல, தக்ஷிணைகளை அளித்தால் எண்ணிய வரங்களை அளிப்பார் ' என்று பிரம்மன் கூறினார்.
பிறகு தேவர்கள் பிருகஸ்பதி(குரு)யைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர். சந்திரனும் இந்த முறையில் பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார். சந்திரனின் மனம் களிப்புற்று, அவரைப் பணிந்து,
"தவம் காரணம் காரண காரணாநாம்
க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்" என்று தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டான்.
பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர். கணபதியும் அவ்வாறே சாபவிமோசனம் அளித்தார். ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி'யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின், ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூசிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்' என்று விநாயகரே கூறினார். இது சங்கடஹரண சதுர்த்தி எனப்படுகிறது.
பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால் ஓர் ஆண்டு வரை தெடர்ந்து வீண் அபவாதங்கள் வந்து சேரும் என்பது சிலரின் நம்பிக்கை.
விநாயக சதுர்த்தி!
எனவே, ஆண்டு தோறும் ‘ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை பொன்னால் செய்த பாவனையுடன் அமைத்து பல பூக்களால் பூஜித்த பின் இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால் அவ்வாறு செய்பவனுக்கு அவன் தெடங்கிய காரியத்தில் வெற்றியையும், ஸகல காரியங்களில் சித்தியையும் அளிக்கிறேன்' என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.
சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல அபவாதங்களுக்கு ஆளான கிருஷ்ணனுக்கு நாரதர் இக்கதையைக் கூறி, கிருஷ்ணனே சங்கடஹரண சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று அறிகிறோம்.
No comments:
Post a Comment