Search This Blog

Monday, 23 September 2013

முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் வீரப்பன்சத்திரமாக மாறியது எப்படி?



 கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்ததில் விஜய நகர பேரரசு வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சி காலத்தில் தனது பகுதிகளை ஆறு ராஜ்ஜியங்களாக பிரித்து அந்த பகுதிகளை ஆட்சி செய்ய 6 பிரதிநிதிகளை நியமித்தார். மதுரை ராஜ்ஜியத்திற்கு நாகமநாயக்கரை நியமித்தார். நாகமநாயக்கர் விஜய நகர பேரரசிற்கு உரிய வரிப்பணத்தை செலுத்தாமலும், ஆணைக்கு கட்டுப்படாமலும் இருந்துள்ளார்.


இதையடுத்து நாகமநாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் மதுரைக்கு படை எடுத்து சென்று தனது தந்தையை வென்று அவரை விஜய நகரத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விசுவநாத நாயக்கரை மதுரை நகர பிரதிநிதியாக கிருஷ்ணதேவராயர் நியமித்தார். 1529ம்ஆண்டு முதல் 1682ம் ஆண்டு வரை 8 நாயக்கர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் ஆட்சி காலத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகள் நாயக்கர்களின் ஆளுகையின்கீழ் இருந்து வந்தது.



நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் ஈரோடு, விஜயமங்கலம், நாயக்கன்கோட்டை, சத்தியமங்கலம், அந்தியூர், குன்னத்தூர், பெருந்துறை, கோசனம், கொளாநல்லி, பாலத்தொழுவு போன்ற இடங்களில் கோட்டைகள் இருந்தது. நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் 1609ம்ஆண்டு முதல் 1659ம்ஆண்டு வரை முதலாம் முத்துவீரப்பநாயக்கர் ஆட்சி செய்து வந்தார்.



இவரது ஆட்சி காலத்தில் நிறைய சத்திரங்களை கட்டி வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி வந்தார். இவர்கள் தங்கி செல்ல சத்திரமும், குளங்களையும் அமைத்து கொடுத்தார். ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தனது படைகள் தங்குவதற்கும், வழிபோக்கர்களுக்காகவும் சத்திரங்களை கட்டினார். மேலும் ஒரு குளத்தையும் அமைத்து கொடுத்தார்.



அவர் ஆட்சி செய்த காலக்கட்டத்தில் வீரப்பன்சத்திரம் முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. நாளடைவில் முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் வீரப்பன்சத்திரமாக பெயர் மாறியது. நாயக்கர்கள் அமைத்து கொடுத்த சத்திரங்கள் நாளடைவில் அழிந்து போனது. நாயக்கர்கள் ஆட்சி செய்ததற்கு அடையாளமாக இன்றும் வீரப்பன்சத்திரத்தில் தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் குளம் சாட்சியாக உள்ளது.

No comments:

Post a Comment