இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்ட தொடக்க விழாவில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா குட்டிக்கதை சொன்னார்.
வந்தாரை வாழவைக்கும் பூமி...
வந்தாரை வாழவைக்கும் பூமி தமிழ்நாடு. இன்று கூட, பல்வேறு மொழி பேசும் நடிகர், நடிகையர், பின்னணிப்பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தமிழ்த்திரைப்படத்துறையில் முன்னணியில் இருக்கிறார்கள். தானும் வாழவேண்டும், அடுத்தவர்களும் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழ் சினிமாத்துறை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை நான் சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இந்த உலகத்தில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் உண்டு. தானும் வாழ வேண்டும், அடுத்தவர்களும் வாழவேண்டும் என்று நினைக்கிறவர்களும் உண்டு. எப்படியாவது தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள், எப்போதும் அவர்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறவர்களை மட்டும் அல்லாமல், தனக்கு போட்டியாக இருப்பவர் என கருதப்படுபவரையும் அழித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.
குட்டிக்கதை
ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் நிறைய பாவங்களை செய்ததால், நரகப்படுகுழி என்கிற கிணற்றில் விழுந்துவிட்டார். அந்த கிணற்றில், ஏற்கனவே பாவம் செய்தவர்கள் விழுந்து கிடந்தார்கள். உள்ளே ஏகப்பட்ட சத்தம். இப்பொழுது விழுந்த அந்த மனிதரின் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.
அந்த கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு மகான் இருந்தார். இந்த மனிதர் போடுகின்ற சத்தம் அதிகமாக கேட்டதும், கிணற்றை எட்டிப்பார்த்தார் அந்த மகான்.
மகானை பார்த்தவுடன், அந்த மனிதர், ‘‘சுவாமி! என்னைக்காப்பாற்றுங்கள்’’ என்று கத்தினார்.
அந்த மனிதரைப்பார்த்ததும், மனித சமுதாயத்திற்கு அந்த மனிதர், என்னென்ன கெடுதல் செய்திருக்கிறார் என்ற விவரம் மகானின் கண் முன்னே தெரிந்தது. இருந்தாலும், அந்த மனிதரை காப்பாற்ற ஏதாவது வழி உண்டா என்று யோசித்தார். ஏதாவது ஒரு நல்லகாரியத்தை அந்த மனிதர், தனது வாழ்நாளில் செய்திருக்கிறாரா என்று பார்த்தார்.
ஒரு சமயம், அந்த மனிதர் தன் காலடியில் மிதிபட இருந்த சிலந்தியை, தன்னை அறியாமல், மிதிக்காமல் தாண்டி போயிருந்தது தெரியவந்தது. இந்த செயலுக்காக, அந்த மனிதரை கரையேற்ற முடியுமா என்று சிந்தித்தார். உடனடியாக, அவர் கையில் சிலந்தி ஒன்று வந்து நின்றது. அதனிடமிருந்து, நூலிழை வெளிவர ஆரம்பித்தது. அந்த நூல் இழை, கிணற்றின் ஆழம் வரைக்கும் நீண்டு கொண்டே போயிற்று.
உடனே அந்த மகான், கிணற்றில் இருந்த மனிதரைப்பார்த்து, ‘‘இந்த நூலை பிடித்துக்கொண்டு மேலே ஏறி வா’’ என்றார்.
சிலந்தி நூல்
இதற்கு அந்த மனிதர், ‘‘சிலந்தி நூல், என்னைத்தாங்குமா?’’ என்று கேட்டார்.
‘‘எல்லாம் தாங்கும். அதைப்பிடித்து வா’’ என்றார் மகான்.
சந்தேகத்துடனேயே அந்த நூலிழையை பிடித்து இழுத்துப்பார்த்தார் அந்த மனிதர். நூலிழை வலுவாக இருந்தது.
எனவே, அதைப்பிடித்துக்கொண்டு மெதுவாக ஏறி வர ஆரம்பித்தார். பாதி தூரம் வந்தவுடன், அந்த மனிதரின் காலுக்கு கீழே கொஞ்சம் சத்தம் கேட்டது. கீழே குனிந்து பார்த்தார் அந்த மனிதர். வேறு சிலரும், அந்த நூலிழையை பிடித்துக்கொண்டு மேலே வந்து கொண்டிருந்தார்கள்.
உடனே அந்த மனிதருக்கு கோபம் வந்தது. தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, தன் காலுக்கு கீழே உள்ள நூலிழையை வெட்டிவிட்டார். இனிமேல், தான் மட்டும் மேலே ஏறிவிடலாம் என்று நினைத்தார் அந்த மனிதர்.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா?
மொத்த நூலிழையும் அறுந்து விழுந்தது. அந்த மனிதரும் பொத்தென்று கீழே விழுந்துவிட்டார். மறுபடியும் கத்த ஆரம்பித்தார். ஏற்கனவே தன்னை அறியாமல், அந்த மனிதர் செய்த ஒரு நற்செயல், அந்த நூலிழைக்கு உறுதியை கொடுத்தது. இப்போது அவர் செய்த பாவம் அந்த நூலிழையை வலுவிழக்க செய்துவிட்டது.
அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் அந்த மனிதருக்கு இருந்திருந்தால், அந்த மனிதர் கரையேறியிருப்பார். ஆனால், அவர் அதை செய்யவில்லை. எனவே அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டார் அந்த மனிதர்.
அரசு உதவும்
திரைப்படத்துறையால், தானும், தன் குடும்பமும் மட்டும் செழிப்படைய வேண்டும் என்று நினைத்தவர்கள் இந்த நிலைமையில் தான் இன்று இருக்கிறார்கள். திரைப்படம் என்பது, பல்வேறு கலைஞர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்றாலும், நல்ல கருத்துகளையும், முற்போக்கு சிந்தனைகளையும், எண்ணங்களையும், இளைய சமுதாயத்தினரிடம் எடுத்துச்செல்லும் வகையிலும்;
சாதி மற்றும் மத ரீதியிலான வகையில், பிறர் மனம் புண்படாமல் இருக்கும் வகையிலும்; வன்முறை மற்றும் ஆபாச காட்சிகளை தவிர்த்தும் படங்களை எடுக்கவேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களை இந்த தருணத்தில் அன்போடு கேட்டுக்கொள்வதுடன், திரைப்படத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நல்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா குட்டிக்கதை கூறினார்.
தலைமைச்செயலாளர்
முன்னதாக தமிழக தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆற்றிய வாழ்த்துரை வருமாறு:–
திரைப்படங்கள் வெறும் பொழுது போக்குக்காக மட்டுமல்ல சமுதாயத்தை மாற்றும் சக்தியாகவும் உள்ளது. இந்திய திரைப்பட வரலாற்றில் தென்னிந்திய திரைப்படங்கள் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. திரைப்பட உலகம் பற்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறும்போது, ‘திரையுலகம் எனது தாய்வீடு’ என்று பெருமையோடு குறிப்பிட்டுள்ளார். எனவேதான் இந்திய திரையுலகத்தின் இந்த கோலாகல நூற்றாண்டு விழாவுக்காக தானே முன்வந்து பல உதவிகளை வழங்கியுள்ளார்.
அவர் தனது அயராத உழைப்பால், அனைத்துத்துறைகளிலும் தமிழகம் முதல் மாநிலமாக திகழும் நிலையை உருவாக்கி வருகிறார். சிறந்த திரைப்படங்களுக்கான மானியம் வழங்குதல், புதிய விருதுகளை உருவாக்குதல், சினிமாவின் திருட்டு சி.டி. குற்றத்தை ஒழித்தல் போன்ற பல எண்ணற்ற திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார்.
திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அவர் இருப்பதால், சினிமா துறையினர் அவருக்கு நன்றிகடன் பட்டவர்களாக இருக்கிறார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர் என்பதால், அந்தத்துறையை சேர்ந்தவர்கள் மீது தனி அன்பும், பாசமும் கொண்டுள்ளார்.
என்றென்றும் புகழ்ந்து பேசப்படும் இந்த விழாவில் வாழ்த்துரை வழங்குவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment