எனக்கும் மரணத்தைப் பற்றிப் படிப்பது என்றால் அலாதிப் பிரியம். பிறப்பு இயற்கை என்பது போல இறப்பும் இயற்கையே. என்னைப் பொறுத்தவரையில், மரணம் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயமே. மரணம் என்பது நாம் பிரபஞ்சத்தின் ஒரு நிலையை விடுத்து அடுத்த நிலைக்குச் செல்வதாகும். எமது வாழ்வின் விளைவாகவே எமது மரணமும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. எமது வாழ்வில் நாம் செய்யும் நன்மை, தீமைகளிலேயே அது தங்கியிருக்கும்.
எமது வாழ்வு எப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறதோ அதேபோல் மரணத்தின்போதான மரணத்தின் பின்னான அனுபவமும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருப்பதைக் கட்டுரைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எமது வாழ்வில் நாம் செய்யாத கடமைகள் இருப்பின், மரணத்தின் பின்பும் நாம் இங்கேயே சுற்றிக் கொண்டிருப்போம் அல்லது மீண்டும் பிறப்பெடுப்போம். எமது பிறப்புகளில் நாம் செய்யும் நன்மை, தீமைகள் எமது கடைசிப் பிறப்புவரை தொடரும். நாம் பிரபஞ்சத்தின் Cycleஐ முடிக்கும்வரை எமது பிறப்புகளும் தொடரும்.
இந்தப் பிரபஞ்சம் ஐம்பூதங்களாலும் இயக்கப்படுகிறது. பிரபஞ்சத்திலிருக்கும் ஐம்பூதங்களும் எமது உடலுக்குள்ளும் உள்ளது. இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு ஐம்பூதங்களால் இயக்கப்படுகிறதோ அதைப்போலவே எமது உடலும் ஐம்பூதங்களால் இயக்கப்படுகிறது. இவ் ஐம்பூதங்களை எம்மாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.
இவ் ஐம்பூதங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள்தான் சித்தர்களும் முனிவர்களும். சித்தர்கள், முனிவர்கள் உண்மையிலேயே விஞ்ஞானிகள். ஆனால், அதனை ஏற்க மறுத்த, விளங்கிக் கொள்ள முடியாத மேற்கத்தேயர்கள் இவர்களின் சித்தாந்தங்களை வேண்டுமென்றே மறைத்தனர், மறுத்தனர். எமது சித்தாத்தங்களில் சொல்லாத விடயமே இல்லை என்று சொல்லலாம்.
நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்போம். ஆகவே, இறப்பு என்பதும் அதன் பின்னான நிகழ்வுகளும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே. எமது வாழ்விற்கு எவ்வாறு நிகழ்வு நிலைகள் இருக்கின்றனவோ அதேபோல்தான் மரணத்திற்கும் அதற்குப் பின்னரும் உண்டு.
சுனாமியின்போதும், இயற்கையாக நடைபெறும் அனர்த்தங்களின்போதும் விலங்குகள் தப்பி விடுகின்றன. மனிதன்தான் அதிகம் இழப்புகளைச் சந்திக்கின்றான். இதற்குக் காரணம் நாம் உள்ளுணர்வுகளில் கவனம் செலுத்துவதில்லை. இவ்வாற்றல்கள் எமக்கு இருப்பதாகவே நாம் நினைப்பதில்லை. (We don’t sense them). முயற்சி செய்தால் இச்சக்திகளை நாம் மீண்டும் பெறலாம்.
No comments:
Post a Comment