சாலை விபத்து, தீக்காயம் மற்றும் பிரசவங்களுக்காக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல ‘108 இலவச ஆம்புலன்ஸ் சேவை‘ தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற 24 மணிநேர தொலைபேசி ‘104 மருத்துவ சேவை‘ திட்டத்தை கடந்த 30ம் தேதி ஜெயலலிதா துவங்கி வைத்தார். இந்நிலை யில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையை தனி வாகனம் மூலம் வீட்டிற்கே கொண்டு சென்று விடும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 30ம் தேதி துவக்கி வைத்தார்.
அத்திட்டத்தின்படி, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் பிறந்த 51 குழந்தைகள் மற்றும் அதன் தாய் ஆகியோரை வாகனங்கள் மூலம் வீட்டிற்கே கொண்டு விடும் ‘இலவச தாய்-சேய் வாகனம்‘ திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது மருத்துவ கல்வி இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கனகசபை, கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனை டாக்டர் விஜயா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.மேலும் தேசிய ஊரக நல வாழ்வு இயக்கத்தின் மூலமாக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்துகின்ற ‘அவசர பேறுகால சிகிச்சைக்கான பயிற்சி‘ திட்டமும் கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனையில் நடைபெறுகிறது. இத்திட்டத்தின்படி, எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு, அவசர பேறுகால சிகிச்சை குறித்து 24 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியின்போது, ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் டாக்டர்கள்தான் பிரசவம் பார்க்கிறார்கள். மிகவும் ஆபத்தான நிலையில் வரும் கர்ப்பிணி பெண்களுக்கு எப்படி பிரசவம் பார்ப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படுவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment