வங்கிக் கணக்கைத் துவக்குவது எப்படி?
ஆன்லைன் வசதிகளை எப்படிப் பெறுவது?
வங்கிக் கணக்குப் புத்தகம் என்பது வருமானத்தை சேமித்து, வைக்க மட்டுமல்ல. இதன் மூலம் எல்.ஐ.சி. பிரீமியம் போன்றவற்றைச் செலுத்தலாம், வாகனக் கடன் பெறலாம். அதுமட்டுமின்றி முகவரிச் சான்றாகவும் பயன்படுத்தலாம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வங்கிக் கணக்கைத் துவக்குவது எப்படி? ஆன்லைன் வசதிகளை எப்படிப் பெறுவது போன்ற விவரங்கள் இங்கே...
வங்கிக் கணக்குத் துவக்கத் தேவையான தகுதிகள்:
பொதுவாக வங்கிக் கணக்குத் துவக்க 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
18 வயதிற்குக்கீழ் உள்ளவர்களும் வங்கிக் கணக்கு துவக்க முடியும். ஆனால் சேமிப்புக் கணக்கில் வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே வைத்திருக்க இயலும்.
விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
எந்த வங்கியில் கணக்கு துவக்க விரும்புகிறீர்களோ அந்த வங்கிக் கிளையில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து கொடுக்கவும். அதிலேயே ஏடிஎம் கார்டு, செக் புக், ஆன்லைன் வசதி போன்றவற்றை டிக் செய்து கொடுக்கலாம். சில வங்கிகளில் மேற்கூறிய கூடுதல் வசதிகளைப் பெற தனியாக ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பிக்கச் சொல்வார்கள்.
கட்டணம் எவ்வளவு?
அரசு வங்கிகளில் வங்கிக் கணக்குத் துவக்க 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக சேமிப்புக் கணக்கில் இருக்கும். செக் புத்தகம் வேண்டுவோர் கூடுதலாக 500 ரூபாய் இருப்புத் தொகை செலுத்த வேண்டும். தனியார் வங்கிகளில் வங்கிகளைப் பொறுத்து குறைந்தபட்ச இருப்புத் தொகை மாறுபடும்.
வங்கிக் கணக்குத் துவக்கத் தேவையான ஆவணங்கள்:
•பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இரண்டு புகைப்படங்கள் இணைக்க வேண்டும்.
•அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றுக்கான நகல் இணைக்க வேண்டும். இரண்டுக்கும் தனித் தனி ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
• பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றில் ஒன்றை அடையாளச் சான்றாகவும், குடும்ப அட்டை, காஸ் பில், மின் கட்டண ரசீது, தொலைபேசி ரசீது இவற்றில் ஒன்றை இருப்பிடச் சான்றாகவும் கொடுக்கலாம்.
•அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள உங்களுக்குத் தெரிந்த நபர் ஒருவர் உங்களை அறிமுகப்படுத்திக் கையெழுத்திட வேண்டும். அறிமுகக் கையெழுத்திடும் நபர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், வங்கிக் கணக்குத் துவக்கி குறைந்தபட்சம் 6 மாதங்களாகியும் இருக்கவேண்டும். மேலும் தொடந்து வரவு - செலவு வைத்திருப்பவராக இருப்பது அவசியம்.
வங்கிக் கணக்கு ஆரம்பித்ததும் கிடைக்கும் ஆவணங்கள்:
•அரசு வங்கிகளில் வங்கிக் கணக்குப் புத்தகம் தருவார்கள். சில தனியார் வங்கிகளில் கணக்குப் புத்தகம் தருவதில்லை. மாதம் ஒருமுறை வரவு - செலவுகளைப் பட்டியலிட்டு மின்னஞ்சல் அனுப்பி விடுகிறார்கள்.
•காசோலைப் புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டு (இவை இரண்டும் கணக்கு ஆரம்பித்து இரண்டு வாரங்களில் கிடைக்கும்). ஏடிஎம் கார்டும், அதற்கான பாஸ்வேர்டும் உங்கள் கைக்குக் கிடைத்து ஒருவாரத்திற்குள் குறைந்தபட்சம் நூறு ரூபாயாவது எடுத்து கார்டை ஆக்டிவேட் செய்துவிட வேண்டும். இல்லையெனில் 15 நாட்களில் உங்களுக்குக் கொடுக்கப்படும் பாஸ்வேர்டு செயலிழந்துவிடக் கூடும்.
கூடுதலான வசதிகள்:
ஆன்லைன் வசதி தேவையெனில் அதற்கும் விண்ணப்பித்துப் பெறலாம். இதற்கு இரண்டு பாஸ்வேர்டுகள் உங்கள் வீட்டிற்கு பதிவுத் தபாலிலோ, கொரியரிலோ வரும். அதில் ஒன்று ஆன்லைன் அக்கவுண்ட்டிற்கும், மற்றொன்று பரிவர்த்தனைக்கும் (Transaction) பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.
வங்கிக் கிளை மாற என்ன செய்ய வேண்டும்?
•ஒரு வங்கிக் கிளையிலிருந்து வேறொரு வங்கிக் கிளைக்கு மாற விரும்பினால் (ஒரே ஊரிலோ அல்லது வேறு ஊரிலோ) எந்த வங்கியில் தற்போது கணக்கு இருக்கிறதோ அந்த வங்கிக்குச் சென்று மாறவிரும்பும் கிளையைக் கூறினால் அவர்கள் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் அதனைக் குறிப்பிட்டு தேதியிட்டுக் கொடுப்பார்கள்.
•பின்னர் குறிப்பிட்ட கிளையில் தற்போதைய முகவரி மாறியதற்கான சான்றை சமர்ப்பித்து புதிய கணக்குப் புத்தகத்தைப் பெறலாம்.
•செல்போன் நம்பரை மாற்றாமல் வேறு நிறுவனத்தை தேர்வு செய்யும் (எம்.என்.பி.) வசதியை தொலைத் தொடர்பு துறை கொண்டு வந்தது போல் கணக்கு எண் மாறாமல் வங்கிக் கிளையை மாற்றிக் கொள்ளும் வசதியை ரிசர்வ் வங்கிக் கொண்டுவந்துள்ளது.
• குறிப்பு: மேற்சொன்ன நடைமுறைகள் அனைத்தும் வங்கிக்கு வங்கி மாறலாம். எனவே உங்கள் பகுதிக்குட்பட்ட வங்கியில் நேரடியாகச் சென்று மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளவும்.
இந்தியாவில் வங்கிக் கணக்குத் துவக்கும் வெளிநாட்டுப் பயணிகளின் கவனத்திற்கு:
•வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குறுகியகாலப் பயணத்தில் இந்தியாவிற்கு வரும் போது குடியிருப்போர் அல்லாத (சாதாரண) ரூபாய் (NRO) கணக்கை (நடப்பு சேமிப்பு) அந்நியச் செலாவணியைக் கையாளும் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் தொடங்கலாம். இத்தகைய கணக்குகளை அதிகபட்சமாக 6 மாத காலம் வரை வைத்திருக்க முடியும்.
•இதற்கு பாஸ்போர்ட் மற்றும் இதர மதிப்புள்ள அடையாளச் சான்றுகள் அவசியம். அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் புதிய கணக்குகளைத் தொடங்கும்போது, ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்’ (KYC) விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
•சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வந்த இடத்தில் NRO கணக்கு மூலமாக செலவுகளுக்கான பணத்தை அளிக்கலாம். இந்திய ரூபாயில் 50,000-க்கும் மேற்படும் அனைத்து பணம் செலுத்துதல்களையும் காசோலைகள்/ கொடுப்பாணைகள்/கேட்பு வரைவோலைகள் மூலமாக அளிக்கவேண்டும்.
•அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் கணக்கு வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவை விட்டு கிளம்புவதற்குமுன் மீதமுள்ள பணத்தை அவர்கள் நாட்டுப் பணமாக மாற்றிச்செல்ல உதவுகின்றன. ஆனால் அந்தக் கணக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் சுற்றுலாவிற்காக வந்த இடத்திலிருந்து வட்டி தவிர எந்த நிதியும் அந்தக் கணக்கில் சேர்ந்திருக்கக்கூடாது.
•6 மாதங்களுக்குமேல் பராமரிக்கப்படும் கணக்கிலிருந்து மீதமுள்ள தொகையை வெளிநாட்டிற்கு அனுப்பலாம். இம்மாதிரி சமயங்களில் கணக்கைப் பராமரித்து வரும் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கி, அந்தப் பகுதியில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தின் அந்நியச் செலாவணித் துறைக்கு ஒரு வெற்றுத்தாளில் மீதமுள்ள பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக விண்ணப்பம் செய்யவேண்டும்.
No comments:
Post a Comment