உங்களுக்குக் காய்ச்சல் வந்தபோது வாயில் ஒரு கருவியைவைத்து வெப்பநிலையை அளவிட்டிருப்பார்களே... அதுதான் வெப்பமானி (Thermometer). தெர்மாமீட்டர் என்பது வெப்பத்தை அளக்கும் கருவி. அதனால், அதற்கு வெப்பமானி என்று பெயர். காய்ச்சலைப் பார்க்கப் பயன்படுத்து கிளினிக்கல் தெர்மாமீட்டர் (Clinical Thermometer). ஜெர்மன் மருத்துவர் கார்ல் உன்டர்லிச் 1868-ல் 'காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல; நோயின் அறிகுறி என்ற தன் ஆய்வை வெளியிட்டார். அவர், உடல் வெப்பநிலைக்கும் பலவித நோய்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தார். வெப்பமானியை உருவாக்கியதும் கார்ல் உன்டர்லிச்தான்.
வெப்பமானியைக் கையில் வைத்துக்கொண்டு (ஜாக்கிரதை... கீழே விழுந்துவிடப்போகிறது) உற்றுப்பாருங்கள். என்ன தெரிகிறது? ஒரு முனையில் சற்றே குறுகலாக, பளபளவென்று தெரிகிறதே அதுதான் பாதரசம் (Mercury). மீதமிருக்கிற பகுதியை நன்கு பாருங்கள். நாம் கையில் வைத்துக்கொண்டு பார்க்கிற கண்ணாடிக் குழாய்... அதன்மேல் கோடு கோடாகப் போட்டு, ஏதோ சில எண்கள் தெரியும். இதற்கும் உள்ளே இன்னொரு மிகச்சிறிய குழாயும் இருக்கும்.
வெப்பத்தினால் பாதரசம் விரிவடையும். அப்படி விரிவடையும் பாதரசம், சிறிய இரண்டாவது குழாயில், வெப்பத்தின் அளவுக்குத் தக்கவாறு ஏறும். வெளியில் இருக்கும் கோடுகளும் எண்களும் வெப்பத்தின் அளவைக் குறிப்பவை. எந்த அளவுக்குப் பாதரசம் ஏறுகிறதோ, அந்த இடத்தில் என்ன கோடு, எண் என்பதைப் பார்த்து, அந்த அளவு வெப்பம் என்று கணிக்கப்படுகிறது.
கிளினிக்கல் தெர்மாமீட்டரில் 95 முதல் 110 வரை என்று இருக்கும். இதற்கு அர்த்தம் 95 டிகிரி F முதல் 110 டிகிரி F என்பது. டிகிரி என்பது பாகையைக் குறிக்கும். F என்பது Fahrenheit. சிலவற்றில் இதற்குப் பதிலாக 35 டிகிரி C முதல் 43.5 டிகிரி C வரை குறித்திருக்கும். C என்பது Celsius. அது என்ன, Fahrenheit அல்லது Celsius..? இவை அளவை முறைகள்.
ஃபாரன்ஹீட் அளவு முறையில் தண்ணீரின் உறை (freezing point) நிலை 32 டிகிரி F, தண்ணீரின் கொதிநிலை (boiling point) 212 டிகிரி F ஆகும். உடலின் சாதாரண வெப்பநிலை 98.6 டிகிரி F, இதுவே செல்சியஸ், அளவு முறையில், தண்ணீரின் உறை நிலை 0 டிகிரி C ; கொதிநிலை 100 டிகிரி C; உடலின் சாதாரண வெப்பநிலை 37 டிகிரி C. கேப்ரியல் டேனியல் ஃபாரன்ஹீட் என்ற ஜெர்மானியர் 1724-ம் ஆண்டு தான் அமைத்த வெப்பமானியில் தண்ணீர் பனிக்கட்டியாகும் வெப்பத்தை 32 டிகிரி என்றும், உடலின் வெப்ப அளவை 96 டிகிரி என்றும் நிர்ணயித்தார். இதுவே ஃபாரன்ஹீட் அளவையாகும்.
வெப்பமானியில் ஏன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது?
பாதரசம் திரவநிலையில் உள்ள உலோகம். அதனுடைய கொதிநிலை 357 டிகிரி C. அதனால், பிரச்னை இல்லாமல் பயன்படுத்தலாம். தண்ணீரைப் பயன்படுத்துகிறோம் என்று வைத்துக்கொள்வோம். 100 டிகிரி C வெப்பநிலையில் தண்ணீர் கொதித்துவிடும். அதைத் தாண்டி வெப்பம் ஏறினால், சரியாக அளவு காட்டாது.
பாதரசம் எந்த வெப்ப நிலையிலும் (357 டிகிரி C) வரை ஒரே மாதிரியாக விரிவடையும். அதனால், அளவிடுவது எளிது. கண்ணாடிக் குழாயில் பார்ப்பதற்குப் பளிச்சென்று பாதரசம் தெரியும்.
ஏன் கிளினிக்கல் தெர்மா மீட்டரில் 95 டிகிரி F - 110 டிகிரி F அல்லது 35 டிகிரி C - 45.5. டிகிரி C வரையான அளவுகள்தான் உள்ளன?
உடலின் சாதாரண வெப்ப நிலை 98.6 டிகிரி F அல்லது 37 டிகிரி C. காய்ச்சல் ஏற்பட்டால், 104 டிகிரி F அல்லது 105 டிகிரி F (40 டிகிரி C / 40.5 டிகிரி C) வரைதான் அதிகபட்சம் வெப்பம் ஏறும். அதற்குள்ளாகவே பலவித அறிகுறிகள் தோன்றிவிடும். அதையும்விட (சில குறிப்பிட்ட காலங்களில்) வெப்பம் அதிகமானால்கூட 110 டிகிரி F-க்கு மேல் ஏறாது. எனவே, உடல் வெப்பத்தை அளக்கப் பயன்படும் கிளினிக்கல் தெர்மா மீட்டரில் அதற்குமேல் தேவையில்லை.
உடலின் சராசரி வெப்பம் எல்லோருக்கும் 98.6 டிகிரி F தானா?
சிலருக்கு 98.4 டிகிரி F முதல் 99.4 டிகிரி F வரை இது வேறுபடலாம். இதனால் பிரச்னை ஒன்றுமில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்கும்போது, பெரியவர்களுக்கு வெப்பமானியை வாயில் வைப்பதைப் பார்த்திருக்கிறோம். நாக்குக்கு அடியில் வைத்தால், உடலின் சரியான வெப்ப நிலை (Core Temperature) கிடைக்கும்.
ஆனால் சிறிய குழந்தைகள், அதிகக் காய்ச்சலில் இருப்பவர்கள் - இவர்களால் நாக்குக்கு அடியில் சரியாக தெர்மா மீட்டரை வைத்துக்கொள்ள முடியாது. மேலும், வெப்பமானியைக் கடித்துவிட்டால் பாதரசம் வாய்க்குள் போய்விடும். எனவேதான், அக்குளில் வெப்பமானி வைக்கப்படும். அக்குள் வெப்ப நிலையோடு 1 டிகிரி F அல்லது அரை டிகிரி C கூட்டினால்தான், சரியான உடல் வெப்பநிலை கிடைக்கும். அக்குளில் வெப்பமானி காட்டுவது 99.6டிகிரி F என்றால், அப்போது உண்மையான உடல் வெப்பம் 100.6 டிகிரி F.
நண்பர்களே... பாதரசத்தில் செய்யப்பட்ட பழைய மாடல் தெர்மாமீட்டர்கள் மாறி, இப்போதெல்லாம் காய்ச்சலைக் கண்டுபிடிக்க, நிறம் மாறும் பிளாஸ்டிக் பட்டைகள் வந்துவிட்டன. கலர் கலர் பட்டைகள் - சாதாரணம் ஒரு கலர், காய்ச்சல் ஒரு கலர், அதிகக் காய்ச்சல் ஒரு கலர் - இப்படி வந்துவிட்டன. தற்போது டிஜிட்டல் தெர்மாமீட்டர்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனையாகின்றன. உடல் வெப்பநிலை அளவை இது 'எலெக்ட்ரானிக் டிஸ்ப்ளேயில் எண்ணாகவே காட்டிவிடும்.
No comments:
Post a Comment