Search This Blog

Thursday, 14 November 2013

கர்ப்பம் தரிப்பதற்கு முன்!

before pregnancy

‘உலகிலேயே மிக உயர்ந்த, உன்னதமான பதவி தாய்மை. அன்புதான் அதற்கான சம்பளம்...’ பெருமைக்குரிய இந்தப் பதவிக்கு எல்லாப் பெண்களும் தகுதியுடையவர்களே... அதற்கு முன் தேவை கொஞ்சம் ஆலோசனைகள்... கொஞ்சம் முன்னெச்சரிக்கைகள்...
இவை இரண்டும் இருந்தால், தாய்மைப் பதவிக்காக எந்தப் பெண்ணும் தவிக்க வேண்டியிருக்காது. குழந்தை வேண்டும் என விரும்புகிற பெண்கள், திருமணத்துக்கு முன்பிலிருந்தே கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார் குழந்தையின்மை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் மனு லட்சுமி.

திருமணத்துக்கு முன்...


குழந்தைப்பேறு என்பது திருமணத்துக்குப் பிறகு திட்டமிட வேண்டிய விஷயமில்லை. திருமணத்துக்கு முன்பிலிருந்தே, அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாக வேண்டும். அதாவது, திருமண வயதில் இருக்கும் பெண்கள், திருமணத்துக்கு முன்பே மகப்பேறு மருத்துவரை சந்திக்கலாம். குறிப்பாக முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்கள், தைராய்டு, நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவரை சந்தித்து, இந்தப் பிரச்னைகளை சரியாக்கும் அல்லது கட்டுப்படுத்தும் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மகப்பேறு மருத்துவர்களிடம் எடுத்துக் கொள்கிற ‘ப்ரீமேரி டல் கவுன்சலிங்’கில், தாம்பத்ய உறவு குறித்த அவர்களது பயம், பிரசவ பயம் போன்றவற்றுக்கும் பதில் கிடைக்கும்.

திருமணத்துக்குப் பிறகு...


திருமணமான உடனேயே குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிற பெண்களும், ஒருமுறை மகப்பேறு மருத்துவரை சந்தித்து, ரத்தப் பரிசோதனை, கர்ப்பப்பை சோதனை, அதில் ஏதேனும் தொற்று இருக்கிறதா என்பதற்கான சோதனைகளை செய்வது நலம். இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ரூபெல்லா தடுப்பூசி. ஏற்கனவே இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களுக்குப் பிரச்னையில்லை. ஒருவேளை போடாவிட்டால், கர்ப்பம் தரித்த பிறகு ரூபெல்லா பாதித்தால், தாய்க்குப் பிரச்னை இல்லை. கர்ப்பத்தில் இருக்கிற குழந்தைக்குப் பெரிய பாதிப்பு உண்டாகும். இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டு, 1 மாதத்துக்கு கர்ப்பம் தரிக்கக் கூடாது.

முதல் குழந்தையைத் தள்ளிப் போடலாமா?


இது தம்பதியின் வயதைப் பொறுத்தது. குழந்தை பெற்றுக்கொள்ள மிகச் சரியான வயது 20 முதல் 30 வரை. கர்ப்பத்தை தாங்கும் சக்தி, சிக்கல்கள் இல்லாத கர்ப்பமெல்லாம் அந்த வயதில்தான் சாத்தியம். 20 வயதில் திருமணம் செய்கிறவர்கள், மருத்துவரை அணுகி சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டுக்கான சராசரி சோதனைகளை செய்து, எல்லாம் நார்மல் எனத் தெரிந்தால் குழந்தைப்பேறைத் தள்ளிப் போடலாம்.

30 வயதுக்கு மேல் திருமணம் செய்பவர்களுக்கு இது பொருந்தாது.

எத்தனை நாள் காத்திருக்கலாம்?


இதற்கும் அதே விதிதான். இள வயதில் திருமணம் செய்தவர்கள் என்றால் ஒரு வருடம் வரை காத்திருக்கலாம். அதிலும் அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்குச் சுழற்சி முறையாக இருக்க வேண்டும். 30 வயதுக்கு மேல் திருமணம் செய்தவர்கள் என்றால் 6 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டாம்.

என்னென்ன சோதனைகள்?


ஏற்கனவே ஏதேனும் உடல்நலக் கோளாறு இருக்கிறதா, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா, மாதவிலக்குச் சுழற்சி முறையாக இருக்கிறதா, கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறதா என்பதற்கான பொதுப் பரிசோதனை. சினைப்பை மற்றும் கர்ப்பப்பையில் ஏதேனும் கட்டிகளோ, நீர்க்கட்டிகளோ இருக்கின்றனவா என்பதற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்.

நீரிழிவு மற்றும் தைராய்டுக்கான ரத்தப் பரிசோதனை.  கருக்குழாய்களில் பிரச்னை இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள ஹெச்.எஸ்.ஜி. (ஹிஸ்ட்ரோசால்பினோகிராம்).

கருக்குழாய்களில் ஒன்றிலோ, இரண்டிலுமோ அடைப்புகள் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் சோதனை.

கருத்தரிக்காததற்கான பிரச்னைகள்...


மேலே சொன்ன சோதனைகளில் எதில் பிரச்னைகள் இருந்தாலும் கர்ப்பம் தரிப்பதில் தாமதமும், பிரச்னைகளும் ஏற்படலாம். தவிர, கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தாலோ, சதை வளர்ச்சி இருந்தாலோ, கர்ப்பப்பை வடிவம் மாறியிருந்தாலோ, கணவருக்குப் பிரச்னைகள் இருந்தாலோ கருத்தரிப்பது தாமதமாகும். இவற்றையெல்லாம் தாண்டி, காரணத்தை விளக்க முடியாத மலட்டுத்தன்மை என ஒரு பிரிவும் உண்டு.

என்ன சிகிச்சைகள்?

ஐ.யு.ஐ.

சாதாரணமாக 15 மில்லியனாக இருக்க வேண்டிய கணவரின் உயிரணுக்களின் எண்ணிக்கை, 8 முதல் 10 மில்லியனாக இருந்தாலோ, காரணத்தை விளக்க முடியாத மலட்டுத்தன்மையாக இருந்தாலோ, சினைப்பையில் ரத்தக்கட்டிகள் இருந்தாலோ, இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படும். பெண்ணின் கருமுட்டையுடன், ஆணின் உயிரணுவை செயற்கையாக இணையச் செய்து, கருத்தரிக்கச் செய்கிற இந்த டெக்னிக்கிற்கு மருத்துவமனையில் தங்கவோ, ஓய்வோ தேவையில்லை. இதில் 10 முதல் 15 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு.

ஐ.வி.எஃப்.

ஐ.யு.ஐ. சிகிச்சையை 4 முதல் 5 முறைகள் முயற்சி செய்து பலனில்லாமல் போனால், அடுத்து ஐ.வி.எஃப். சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். 2 கருக்குழாய்களிலுமே அடைப்புள்ளவர்களுக்குப் பெரும்பாலும் இதுதான் பரிந்துரைக்கப்படும். கருமுட்டை உருவாக ஊசிகள் போடப்பட்டு, 8 முதல் 10 முட்டைகள் வந்ததும், அதிலிருந்து சிறந்தவற்றைத் தேர்வு செய்து, வெளியே வைத்து,  உயிரணுக்களுடன் சந்திக்கச் செய்து, கருவானதும் எடுத்து, கர்ப்பப்பையினுள் வைத்து வளர்க்கப்படும். இதில் 30 முதல் 40 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு. ஒரு முறை சிகிச்சைக்கே ஒன்றரை லட்சம் செலவாகும்.

ஐ.எம்.எஸ்.ஐ.


ஐ.வி.எஃப். சிகிச்சையின் அடுத்தகட்ட முன்னேற்றம் இது. ஆரோக்கியமான உயிரணுக்களைத் தேர்வு செய்து, பெண்ணின் கருமுட்டையை சந்திக்கச் செய்கிற சிகிச்சை இது.

கர்ப்பம் தரிப்பதற்கு முன்..
.

உங்கள் பி.எம்.ஐ. (உயரத்துக்கேற்ற எடை உள்ளதா என்பதற்கான பாடி மாஸ் இன்டக்ஸ்) சரியாக உள்ளதா எனத் தெரிந்து கொள்ளுங்கள். அதிக எடை இருந்தால் உடனடியாகக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீரிழிவு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், மாத்திரைகளுக்குப் பதில் இன்சுலினுக்கு மாறலாம். பெரும்பாலான நீரிழிவு மாத்திரைகள், கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ள உகந்தவை அல்ல.

வலிப்பு நோய் உள்ளவர்களும் கர்ப்பம் தரிப்பதற்கு முன் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். மருந்துகளின் அளவும் வீரியமும் குறைவான வேறு மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

No comments:

Post a Comment