Search This Blog

Friday, 15 November 2013

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்!

பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல் தான். இருந்தாலும் அந்தப் பகிர்தலால் உங்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதில் தான் இருக்கிறது, உங்கள் சாமர்த்தியம். 'எல்லாரும் நல்லவரே' என்பது நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒருவிதத்தில் வெகுளித்தனம் தான்.

வெளியூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றிலும் இருக்கிற புதியவர்கள் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சிலர் தங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் ஆதியோடந்தமாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். தங்கள் குடும்ப விஷயத்தை அப்போது தான் டீக்கடையில் அரை கிளாஸ் டீயுடன் அறிமுகமான சந்தித்த நபரிடம் வெளியரங்கமாய் பேசிக்கொண்டிருப்பார்கள்.

இதில் பெண் திருமணத்திற்காக நகை வாங்கிப் போகும் விஷயம் வரை அப்பாவியாய் அள்ளிக் கொட்டுவார்கள். இப்போது கேட்ட நபர் நல்லவராகவே இருக்கட்டும். கொஞ்சம் தொலைதூரத்தில் இருந்தபடி இதை காதில் வாங்கிய அரை பிளேடு பக்கிரியின் காதில் விழுந்தாலே போதுமே! பெரியவரும் ஒழுங்காய் ஊர் போய்ச் சேரமாட்டார்.

நகையும் ஸ்வாகா. அப்புறம் பெண் கல்யாணத்தை எப்படி நடத்துவது? நமக்குள் இருக்கும் பண்பு நம் வாழ்க்கை ஓட்டத்தில் நம்மோடு இணைந்து கொண்டது. எதற்காகவும் அதை இழக்கத் துணிய மாட்டோம். நல்ல பண்புகளை அணிகலன்களாகக் கொண்டிருக்கும் நாம் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா!

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று எப்படி நம்புவது? நாம் விட்டுக்கொடுக்கும் போதும், மனதைத் திறந்து உள்ள(த்)தை சொல்ல முற்படும் போதும் மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்திக் கொண்டு நம்மை ஏமாளியாக்க முற்படலாம். அவர்களை இனம் கண்டு எந்த ரீதியிலும் அவர்களிடம் நெருங்காமல் இருப்பது நல்லது.

அணுகவிடாமல் பார்த்துக் கொள்வது கட்டாயம். அதற்கு நமக்குத் தேவை, பகிர்ந்து கொள்ளும் பண்பு. இந்த மாதிரியான பகிர்தல் ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் இருபாலருக்கும் அவசியமானதே. நம்மை குழப்பிக்கொண்டிருக்கும் சில விஷயங்களை மனம் விட்டுப் பேசும்போது தான் அதற்கான தீர்வு கிடைக்கும்.

எதையுமே பகிர்ந்து கொள்ளாதவர்கள் எத்தனை உயரிய ஸ்தானத்தில் இருந்தாலும் கடைசியில் பித்துப்பிடித்த நிலைக்குத்தான் ஆளாகிறார்கள். அதனால் இந்த சிக்கலை என்னால் சீரமைக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்குள் எழத்தொடங்கி விட்டால், அப்போதே அதை உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்து பாருங்கள்.

நிச்சயம் உரிய நேரத்தில் உரிய தீர்வு கிடைக்கும். அதேநேரம் 'ஆயுளுக்கும் இது ரகசியம்' என்று நீங்கள் எண்ணுகிற அந்தரங்க விஷயங்களை மட்டும் எப்போதும் போல் உங்களுக்குள்ளே பூட்டி வைத்துக் கொள்ளுங்கள். பகிர்ந்து கொள்வது நல்ல வழக்கம் தான். இருப்பினும் மற்றவர்கள் நம்மை ஏமாற்றும் அளவு நம் அந்தரங்க விஷயங்களை சொல்வது பாதுகாப்பற்றது.

நம்மை நாமே மற்றவரிடம் அடமானம் வைப்பது போல ஆகும். நம் பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது. மிகவும் முக்கியமான விஷயங்களை குறிப்பாக எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது தேவையற்றது. அதனால் நமக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம். நம்முடைய செயல்கள் அனைத்திற்கும் நாம் தான் பொறுப்பாளி.

இதை மற்றவரிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது? இதையெல்லாம் நட்பின் இலக்கணம் என்று சொல்லிக் கொள்ள முடியாது. இதனால் பல நேரங்களில் நல்ல நட்பு கெடும். சில நேரங்களில் நெருங்கிய நண்பர்கள் கூட 'உன் காதோடு மட்டும் ஒரு ரகசியம்' என்று சொல்ல முன்வருவார்கள். தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

'எப்போது இதை ரகசியம் என்று சொன்னாயோ, கடைசிவரை அது உன்னோடு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று சொல்லி விடுங்கள். சிலர் இம்மாதிரி முக்கிய ரகசிய விஷயங் களைக் கூட நண்பர்கள் சிலரிடம் தனித் தனி சந்தர்ப்பங்களில் சொல்லி விடுவார்கள்.

இதற்குப் பிறகு அது ரகசியம் என்றால் தானே அதிசயம். ரகசியம் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொரு நண்பனையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பார்கள். 'சொன்னது இவனாக இருக்குமோ' என்ற ரீதியில் ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து கடைசியில் நட்பு கெட்டது தான் மிச்சம் என்றாகி விடும். சிலருக்கு யாரைப் பார்த்தாலும் அவர்கள் நல்லவர்களாகவே தெரிவார்கள்.

வேறுசிலருக்கோ பார்க்கிற எல்லாரிடமும் ஏதாவது ஒரு குறை கண்ணில் பட்டு விடும். மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணர் தருமரை அழைத்து 'நகரெங்கும் போய் உன் கண்ணில் படுகிற ஒரு கெட்டவனை அழைத்துக் கொண்டு வா' என்றார். அதேவேளையில் துரியோதனை அழைத்தவர், 'நகர வீதிகளில் பயணப்பட்டு உன் பார்வையில் படுகிற ஒரு நல்லவனை அழைத்துக் கொண்டு வந்து சேர்' என்றார். இருவரும் போனார்கள்.

தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள். நகர் முழுக்க சுற்றித் திரிந்தும் ஒரு கெட்டவன் கூட அவர் கண்ணில் படாமல் போனதால் வெறுங்கையுடன் அரண்மனைக்கு திரும்பினார்.

துரியோதனன் கதை வேறு மாதிரி இருந்தது. அவன் யாரைப் பார்த்தாலும் அவரிடத்தில் ஒரு குறையை கண்டு பிடித்தான். இத்தனை கெட்டவர்களுக்கு மத்தியில் ஒரு நல்லவனை என்னால் எப்படி கண்டு பிடிக்க முடியும் என்ற கவலையுடன் அவனும் அரண்மனைக்கு திரும்பினான்.

இருவரும் வெறுங்கையுடன் வந்து நிற்பதை பார்த்த கிருஷ்ணர், புன்னகைத்துக் கொண்டார். நல்லவன் பார்வைக்கு கெட்டவன் என்று யாருமில்லை. அதுமாதிரி கெட்டவன் பார்வையில் நல்லவன் தெரியவே இல்லை என்பது தெரிந்து தானே அவர்களை அனுப்பி இப்படியரு பரீட்சை மேற்கொண்டார்..!

நம்முடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல நட்பு வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அப்படி ஒரு நட்பு கிடைப்பது அரிது. 'புற' விஷயங்களை பகிர்ந்து கொள்வது போல நமக்கே நமக்கான அந்தரங்கத்தை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதில் நீங்கள் தெளிவாக இருந்தால் மட்டுமே நட்பு நிலைக்கும். நீடிக்கும்.

No comments:

Post a Comment