Search This Blog

Wednesday, 6 November 2013

நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள் ( 30+ )

30 வயதானவர்களுக்கான முதலீடு!

சுகமான ஓய்வு காலத்துக்கு எந்த வயதினர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். செந்திலுக்கு இப்போது வயது 30. வேலைக்குச் சேர்ந்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன. திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கும் அவருக்கு, நிறைய செலவுகள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில் பிடித்தம் போக மாதம் கையில் 21,500 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

வீட்டுச் செலவு, மருத்துவச் செலவு, மகன் விக்ரமின் படிப்பு, சொந்த வீடுகட்ட வாங்கிய ஹோம் லோனுக்கான இ.எம்.ஐ. – இவற்றை எல்லாம் தாண்டித்தான் செந்தில் தன் ஓய்வு காலத்துக்கு சேமிக்க வேண்டியிருக்கிறது. செந்திலின் இன்றைய லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கிறதோ அதுபோலவே பணி ஓய்வின் போதும் இருந்தால்தான் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.


செந்தில் தன் குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளுக்கு மட்டும் மாதத்துக்கு
15,300 செலவு செய்கிறார். ஆண்டுக்கு சுமார் 7% பணவீக்க விகிதம் என்று
எடுத்துக் கொண்டால் 30 ஆண்டுகள் கழித்து அவர் பணி ஓய்வு பெறும் போது ஒரு மாதத்துக்கு 1,16,468 ரூபாய் இருந்தால்தான் சாமாளிக்க முடியும். இந்தத்
தொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால், அவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 1.75 கோடியை தொகுப்பு நிதியாக கையில் வைத்திருக்க வேண்டும்!

இவ்வளவு பெரிய தொகையை ஈட்ட என்ன செய்வது என்று மலைக்க வேண்டியதில்லை. இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 5,000 முதலீடு செய்து வரவேண்டும்


 40 வயதானவர்களுக்கான முதலீடு!


இந்தப் பிரிவில் இருப்பவர்களுக்கு 40 வயதான முத்துவை ஒர் உதாரணமாக
எடுத்துக்கொள்வோம். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள். பணி ஓய்வுக்கு இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம் 22,000 என்றால், 20 ஆண்டுகள் கழித்து (7% பணவீக்கம்) 85,133 இருந்தால்தான் சமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 1.27 கோடி தொகுப்பு நிதியை கையில் வைத்திருக்கவேண்டும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் மாதம்தோறும் தொடர்ந்து 12,909 முதலீடு செய்ய வேண்டும்.


50 வயதானவர்களுக்கான முதலீடு!


இந்த வயதுள்ளவர்களுக்கு 50 வயதுள்ள ராமகிருஷ்ணனை உதாரணமாக எடுத்துக்கொள் வோம். அவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். பணி ஓய்வுக்கு இன்னும் 10 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம் 25,000 என்றால், 10 ஆண்டு கழித்து (7% பணவீக்கம்) 49,179 இருந்தால் தான் சமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம் தோறும் கிடைக்க வேண்டும் என்றால் அவரிடம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 73.77 லட்சம் தொகுப்பு நிதி கையில் இருக்க வேண்டும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் மாதம் தோறும் தொடர்ந்து 32,068 முதலீடு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment