தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. இன்றும், மன்னராட்சி இருந்ததற்கான சுவடுகளோடு காட்சியளித்துக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை, தொல்லியல் மற்றும்
வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொடும்பாளூர், நார்த்தமாலை, குடுமியான் மலை, குன்னாண்டனார் கோயில், சித்தன்ன வாசல், திருமயம், ஆவுடையார் கோயில் போன்ற
தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம், சங்கப் பாடலிலும் இடம் பெற்றுள்ளது. ஜனவரி 14, 1974ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை
(புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது.
ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து
வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.
இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச்
சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள்,
அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள்
சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம்.
இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள்,
கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக
உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து
சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக்
குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க
காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.
No comments:
Post a Comment