Search This Blog

Tuesday, 24 September 2013

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை!


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 285 ஏக்கர் நிலப் பரப்பிலான ஒரு சிறிய தீவு கச்சத்தீவு. எந்தவித உயிரினங்களும், குடியிருப்புகளும் இல்லாமல் சிறிய கற்குன்றங்களாலான இந்த தீவுப் பகுதி இந்தியாவின் கடற்கரைக்கு 10 மைல் தூரத்திலும் ஸ்ரீலங்காவின் கடற்கரைக்கு 8 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இன்றைய நிலைமையில் “கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டது; அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள்’ எனும் சர்ச்சை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இப் பிரச்னை ஒரு வழக்காக உச்சநீதிமன்றத்தில் உள்ளது.


1974-ஆம் ஆண்டும் பின் 1976-லும் இந்திய, இலங்கைக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது எனவும், கச்சத்தீவை மறுபடியும் இந்தியா எடுத்துக் கொள்ளும் வகையில் மேலே சொல்லப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


sep 24 - kacchadevu

 


இலங்கையின் பழங்கால பூகோள வரைபடங்கள் எதிலும் “கச்சத்தீவு’ எனும் ஒரு தீவுப் பகுதி இருக்காது. 1920-ஆம் ஆண்டு அன்றைய ஆங்கில ஆட்சியின் சென்னை ராஜதானி மற்றும் சிலோன் அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் முதன் முதலாக பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளை அளந்து இரண்டு ராஜதானி பிரதேசங்களுக்கும் இடையில் உள்ள எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


1921, அக்டோபர் 24-ஆம் தேதி கொழும்பு நகரில் இதுபற்றி விவாதிக்க, கூடிய கூட்டத்தில்தான் முதன் முதலாக அன்றைய இலங்கை அரசின் உயர் அதிகாரிகளின் தலைவர் ஹார்ஸ்பர்க், வரைந்து காட்டிய இரு நாடுகளுக்கிடையிலான எல்லைக்கோட்டில் கச்சத்தீவு இலங்கைக்குள் உள்ளடங்கிய வகையில் இருந்தது. அதை ஏற்றுக் கொள்ள மறுத்த இந்திய அதிகாரிகள், ராமநாதபுரம் அரசரின் ஆளுகையின்கீழ்வரும் ஒரு தீவு கச்சத்தீவு என வாதிட்டு அதற்கான அத்தாட்சி பத்திரங்களையும் காட்டினார்கள். அன்றைய சிலோன் அரசின் உயரதிகாரிகள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு மெüனமாகி விட்டனர் என்பது அந்த கூட்டத்தின் குறிப்புகளில் பதிவாகியுள்ளது.


அடுத்து, 1966-ஆம் ஆண்டு மே மாதத்தில், இதுபற்றி ஒரு பேட்டியில் அன்றைய இலங்கை அரசின் மந்திரி சபை செயலாளர் பி.பி. பெய்ரிஸ் கூறியது மிகவும் முக்கியமானது. “”நான் துணை சட்ட வரைவாளர், (டெபுடி லீகல் டிராஃப்ட்ஸ்மேன்) வேலையில் இருந்தபோது ஜாஃப்னாவின் வடக்கு மாவட்டங்களின் எல்லைக்கோட்டினை ஆராயும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அது சம்பந்தப்பட்ட கோப்புகளை படித்தபோது, விக்டோரியா மகாராணி காலத்தில் ஒரு பிரகடனத்தில், கச்சத்தீவு ஜாஃப்னாவின் வடக்குப் பகுதிக்குட்பட்ட தீவு அல்ல என்றும் அது ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தம் எனவும் ஆங்கில அரசால் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது” எனக் கூறினார்.


இதை நிரூபிக்கும் வகையில் 1977-ஆம் ஆண்டிற்குமுன் இலங்கையில் நடந்த தேர்தல்களில் எந்த தொகுதியிலும் கச்சத்தீவு இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், 1974-ஆம் ஆண்டில் இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தபின், 1977-ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த தேர்தலில் ஜாஃப்னா மாவட்டத்தின் கய்த்ஸ் பாராளுமன்ற தொகுதியில் ஒரு இடமாக அது இடம்பெறத் தொடங்கியது.



சரித்திரத்தைப் புரட்டினால், 69 கடற்கரை கிராமங்களையும் பாக்ஜலசந்தியின் 11 சிறிய தீவுகளையும் உள்ளடக்கி ராமநாதபுரம் சமஸ்தானம் அன்றைய மதுரை நாயக்க மன்னர்களால் 1605-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது புரியும். இந்த 11 சிறிய தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு. ராமனாதபுரம் ராஜா கூத்தன் சேதுபதி 1622 முதல் 1635 வரை ஆட்சியிலிருந்தார். அவர் காலத்து தாமிர செப்பேடு ஒன்றில் அவரது ஆளுகைக்கு கீழ் இருந்த இந்த தீவுகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் ராஜாவின் ராஜாங்க கணக்குப் பேரேடுகளில் கச்சத்தீவிலிருந்து குத்தகை வருமானம் வந்தது குறிக்கப்பட்டுள்ளது.


1767-ஆம் ஆண்டில் டச்சு கம்பெனி ஒன்று ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்த கணக்கும் உள்ளது. 1802-ஆம் ஆண்டு (ஆங்கிலேயர் காலத்தில்) இந்தியாவின் எல்லாப் பகுதிகளும் சர்வே செய்யப்பட்ட கணக்குகளும் வரைபடங்களும் இன்றும் உள்ளன. அதில் கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது என குறிக்கப்பட்டுள்ளது.


1822-இல் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி ராமநாதபுரம் ராஜா சேதுபதியிடமிருந்து கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்தது. 1845-ஆம் ஆண்டில் அன்றைய சிலோன் கவர்னர் ஒரு கடிதத்தில் கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதிக்கு சொந்தமானது என குறிப்பிட்டுள்ளார்.


இதை எல்லாம் விட மேலாக 1905-ஆம் ஆண்டில் ராமநாதபுர ஜமீன் சீனிக்குப்பன் படையாச்சி கச்சத்தீவில் புனித அந்தோனியாரின் ஆலயத்தை (மீனவர்களின் தெய்வம் அந்தோணியார்) கட்டியுள்ளார். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும், தொழுகை செய்யவும் இந்த ஆலயப் பகுதி அவசியம் என்பது சீனிக்குப்பனின் எண்ணம்.


1913-ஆம் ஆண்டில் கச்சத்தீவு பகுதியில் 15 வருடங்களுக்கு கடல் சங்குகளை சேகரிக்கும் உரிமையை ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து ஆங்கிலோ இந்திய அரசின் செயலர் குத்தகை எடுத்துள்ளார். அந்தப் பதிவுப் பத்திரம் இன்றளவும் காப்பகத்தில் உள்ளது. இந்த குத்தகை 1936 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஆக இந்த எல்லா ஆதாரங்களையும் வைத்துப் பார்த்தால் அன்றைய இந்தியா மற்றும் சிலோன் நாடுகளை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே என ஒப்புக் கொண்டு ஆட்சி புரிந்தது விளங்கும்.
இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையிலிருந்த ஜமீன் பகுதிகள் இன்றைய ராமநாதபுரம் மாவட்டமாகி, தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்றாகியது.


ஆக கச்சத்தீவு எந்தக் காலத்திலும் இலங்கைக்கு சொந்தமாக இருந்ததில்லை என்பதற்கு சட்ட வழக்குகளின் மிக முக்கியமான சாட்சியமாகக் கருதப்படும் தாஸ்தாவேஜு எனப்படும் “டாக்குமென்ட்ரி எவிடன்ஸ்’ உள்ளது என்பது திண்ணம்.
பாரதத்தின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சிரிமாவோ பண்டார நாயகாவும் அன்றைய காலகட்டத்தில் சோவியத் ரஷ்யாவின் கூட்டாளிகள்.


இரு நாடுகளுக்கிடையிலும் நல்லெண்ணத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் அன்றைய இந்திரா காந்தி அரசு 1974-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதி புது தில்லியில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. அன்றைய சூழ்நிலையில் பிற்காலத்தில் மீன்வளங்கள் இந்தியக் கடலோரத்தில் வற்றிப் போய், கச்சத்தீவு பகுதியின் மீன்வளம் தென்னிந்திய மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் என இந்திய அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.


உலகெங்கிலும் இரண்டு நாடுகளுக்கு இடையே எல்லை நிர்ணயம் செய்யப்படும்போது இடையே நதியோ கடல் பகுதியோ இருந்தால் அதன் மையப்பகுதியில் எல்லைக் கோடு உருவாக்கப்படும். இப்போதும்கூட இரண்டு கிராமங்களின் எல்லை பிரிக்கப்படும்போது நடுவில் ஒரு நதி ஓடினால் நதியின் மையப்பகுதியில் கிராமங்களின் எல்லைக்கோடு வரையப்படுவது நம் மாநிலத்தில் பின்பற்றப்படும் சர்வே முறை. ஆனால் 1974-ஆம் ஆண்டு இந்திய அரசின் மிதமிஞ்சிய நல்லெண்ணத்தாலும், இலங்கை அரசுப் பிரதிநிதிகளின் சூட்சுமமான சாதுர்யத்தாலும் இந்த முறை தவிர்க்கப்பட்டது.


“இந்திய மீனவர்களும், சுற்றுலா பயணிகளும், இப்போது கச்சத்தீவுக்கு சென்று வருவது போல் சென்று வரலாம். இதற்கு தனியாக இலங்கை அரசின் விசா தேவை இல்லை’ என ஒப்பந்தத்தின் ஒரு விதி கூறுகிறது.


அதாவது இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என்று விதியில் கூறப்படவில்லை. அதை அன்றைய இந்திய அரசின் உயரதிகாரிகள் கவனிக்கவில்லை. ஆனால், இலங்கை அதிகாரிகள் மிக சாதுர்யமாக அந்த ஒப்பந்த விதியை உருவாக்கி இந்திய பிரதமரிடம் கையெழுத்து பெற்றுவிட்டனர்.


1976-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி மற்றொரு ஒப்பந்தம் இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையில் கையெழுத்தாகியது.


அதன்படி, “இந்திய மீனவர்களும், அவர்களது மீன்பிடி ஓடங்களும் இலங்கையின் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கக்கூடாது. அதுபோலவே இலங்கை மீனவர்களும் அவர்களது படகுகளும் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கக் கூடாது’ என்று கூறப்பட்டது.


இதுபோன்ற ஒரு ஒப்பந்தம், இந்தியா தனது அண்டை நாடுகளுடன் சுமுகமான நட்புறவுடன் நடந்து கொள்ளுவதற்கு அடிப்படை என மத்திய அரசால் அப்போது பாராளுமன்றத்தில் பெருமையுடன் பறைசாற்றப்பட்டது.



அன்றைய ஜனசங்க கட்சியின் பாராளுமன்றத் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், “இது ஒப்பந்தம் அல்ல பணிந்து போதல்’ என பேசினார். அவரது வேண்டுகோளின்படி அன்றைய தமிழ்நாட்டின் ஜனசங்க தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என ஒரு வழக்கு தொடர்ந்தார். அது சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களும் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டதால் நீதிமன்றம் கேட்டபோது தங்களிடம் அது சம்மந்தமான ஆவணங்கள் இல்லை என மாநில அரசு தெரிவித்துவிட்டது. அதனால், வழக்கு தள்ளுபடியாகி விட்டது.


ஆகவே, இன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைக்குச் சொந்தமான கச்சத்தீவை அவர்களிடம் ஒப்படைத்தோம் என உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. அன்றைய அரசு எடுத்த நடவடிக்கையினால்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை.

No comments:

Post a Comment