இசையால் வசமானவர்கள், அதை மீட்டும் கலைஞரைப் பாராட்டுவார்கள். இசையை இழையோடவிட்ட இசைக் கருவியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் முதல்முறை யாக, இசைக்கருவி தயாரிக்கும் கலைஞர் ஒருவருக்கு விருது அறிவித்து கவுரவித்திருக்கிறது மத்திய அரசு.
மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சங்கீத நாடக அகடமி, 60 ஆண்டுகளை கண்ட அமைப்பு. ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்க ளுக்கு புரஸ்கார் விருதுகளை வழங்கி கவுரவித்து வரும் இந்த அமைப்பு, முதல்முறையாக இந்த ஆண்டு, கடம் தயாரிக்கும் கலைஞரான மானா மதுரை மீனாட்சி அம்மாளுக்கு புரஸ்கார் விருதை அறிவித்திருக்கிறது.
கலக்கும் கடம்
மண்பாண்டத் தொழிலுக்கு பேர் போன மானாமதுரையில் கடம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரே குடும்பம் மீனாட்சி அம்மாளின் குடும்பம் தான். சுமார் 150 ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறார்கள். இவர்களின் கைப்பக்குவத்தில் உரு வான ‘கடம்’கள் இந்தியாவில் மட்டு மின்றி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அமெரிக்கா, லண்டன், இலங்கை, ஜப்பான், மலேசியா என சர்வதேச இசைக் கலைஞர்களின் கைகளிலும் கிடுகிடுத்துக் கொண்டிருக்கிறது.
‘‘எங்களுக்கு இந்த விருது கிடைச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இசைக்கருவி தயாரிக் கிறவங்களுக்கு விருது குடுத்திருப்பது இதுபோன்ற தொழிலில் இருக்கறவங் களை ஊக்கப்படுத்தும்’’ என்று தங்களின் மகிழ்ச்சியை ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டார் மீனாட்சி அம்மாளின் மகன் ரமேஷ்.
“எங்க பாட்டனார் உலகநாத வேளார், தாத்தா வெள்ளைச்சாமி வேளார், அப்பா கேசவன் வேளார்.. அவங்களுக்கு அப்புறம் நானும் எங்கம்மாவும் இப்ப இந்தத் தொழிலை செஞ்சுட்டு வர்றோம். எங்க முன்னோர் கள் இசையிலும் நாடகத்திலும் நாட்டம் உள்ளவங்க. அதனால்தான் எங்களுக்கும் அந்த ஞானம் கொஞ்சம் தொத்திக்கிச்சு.
மூவாயிரம் தடவை தட்டணும்
கடம் செய்யுறது அவ்வளவு சுலபமான வேலை இல்லைங்க. தட்டுனா ஸ்ருதி சுத்தமா வரணும். இதுக்காக கிராபைட், ஈய செந்தூரம் மாதிரியான பவுடர் களைப் போட்டு மண்ணைப் பக்குவப் படுத்தணும். ஒரு தடவ தட்டுனா சுமாரா 15, 20 நொடிகளாச்சும் அதிர்வு இருக் கணும். அப்படி இருந்தாத்தான் ஸ்ருதி சுத்தமா இருக்கும். அந்தளவுக்கு வரணும்னா, கொறைஞ்சது மூவாயிரம் தடவையாச்சும் மரப் பலகையால தட்டித் தட்டி கடத்தை உருவாக்கணும்.
மண்பாண்டம் செய்யுறது எங்க ளுக்கு குலத்தொழில். அப்பப்ப இடை யிலதான் கடம் செய்யுறோம். மூணு நாள் மெனக்கெட்டோம்னா இருபது கடம் வரைக்கும் செஞ்சு முடிச்சிரு வோம். அந்த இருபதும் சேல்ஸ் ஆன பின்னாடித்தான் அடுத்ததா கடம் செய் வோம். பெங்களூரில் இருக்கிற உ.வே. சாமிநாத அய்யரின் பேத்தி சுகன்யா ராம்கோபால்தான் முதல் பெண் கடம் வித்வான். ஜலதரங்கம் மாதிரி இப்ப அவங்க கடதரங்கம் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க வாசிக்கிற கடம் அத்தனையுமே எங்க தயாரிப்புத்தான்.
டிரம்ஸ் சிவமணிக்கு…
பிரபல இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, வெளிநாட்டுக்கு போயிருந் தப்ப உதூ, உத்தாங்கோ என்ற ரெண்டு இசைக் கருவிகளை வாங்கிட்டு வந்திருக்காரு. ஃபைபர்ல செஞ்சிருந்த அந்தக் கருவிகள் எப்படியோ உடைஞ்சி போச்சு. ‘இதே மாதிரி களிமண்ல செஞ்சுத் தரமுடியுமா?’ன்னு கேட்டாரு. பத்து பீஸ் செஞ்சுக் குடுத்தேன். அதை வெச்சு இப்பப் பட்டையை கெளப்பிக் கிட்டு இருக்காரு…” என்றார் ரமேஷ்.
புரஸ்கார் விருதுடன் ஒரு லட்சத்துக் கான பணமுடிப்பும் பாராட்டுப் பொன் னாடையும் மீனாட்சி அம்மாளுக்கு வழங்கப்படுகிறது. விருது கிடைத் திருப்பது குறித்து கேட்டபோது, ‘‘எங்க மாமனார், வீட்டுக்காரர் இவங்கெல் லாம் சொல்லிக் குடுத்துட்டுப் போன தைத்தான் நாங்க செஞ்சுட்டு இருக் கோம். அவங்களுக்கு கிடைக்காத பெருமை எனக்குக் கிடைச்சிருக்கு. மொத்தத்துல சந்தோஷம்யா’’ என்று சிரித்தார் மீனாட்சி அம்மாள்.
‘‘உங்களுக்குப் பின்னாடி உங்கள் வாரிசுகள் கடம் பண்ணுவார்களா?’’ என்று ரமேஷிடம் கேட்டபோது, ‘‘குலத் தொழில் என்பதால் எங்க குடும்பத்துல வர்ற எல்லாரும் கட்டாயம் மண்பாண் டம் செய்வாங்க. என்னோட மகளுக் கும் மண்பாண்டத் தொழில் தெரியும். கடம் செய்யுறதுக்கு என்னோட தங்கச்சி மகன் ஹரிஹரனை தயார்படுத் திட்டு இருக்கேன். அதுக்காகவே அவன் சங்கீதம் படிச்சிட்டு இருக்கான்’’ என உற்சாகமாகச் சொன்னார்.
No comments:
Post a Comment