Search This Blog

Saturday, 2 November 2013

சத்துப்பட்டியல்: தேங்காய் எண்ணெய்!


உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது தேங்காய் எண்ணெய். சமையலில் சேர்த்துக் கொண்டால் அத்தியாவசிய சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும். அதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்...

தென்னை மிக உயரமாக வளரக்கூடிய மரங்களில் ஒன்று. ஒரு மரத்தில் 20 முதல் 150 காய்கள் வரை காய்க்கும். கடினமான நார்ப்பகுதியால் இதன் மேல்பகுதி மூடப்பட்டிருக்கும். அதன் உள்ளே கடின ஓடுடன் விதைப்பகுதி பாதுகாக்கப்படுகிறது.

விதையைச் சுற்றிய உறைப்பகுதியே நாம் தேங்காய் என்று அழைக்கிறோம். உலர்தேங்காய் கொப்பரைக் காய் என்று அழைக்கப்படுகிறது. தேங்காயை நன்கு உலர்த்தி, எண்ணெய் எடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியதாகும். 100 கிராம் எண்ணெய் 884 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்கவல்லது.

தேங்காய் எண்ணை 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது. நீண்டகாலம் கெட்டுப்போகாத ஆயுள் கொண்டது தேங்காய் எண்ணெய். லூரிக் அமிலம் எனப்படும் கொழுப்பு அமிலம் இதில் அதிக அளவில் உள்ளது. இதுவே தேங்காய் எண்ணெய் உறையும்போது வெள்ளை நிறத்தை தருகிறது.

வேறுபல உண்ணக்கூடிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் வழங்க வல்லவை. 232 டிகிரி வெப்பநிலையில்தான் தேங்காய் எண்ணெய் ஆவியாகும் என்பதால் காய்கறிகளை சமைக்க ஏற்றது.

தேங்காய் எண்ணெயிலுள்ள கொழுப்பு அமிலங்கள் 6 முதல் 12 கார்பன் அணுக்களை சங்கிலி இணைப்பாக கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் அவற்றுக்கு சி1-முதல் சி12 வரை பெயர் சூட்டப்பட்டுள்ளது. லூரிக் அமிலம், காப்ரிக் அமிலம், காப்பி ரிலிக் அமிலம், காப்ரோயிக் அமிலம் போன்றவை மட்டும் பூரிதமான கொழுப்பில் 68 சதவீதம் அடங்கி உள்ளது.

உடலில் நல்ல கொழுப்பின் அளவை நீடிக்கச் செய்ய உதவுபவையாகும். 100 கிராம் தேங்காய் எண்ணெயில் 44.6 கிராம் லூரிக் அமிலம் உள்ளது. 12 கார்பன் அணுக்களை கொண்ட இதுதான் தேங்காய் எண்ணெய்க்கு 45 சதவீத கொழுப்புச்சத்தை வழங்குகிறது. ரத்தஓட்டத்திற்கு நன்மை பயக்கும். குளிர்ந்த தேங்காய் எண்ணெயில் வைட்டமின்-இ மிகக்குறைந்த அளவில் உள்ளது.

No comments:

Post a Comment