காதல் கோவில் 'கஜுரஹோ' |
காதல் கோவில் 'கஜுரஹோ' கலைநயத்துடன் எழுந்து நிற்கும் கோவில்களுக்கும் காம விளையாட்டுக்களைச் சித்தரிக்கும் சிற்பங்களுக்கும் பெயர்பெற்றது 'கஜுரஹோ'. இங்குள்ள ஆயிரக்கணக்கான சிற்பங்களில் வெறும் பத்து சதவீதமே காமத்தைச் சித்தரிப்பவை. ஆனால், அத்தனையும் 'பளிச் பளிச்' ரகங்கள். 'காதலையும் காமத்தையும் தெரிந்து கொள்' என்கிற ரீதியில் உருவாக்கப்பட்ட கஜுரஹோ சிற்பங்கள், கி.பி.9- கி.பி.13ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. மத்தியப் பிரதேச மாநிலம் சாட்டர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கஜுரஹோவின் பழைய பெயர் கர்ஜுரவஹாகா என்பதாகும். கர்ஜுர் என்றால் சமஸ்கிருதத்தில் ஈச்சம்பழம் என அர்த்தமாம். அப்போது, ஈச்ச மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால், கர்ஜுரவஹாகா என்றழைக்கப்பட்டு பின்னர் கஜுரஹோ என மருவியதாக வரலாறு. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 13ம் நூற்றாண்டு வரை மத்திய இந்தியாவை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், சாந்தலர்கள் எனப்படும் ராஜபுத்திரர்கள். இவர்களில் மன்னர் வித்யாதர், கஜினி முகமதுவை எதிர்த்து நின்றவர். வித்யாதருக்கு, வீரத்தைப் போல கலைரசனையும் அதிகம் போல. கஜுரஹோ கோவில்களுக்கும் சிற்பங்களுக்கும் முக்கிய காரணகர்த்தா இவர்தான் என கருதப்படுகிறது. கஜுரஹோ கலைப்பொக்கிஷங்களை உருவாக்க மன்னர்கள் 100ஆண்டுகள் செலவிட்டனராம். இங்கு கட்டப்பட்ட 80க்கும் மேற்பட்ட கோவில்களில், தற்போது எஞ்சியிருப்பவை 22கோவில்களே. எட்டு சதுர மைல் பரப்பளவில் விரிந்து எழுந்து நிற்கும் கோவில்களை மேற்குப் பகுதி கோவில்கள், கிழக்குப் பகுதி கோவில்கள், தெற்குப் பகுதி கோவில்கள் என மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் தேவிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை. இங்குள்ள லட்சுமணா கோவில் பிரசித்தம். விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவிலில் காணப்படும் 'வைகுந்த விஷ்ணு' உருவம் பரவசம் தரக்கூடியது. கோவிலின் வெளிப் பிரகாரத்தில் 600க்கும் மேற்பட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. இதே போல் வராஹா கோவிலும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள வீணையுடன் காட்சி அளிக்கும் சரஸ்வதி, ஒன்பது கிரகங்களின் உருவங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், கண்டரிய மகாதேவா கோவில், சௌன்ஸாத் யோகி கோவில், விஸ்வநாத் கோவில் போன்றவையும் முக்கியமானவை. கோவில்களுக்குள் பக்தி மணம் வீசும் தெய்வ ஓவியங்கள், சிற்பங்கள் நிறைய உள்ளன. காதல் சிற்பங்கள் அனைத்தும் கோவில்களின் வெளிச்சுவர்களில் மட்டுமே என்பதும் இங்கு இன்னொரு சிறப்பு. காதலைப் பற்றித் தெரியாதவர் கூட கஜுரஹோ சென்று வந்தால் காதல் மன்னராகி விடுவர் என்றும் கூட வேடிக்கையாக சொல்லப்படுவது உண்டு. கஜுரஹோ கலைச் சின்னங்களை உலக பண்பாட்டுச் செல்வமாக 1986ல் யுனெஸ்கோ அறிவித்தது. எப்போது செல்லலாம்? எப்படிச் செல்லலாம்? அக்டோபர்- ஏப்ரல் மாதங்கள், கஜுரஹோ செல்ல உகந்த மாதங்கள் ஆகும். மஹா சிவராத்திரியன்று இங்கு நடக்கும் சிவ- பார்வதி கல்யாணம் சிறப்பு வாய்ந்தது. பிப்ரவரி- மார்ச் மாதத்தில் இசை, நாட்டிய விழா நடத்தப்படுகிறது. இதில் பல பகுதிகளில் இருந்தும் இசை, நாட்டிய ரசிகர்கள் திரளாக பங்கேற்கிறார்கள். கஜுரஹோவில் தினமும் மாலையில் ஒளி, ஒலி காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் கஜுரஹோவின் சிறப்பு பற்றி ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுமார் ஒருமணி நேரம் விளக்கம் அளிக்கின்றனர். டெல்லி, ஆக்ரா, வாரணாசி, காத்மண்டு ஆகிய இடங்களில் இருந்து கஜுரஹோவுக்கு தினசரி விமானப் போக்குவரத்து உள்ளது. மஹோபா, ஹர்பல்பூர் ஆகியவை கஜுரஹோவுக்கு அருகில் உள்ள ரயில்நிலையங்கள். மும்பை, டெல்லி, சென்னையில் இருந்து வருபவர்களுக்கு ஜான்சி ரயில்நிலையம் வசதியானது. ஜான்சியில் இருந்து கஜுரஹோ சுமார் 175 கி.மீ தொலைவில் உள்ளது. |
Search This Blog
Monday, 7 October 2013
காதல் கோவில் 'கஜுரஹோ' - சுற்றுலாத்தலங்கள்!
Labels:
சுற்றுலாத்தலங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment