இன்று குழந்தைகள் ..அந்த வயதில் நாம் இருந்ததைவிட புத்திசாலியாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களை வழி நடத்திச் செல்ல பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியவைகளே அதிகம்.ஆகவே இத் தொடர் பதிவில் பெற்றோர்கள் பற்றியே எழுதியுள்ளேன்.
மழலையர் உலகம்.....
ஆஹா..சூது..வாது இல்லாத உலகம்...மழலைச்சொல்..இசையைப்போல மனதை மயக்கக்கூடியது...அதனால் தான் வள்ளுவனும்
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
- என்றான்......
குழந்தைகள் மனம் நாம் சொல்வதை ' பளீச் ' என பிடித்துக் கொள்ளும்...பசுமரத்தாணிப்போல ...
அதனால் தான் பெரியவர்கள் குழந்தைகளிடம் பார்த்து பேசவேண்டும்.
குழந்தையிடம் 'பொய் பேசக்கூடாது' என்று அறிவுரை சொல்லிவிட்டு ...நாம் வீட்டிலிருந்தபடியே நம்மைத் தேடி வருபவரிடம் ' இல்லை' என்று சொல்லுமாறு குழந்தையைப் பணித்தால்...அந்தக் குழந்தைக்கு நம்மிடம் இருக்கும் மரியாதையும் போகும்..அதுவும் பொய் சொல்ல ஆரம்பிக்கும்.
தனியார் சேனல் ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டிக்கு வரும் குழந்தைகளில் எத்தனைப் பேர் உண்மையில் மனமுவந்து வருகிறார்கள்.பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள்...அதற்கு குழந்தைகளை எவ்வளவு பாடுபடுத்துகிறார்கள் என்பதை ..அக்குழந்தை தேர்வு ஆகவில்லையெனில் கண்டிக்கும் பெற்றோரையும் காணமுடிகிறது.
ஆனால் அதே சமயம்..என்னமாய் சுருதி பிசகாமல் பாடுகின்றனர் அவர்கள்...நம்மால் முடியாததை அவர்கள் சாதித்தை ஒவ்வொரு பெற்றோர் முகமும் காட்டியது.
குழந்தைகள் திறமை எதில் உள்ளதோ அதில் ஈடுபடுத்தவேண்டும்.அதை விடுத்து நாம் விரும்பும் துறையில் அவைகளை திசை திருப்பக்கூடாது.
குழந்தையின் மீது பெற்றோர் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.உங்கள் குழந்தை உங்களுக்கு உயிர் என அக்குழந்தை உணருமாறு நடந்து கொள்ளவேண்டும்.
குழந்தையின் சாதனைகளை,திறமைகளை உடனுக்குடன் பாராட்டவேண்டும்.
சின்ன சின்ன தவறுகள் குற்றமல்ல என்று அவர்களுக்கு உணர்த்தி திருத்தவேண்டும்.
குழந்தைகளின் ரசனைகள் ஆச்சிரியமானவை.அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே தங்களால் எது முடியும் எது முடியாது என புரிந்து கொள்கிறார்கள்.
அவர்களின் திறனை வளர்க்க வாய்ப்புகளை பெற்றோர் ஏற்படுத்தித் தரவேண்டும்.
அவர்கள் பின்னால் என்றும் நின்று பொறுமையுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
அவர்கள் வேலையை அவர்களே செய்து கொள்ளும் திறனை பெற்றோர்கள் அவர்களிடம் ஏற்படுத்தவேண்டும்.
இதைச்செய்...உனக்கு அதை வாங்கித்தருகிறேன் என்றெல்லாம் சொல்லி வளர்க்காதீர்கள்...இப்பழக்கம்தான் பின்னாளில் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க ஆதாயம் உள்ளதா என்று அவர்களை நினைக்க வைக்கிறது.
இன்றைய குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக பரவலாக ஒரு செய்தி உள்ளது.அவர்களிடம் பேசி அதை மாற்ற வேண்டியது பெற்றோர் கடமை.
ஆதரவாக பேசி அவர்கள் மன அழுத்தத்தை போக்குவதோடு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
எப்போதும் குழந்தைகளை குறை சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது...குழந்தை செய்யும் செயலை பாராட்டுங்கள்.இதனால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை அவர்களிடம் அகலும்.
நம் குழந்தையை...அவையில் முந்திருப்பச் செய்ய வேண்டியது பெற்றோர் கடமை.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
அப்படி தந்தை செய்தால் மகனும்(மகளும்)
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்
என்பதற்கேற்ப நடப்பார்கள்.
அப்போதுதான் அவனை(ளை)ப் பெற்ற தாயும்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோர் எனக்கேட்ட தாய்
என்பதற்கேற்ப மகிழ்ச்சியடைவாள்.
ஒரு ஜோக்:
குழந்தை: (வீட்டிற்கு வரும் விருந்தினரைப்பார்த்து) அம்மா..
நேற்று இந்த மாமாவுக்கு இரட்டை நாக்கு என்று
சொன்னே'''ஆனா ஒரு நாக்குத்தானே இருக்கு....
(மேற் சொன்ன துணுக்கில் தவறு யாருடையது?..)
அணைப்பு
அலுவலகத்திலிருந்து
அம்மா வருவதை
எதிர்பார்த்த குழந்தை..
அலுப்பாய் வந்த
அம்மாவிடம் திட்டும்,
ஆத்திரத்துடன் வந்த
அப்பாவிடம்
அடியும் வாங்கி
அழுதபடியே - பாசத்துடன்
அணைத்தது..தன்
இளவரசி சிண்ட்ரெல்லாவை...
No comments:
Post a Comment