Search This Blog

Tuesday, 22 October 2013

நிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்!

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.

1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

1. பதிவுத்துறை :
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2. வருவாய்த்துறை :
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ' பதிவேடு ('A' Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)

பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.
பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு
செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

அ' பதிவேடு ('A' Register) :
இப்பதிவேட்டில்
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

கிரயப் பத்திரம் (Sale Deed) :
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள்
இருக்கும்.

1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்

சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம்
சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

No comments:

Post a Comment