Search This Blog

Thursday, 12 September 2013

தவளையும் ..கொக்குகளும்.........குட்டிக்கதை



மீன்கள் நிறைந்த குளமொன்றில் அவற்றுடன் ஒரு தவளையும் வாழ்ந்து வந்தது...

மீன்களை கொத்தி உணவாக்கிக் கொள்ள பல கொக்குகள் அந்தக் குளத்தைத் தேடி வருவதுண்டு...அவற்றில் இரு கொக்குகள் தவளைக்கு நண்பனாயின.அவை வந்தவுடன் தவளையை நலம் விசாரித்தப் பின்னரே தங்களுக்கு இரையான மீனைத் தேட ஆரம்பிக்கும்.

கோடைகாலம் வந்தது.குளம் வற்றியது...மீதமிருந்த மீன்களும் மடிந்தன...தவளை மட்டும் செய்வதறியாது திகைத்தது.

அப்போது அதன் நண்பர்களான கொக்குகள் .. தவளையைத் வேறு தண்ணீர் உள்ள இடத்தில் விடுவதாகக் கூறின.

ஆனால் தவளை என்னால் உங்களுடன் சேர்ந்து பறக்க முடியாதே என்று கூறியது.

அப்போது ஒரு கொக்கு ..ஒரு பெரிய குச்சியைக் கொண்டு வந்து ..அதன் நடுவில் தவளையைக் கவ்விக் கொள்ளச் சொன்னது.

குச்சியின் இரு முனையையும் இரு கொக்குகளும் பிடித்துக்கொண்டு பறப்பதாகவும்...ஆனால் எக்காரணம் கொண்டும் தவளை தன் வாயைத் திறக்கக் கூடாது என்றன...

தவளையும் ஒப்புக் கொண்டது.

அப்படி அவை பறக்கும் போது தெருவில் நின்றிருந்த சில சிறுவர்கள் ..'தவளை பறக்குது'..'தவளை பறக்குது' என கத்தினர்.

அச்சத்தத்தைக் கேட்ட தவளை கொக்குகள் சொன்னதை மறந்து 'அங்கு என்ன சத்தம்' என்று கேட்க வாயைத் திறந்தது.கீழே விழுந்து படு காயமடைந்தது.

தன்னைவிட அறிவில் சிறந்தவர்கள் கூறும் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்...இல்லாவிட்டால் அந்த தவளையைப் போல துன்பமே வந்து சேரும்...

No comments:

Post a Comment