Search This Blog

Saturday, 28 September 2013

புலியும்..மானும்..நரியும் (நீதிக்கதை)





ஒரு காட்டில் புலியை வேட்டையாட வேடன் ஒருவன் ஒரு கூண்டை வைத்து..அதில் ஆடு ஒன்றைக் கட்டி வைத்திருந்தான்.புலி ஆட்டிறைச்சி மீது ஆசைப்பட்டு உள்ளே வந்ததும் கூண்டு மூடிக்கொள்ளும்..அப்படியான கூண்டு அது.

அதன்படியே, புலி ஒன்று ஆட்டிற்கு ஆசைப்பட்டு உள்ளே செல்ல..கூண்டு மூடிக் கொண்டது.

கூண்டிற்குள் மாட்டிக் கொண்ட புலி..தப்பிக்க வழி தெரியாமல் விழித்த போது..ஒரு மான் அந்தப் பக்கம் வந்தது.

புலி மானிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கூறியது.

அதற்கு அந்த மான்..'உன்னை நான் காப்பாற்றினால் வெளியே நீ வந்ததும் என்னை அடித்துக் கொன்றுவிடுவாயே!'என்றது.

உடன் அந்தப் புலி 'நான் அப்படி செய்ய மாட்டேன்' என உறுதி கூற, மான் கூண்டின் கதவை திறந்து விட்டது.கூண்டிற்குள் இருந்த ஆடு தப்பினால் போதும் என ஓடி ஒளிந்தது.வெளியே வந்த புலி, 'ஆடும் ஒடி விட்டது..எனக்கோ பசி..உன்னைத்தான் கொல்லப் போகிறேன்' என்றவாறு மானின் மீது பாயத் தயாராகியது.

உடன் மான் புலியின் உறுதிமொழியை ஞாபகப் படுத்தியது. 'என் உயிரை காப்பாற்றிக் கொள்ள அளித்த உறுதி அது' என்றது புலி.

அந்நேரம் ஒரு நரி அங்கு வந்து..நடந்த விஷயங்களை கேட்டு அறிந்தது.

மானைக் காப்பாற்ற விரும்பிய நரி, புலியைப் பார்த்து ' நான் நீதி வழங்குகிறேன்..நடந்தவற்றை அப்படியே இருவரும் செய்துக் காட்டுங்கள்' என்றது.

பின் புலியைப் பார்த்து..'நீங்கள் கூண்டிற்குள் எங்கு இருந்தீர்கள்?' என்றது.

புலியும் கூண்டினுள் சென்று..'இங்குதான்' என்று சொல்லும் போதே நரி மீண்டும் கூண்டை மூடியது.புலி இப்போது மீண்டும் கூண்டுக்குள்.

நரி புலியைப் பார்த்து சொல்லிற்று..'உங்களைக் காப்பாற்றிய மானையே கொல்லத் துணிந்ததற்கு இதுதான் தண்டனை '

பின் மானிடம், 'ஒருவரைக் காப்பாற்றுமுன் அவரின் தராதரத்தை அறிந்துக் கொள்ள வேண்டும்..தகுதியில்லாதவர்க்கு உதவக் கூடாது' என அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றது.

நாமும் தகுதியற்றவர்களுக்கு உதவினால் துன்பத்தில் மாட்டிக் கொள்வோம்.ஒருவரின் தரம் அறிந்து உதவ வேண்டும்.

No comments:

Post a Comment