குறைந்தது பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள் பால் வெளியில் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆய்வு மையமான நாஸாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினூடே வானியலாளர்கள் இதனை கண்டறிந் துள்ளனர்.
இதில் எமது பால்வெளியிலுள்ள 17 வீதமான நட்சத்திரங்களில் பூமியின் அளவான, குறைவான சுற்றுப் பாதை கொண்ட கிரகங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
பால்வெளியில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆறில் ஒரு நட்சத்திரத்தில் பூமியின் அளவான கிரகம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் இதன் மூலம் எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியில் பூமியை ஒத்த கிரகம் இருப்பதை உறுதி செய்ய முடியாது எனவும் வானியலாளர்கள் கூறியுள்ளனர்.
உயிர் வாழத் தகுதியாக இருப்பதற்கு குறித்த கிரகத்தில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான சூழல் தேவை என்பதோடு தற்ப வெப்பநிலை அதிக சூடாகவும் அதிக குளிராகவும் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையில் இருக்கும் கிரகங்களை நட்சத்திர ஒளி பட்டுத் தெறிப்பதன் ஊடே கண்டறிந்து வருகின்றது. கெப்லர் தொலைநோக்கியின் முதல் 16 மாத அவதானிப்பில் சுமார் 2,400 கிரகங்களை கண்டறிந்துள்ளது.
இந்நிலையில் கலிபோர்னியாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமெரிக்க வானியலாளர் சமூகத்தின் மாநாட்டில் மேற்படி ஆய்வு முடிவு சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் பால் வெளியில் இருக்கும் 17 வீதமான நட்சத்திரங்களில் பூமியை விட 0.8 முதல் 1.25 வரை அளவு பெரிதான கிரகங்கள் 85 நாட்கள் அல்லது அதனைவிட குறைவான சுற்றுப்பாதையைக் கொண்டதாக அமைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் நாஸா செய்மதி தொலைநோக்கி அவதானிப்பு பிரிவு தாம் 461 கிரகங்களை இது வரை அவதானித்திருப்பதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment