தன் ஜிமெயில் தளத்தில், அதுவரை யாரும் தராத வகையில், அதிகக் கொள்ளளவில், இலவசமாக ஹார்ட் டிஸ்க் இடம் தந்து கூகுள் பிரபலமானது. தற்போது கூகுள் இலவசமாக இதுவரை தந்து வந்த டிஸ்க் இடத்தின் அளவை 15 ஜிபியாக உயர்த்தியுள்ளது.
கூகுள் சந்தாதாரர்கள் அனைவரும், இனி ஜிமெயில் அக்கவுண்ட்டில் 10 ஜிபி இடமும், கூகுள் ட்ரைவ், கூகுள் ப்ளஸ் மற்றும் போட்டோக்கள் பதிந்து வைக்க, மேலும் 5 ஜிபி இடமும் பெறலாம். இந்த மூன்று சேவைக்குமாக மொத்தமாக 15 ஜிபி இடம் வழங்கப்படுகிறது.
ஒரு பிரிவில் கூடுதலாகப் பயன்பாடு இருந்து, மற்றதில் குறைவாக இருந்தால், குறைவாக உள்ள பிரிவின் இடம், அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிரிவிற்குப் பயன்படுத்தப் படலாம்.
எடுத்துக் காட்டாக, கூகுள் ட்ரைவில் அதிகமான பைல்களை வைத்து, அதில் உள்ள 5 ஜிபி இடம் அதற்குப் போதுமானதாக இல்லை எனில், ஜிமெயில் பிரிவில் இடம் இருந்தால், அதனை எடுத்துக் கொண்டு, அதில் பைல்கள் சேவ் செய்யப்படும். இவ்வாறே, கூகுள் ப்ளஸ் போட்டோ சேவையில் இடம் தேவை என்றாலும், மற்ற இரு பிரிவுகளில் இடம் இருப்பின் இடம் எடுத்துக் கொள்ளலாம்.
15 ஜிபிக்கும் மேலாக இடம் தேவைப்படுபவர்கள் என்ன செய்திட வேண்டும்? 5 டாலர் வாங்கிக் கொண்டு, 100 ஜிபி இடம் ஒரு மாதம் பயன்படுத்த கூகுள் அனுமதிக்கிறது. அப்படியானால், கட்டணம் செலுத்தினால், அதிக பட்ச இடமாகக் கூகுள் எவ்வளவு தருகிறது என்று அறிய ஆவலா? மாதத்திற்கு 800 டாலர் செலுத்தி, 16 டெரா பைட் இடத்தினை கூகுளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
சென்ற ஆண்டில், கூகுள் அதன் கூகுள் ட்ரைவ் சேவையினைத் தொடங்கிய காலம் முதல், க்ளவுட் சேவைப் பிரிவில் இயங்கும் மற்ற பிரிவினருக்குப் போட்டியாக, இடம் வழங்குவதில் முதல் இடத்தைக் கொண்டிருந்தது.
இதனால், மற்ற சேவை நிறுவனங்களும், அதே போல் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் மற்றும் ஆப்பிள் ஐ-க்ளவ்ட் இந்த வகையில் போட்டியைச் சந்தித்தன. ஆனால், சிறிய நிறுவனங்களான ட்ராப் பாக்ஸ், பாக்ஸ், சுகர்சிங்க் மற்றும் யு சென்ட் இட் (DropBox, Box, SugarSync and YouSendIt) ஆகியவை போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.
ட்ராப் பாக்ஸ் 2ஜிபி இடம் இலவசமாகத் தருகிறது. ஏறத்தாழ 10 டாலருக்கு, ஒரு மாதம் பயன்படுத்த 50 ஜிபி இடம் தருகிறது. மைக்ரோசாப்ட் ட்ரைவ் 7 ஜிபி இடம் இலவசமாகத் தருகிறது. இவை அடுத்து என்ன செய்யப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment