Search This Blog

Tuesday 30 October 2012

கனவுகளிடம் கவனமாக இருங்கள்!

நாம் எதிர்காலத்தைப் பற்றி காணும் கனவுகளை நனவாக்குவதற்கு கடின முயற்சியும் அவசியம். எனவே, கனவை நனவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாழ்நாளை யாராலும் அதிகப்படுத்த முடியாது. ஆனால் அர்த்தப்படுத்த முடியும். மேலும் ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழப் போகிறார் என்பது தெரியாது, என்றாலும் நம்பிக்கையோடு எதிர்காலத்திற்கான கனவுகளை வளர்க்கிறோம். அவ்வாறன இலட்சியக் கனவுகளை எவ்வளவு விரைவில் நனவுகளாக மாற்றப் போகின்றோம் என்பதுதான் முக்கியம்.

கனவு காண்பதிலேயே வாழ்நாளைக் கழித்து விடாமல் உங்களுக்குத் தேவையானது எது? தேவையற்றது எது? என்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானம் செய்து கொள்வது மிக அவசியம்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களுடைய கனவுகளுக்கு மெருகேற்றும் விதமாக இருக்க வேண்டும். அத்தோடு, ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களுடைய கனவை நனவாக்கும் நோக்கில்  முன்னோக்கியே செயல்பட வேண்டும். சிலர் ஆண்டுதோறும் சில குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொண்டு அதை அடைவதற்கு உழைப்பார்கள். அது மிகவும் நல்லதுதான் என்றாலும், அத்தகைய குறிக்கோள் உங்களுடைய கனவுக்கு வலிமை சேர்ப்பதாகவும், கனவுகளை நனவாக்குவதற்கான செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டும்.

கனவு நனவாகும் வரை நீங்கள் கவனமாகவும், மென்மையாகவும் செயல்பட வேண்டும். எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் சாந்தமாகவும் அன்பாகவும் அணுகக் கற்றுக் கொள்ள வேண்டும். கோபப்படுவதும், எரிச்சலடைவதும் கூடவே கூடாது. அத்துடன் எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பதற்றப்படுவது போன்ற குணங்களை விட்டொழிக்க வேண்டும். அதற்கு உங்களை நீங்களே சுயதிறனாய்வு செய்து தேவையற்ற மனோபாவத்தையும் குணங்களையும் நீக்கி விடுங்கள்.

உதவி செய்தல், புன்னகை புரிதல், சாந்தமாகப் பேசுதல் போன்ற நற்பண்புகள் உங்களுடைய கனவை நனவாக்குவதற்கு நிச்சயம் உதவும். உங்களுடைய வாழ்வில் வரும் நல்ல சந்தர்பங்களை நழுவவிடாமல் நன்றாகப் பயன்படுத்தி உங்களுடைய திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்காட்டுங்கள். உங்களுடைய இலட்சியக்கனவு நிச்சயம் ஒரு நாள் நனவாகும்.

No comments:

Post a Comment